சிறைக்குள் வந்த யானை
ஒருமுறை, வடநாட்டைச் சேர்ந்த பாவாஜி என்ற பக்தர் திருப்பதி திருமலைக்கு வந்தார். சீனிவாசனை உளம் குளிர சேவித்த அவருக்கு அவ்வூரை விட்டு செல்ல மனமில்லை. ஓரிடத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கிவிட்டார். தினமும் புஷ்கரணியில் மூன்று முறை குளியல், ஏழுமலையானின் தரிசனம் என ஏக உருக்கமாக பக்தி செலுத்தினார்.
பக்தன் பாவாஜியை பாலாஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒருநாள், பாவாஜி தன் முன் சொக்கட்டான் ஆட்டத்திற்குரிய கட்டம் வரைந்து அதன் முன் அமர்ந்து, மறுபக்கம் ஏழுமலையான் அமர்ந்திருப்பது போல பாவனை செய்து கொண்டு, சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாவாஜி முன்னால் பேரொளி தோன்றியது. அது கண்ணைப் பறித்ததால் பாவாஜியால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு எழுந்தார், படிப்படியாக ஒளி குறைந்ததும். அங்கே சீனிவாசனின் திவ்யமான சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அவருக்கு பெரும் ஆனந்தம்.
""சீனிவாசா! இதென்ன அதிசயம்! சிலை வடிவில் நீ இங்கு வந்துள்ளதன் மூலம் நான் உனக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால், ஏன் நேரில் காட்சி தரவில்லை. உனக்காக கட்டம் கட்டி, உன்னோடு இவ்வளவு நேரமும் சொக்கட்டான் ஆடினேனே! ஒரு நாளாவது என்னோடு நீ விளையாட வரக்கூடாதா?'' என்று உளமுருகி கண்ணீர் வடித்தார்.
அப்போது, அந்தச் சிலையில் இருந்து சீனிவாசன் வெளிப்பட்டார்.
""பாவாஜி!'' என்று அழைத்தார். பாவாஜிக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஆக, சாட்சாத் பரப்பிரம்மமான நாராயணன், சீனிவாசனின் வடிவில் அங்கே இருந்தார்.
""வா பாவாஜி! சொக்கட்டான் ஆடலாம்,'' என்றார்.
பாவாஜி அவரது பாதங்களில் விழுந்து ஆசிபெற்று, ""உன்னைப் பார்த்ததன் மூலம் பிறந்த பயனை அடைந்தேன். வா விளையாடலாம்,'' என்று அவரது கையைப் படித்து அமரவைத்தார். இருவரும் விளையாடினர். பக்தன் தோல்வியடைவதை ஆண்டவன் என்றுமே விரும்பமாட்டான். சீனிவாசன், தன் நண்பனுக்காக ஆடத்தெரியாதவர் போல நடித்து, ஆட்டத்தில் கோட்டை விட்டார்.
""பாவாஜி! நீ இந்த விளையாட்டில் மகா சமர்த்தன். உன் அளவுக்கு என்னால் விளையாட முடியாதப்பா,'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்ட சீனிவாசனிடம், பாவாஜி, "" பகவானே! தாங்கள் தினமும் இந்த ஆஸ்ரமத்துக்கு வர வேண்டும். உங்களோடு நான் சொக்கட்டான் ஆடி மகிழ வேண்டும்,'' என்றார். சீனிவாசனும் ஒப்புக் கொண்டு, தினமும் பாவாஜியின் இல்லம் வர ஆரம்பித்தார். இவ்வாறாக, அவர்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர்.
பக்தர்களைச் சோதித்துப் பார்ப்பதில் சீனிவாசனுக்கு அலாதி ப்ரியம். ஒரு நாள், சீனிவாசன் பாவாஜியுடன் விளையாட வந்தார். தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பகவான் மாலையைக் கழற்றி வைத்துவிட்டு சென்றுவிட் டாரே, இதைக் கொண்டு போய் கொடுத்துவிடலாம் என எண்ணிய பாவாஜி மாலையுடன் திருமலையிலுள்ள சீனிவாசனின் கோயிலுக்குள் சென்றார். அங்கே ஒரே களேபரமாக இருந்தது.
""ஐயையோ! சீனிவாசனின் கழுத்தில் இருந்த மாலையைக் காணவில்லையே! யார் திருடினார்களோ,'' என்று அர்ச்சகர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிகாரி ஒருவர் கையைப் பிசைந்தபடி நின்றார்.
அப்போது,பாவாஜி காணமல் போன மாலையுடன் கோயில் பக்கமாக வர, ""பிடியுங்கள் அவனை! அந்த திருடனின் கையில் சுவாமியின் மாலை இருக்கிறது,'' என்று கத்தினர் அர்ச்சகர்கள்.
அங்கே நின்றவர்கள் ஓடிச் சென்று பாவாஜியைப் பிடித்து மாலையைக் கைப்பற்றினர்.
அத்துடன் அவரை நையப் புடைத்தனர். பாவாஜி கதறினார்.
""சீனிவாசா! நான் திருடனா! என் இடத்துக்கு வந்து என்னோடு சொக்கட்டான் ஆடியது இப்படி என்னை சோதிக்கத்தானா? என் உயிரை எடுத்துக் கொள். ஆனால், பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கிவிடாதே,'' என்று ஓங்கி குரல் கொடுத்தார்.
""பகவான் இந்த பாமரனோடு சொக்கட்டான் ஆட வந்தாராம்...'' ஆஹஹ்ஹஹ்ஹா... என்று ஏளனச் சிரிப்பு சிரித்தனர் அங்கிருந்தோர்.
""இந்தப் பொய்யனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் இழுத்துச் செல்லுங்கள்,'' என்று சிலர் குரல் கொடுக்க, அவர்கள் பாவாஜியை இழுத்துச் சென்றனர்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் மகாநீதிமான். எதையும் எளிதில் விசாரிக்காமல் செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அவரும் பெருமாள் பக்தர். பெருமாளின் திவ்யலீலைகளை அவர் அறிவார். தன் முன்னால் நிறுத்தப்பட்ட பாவாஜியின் முகத்தைப் பார்த்த அவருக்கு, இந்த மனிதன் தவறு செய்திருக்க மாட்டார் என்றே தோன்றியது. இருப்பினும், ஏழுமலையானின் ஆரத்துடன் பிடிபட்டதால் விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
""பாவாஜி! உம் மீது திருட்டு குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதுபற்றி என்ன சொல்கிறீர்!'' என்று அதட்டலுடன் கேட்டார்.
""அரசே! இது சுத்தப்பொய். பெருமாள் என்னுடன் தினமும் சொக்கட்டான் ஆட வருவார் என்பது நிஜம். அவரே இந்த மாலையை என் ஆஸ்ரமத்தில் கழற்றி வைத்து விட்டு வந்துவிட்டார். அதை அவரிடம் சேர்க்கவே வந்தேன். இதற்கு நானும் அவருமே சாட்சி. செய்யாத குற்றத்துக்காக, தாங்கள் எனக்கு மரணதண்டனை விதித்தாலும் அதற்காக கலங்கமாட்டேன். ஏனெனில், மரணம் என்றும் நிச்சயமானது. இறைவன் குறிப்பிட்ட நாளில் அது வந்தே தீரும். ஆனால், கெட்ட பெயருடன் நான் மரணமடைந்து விட்டால், என் மீதான களங்கம் உலகம் உள்ளளவும் பேசப்படும். அதை நினைத்தே கலங்குகிறேன்,'' என்றார்.
பாவாஜியின் பேச்சு தேவராயருக்கு நம்பிக்கையைத் தந்தது.
""சரி, பாவாஜி! நீர் பாலாஜியின் நண்பர் என்பது உண்மையானால் உமக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். ஒரு வண்டி கரும்பை நிலவறையில் (பாதாளத்திலுள்ள அறை) வைக்கிறேன். நீர் சொல்வது உண்மையானால், அவற்றை நீ முழுமையாகத் தின்று விட வேண்டும். புரிகிறதா?'' என்று சொல்லி அவரை அனுப்பினார்.
ஏவலர்கள் பாவாஜியை நிலவறைக்கு இழுத்துச் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்புகளை உடைய வண்டியின் முன்னால் அமர வைத்து விட்டனர்.
ஆயிரம் கரும்புகளை வரிசையாக ஒருவனால் எப்படி உண்ண முடியும்? ஒரு துண்டு கரும்பைத் தின்பதற்குள்ளேயே சலிப்பு தட்டிவிடும். நடக்கிற காரியமா?
பாவாஜி கண்ணீர் வடித்தபடியே, ""பரந்தாமா! உன் நண்பனை, உன் பக்தனை நீ நடத்தும் விதம் இதுதானா? எந்தப் பாவமும் செய்யாத என்னை சிக்கலில் மாட்டிவிட்டாயே! இது தான் பக்தன் மீது நீ கொண்ட பாசமா? விரைவில் வா! உன் மீது பாரத்தைப் போட்டு விட்டேன். என் மீதான களங்கத்தைப் போக்கு,'' என்று அழுதார். அப்படியே தூங்கியும் விட்டார்.
அப்போது ஏழுமலைவாசன் ஒரு யானையின் வடிவில் நிலவறைக்குள் வந்தார். விடிவதற்குள் ஆயிரம் கரும்புகளையும் தின்று தீர்த்தார். அத்துடன் தும்பிக்கையை நீட்டி பாவாஜியை எழுப்பி ஆசிர்வாதம் செய்தார். பின்னர் பிளிறினார்.
நிலவறையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்டதும், காவலர்கள் ஓடி வந்து பார்த்தனர். கரும்பு முழுமையாக காலியாகி விட்டிருந்தது. "குறுகிய வாசல் கொண்ட அந்த நிலவறைக்குள் யானை எப்படி புகுந்தது? இதென்ன ஆச்சரியம்,'' என அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
உடனடியாக கிருஷ்ணதேவராயரிடம் சென்று, "அரசே! கேளுங்கள். பாவாஜியை அடைத்து பூட்டியிருந்த நிலவறைக்குள் ஒரு யானை எப்படியோ புகுந்திருக்கிறது. அது எப்படி உள்ளே வந்தது என்பதை நாங்கள் அறியமாட்டோம். ஆனால், நிகழ்ந்திருப்பது நிச்சயமாக அதிசயம். அங்கிருந்த ஒரு வண்டி கரும்பும் காலியாகி விட்டது,'' என்றனர்.
தேவராயர் அவசர அவசரமாக நிலவறைக்குள் வந்தார். பாவாஜியை அணைத்துக் கொண்டார்.
""பாவாஜி! தாங்கள் சொன்னது நிஜமே! உங்களை விட உத்தமர் உலகில் இல்லை. அந்த சீனிவாசனே யானையாக வந்து கரும்புகளை உங்களுக்காக தின்றிருக்கிறார் என்றால், உங்கள் இருவரிடையே உள்ள நட்பை என்னவென்று புகழ்வேன்! எங்களை மன்னிக்க வேண்டும். இனி, நீங்களே இந்தக் கோயிலின் அதிகாரி. கை சுத்தமானவர்களே கோயிலில் அதிகாரியாக இருக்க தகுதியுடையவர்கள்,'' என்றார்.
பாவாஜியும் அரசரின் வேண்டுகோளை ஏற்று, ஏழுமலையான் கோயிலின் நிர்வாக அதிகாரியானார். ஏழுமலைவாசனுக்கு தினமும் பணிவிடை செய்தார். அவரது நினைவாக திருமலையில் கோயிலுக்கு தென்புறம் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த பாவாஜி மண்டபத்தை தரிசித்து செல்கிறார்கள். மலை உச்சியில் பாலாஜியும், பாவாஜியும் விளையாடிய மண்டபம் இருக்கிறது.
ஏழுமலையானை எல்லாருமே 'பணக்கார சுவாமி' என்பர். ஆனால், அவர் கடன்காரர். அதுமட்டுமல்ல, எளிமையையே அவர் விரும்புவார்.
ஏழுமலைவாசனை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். அவர் சரிதத்தைப் படித்தவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். ஓம் நமோ நாராயணாய! கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!!
No comments:
Post a Comment