Wednesday, July 13, 2022

இரத்த அழுத்தம்

 *இரத்த அழுத்தம் என்றால் என்ன...*

ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல நம் இரத்தக் குழாய்களில் ஓடிக் கொண்டிருக்கிறது இரத்தம். அப்படி ஓடுவதற்கு ஓர் அழுத்தம் தேவை. அந்த அழுத்தத்துக்குப் பெயர்தான் இரத்த அழுத்தம் (Blood pressure).

பொதுவாக, ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது வழக்கமானது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure) மேல் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி இரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம், 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure) கீழ் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற இரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது.

ஆனால், இரத்த அழுத்தம் எல்லோருக்குமே சொல்லிவைத்தது போல் 120/80 என்று இருக்காது. உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சிஸ்டாலிக் அழுத்தமும் டயஸ்டாலிக் அழுத்தமும் வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ. வரை உள்ள இரத்த அழுத்தத்தை வழக்கமானது என்றும், இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை ‘உயர் இரத்த அழுத்தம்’ (High Blood Pressure); 100/70 மி.மீட்டரை விடக் குறைந்தால் அதை ‘குறை ரத்த அழுத்தம்’ (Low Blood Pressure) என்றும் வரையறுத்தது.

அடுத்து, உயர் இரத்த அழுத்தத்தில் ‘வெள்ளைக்கோட்டு நோயியம்’ (White Coat Syndrome) என்று ஒன்று உண்டு. அதாவது, சில பயனாளிகள் மருத்துவரிடம் வரும்போது பரிசோதித்தால் இரத்த அழுத்தம் 130/90 எனச் சிறிது கூடுதலாக இருக்கும். இது அச்சத்தின் விளைவாக ஏற்படுவது. வீட்டுக்குச் சென்றதும் இது 120/80 என்று இயல்பாகிவிடும். இவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. 

இரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். சிலருக்கு இது தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கும். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக உயர் இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் இரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு இரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்.

உதாரணமாக, இரத்த அழுத்தமானது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும் போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும்.

இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

நிரந்தர உயர் இரத்த அழுத்தம்

பொதுவாக, வயது கூடும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் இரத்தக்குழாய் பாதிப்பு, அதிக இரத்தக் கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வில்லாமல் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை.

மருத்துவர்கள், ஒருவருக்கு உண்மையான இரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை இரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள்.

 *தனித்த உயர் இரத்த அழுத்தம்...*

உயர் இரத்த அழுத்தத்தில் ஒரு சிறப்பு வகை இருக்கிறது. அதற்கு ‘தனித்த உயர் இரத்த அழுத்தம்’  (Isolated Systolic Hypertension)   என்று பெயர். அதாவது, இதில் சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180க்கு மேல் இருக்கும். டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும். இப்படி இருப்பதை ‘தனித்த உயர் இரத்த அழுத்தம்’ என்கிறோம். இதயத்துக்கு அதிகம் சுமை தந்து, இதயம் செயல் இழப்பதை ஊக்குவிக்கின்ற மோசமான இரத்த அழுத்தம் இது. பொதுவாக வயதானவர்களுக்குத்தான் இது ஏற்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளிடம் இது இளம் வயதிலேயே காணப்படுகிறது. இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மறதி நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் இரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.

திடீரென்று மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால்  இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer) அதாவது, ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

பாதிப்புகள் என்னென்ன?

உயர் இரத்த அழுத்தத்தை காலமுறைப்படி டாக்டரிடம் சென்று அளந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள தவறினால்  உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும். அது துடிப்பதற்கு சிரமப்படும். மாரடைப்பு வரும்.

மூளை பாதிக்கப்படும்போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது கண்ணைப் பாதித்தால், திடீரென பார்வை பறிபோய்விடும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப்போகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்துவிடும்.

*உயர் இரத்த அழுத்த வகைகள்...*

இதயம் சுருங்கும்போது (சிஸ்டாலிக் அழுத்தம்),  இதயம் விரியும்போது (டயஸ்டாலிக் அழுத்தம்) இரத்த அழுத்த நிலை...

100 முதல் 140 வரை 70 முதல் 90 வரை சரியான நிலை (Normal)

141 முதல் 159 வரை 91 முதல் 99 வரை இளநிலை (Mild)

160 முதல் 179 வரை 100 முதல் 109 வரை மிதநிலை (Moderate)

180 முதல் 199 வரை110 முதல் 129 வரை மிகுநிலை (Severe)

200க்கு மேல் 130க்கு மேல் கொடியநிலை (Malignant)

புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ இரத்தக் குழாய்களை சுருக்கி விடுகிறது. இதனால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய இரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும்.

இங்கு இரத்த அழுத்த வகைகள் குறித்துப் பேசுவதற்குக் காரணம், இந்த வகைகளை அடிப்படையாக வைத்துத்தான் இதற்கு சிகிச்சை முறை அமைகிறது. எனவே, உயர் இரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது.

*உயர் இரத்த அழுத்தத்தை தவிர்க்கவும் தப்பிக்கவும் வழிகள்...*

30 வயது ஆனவர்களும் குடும்பப் பின்னணியில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். காலம் கடந்து  கண்டுபிடிக்கிற போது, உடலில் வேறு சில பாதிப்புகளும் சேர்ந்து கொள்கிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம்.

*உப்பைக் குறைக்கவும்...*

உயர் இரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர், சேவு, சீவல் போன்ற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட்  உணவுகள், விரைவு உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 *உணவில் கவனம்...*

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை குறைந்த அளவிலும் சுழற்சி முறையிலும் பயன் படுத்தினால் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகள் உகந்தவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் தோலுரித்த கோழிக்கறி அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்ளலாம். காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

*நார்ச்சத்து உணவுகள் உதவும...* 

      நார்ச்சத்து இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். எடையைக் குறைக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தமும், மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, பிரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகளில் நார்ச்சத்து அதிகம்.

*பழங்களை சாப்பிடுங்கள்...*

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*நடக்க நடக்க நன்மை...*

உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப்பயிற்சி தேவை.

*புகை உடலுக்குப் பகை...*

சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 600 மடங்கு அதிகரிக்கிறது. புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ இரத்தக்குழாய்களை சுருக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய இரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும். புகைப்பதையும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிருங்கள்.

மதுவுக்கு மயங்காதீர்கள்!

அருந்தப்படும் ஒவ்வொரு கோப்பை மதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் ஒருவருடைய இரத்த அழுத்தம், மது அருந்தாதவரை விட  இரு மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

*தூக்கமும் ஓய்வும் முக்கியம்...*

தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும்  வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது. மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்தால் மனம்  லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

*மாத்திரைகள் எப்போது அவசியம்...*

இன்றைய நவீன மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்துகளை கலந்து சாப்பிடும் வழிமுறைகளும் உள்ளன. அதனால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் நோயைப் பற்றி அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

 *குறை இரத்த அழுத்தம்...*

உயர் இரத்த அழுத்தம் (Hypertension) குறித்து அநேகருக்கும் தெரிந்திருக் கிறது. அதேவேளையில் குறை இரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம்கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. உலகளவில் சொல்லப்படும் புள்ளி விவரப்படி இளம் வயதில் 100ல் 10 பேருக்குக் குறை இரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது.

உயர் இரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி’ (Silent killer) என்கிறோம். அதுபோல் குறை இரத்த அழுத்தத்தை ஓர் எரிமலை என்கிறோம். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாததுபோல, குறை இரத்த அழுத்தமும் எப்போது ஆபத்தைத் தரும் என்று கூற முடியாது.

*‘குறை இரத்த அழுத்தம்’ என்பது எது...*

முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதில் 120 என்பது மேல் அழுத்தம்; 80 என்பது கீழ் அழுத்தம். இரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் குறைந்தால் அது ‘குறை ரத்த அழுத்தம்’. இதில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை இரத்த அழுத்த நோய்க்குத் ‘தமனிநாளக் குறை இரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.

நம்மிடையே பலருக்குக் குறை இரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் இருக்காது. அவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று மேல் அழுத்தத்தில் 20 மி.மீ. குறைகிறதென்றால் அல்லது கீழ் அழுத்தத்தில் 10 மி.மீ. குறைகிறதென்றால் மயக்கம் உள்ளிட்ட சில தொல்லைகள் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

*இரத்த அழுத்தம் குறைவது ஏன்...*

இதயத்துக்குத் தேவையான இரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை இரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் இரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்றுவிடுகிறது; இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் இரத்தம் குறைகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது; மயக்கம் ஏற்படுகிறது.

*யாருக்கு இது வருகிறது...*

விபத்துக்குள்ளாகுபவர்கள், தடகள வீரர்கள், கடுமையான உடற் பயிற்சி/ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள்ளிட்ட சில ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள், இரத்தம் இழப்பவர்கள், இரத்தசோகை, கடுமையான நோய்த்தொற்று, இதய நோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய் - சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடலில் நீரிழப்பு ஏற்பட்டவர்கள், ஒவ்வாமை உள்ள வர்கள் போன்றோருக்குக் குறை இரத்த அழுத்தம் ஏற்பட சாத்தியம் அதிகம். கடுமையான தீப்புண், அதிர்ச்சி, விஷக்கடி, மருந்துகளின் பக்க விளைவு போன்றவற்றாலும் இது ஏற்படலாம்.

*அறிகுறிகள் எப்படி இருக்கும்...*

தலைப்பாரம், தலைசுற்றல், மயக்கம், வாந்தி, அதிக தாகம், சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப் போவது, படபடப்பு, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால், அப்போது குறை இரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

*‘இருக்கை நிலை குறை இரத்த அழுத்தம்’ என்பது என்ன...*

சிலருக்குப் படுக்கையைவிட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான்.

இதற்கு ‘இருக்கை நிலை குறை இரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது அதிகம். நடு வயதிலும் ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வருவதும் உண்டு. சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.

*உணவு சாப்பிட்ட பிறகு சிலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. அது ஏன்...*

சிலருக்கு உணவு சாப்பிட்டதும் இரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். தானியங்கி நரம்புக் குறைபாடு (Autonomic neuropathy) உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம். உணவைச் சாப்பிட்டதும் அதைச் செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் இரத்தம் சென்றுவிடும்.

இதனால் இதயத்துக்கும் மூளைக்கும் செல்ல வேண்டிய இரத்தம் குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்துவிடும். இந்த வகை குறை இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க சிறிது சிறிதாகச் சிறிய இடைவெளிகளில் உணவு சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்து உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.

 *இயற்கையாக இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட வழிகள்...*

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் இரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான  பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே இரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். 

*இயற்கையாக இரத்த அழுத்தம் குறைக்க, நாம் கடைப்பிடிக்கவேண்டிய 10 வழிமுறைகளைப் பார்ப்போம்...*

*காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி...*

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் இரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல்பருமன் அதிகரிக்க அதிகரிக்க  சர்க்கரையின் அளவும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். தினசரி காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதுபோல இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்வது நல்லது. இதனால்  நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருக்கும். இரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவும்.

*யோகா மற்றும் பிராணாயாமம்...*

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தாலே உடலின் இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தினசரி யோகா, மற்றும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்வதால், உடலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.

*நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும்...*

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த தின்பண்டங்கள் சாப்பிடுவதை, முடிந்த அளவுக்குக் குறைத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற கடைகளில் எண்ணெயை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப சூடாக்குவதால் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்னும் அமில மாற்றம் நடைபெறும். இந்த எண்ணெய் நிறைந்த தின் பண்டங்களைச் சாப்பிடுவதால், ரத்தக்குழாயில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' படியத் தொடங்கிவிடுகிறது. இதனால், இதயக்குழாயில் சீரான இரத்த ஓட்டம் செல்லாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.  

*கஃபைன், புகை, மது தவிர்க்கவும்...*

இதயக்குழாய்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டியது அவசியம். சிகரெட்டில் உள்ள நிகோட்டின், மதுவில் உள்ள ஆல்கஹால், டீ, காபி ஆகியவற்றில் உள்ள கஃபைன் ஆகியவற்றால், இதயக்குழாயில் பாய்ந்து செல்லும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, திடீர் தலைசுற்றல், வியர்வை வழிதல் ஆகியவை ஏற்படும்.

*பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவும்...*

உணவைப் பதப்படுத்தும்போது, சோடியம் உப்பு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட, உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. குழம்பு, ரசம், காய்கறிகள் ஆகிய உணவுகளில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 1,500 மி.லி கிராம் அளவுக்கு உப்பு (ஒரு டீஸ்பூன் அளவு உப்பு) மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

*உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்...*

உடல் எடையைக் குறைக்க ஜாக்கிங், காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள், யோகா, பிராணாயாமம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவற்றைச் செய்வதுடன் அவ்வப்போது, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றைச் சோதித்துப் பார்த்து குறைத்துக் கொள்வது நல்லது. தொப்பை போடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

*சத்தான உணவுகளைச சாப்பிடவும்...*

தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அவகேடோ,  பொட்டாசியம் நிறைந்த புரோக்கோலி, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் இரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.   

*எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்...*

எண்ணெயில் பொரித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இவற்றைச் சாப்பிடுவதால், இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது இதய இரத்தக்குழாயின் உட்பகுதியில் படிந்து, நாள்பட நாள்பட இறுக ஆரம்பித்து விடும். இதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். புரதச்சத்து சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், அசைவ உணவுகளில் எண்ணெய், உப்பு, காரம் ஆகியவற்றை அளவாக சேர்த்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடாதவர்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பருப்பு - பயறு வகைகளைச் சாப்பிடலாம்.

*குறை இரத்த அழுத்தத்திற்கு என்னென்ன பரிசோதனைகள் தேவைப்படும்...*

குறை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மல்லாந்து படுத்த நிலையிலும் பிறகு எழுந்து நின்ற நிலையிலும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட வேண்டும். வழக்கமான இரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் நல்லது. சிலருக்கு ‘சாய் மேசை பரிசோதனையும் (Tilt-table Test) தேவைப்படும்.

*குறை இரத்த அழுத்தத்தை தவிர்க்கவும் தப்பிக்கவும் வழிகள்...*

அடிப்படைக் காரணத்தைச் சரி செய்தால் மட்டுமே குறை இரத்த அழுத்தம் சரியாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்து கொள்வது நல்லது. சிறு தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும். உடல் எடையைப் பேண வேண்டும்.

*இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்...*

ஒருவருக்கு உடல் சோர்வு, சுறுசுறுப்பின்மை, மந்த நிலை தொடர்ந்து இருந்தாலே, குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு இருக்கக்கூடும். இதற்கு உடனடி பலனை தருவது உடற்பயிற்சிதான்.  

உடற்பயிற்சி செய்யும் போது, இரத்த அழுத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.  தினசரி 45 முதல் 60 நிமிடங்கள் நடை, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை மேற் கொள்ளலாம். எடை தூக்கும் பயிற்சி செய்வதும் நல்லதுதான் என்றாலும்,  தோளுக்கு மேல் அதிக எடையை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது. 

உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தவிர்க்கச் சொன்ன உணவுகளை  இவர்கள் சாப்பிடலாம். அதிக உப்பு சேர்த்த உணவை எடுத்துக் கொள்ளலாம். பேரிச்சம் பழம், அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். தினசரி குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால்  உடலில் இரத்த அழுத்தம் சீராகும். உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தாலும் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை குறையவில்லை என்றால் மருத்துவர்களை அணுகுவதுதான் நல்லது.

*இரத்த அழுத்தத்திற்கு வீட்டு மருந்து...*

* உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் சாற்றை 1 டம்ளர் அளவு எடுத்து 10 மிளகை தூள் செய்து கலந்து பகல் 11 மணிக்குப் பருகி வர உயர் இரத்த அழுத்தம் சீராகும். 

* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அது 50மிலியாக ஆனதும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்க அதிக இரத்த அழுத்தம் குறையும், குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தலாம்.

* அதிக இரத்த அழுத்த நோயுள்ளவர்கள் செம்பருத்தி பூவின் இதழ்களை தினமும் சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சீராகும்.

* அருகம்புல் சாறு காலை வெறும் வயிற்றில் அருந்த இரத்த அழுத்தம் சமநிலைப்படும். உயர் / குறை இரத்த அழுத்தம் இரண்டு வகையினரும் அருந்த ஏற்றது.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* கிராம்பு 6 அல்ல‍து 7 போட்டு ஒரு 5 நிமிடம் நீரில் ஊற வைக்க‍ வேண்டும் பின் அதை கொதிக்க‍ வைத்து வடிகட்டி அந்த கிராம்பு நீரை மிதமான சூட்டில் எடுத்து குடித்தால். உயர் இரத்த‍ அழுத்த‍ம் சமநிலைப்படும். 

* தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

* கறிவேப்பிலை சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து கலந்து மதிய உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் அருந்த உயர் இரத்த‍ அழுத்த‍ம் குறையும்.

* இலவங்கப்பட்டையை தேநீர் போட்டு அருந்தினால் இரத்த‍ அழுத்த‍ம் சமநிலைப்படும்.

* சீரகத்தை வெந்நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். 

* பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடிக்கலாம். 

* முருகை கீரையில் இருந்து சாறு எடுத்து அதில் சீரகத்தை ஊறவைத்து பின் அந்த சீரகத்தை உலர்த்தி அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதை தேனில் நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

 *மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவும்...*

ஒவ்வொருவருக்கும் ஒருவித குழந்தைத்தனம், குறும்புத்தனம் மறைந்திருக்கும். வயதாக ஆக, குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக அவற்றை விட்டு நாம் விலகி வெகுதூரம் வந்திருப்போம். குழந்தைகளுடன் விளையாடுவது, நடனம் ஆடுவது, உற்சாகக் கூச்சலிடுவது, குதிப்பது போன்ற செயல்களால் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோடொனின் அதிகம் சுரக்கும். இதனால், மனம் லேசாகி இரத்த அழுத்தம் சீராகும்.   

*லாஃப்டர் தெரப்பி / சிரிப்பு யோகா...*

மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலை நாடுகளில் 'லாஃப்டர் தெரப்பி'  மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.  இப்போது நம் ஊர்களிலும் இது பிரபலமடையத் தொடங்கிவிட்டது. காலையில் வாக்கிங் முடித்து, பலர் ஒரே இடத்தில் கூடி, சிரித்து தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கிக் கொள்ளலாம். லாஃப்டர் தெரப்பியோடு, வீட்டில் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளை கண்டு களிப்பது, புத்தகம் படிப்பது,  குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது எல்லாம் பலன்களைத் தரும். ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, இரத்த அழுத்தம் சீராகும். சிரிக்கும்போது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சுவாசிப்பதுடன், அதிகமான ஆக்ஸிஜனையும் உள்வாங்குகிறோம். இதனால் இரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உடனடியாகக் குறைகிறது. 

எக்காரணம் கொண்டும் தனியாக அமர்ந்து சிரிக்காதீர்கள், நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்து ஜாலியாக பேசி மகிழுங்கள்.

🍁 வாழ்க வளமுடன் 🍁

No comments:

Post a Comment