Thursday, July 21, 2022

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 3

ஆடி அமாவாசைக்கு ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள்.   பகுதி - 3

பித்ரு சாபம் - விளக்கம்.

போகர் : ''குருதேவா! பித்ரு தர்ப்பண பூஜைகளைச் சரிவரச் செய்யாவிடில் பித்ருக்களின் சாபம் வந்து சேரும் எனக் கூறுகிறார்களே. மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பித்ருக்கள் கூட சாபங்களை அளிப்பார்களா?"

ஸ்ரீஅகஸ்தியர் : "தூர்வாஸர், ஆங்கிரஸர், பரசுராமர், பாரத்வாஜர் போன்ற ரிஷிகள்கூடத் தம் அடியார்களைத் திருத்தும் பொருட்டு சாபங்களை அளித்துள்ளனரே!'

ஒரு தந்தை தன் மகனை நல்வழிப் படுத்துவதற்காக அவனைக் கண்டித்து, அடித்து, உதைத்து திருத்துதல்போல, பித்ருக்கள் தம் சாபங்கள் மூலம் பல கஷ்டங்களை அளித்துத் தம் வம்சா வழியினரைத் திருத்திக் கரை யேற்றுகின்றனர். பித்ரு சாபங்கள் தீர பலவிதமான தான, தர்மப் பரிகார முறைகள் உள்ளனவே!

உண்மையில் நடைபெறும் ஆன்மீக விந்தை என்னவென்றால், தம்முடைய வம்சா வழியினரைப் பல தான, தர்ம காரியங்களில் ஈடுபடுத்துவதற்காகப் பல சாபங்களை அளித்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பரிகார முறைகளையும் மகான்கள், ஞானிகள் மூலமாகப் பித்ருக்களே உணர்த்துகின்றனர்.

புலிப்பாணி : பித்ருக்கள் தமது வழித் தோன்றல்களோடு நேரடியாகவே தொடர்பு கொள்ள இயலாதா? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : "உத்தம இறைநிலை பூண்டுள்ள பித்ருக்கள் மிக உயரிய ஆன்மீக சக்தி கொண்டவர்கள். ஒளிமயமான தேகம் கொண்ட அவர்களுக்கு எந்த வடிவமும் எடுக்கக் கூடிய வல்லமையும் உண்டு. ஆனால் தமது வம்சாவழியினர் என்றாலும்கூட அவரவருடைய பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே அருளை வழங்குகின்றனர்.''

மேலும் பரிசுத்தமான தனது பித்ருவோடு நேரடித் தொடர்பு கொள்ளத் தேவையான ஆன்மீகச் சக்தியினை எந்த ஒரு மனிதனும் பெற்றிருப்பதில்லை. எனவேதான், அவனைக் கரையேற்றும் பொருட்டு பூலோகத்திலுள்ள தேவதைகள், மகரிஷிகள், யோகிகள், சற்குருமார்கள் போன்றோரின் உதவியைப் பித்ருக்கள் நாடுகின்றனர். சற்குருவே விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் இடையே ஓர் ஆன்மீகப் பாலமாக விளங்குகின்றார்.

*காசியில் தண்டம், கயாவில் பிண்டம் என்பதன் பொருள் என்ன?*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*பாவம் நீங்கி, புண்ணியம் பெறவும், முன்னோர் ஆசி பெறவும் காசி மற்றும் கயை யாத்திரை செல்கின்றனர்.*
*கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்த பின், தண்டபாணி (காசியிலுள்ள முருகன்) தரிசிக்க வேண்டும். இங்கு தண்டத்தால் பக்தர்களின் முதுகில் மூன்று முறை மெதுவாக அடிப்பர். இதனால் செய்த பாவத்திற்கான தண்டனை வழங்கி யாத்திரை பலன் கிடைக்கும். கயாவில் திதி கொடுக்கும் போது பிண்டம் வைத்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். இதையே ’காசியில் தண்டம்; கயாவில் பிண்டம்’ என சொல்வர்.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*கயா சிரார்த்தம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||

திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை  என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.

கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு   சிரார்த்தம் செய்கிறார்கள்.ஒரு கோஸ் பரப்பளவுள்ள தலம் கயா-ஸிர் என்றும், 2 1/2 கோஸ் வரை கயா என்றும், 5 கோஸ் வரை கயா க்ஷேத்ரம் என்றும் பிரசித்தி பெற்றது.

கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின்  ஸாந்நித்தியம் உள்ளது என்பது ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ளது. கயா பீஹார் மாநிலத்தில் உள்ளது. விஷ்ணு பாதம் இங்கு முக்கிய மான கோயில். பல்குனி நதி அருகில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி இந்தி.  கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற்றுவதற்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.

ராமாநுஜ காட்,  கர்நாடக பவன் ஆகியவை வசதியான வை கயாவில்  பல்குனி நதிக் கரை,  விஷ்ணு பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ்ணு பாதம் சமீபம்) ப்ரேத சீலா,  உதயகிரி, அக்ஷய வடம் முதலான இடங்களில் பிண்டப் பிரதானம் செய்யும் வழக்கம் உண்டு. கயாவில் மேலும் சில இடங்களிலும் பிண்டப் பிரதானம் செய்கிறார்கள் ஜீவன் கடைத்தேற- முக்தியடைய அனுஷ்டானங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன அதில் கயா சிரர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

புராண வரலாறு:

கயன் என்னும் பெயரை உடைய அசுரன் தன் வாழ்நாளி ல் தவத்தில் மட்டும் ப்ரீதியடைந்து (அன்பு வைத்து) முழுமையாக அதில் ஈடுபட்டிருந்தான். அவன் நீண்ட காலம் எவ்வித பலனும் எதிர்பார்க்காமல் (நிஷ்காம்ய பாவத்துடன்) தவத்தில் ஈடுபட்டிருந்தான். பகவான் நாராயணன் அவனது தவத்தை மெச்சி தரிசனம் அளித்தார்.

அது சமயம் அவனது மேனி அனைத்து தீர்த்தங்களை விட புனிதமாக இருக்கும் என்று வரமளித்தார். இந்த வரம் பெற்ற பின்னரும் அவன் தவத்தை நிறுத்தாமல் தொடர்ந்து  தவம் இயற்றலானான். இதனால் மூன்று உலகங்களும் கலக்கம் அடைந்தன. தேவர்கள் திகிகிலடைந்தனர்.

கடைசியில் நாரணனின் திருவுளப்படி பிரம்மா கய அசுர னிடம் சென்று யாகம் செய்வதற்காக அவனுடைய சரீரத்தைக் கேட்டார். அசுரன் அதற்கு இணங்கி தூங்கி விட்டான். அவன் சரீரத்தின் மேல் பிரம்மா யாகம் செய்து முடிந்ததும், அவன் மறுபடியும் எழுந்திருக்கலானான் அது சமயம் தேவர்கள் 'தர்ம வேதி' என்ற தேவதையின் சிலையை அவனது சரிரத்தின்மேல் வைத்தார்.

இதன் பிறகும் அவன் எழுந்திருக்க ஆரம்பித்தான். அந்த வேளையில் நாராயணன் அனைத்து  தேவதைகளும்  உடன் வர, தானே அவன் மீது ஏறி கதாதர உருவத்தில் அமர்ந்தார் கய அசுரனுடைய மிகப் பெரிய தேகம் பூமியில் நிலைத்தது. அந்த பூமி மிகவும் புனிதமாகக் கருதப்பட்டு, அந்த இடத்தில் எங்கு பிண்டப் பிரதானம் செய்தாலும் ஜீவன் பிரேத யோனியிலிருந்து  விடுபட்டு  கடைத்தேறுகிறது  என்றும் அக்ஷய திருப்தி அடைகிறது  என்றும் சாஸ்த்திரங்கள் சொல்லுகின்றன.

வட இந்தியர்கள் முதலில் கயாவின் அருகேயுள்ள 'புன்புன் ' நதிக்கரையில் நீத்தார் கடன் முடித்து பின்னர் கயாவுக்கு வருகிறார்கள். கயாவில் எந்தக் காலத்திலும் பித்ரு-சிரார்த்த்ம பிண்டதானம் செய்யலாம் என்று கயா மகாத்மியம்  விளம்புகிறது. வட இந்தியர்கள் சில விரதங்கள்  அநுஷ்டித்த பின்னர் கயா யாத்திரை மேற்கொள்ளுகின்றனர். பல்குநீ நதி  (பித்ரு தீர்த்தம்) கயாவின் கிழக்கே ஓடுகிறது.

இதில் மழைகாலத்தில் மட்டுமே நீர் ஓடுகிறது. மற்ற காலங்களில் ஊற்றுப் பெருக்கால் இது உலகூட்டுகிறது. அருகே 'நககூட்' மலைக்குன்று இருக்கிறது. பல்குநீ நதியில் நீராடி நதிக்கரையில் தர்பணம், பிண்டப் ப்ரதானம் செய்துவிட்டு அருகில் உள்ள விஷ்ணுபாதம் கோயிலுக்குச் செல்கிறார்கள். அந்தக் கோயிலில் எட்டு கோண பீடத்தில் பகவான் விஷ்ணுவின் சரண சின்னம் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளது.

பித்ரு சிரார்த்தத்தின் அங்கமாக சர்வ பித்ருக்களுக்கும் தாயார் தகப்பனார் உட்பட பிண்டப் பிரதானம் அளிக்கி றார்கள். (108 பிண்டங்கள்) இரண்டாவது தினம் வருடாந் திர சிரார்த்தம் போன்று அன்ன சிரார்த்தம் செய்கிறார்கள். சிலர் தொடர்ந்து ஏழு தினங்கள்  சிரார்த்தம அனுஷ்டிக் கிறார்கள். அன்ன சிரார்த்தின் கடைசி அங்கமாக பிண்டப் பிரதானம், அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள  அக்ஷயவடம் சென்று அங்கும் செய்கிறார் கள். கயாவில் நீத்தார் கடன் செய்வதால் பல தலை முறை யினர் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். வம்சம் விருத்தி யடைவதோடு சமூகமும், தேசமும் விருத்தியடைகின்றன.

முக்கிய கோயில்கள் மற்றும் தீர்த்தக் கட்டங்கள்:

பல்குநி நதி, அஷயவடம், விஷ்ணுபாதம் தவிர பின்வரும் தலங்கள்  தரிசிக்கப்படவேண்டியவை.

(1) ஜகந் நாத மந்திர், லக்ஷ்மீநாராயணர் (கதாதரர்) கோயில்,

(2) முண்டப்ருஷ்டா- விஷ்ணு பாதத்திற்குத் தென்திசையில் 12 கைகளுடன் அருள்பாலிக்கும் முண்ட ப்ருஷ்டாதேவி.

(3) ஆதி கயா இங்குள்ள ஒரு சிலையில் பிண்டதானம் செய்கிறார்கள். இங்கு பூமி மட்டத்திற்குக் கீழே பல மூர்த்தங்கள் உள்ளன.

(4) தௌத பாதம். இங்கும் பிண்டதானம் செய்கிறார்கள்.
(5) காக பலி: இங்கு ஒரு பழைமையான ஆலமரம் உள்ளது. இங்கு காகபலி, இயமபலி ஆகிய சடங்குகள் செய்கிறார்கள்.

(6) பஸ்மகூட்- கோப்ரசார்:
கயையின் தெற்குவாசலின் வைதரணி சரோவர் பக்கம் ஒரு சிறிய குன்றில் ஜனார்த்தனன் கோயில் உள்ளது.சற்று தூரத்தில் மங்களா தேவி கோயில் உள்ளது..

(7)மங்கள கௌரி கோயில் :
தெற்கு வாயிலின் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. சற்று மேலே சென்றால் அவிமுக்தேச்வரநாத் கோயில் உள்ளது. தனக்கு கொள்ளி போட, சிரார்த்தம் செய்ய  சந்ததி யில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த மூன்று பிண்டங்களை இங்கு அளிக்கிறார்கள்.

(8) காயத்ரி தேவி:
விஷ்ணுபாதம் கோயிலிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காயத்ரி காட் கட்டத்தில் இந்தக் கோயி ல் அமைந்திருக்கிறது. இதற்கு வடக்கில் அருள்மிகு லக்ஷ்மீ நாராயணர் கோயில் உள்ளது. இங்கு கயாதித்யன் என்று அழைக்கப்பட்டும் சதுர் புஜ சூரியன் மூர்த்தம் உள்ளது.

(9) ப்ரம்ம யோனி
புத்தகயா செல்லும் வழியில் கயையிலிருந்து 3 கி.மீ துரத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் ப்ரம்மாஜி கோயிலுக் குப் பகத்தில் குகை போன்ற இரு பாறைகளை உள்ளன. 'ப்ரம்ம யோனி', 'மாத்ரு யோனி' என்று அவற்றை அழைக் கிறார்கள். சிகரத்திற்குக் சற்றுக் கீழே  அமைந்துள்ளது ப்ரம்ம குண்டம் புனித தீர்த்தம்.
தீர்த்தங்கள்

1. மேலே கூறிய ப்ரம்மகுண்டம்

2. சூரிய குண்ட்.

3.சீதாகுண்ட்

4.உத்தரமானஸ்

5.ராம சிலா

6. பிரேத சிலா

7. வைதரணீ

8.ப்ரம்ம ஸரோவர்

9. இரண்டாவது காக பலி

10.கதாலோல் புஷ்கரணி. இங்கு பகவான் அசுரனைக் கொன்றபின்னர் ஆயுதமாகிய கதையை அங்கு வைத்த தாக ஐதிகம். அது கம்ப வடிவில் உள்ளது.

11 ஆகாச கங்கை இது ஹனுமானின் இருப்பிடம் அருகில் பாதாள கங்கையும் மேற்கில் கபில தாராவும் உள்ளன.

12. ஸரஸ்வதீ- ஸாவித்ரி குண்டம்; மேலும் கர்ம நாச புஷ்கரிணியும் உள்ளது.

13. ஸரஸ்வதி நதி கயாவிற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது. நதிக் கரையில் ஸரஸ்வதி தேவியின் கோயிலில் தரிசனம்  செய்யலாம். இங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் மதங்க வாபி என்ற பெரிய கிணறு படிக்கட்டுகளுடன் உள்ளது.

14. தர்மாரண்யம். மதங்க வாபியிலிருந்து 3 1/2 கிலொ தொலைவில் இந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் பிண்டங்கள் இடப்படுகின்றன,

தர்மர் தன் தம்பி பீமசேனனுடன் தன்னுடைய தந்தைக்கு சிரார்த்தம் செய்ய இங்கு வந்த போது இங்கு தவம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. அவர்கள் இருவருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

புத்தகயா: போத கயா:

கயாவிலிருந்து புத்தகயா  11 கிலோ தொலைவில் அமைந்துள்ள தலம். இங்கு அம்ர்ந்து புத்தர் 'திவ்ய ஞானம்' பெற்றதாக சரித்திரம் பேசுகின்றது.  அன்றிருந்த போதி மரம் தற்போது இல்லை. வேறு சிறிய அரச மரம் வளர்த்துள் ளார்கள்.. அவர் அமர்ந்த கல் மேடை பொத்த- சிம்ஹாசனம்- என்று அழைக்கப் படுகிறது. இங்கு புத்த பகவானின் பெரிய கோயிலில் அவருடைய பிரம்மா ண்டமான  மூர்த்தம் உள்ளது. புத்த கயாவிற்கு    சற்று தூரத்தில் 'பக்ரௌர்' என்ற ப்ராசீனப் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் உள்ளது.  பௌத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான தலமாக கயா அமைந்துள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தர்ப்பண மகிமை தொடரும் ..

No comments:

Post a Comment