Thursday, July 21, 2022

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 2

ஆடி அமாவாசைக்கு ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள்.  பகுதி - 2

பித்ருக்கள் என்போர் யார்?

போகர் : "தர்ப்பண பூஜைகளைப் பற்றி விளக்கமாக அறிய விரும்புகிறோம். குருதேவா! பித்ருக்கள் யாவர்?"

ஸ்ரீஅகஸ்தியர் : "இறந்தவர்கள் அனைவரும் பொதுவாக இருள் பகுதி, ஒளிப் பகுதி என்ற இரு பகுதிகளுக்கு அவரவர்கள் செய்த பாவ, புண்ணிய கர்மவினைகளுக்கு ஏற்பச் செல்வர். நல்லவர்களுக்கு ஒளிப் பகுதியில் இடம் கிடைக்கும். ஒளிப் பகுதியில் பித்ரு லோகம், தேவ லோகம், கந்தர்வ லோகம், தேவதா லோகம், புண்ணிய லோகம், தீர்த்த லோகம் என்று பலவித நிலைகள் உண்டு.

இறந்த மூதாதையர்கள் ஒளிப் பகுதிக்குச் செல்லும் ஆன்மீகச் சக்தி பெற்றிருந்தால் அவர்களில் பலர் பித்ரு லோகத்தில் வசிப்பர். உறக்கமோ, பசியோ அற்ற மிக உயரிய நிலையில் உள்ள பித்ருக்கள் பூலோகத்தில் வாழும் தமது வம்சா வழியினரின் நல்வாழ்விற்காக சதாசர்வகாலமும் பூஜைகள், பிரார்த்தனைகள் போன்றவற்றைச் செய்து வருகின்றனர்.

போகர் : ''மானுடப் பிறவி எடுத்தோருக்கு மட்டும்தான் பித்ருக்கள் உண்டா? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : 'அப்படியில்லை, போகா! அனைத்து ஜீவன்களுக்கும் பித்ருக்கள் உண்டு. புல் பூண்டு முதல் எறும்பு, யானை உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பித்ருக்கள் உண்டு. சராசரி மனிதனின் அறிவிற்கு எட்டாத ஆன்மீக ரகசியம் இது."

புலிப்பாணி : ''பித்ரு நிலையே ஒளிப்பகுதியில் உள்ள உயரிய நிலை என்று கூறினீர்கள், அப்படிப்பட்ட உயர்ந்த நிலை கொண்டோருக்காக பூஜைகள் செய்வது அவசியமா? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் (புன்சிரிப்புடன்) : தமது வம்சாவழி அளிக்கும் தர்ப்பண பூஜைகள், பிரார்த்தனைகளை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் பித்ருக்கள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனது நல்வாழ்விற்காகவே பித்ரு தர்ப்பணங்களைச் செய்தாக வேண்டும்."

பித்ரு தர்ப்பணமான பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தால்தான் 'நாம் வாழ்வில் அனுபவிக்கின்ற போகங்கள் அனைத்தும் நம் மூதாதையரின் நற்கர்ம பலன்களின் விளைவே' என்ற ஆழ்ந்த நம்பிக்கை வலுக்கும். பின்னர் காலப்போக்கில் அதுவே 'நம்மால் ஏதும் நிகழ்வதில்லை; எல்லாம் ஸ்ரீநாராயணன் செயல்' என்ற இறைநம்பிக்கையாக மலரும். 99

போகர் : "தர்ப்பண பூஜைகளை முறையாகச் செய்யாததால் வரும் விளைவுகள் என்ன? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : "மனிதன் என்ற சொல்லுக்கே 'நன்றி மறவாதவன்' என்ற ஒரு பொருள் உண்டு பூவுலகில் மானுடப் பிறவி என்பது கிடைத்தற்கரிய ஓர் பெரும் பொக்கிஷம். அதைத் தனக்களித்த தன் மூதாதையர்களை நன்றியுடன் நினைவு கூர்வது ஒவ்வொரு மனிதனின் கடமை யல்லவா?"

மேலும் தர்ப்பண பூஜைகளை முறையாக நிறைவேற்றாவிடில் 'தான் சம்பாதித்தது, தன்னால்தான் நடந்தது. தன்னால் எதையும் சாதிக்க இயலும்' போன்ற ஆணவ, அகங்கார எண்ணங்கள் ஏற்பட்டு மனிதன் தீய வினைகளுக்கு ஆட்பட்டு வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்வான். இந்தப் பெரும் மாயையில் இருந்து விடுபட தர்ப்பண பூஜைகளை முறையாகச் செய்வதே சிறந்த வழி. கலியுக மனிதன் தர்ப்பண பூஜைகளை முறையோடு செய்து ஒரே ஒரு பித்ருவின் ஆசியைப் பெற்றால் கூடப் போதும். எளிதில் கடைத்தேறி விடலாம்

தர்ப்பண மகிமை தொடரும் ..


No comments:

Post a Comment