Wednesday, August 5, 2020

மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி 8

புடவூர் திருஎஸ் விஜயராகவன் ஸ்வாமிகள் வழங்கும் மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி

மலைநாட்டு திவ்யதேச யாத்திரை அநுபவங்கள்
               11. திருவனந்தபுரம்

நானும் வாசுவும் திருவாரன்விளை போய் வந்து சாப்பிட்டு விட்டு படுத்தோமே தவிர தூங்காமல் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
வாசு கேட்டான். “நாளைக்கு என்ன ப்ரோக்ராம் எஸ்.வி. முதல்ல இந்த லாட்ஜ்-ஐ காலி பண்ணனும்”  . ”வாசு நாம எப்படியும் இன்னைக்கு ராத்திரியே காலி பண்ணத்தான் போறோம். அதிருக்கட்டும். நாம இப்போ எத்தனை திவ்ய தேசம் கவர் பண்ணியிருக்கோம்னு சொல்லு”

“முதல்லே நாம போனது திருவித்துவக்கோடு,இரண்டாவது திருநாவாய், .மூணாவது குருவாயூர், நாலாவது திருமூழிக்களம் ஐந்தாவது திருக்காட்கரை, ஆறாவது திருக்கடித்தானம் ஏழாவது திருச்சிற்ராறு, எட்டாவது திருப்புலியூர், ஒன்பதாவது திருவண்வண்டூர், பத்தாவது திருவல்லவாழ் பதினோராவது திருவாரன்விளை –அவ்வளவு தான் சரியா? என்றான். “பரவாயில்லையே! ரொம்ப கரெக்டா சொல்லிவிட்டாயே. ஆனால் ஒரு விஷயம். நாம சேவிச்ச திவ்ய தேசங்கள் பத்து தான், குருவாயூர் புராண க்ஷேத்திரம் .இன்னும்   நாம் சேவிக்கவேண்டியது மூன்று திவ்ய தேசங்களும் ஒரு புராண க்ஷேத்திரமும் பாக்கியுள்ளது. இங்கிருந்து வர்க்கலா 8௦ கிலோ மீட்டர். திருவனந்தபுரம் 11௦ கிலோ மீட்டர். வர்க்கலாவிலே போய் ஒரு லாட்ஜிங், TRIVANDRUM-த்திலே ஒரு லாட்ஜிங்ன்னு ஒரு நாளைக்கு இரண்டு வேஸ்ட் பண்ண வேண்டாம்.
“வெரி குட் சித்தியா. பணவிஷயத்லே ரொம்ப கணக்கு பார்த்துத்தான் போற.பரவாயில்லை.”
“என்ன செய்யறது நாங்க கம்பெனியிலே டூர் போனவா, ஒருநாளைக்கு இவ்வளவுன்னு பாட்டா கொடுத்துடுவான். கம்மியா பிளான் பண்ணி  செலவு பண்ணா நமக்கு லாபம்.
அதிகமா வகை தொகை தெரியாத செலவு பண்ணா நம்ம கையை விட்டு கொடுக்கணும். நான் நாலு பேரை டிரெயின் பண்ணியிருக்கேன். ஜீவன்லால்-ளே இரண்டு பேர் சன் மெட்டல்-ளே ரெண்டு பேர். இப்போ அவா இன்னும் எப்படியெல்லாம் சிக்கனமாகவும் அதே நேரம் குறைகள் இல்லாமலும் TRAVEL பண்ணலாம்-னு எனக்கே சொல்லி கொடுப்பா. அந்த மாதிரி அவர்களை டிரெயின் பண்ணியிருக்கேன். அதை பற்றி நாளைக்கு டைம் கிடைக்கறப்போ பேசுவோம். கொஞ்சம் இண்டரெஸ் டிங்கான சப்ஜெக்ட். நாளைக்கு பஸ்ஸிலே போறபோது சொல்லறேன்

இப்ப நம்ம பிளான் இதுதான். பின்மாலை  நிலம்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு போற  “அமிர்தா எக்ஸ்ப்ரெஸ்”  செங்கன்னூருக்கு 3-3௦-க்கு வரான். .திருவனந்த புரத்துக்கு காலை 6-3௦ மணிக்கு போயிடுவான். நாளைக்கு நாம திருவனந்தபுரம் திவ்ய தேசத்தை எட்டு மணிக்கு சேவிச்சுண்டு, மத்யானம் பஸ்-ல கிளம்பி வர்க்கலா போயிட்டு ராத்திரி திரும்பி வந்து சாப்ட்டுட்டு லாட்ஜ்-ளே படுக்கிறோம். அதற்கப்புறம் ப்ரோக்ராம் பின்னாடி சொல்றேன்.
சரி மணி ஒன்பதரை ஆறது. ஒரு 5 மணி நேரம் தூங்கினா போறும். இப்போ 2-3௦ மணிக்கு அலாரம் வைக்கிறேன். பல்தேய்த்து டிரஸ் பண்ணிட்டு துணியை எல்லாம் பாக்செய்துகொண்டு  மூன்று மணிக்கு ஸ்டேஷன் போறோம். ஒரு பத்து நிமிஷ நடைதான். ஆட்டோ எல்லாம்  தூங்கிண்டு இருப்பான். கிடச்சா போவோம். ஸ்டேஷன் போய் டிக்கெட் எடுப்போம். ரூ.25\- தான் இருக்கும். ஸ்டேஷன்–ளே காபி சாப்பிடுறோம். எக்ஸ்பிரஸ் காலியாத்தான் வருவான். இங்கே கோழிகோடு தாண்டி நிலம்பூரிலேர்ந்து வரான். கோழிகோடு, ஷோரனூர், திருச்சூர், இரின்ஜாலகுட, சாலக்குடி, ஆலூவ, எர்னாகுளம், கோட்டயம், ன்னு பெரிய ஸ்டேஷன்-ள எல்லாம் நின்னு வரதால முக்கள் வாசி பேர் எறங்கிடுவா. கொல்லம், திருவனந்தபுரம் போறவ மட்டும் தான் வண்டியிலே இருப்ப. நாம சௌகரியமா  படுத்து தூங்கிண்டு போகலாம் ரெண்டு ரெண்டரை மணி நேரத்திலே போயிடுவான். 1௦௦ கிலோ மீட்டர் போறதுக்கு மூன்று மணி நேரம் ஆகாது. வெறுமே லேட் ஆனா அட்ஜஸ்ட் பண்றதுக்கு டைம் டேபிளிளே அப்படி காட்டுவ. லேட் ஆச்சுன்ன இங்கே சென்கன்னுரிலே டிரெயின் அரை மணி லேட்டுன்னு  அனௌன்ஸ் பண்ணுவான். திருவனந்தபுரத்திலே சரியான நேரத்துலே வந்துண்டிருக்குன்னு அநௌன்ஸ் பண்ணுவான்.” அதன்படியே அதிகாலை 2-3௦மணிக்கு எழுந்து காலை கடன்களை முடி த்துக் கொண்டு குளிக்காமல் பைகளை தூக்கிக்கொண்டு RECEPTION-ல் கணக்கை முடித்து வெளியே வந்தபோது ஒரு ஆட்டோக்காரன் எங்களை பார்த்து “எந்தா, ஸ்டேஷன் தன்னே?” என்றான். நான் “அதே, எத்தன தரனும்?” என்று கேட்க “மிநிமம் தந்தா மதி” என்று சொல்ல ஏறிக்கொண்டு ஸ்டேஷன் அடைந்து டிக்கெட்ஸ் வாங்கிக்கொண்டு ரெண்டு ப்ரு காபி சாப்பிட்டவுடன் பிரெஷ் ஆனோம்.(ரயில்வே ஸ்டேஷன்களில் இது ஒரு சௌகரியம். 24 மணி நேரமும் காபி, டீ கிடைக்கும்)   நான் நினைத்தபடியே, வண்டி அரை மணி லேட் என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னபோது, வாசு “எஸ்.வி. நீ சொன்னதுதான்.” என்று கூறி சிரித்தான். வண்டி காலியாகவே வந்தது. ஏறிப் படுத்தோம்.  

திருவனந்தபுரம் போய் சேர்ந்து ஸ்டேஷன்-க்கு வெளியே வந்தோம். ஆட்டோக்கள் நிறைய நின்றுகொண்டிருந்தது. ஒருவனை விளித்து, “எந்தானும் வருனுண்டோ? இவ்விடே பக்கம் தன்னே ஓவர்ப்ரிட்ஜ் அடுத்து MGM LODGE ஆணும்”

“பக்கம் தன்னே. பட்சே  ஆட்டோ வேனுமாங்கில் மினிமம் ரூ.இருபது  தரனும், கேட்டோ” என்று சொல்ல “அது சாரமில்லே போகாம்” என்று கூறி ஏறி அமர்ந்து ஒரு நாலு  நிமிஷத்தில் போய்ச் சேர்ந்தோம். LODGE RECEPTION-ல் இருந்தவர் நமக்கு தெரிந்தவர் தான். “எந்த சார், அமிர்தா வானும்.” அதற்கு நான் “அதே, வேகமாயிட்டு ஆட்டோவிலே  வந்தது தானும், பின்னாலே மெட்ராஸ் வண்டி வருனுண்டு. LODGE FULL ஆயிங்கில் புரோப்ளமானும்.”.


“ஏய், ஞிங்கள் இந்நளே ராத்திரி மொபைல் போனிலே விளிச்சு பரஞ்சல்லோ! பின் எந்தா ? சாருக்கு இல்லேன் பரயாம் பற்றோ?”
“சரி பின்னே ஒரு டபுள் ரூம் பாத் அட்டாச்டு வேணும்” என்று கூறி (வெறும் ரூ.2௦௦/- தான் ஒரு நாளைக்கு பாத் ரூம் ATTAACHED) அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போய் பல் விளக்கினோம், ரூம் பாயிடம் ரெண்டு ஸ்ட்ரோங் காபி என்று சொல்ல அடுத்த ஐந்து நிமிஷத்தில் சுடச்சுட வந்துது.. .நன்றாக குளித்து வேஷ்டி உடுத்திக்கொண்டு திருமண் ஸ்ரீ சூர்ணம் இட்டுக்கொண்டு, உத்தரியத்துடன்  எட்டுமணிக்கு               ஒரு ஆட்டோவில் அமர்ந்து பத்மநாபா க்ஷேத்திரம் (கேரளாவில் கோயில்களை அம்பலம் அல்லது க்ஷேத்ரம் என்றே சொல்லுவார்கள்)  என்று கூறி கோவில் வாசலில் இறங்கினோம். மினிமம் ரூ. இருபத்தைந்து  கொடுத்து விட்டு மெதுவாக கோவிலை ரசித்துக்கொண்டேபோனோம்.“வாசு, இப்போ திருவிதாங்கூர் மஹாராஜா பெருமாளை சேவிக்கற டைம் 7-3௦ TO 8-3௦.. எல்லாரையும் நிறுத்தி விடுவா, 
வாசு சொன்னது: கோபுர வாசல் என்ன கம்பிரமா இருக்கு. நல்ல உயரத்தில் கட்டியிருக்க. ஆமா ரொம்ப அழகா இருக்கு அகலம் ஜாஸ்தி யாக இருக்கிறதினாலே. . சரி வா உள்ளே போவோம்.

உள்ளே போய் ஸ்ரீ அனந்த பத்மநாபரை சேவித்து விட்டு சுற்று பிரகாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ நரசிம்ஹன் சன்னதிகள் உள்ளது. அங்கே அமர்ந்து திருவாய்மொழி பதிகத்தை சேவிப்போம். அங்கே நிறைய பேர் உட்கார்ந்து பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள். நமக்கும் அந்த இடம் தான் சௌகரியம்.

ராஜ குடும்பத்தினர் சேவை முடிந்து வருகிறார்கள். சரியான சமயத்தில்தான் வந்துள்ளோம். திருவுடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேனே என்கிறார் ஆழ்வார்
இங்கே ஸ்ரீ ராமானுஜர் நம் சம்பிரதாயத்தை நிலை நாட்ட முயற்சித்தார். ஆனால் பெருமாள் இதற்கு ஒப்பாமல் அவரை திருக்குறுங்குடியில் ஓரே ராத்திரியில் சேர்பித்து விட்டார்.  


கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன*
நாளும் கொடுவினை செய்யும் கூற்றின்
தமர்களும் குருககில்லார்
விடமுடையரவில்பள்ளி விரும்பினான்
சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுரநகர் புகுதுமின்றே

ஐந்து நிமிஷம் முன்னாடியே ராஜா குடும்பத்தினர் (ஸ்திரீகள் அவர்கள் பாரம்பரிய கேரளா முண்டு முந்தானையுடனும் ஆண்கள் சட்டை அணியாமல் உபயுக்தமான தங்க ஆபரணங்களுடன் வேஷ்டி, உத்தரியங்களுடன் (எல்லாம் வெண்பட்டுதங்கசரிகை பார்டர்களுடனும்)
பெருமாளை சேவித்து விட்டு வெளியே வந்து அங்கு பிரகாரத்தில் நின்று கொண்டிருந்த சேவார்த்திகளை இருகரம் கூப்பி நமஸ்கரித்து வரவேற்பதுபோல் சற்று வரிசையாக ஓரமாக நின்று நம்மை சேவிக்கும்படி கூறி வெளிவாசல் வழியே சென்றனர்

நாங்கள் காவலர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளே சென்று ஸ்ரீ அனந்த பத்மநாபனை மூன்று வாசல் வழியாக சேவித்தோம். திருமுடிக்கு ஒரு வாசல். திருநாபிக்கு ஒரு வாசல், திருவடிக்கு ஒரு வாசல் ரொம்பவும் ஆச்சரியமான சேவை. அங்கே அர்ச்சகர் இருபது அடி சதுர பாறை கல்மீது நின்று பெருமானுக்கு பூஜை , அர்ச்சனைகள் செய்கிறார். கர்பக் க்ரஹத்தில் போதிமார் நிற்பதற்கென்றே அந்தக்கல் அங்கே தரையில் பரப்பப்பட்டுள்ளது .அதற்கு “ஒத்தகல்” என்றே பெயர். பின்பு பிரசாதங்களை பெற்றுகொண்டு பிரதட்சினமாக வருகையில் பின் பிரகாரத்தில் இருந்த ஸ்ரீ நரசிம்ஹர் சன்னதி முன் அமர்ந்து   திருவாய்மொழி பத்தாம் பத்து இரண்டாம் பதிகம் சேவித்தோம்.

அங்கங்கே சிலர் எங்களை மாதிரியே உட்கார்ந்து ஏதேதோ ஸ்தோத்திரங்களை சொல்லிக் கொண்டிருந்ததால் எங்கள் முன்னாள் இரண்டு மூன்று பேர் நின்று இரண்டொரு பாசுரங்கள் கேட்டு விட்டு கைகூப்பி விட்டு நகர்ந்தனர். நிறைய தமிழ்நாட்டு சேவார்த்திகள் இருந்தனர்..பின்பு பிரகாரத்தை சுற்றி வருகையில், அய்யப்பன், சிவன், வியாசர், கணேஷர், ஸ்ரீராமர்,லக்ஷ்மண, சீதா, அஞ்சநேய சமேதருக்கும் சன்னதிகள் தனித்தனியே இருந்தது,

பின்பு அங்கே விசாரித்ததில் ஸ்ரீ நரசிம்ஹரின் உக்ரத்தை குறைக்க நாள்தோறும் கோவில் திறந்திருக்கும் காலங்களில் ஸ்ரீராமாயண பாராயணம் அந்த நரசிம்ஹர் சன்னதிமுன்பு பண்ணுகிறார்கள் என்று தெரிந்தது... அங்கே எல்லாரும் உட்கார்ந்து எதோ சொல்லுகிறார்கள் என்று நாங்களும் உட்கார்ந்து திருவாய்மொழி சேவித்ததை அங்கே யாரும் தவிர்க்கவில்லை.

ராஜகோபுரத்தின் ஒரு பகுதி: சுதை வேலைப்பாடுகள் நிறைய உள்ளன.
இந்த போட்டோவின் சிறிய பகுதில் மூன்று காட்சிகள். அகலிகை சபை விமோசனம் கல்லாய் இருந்த அகலிகை ராமன் பாதை தூளி பட்டு உயிர் பெறுதல். பின்னால் கௌசிக முனிவர் நிற்கிறார். மற்றொன்றில் தன் யாக பூர்த்திக்காக ராம, லக்ஷமணர்களை விஸ்வாமித்ரர்
அழைத்து போதல். பிறிதொன்றில் சீதையை மணக்க வில்லை முறித்தல் இப்படி ஒவ்வொரு அடுக்கிலும் இதிஹாச நிகழ்ச்சிகள் காண்க
  
சுமார் ஒன்பதரை மணிக்கு வெளியே வந்து திருக்குளத்து நீரை ப்ரோக்ஷீத்து கொண்டு சன்னதி வீதியில் நடந்தோம்

சிலர் கும்பலாக நின்று ஒரு மாளிகையின் மேற்புறத்தை பார்த்து கொண்டிருந்தனர். நான் ஒருவரை பார்த்து “எந்தானும் நோக்குனுண்டு?” என்று கேட்க அங்கிருந்த ஒரு கடிகாரத்தை சுட்டி காட்டினர். கடிகாரம் அந்த அரண்மனை போன்ற  பழங்காலத்து கட்டிடத்தில்  சுமார் இருபத்தைந்து  அடி உயரத்தில் இருந்தது. அது ராஜபரம்பரயினர் கட்டிடமாக தெரிந்தது. இன்றும் சன்னதி வீதியில் பார்க்கலாம் அதன் போட்டோ கீழே காட்டியுள்ளேன்..  

அந்த கடிகாரத்தில் என்ன விசேஷம் என்று கேட்டேன். மணிக்கொரு முறை மணி அடிக்கும்போது அந்த ரெண்டு ஆடுகளும் முட்டிகொள்வது போல் தலையை சாய்க்கும். இடையிலுள்ளஅந்த தாடி தலை  மனிதன்  தன் வாயை திறந்து பல் தெரிய சிரிப்பான். (இதை நீங்களும் “METHAN MANI CLOCK TRIVANDRUM YOU TUBE-ல் நெட்டில் நன்றாக பார்க்கலாம்

தினப்படி ராஜபரம்பரயினர் தங்கள் குடும்ப ஸ்திரீகளுடன் மலையாள தங்கள் TRADITIONAL டிரஸ்களுடன் வந்து சேவிப்பார். விசேஷ உத்சவ காலங்களில் அந்த பரம்பரையினர் மரியாதைகளுடன் அழைத்து வரப்படும் காட்சியை கீழேயுள்ள போட்டோவில் காணாலாம்.அந்த பரம்பரையினர் இன்றும் கையெழுத்து இடும் போது “பத்மநாப தாஸன்” என்றே ஒப்பமிடுவர். அந்த க்ஷேத்ரம் அந்த ராஜபரம்பரையின் சொந்த சொத்து. அரசாங்க என்டோன்மென்ட் கீழ் வராது. கீழே உள்ள போட்டோவில் மூன்று பேர் தலையில் ஜரிகை தலைப்பாகையுடன் . அவர்கள் முகத்தில் தான் என்ன கலை.

பின்பு வாசு “என்ன எஸ்.வி. உனக்கு பசிக்கலையா?

நீ சொன்னதும் தான் பசிக்கிறது. கோவிலிலே பெருமாள் சேவையில் கொஞ்சம் லயித்து தான் போய் விட்டேன். இந்த கோவிலை பற்றி நிறைய உனக்கு சொல்லவேணும். முதல்ல LODGE கு போறோம். டிரஸ் சேஞ் பண்ணிக்கிறோம். பக்கத்திலே ஸ்டேஷன் ரோட்-ல் உள்ள கோபாலக்ருஷ்ண பவன் நல்ல ஹோட்டல். RMSக்கு எதிரிலே இருக்கு. உடுப்பி ஹோட்டல் தான். சாப்பாடு, டிபன் எல்லாமே நன்றாகவும் இருக்கும் ரொம்ப காஸ்ட்லி ஆகவும் இருக்காது.

அதன்படி டிபன் காபி முடிந்து ரூமில் உட்கார்ந்து பேசினோம்.
“சொல்லு எஸ்.வி. இந்த கோவில் விசேஷங்கள் என்ன?” கேளு, சொல்றேன். இந்த பத்மநாபா சுவாமி மூல விக்ரஹம் 1728 வரைக்கும் இலுப்ப மரத்தினலே செய்து தான் இருந்தது. தாது என்பார்கள். 1729 -ளே கர்ப்பகிருஹத்திலே ஒரு தீ விபத்து ஆகி மூலவர் திருமேனி பாழாகி போச்சு. அப்போ பெருமாள் ராஜா கனவிலே தோன்றி நேபாளத்திலே இருந்து ஒரு யானை மூலமா ஸாலக்ராமங்கள் அனுப்பறேன் அதை வைத்து ஒரு திருமேனி தயார் பண்ணி பிரதிஷ்டை பண்ணுன்னு சொல்லிட்டு மறைந்தாராம். அதேபோல ஒரு மாசதுக்குள்ளே ஒரு யானை முதுகில் மூட்டை மூட்டையா கட்டி நேபாள ராஜா மூலமா அந்த ராஜாங்க அதிகாரிகள், பாதுகாவலர்களுடன் திருவனந்தபுரம் வந்து சேர்ந்ததாம். மொத்தம் பனிரெண்டாயிரத்து எட்டு (12௦௦8) ஸாளகிராமங்கள் இருந்ததாம். அதை எல்லாம் “கட்டு சர்க்கர யோகம்” என்ற ஆயூர்வேத முறையிலே தயார் பண்ணின ஒரு ஸ்பெஷல் பசையோட ஓட்ட வெச்சு  அந்த பிசினையே மேல்பூச்சா பூசி அந்த மூல விக்ரஹத்தை தயார் பண்ணி 1739-லே அதாவது பத்து வருஷம் ஆச்சு முடிக்க. மூல திருமேனிக்கு தங்க கவசமும் ஆதிசெஷனுக்கு வெள்ளி கவசமும் தயார் பண்ணி ஸ்ரீ பத்மனபாவாரு பரமேஸ்வரு என்ற பெயர் கொண்ட தந்தரியாலே ப்ரதிஸ்ட்டை பண்ணாளாம். அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சீவேலி மூர்த்திக்கு தான் அபிஷேகம் பண்றா.

அதேபோல இப்போ நாம பார்க்கிற ராஜகோபுரம் முன்னே இல்லை. அதுக்கு முன்னே  கேரளா கோவில்கள் மாதிரியான STRUCTURE தான் இருந்தது. நம்ம உடையவர், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பிள்ளைலோகாச்சார் அங்கேயே வாழ்ந்து பரமபதித்த  விளாஞ்சோலை பிள்ளை ஆகியோர் காலத்திலே கூட இந்த அமைப்பு இல்லை ஆவாளே எழுதி வச்சிருக்க. இப்ப இருக்கிற கோபுரம் நூறு அடி உயரம்.
முன்னாலே 75 அடி உயரம் தானாம் 1566 ல் இருந்து 1758-வரை ஐந்து நிலைதான். 1798-ளே தான் எழு நிலையா உயர்த்தி கட்டி இப்ப நாம பார்க்கிற மாதிரிஅமைப்புஇருக்கு. இதெல்லாம் எந்தெந்த திருவிதாங்கூர் மகாராஜா காலங்களிலே நடந்ததுன்னு அவ பெயர் எல்லாம் கூட போட்டு வச்சிருக்க.. கோபுரத்திற்கு கீழே போட்டுள்ள கருங்கல் கட்டுமானம் கூட நம்ம தமிழ் நாட்டு அமைப்பு மாதிரி கட்டினது 1566-ல் தானாம்.

திருச்சுற்றில் இருக்கிற, ஸ்ரீ நரசிம்ஹர், சிவன், சாஸ்தா, கணேசர். வியாசர் (கூட அஸ்வத்தாமன் கூட இருக்கிறதா சொல்லறா), ஸ்ரீ ராமர்,லக்ஷ்மணன், சீதை மற்றும் ஆஞ்சநேயர், ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா சன்னதிகளும் கோயில் பெரிசா தமிழ்நாடு பணியிலே காட்டினப்போ விஸ்தரிச்சது தான். மண்டபங்கள் பிரகாரங்கள் எல்லாம் விஸ்தாரம கட்டியது ஒரு ஐநூறு வருஷங்களுக்கு முன்னாலேதான். கோவிலை சுற்றி ஒரு பெரிய கோட்டை சுவர் எழுப்பி உள்ளது. இப்போ கூட அட்ரஸ் எல்லாம் ஈஸ்ட் போர்ட் , வெஸ்ட் போர்ட் –ன்னு தான் சொல்லறா. பிரகாரங்கள் 25 அடி அகலம், 75-அடி நீளம். மூலவர் சிலையின் நீளம் 18-அடி. மொத்த கோவில் பரப்பு ஏழு ஏக்கர் நிலம்.
நமக்கு தெரிஞ்சு இப்போ கூட சமீபத்திலே கோடி, கோடியா தங்க காசுகளும், நவரத்தினங்களும், எண்ணி மதிப்பிட முடியாத அளவிலே நிலவறை மாதிரி கட்டி பூமிக்குஅடியிலே இருந்தது வெளியே வந்திருக்கு. நான் நினைக்கிறன். துருஷ்க கலவரத்தின்போது ராஜாங்க நிதி பண்டாரம் முழுதும் கோவில்ல பாதுகாப்ப வேச்சிருபாலோன்னு

“பரவாயில்லே.எஸ்.வி. இந்த கோயிலைப் பற்றி ஒரு  ஹிஸ்ட்ரியே வெச்சிருக்கே.”  “எல்லாம் வாசிச்சு தெரிந்து கொண்டதுதான்.”  
சரி. எஸ்.வி. இப்போ நம்ம ப்ரோக்ராம் என்ன அதை சொல்லு.”
“ரொம்ப சிம்பிள் நாம இப்போ இந்த யாத்திரை முடிவுக்கு வந்துண்டிருக்கோம். நாளை ராத்திரி முடிஞ்சு நாளைக்கு ராத்திரியே திருவனந்தபுரத்திலேருந்து சென்னை போறோம். இப்போ போய் கரண்ட் புகிங்-ளே இரண்டு SLEEPER கிடைக்குமான்னு பார்க்கணும் வா போகலாம் ஜஸ்ட் ஒரு வாக்கிங் ரயில்வே ஸ்டேஷன் வரை.”  
ஸ்டேஷன் ரொம்ப பக்கம்தான். ஒரு அஞ்சு நிமிஷ வாக்தான்.
கரண்ட் பூகிங் தனி கவுன்டரில் கேட்டோம்.  “நாளைக்கு போகனாயிட்டு நாளைதன்னே பரயாம் பற்றும். நீங்கள் ஒரு காரியம் செய்தா மதி. அடுத்த கவுன்ட்டர் ‘தட்கல்’ ஆணும்.  IDENTITY கார்டு உண்டோ? உண்டாங்கில் புக் செய்தோ. பட்சே கான்செல் செய்யாம்  பாடில்ல. கேட்டோ”
  
பக்கத்து கவுண்டரில் தட்கல் புகிங்கில் விசாரிச்சதில் டிக்கெட் ரேட் ரொம்ப அதிகமாக தெரிந்தது.  வாசு சொன்னான். “சித்தியா, நாளைக்கு நாம் எட்டு மணிக்குள் வந்து இந்த டிரெயின் பிடிப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்கும். பேசாமே மறுநாள் சனிகிழமை மத்தியானம் கிளம்புற மூன்று மணி வண்டியை புக் செய்வோம். ஞாயிறுகாலை 7-3௦
சென்னை போய்விடலாம். ராத்திரி வண்டியை புக் செய்தாலும் எடாகுடமாக பாதராத்ரி சென்னை போகும். சரி சனிகிழமை மதயான வண்டி பார் sleeper இருக்கான்னு. இரண்டு சைடு SLEEPER இருக்கு. அதையே புக் பண்ணு. சீக்கிரம் அதுவும் புல் . ஆயிடபோகுது.. சொல்லபோனால் இதுதான் நமக்கு பெஸ்ட். எதிரெதிரே ஜன்னல் சீட். பேசிண்டே போகலாம். ராத்திரி நீ மேலே படுத்துக்கலாம். எனக்கு லோயர் பிரத் வசதி.. அதன்படி புக் செய்தாச்சு. இது சென்னை திருவனந்தபுரம் மெயில் தானே..இதைத்தான் நான் திருச்சூரிலே ராத்திரி எட்டு மணிக்கு பிடிக்கிற வழக்கம்.. காலங்கார்த்தாலே போயிடுவான் சென்னைக்கு. அப்பா ஒரு வேலை முடிந்தது. நமக்கும் டென்ஷன் இல்லமே திருவாட்டாறு, திருவன்பரிசாரம் செவிசுட்டு வரலாம். இன்னொரு தடவை டைம் கிடைச்ச பத்மநாபனை சேவிக்கலாம் சனிக்கிழமை காலை. ஓகே. நன்றாக அமைந்து விட்டது.
ஒருமணிக்கு கோபாலக்ருஷ்ண ஹோட்டல்-ளே நல்ல சாப்பாட சாப்பிட்டோம்.
12..                     திரு வர்க்கலை
மத்யானம் மூன்று மணிக்கு பஸ் பிடித்து வர்க்கலா சென்றோம். அழகான கடற்கரையுடன் கூடிய இடம்.. ஆனால் நான் 1975-ல் பார்த்தபோது ரொம்ப ஏகாந்தம இருந்தது. இப்போ ரொம்ப கம்மேர்சியால் டூரிஸ்ட் சென்ட்டாரா மாறி இருந்தது. ஏகப்பட்ட RESORTS. மாடர்ன் ஹோட்டல்கள். திருவனந்தபுரம் கோவளம் பீச் மாதிரி ஆகியிருந்தது. சிறிது நேரம் கோயில் திறக்கும் வரை கடற்கரையில் இருந்தோம். பிறகு வர்க்கல ஸ்ரீ ஜனார்த்தன சுவாமியை சேவிக்க சென்றோம்.

ரொம்ப ஆழகான சந்நிவேசம். சந்நிதி ரொம்ப பழமையானது. ஆனால் இப்போ புது புதுசா கொஞ்சம் கேரளமும் கொஞ்சம் தமிழ் நாடு பாணியிலுமாக மாற்றப்பட்டிருந்தது. முன்பு நாற்பது வருஷத்திற்கு முன்னாள் அப்படி பார்த்த நினைவு இல்லை  

சிறிது மேடான இடத்தில் சன்னதி இருந்தது. உள்ளே சென்று பெருமாளை சேவித்தோம். வழக்கம்போல் அர்ச்சனை பண்ணினோ பிரசாதங்கள் வாங்கிகொண்டோம். இங்கேயும் நம்பூதிரிகள் தான்.ஆனாலும் ரொம்ப தூக்கி எல்லாம் போடவில்லை.

அர்ச்சகர் சொன்னது. “நன்னாயிட்டு தர்ஷனம் பண்ணுங்கோ. ஜனார்த்தன சுவாமி பெருமாள் பேரு. ஆசமனம் பண்ற மாதிரி வடிவம் அந்த கரம் வாயிண்டே போகும்போழ்  இவுலகம் பிரளயம் காணும். அப்படி ஐதிகமாக்கும்.”. என்று பாதி மலையாளமும் பாதி தமிழுமாய் சொன்னார். சுற்றி பார்த்தோம் கோவிலை பிரதசினமாய் வரும்போது.
திருக்குளத்தில் இறங்கி தீர்த்தம் எடுத்து தலையில் புரோசித்துகொண்டோம்

பெருமாளை சேவித்துகொண்டு அங்கிருந்து கடற்கரை காட்சிகளை பெலேயிருந்து பார்த்தோம். சில காட்சிகள் இயற்கை வலம் பொருந்தி இருந்தது, கடல் அரிப்பை தடுக்க நிறைய பாறை கற்களை கடல் கரையில் குவித்திருந்தார்கள்.


சந்தன பிரசாதங்களை பெற்றுக்கொண்டு கொஞ்சம் ஊரை சுற்றி பார்த்துகொண்டு பஸ்-ஐ பிடித்து திருவனந்தபுரம் வந்தடைந்தபோது மணி ஏழு. திரும்பி வரும் சமயம் ஸ்ரீ பத்மனபாச்வாமி கோயில் இருட்டினதால் வயலுக்கு வெளிச்சத்துடன் ஆசாகான காட்சியை தந்தது. இதோ அந்த போட்டோ:


லாட்ஜ்-ஐ அடைந்து உடை மாறிக்கொண்டு கோபாலக்ருஷ்ண ஹோட்டல் போனோம். காஷ்-ல் உட்கார்ந்திருந்தவர் எங்கள் ரெண்டு பேருக்குமே தெரிந்தவர் தான்.அவர் எங்களை பார்த்து கேட்டார்.”எந்தா சாரு! இ ப்ராயஸம் நீங்கள் பிசினஸ் காரியமாயிட்டு வந்திட்டு இல்லே. ஞான் பரஞ்சது சரிதன்னே?”

வாசு சொன்னது: “சரியானும். ஞாங்கள் இங்கோட்டு சவுத் கேரளாவிலே  ஏழு திவசம் அம்பல யாத்திரயாயிட்டு வந்ததானும்”

“ஒ! மனசிலாயி. எத்தன அம்பலங்கள் நீங்கள் கண்டு?.” நான் சொன்னது: “ஒருபாடு தர்ஷ்ணமானும்.திருமிர்ரகோடு, திருநாவாய், குருவாயூர், த்ரிகாகர, பின்னே திருமூழிக்களம், திருகொடித்தனம், ஆரன்முல, திருப்புலியூர், திருவல்லா இனியும் குறைச்சு உண்டு கேட்டோ. இன்னு
ராவுலே திருவனந்தபுர க்ஷேத்ரம் கண்டுட்டு இப்போ வர்கலா கழிஞ்சு இவிடே வந்ததானும்.” “இந்தானும் பிரசாதம் வர்க்கல சேத்ரம் “ என்று சிறிது சந்தனம் கொடுக்க அவர் எழுந்து நின்று பெற்றுகொண்டு நெற்றியில் தீட்டிகொண்டார். “வளர நண்ணி சாரு, ஞான் வர்களா போயி ஒரு கொல்லமாயி. எந்தா செய்யான் பற்றும் சாரு ,. இவிடே ஹோட்டல் கானாணாயிட்டு ஆள் வேண்டே?”

“பின்னே ஞாங்கள் நாளை திருவாட்டார் போகுனுண்டு. நாளை மறுநாள் இவ்விடே ஊண் கழிச்சிட்டு TRIVANDRUM MAIL ரிடர்ன் ஆகுனுண்டு நாளை ராவுலே டிபன், பின்னே நாளை நைட் டிபன், பிற்ரைய திவசம் மதியம் மீல்ஸ் இவ்விடயானும்.”

“வளர நன்னி சாரு. OUR HOTEL DOORS ARE WIDE OPEN.” என்று எங்களிடம் கூறியபடியே, “ஏய், உன்னிக்ருஷ்ண! சாரு வருனுண்டு பிரத்யோக மாயிட்டு கவனிக்கணும் கேட்டோ! சென்னையிலே பொய் நம்ம ஹோட்டல் பேரு பறையனும்” என்று சிரித்துக்கொண்டே டேபிளை காட்டினார். நன்றாக சாப்பிட்டுவிட்டு லாட்ஜ் வந்து படுத்தோம். வாசு, “சித்தியா! நாளைக்கு என்ன PROGRAMME?”
“நாளைக்கு முதலில் மார்த்தாண்டம் பஸ் மூலம் போகிறோம். அங்கிருந்து வேறு  பஸ் பிடித்து திருவட்டார் பொய் பெருமாளை சேவித்து விட்டு அங்கிருந்து திருவன்பரிசாரம் பொய் சேவித்துவிட்டு திருவனந்தபுரம் ராத்திரி ஏழு மணிக்குள் திரும்பிகிறோம். அத்துடன் இந்த யாத்திரை சமாப்தி ஆகிறது. சனிகிழமை உள்ளூர் கோவிலுக்கு போய்விட்டு சென்னை கிளம்புகிறோம்.

திருவாட்டறு, திருவன்பரிசாரம் திவ்ய தேசங்கள் ஐந்தாம் பாகத்தில் வரும்.  

பாகம்-5  
மலை நாட்டு திவ்யதேச யாத்திரை அநுபவங்கள்
               14. திருவண்பரிசாரம்

ராத்திரி சாப்பிட்டு விட்டு படுத்தவுடன் கொஞ்ச நேரம் வழக்கம்போல்
பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது வாசு “சித்தியா,இப்போ நாளைய புரோக்ராம் தெரிஞ்சால்தானே நம்ம வந்த யாத்திரை கம்ப்ளீட் ஆகும்?”
சொல்றேன் பா. ஏன் இந்த லாட்ஜ் சௌகரியமாத் தானே இருக்கு.“ரொம்ப ப்ரீ யாகத்தான் இருக்கு. ”சரி. நாளைக்கு காலை 6-5௦ க்கு திருவனந்தபுரம் நாகர்கோயில் பாஸன்ஜர்   இருக்கு. ஸ்டேஷன்-ல டிபன் சாப்பிட்டுவிட்டு அதை பிடிச்சு நாகர்கோயிலுக்கு 8-5௦ க்கு போறோம்.அங்கேயிருந்து திருப்பதிசாரத்துக்கு பஸ்-ல போறோம். ஒன்பதரைக்குள்ள பொய் விடலாம்.அங்கே பெருமாளை சேவிக்கிறோம். பின்பு ஸ்தல பாசுரங்களை சேவித்துவிட்டு நாகர்கோயில் திரும்பி வந்து நல்ல ஹோட்டல் பார்த்து சாப்பிடறோம்.மணி பதினொன்னரை யாகி விடும். அங்கேயிருந்து கன்னியாகுமரி பஸ்-ல போறோம். 15கிலோ மீட்டர் தான். அங்கே விவேகானந்தா ராக் மெமோரியல் காந்தி மண்டபம் இதெல்லாம் பார்த்து விட்டு அங்கயிருந்து மார்த்தாண்டம் பஸ் பிடித்து வரோம் .5-மணிக்குள்ள வந்து மார்த்தாண்டத்திலிருந்து திருவாட்டருக்கு பஸ் பிடித்துபோய் பெருமாளை செவிக்கிறோம். அந்த இடத்திலே ஸ்தல பாசுரங்களை சொல்லிவிட்டு ஏழு மணிக்கு கிளம்பி எட்டுமணிக்கு திருவனந்தபுரம் வந்து கோபாலக்ரிஷ்ணாவிலே சாப்பிட்டுட்டு வந்து படுக்கிறோம். இதுதான் நாளைய ப்ரோக்ராம்.
“ஆமாம், இது எதுக்கு கன்னியாகுமரியை உள்ளே நுழைச்சே?”
“என்னப்பா நீ. 12 மணியிலிருந்து 5 மணி வரை எங்க பொழுது போக்கறது. திருவட்டாறு கோயில் நாலு மணிக்கு தான் திறப்பான். அதுவரை அங்கே எங்கே உட்க்கார்றது? ஜஸ்ட் டைம் பாசிங். FERRY போட்-ளே  முக்கடலும் சேர்ற எடத்திலே கடல்லே பொய் விவேகாநந்த பாறையிலே கட்டியிருக்கிற .மண்டபத்தை பார்த்துவிட்டு வரோம்.
“சரி ஓகேதான். நாம ராத்திரி வண்டியிலே சென்னை போறதுன்ன வேகமா திரும்பனும். நாம மறுநாள் மத்யானம் தானே கிளம்பறோம்”

மறுநாள் அதிகாலை 5மணிக்கு எழுந்து குளித்து ஸ்டேஷன் பொய் VLR ஸ்டால்லே காபி சாப்பிட்டுவிட்டு வண்டி பிடித்து திருவண்பரிசாரம் (அங்கே திருப்பதிசாரம்-ன்னு சொல்றா ) போய்ச் சேர ஒன்பதரை ஆயிற்று. இறங்கி உத்தரியத்துக்கு மாற்றிக்கொண்டு சட்டைகளை   கையிலே கொண்டு வந்த ஒரு பையிலே மடித்து வைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தோம். தமிழ் நாட்டிலே நுழைந்தாலும் அர்ச்சகர்கள் போத்திமார்களாகவே இருந்தார்கள். இங்கே ஆராதனம் பார்க்கும் நம்பூத்ரியின்  பெயர் “வாசுதேவ போத்தி” ரொம்ப ஆச்சாரமாக பூஜைகள் செய்கிறார். கோயில் அமைப்பு தமிழ் நாட்டு கோயில் அமைப்பாகவே உள்ளது. செல் போன் கூட வைத்து கொள்ளாமல் இருக்கிறார். அது இருந்தால் பூஜை நடுவே தடையாயிருக்கும் என்பது அவர் எண்ணம்.

திருக்குளத்தில் நிறைய தீர்த்தம் இருந்தது. குளம் ஆழமான குளம் என்று போர்டு காணப்பட்டதால் மெதுவாக இறங்கி தீர்த்தத்தை தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டோம்.

பின்பு பெருமாள் முன்பு அமர்ந்து திருவாய்மொழி எட்டாம் பத்து மூன்றாம் பதிகம் பாசுரங்களை சேவித்தோம். இந்த பதிகத்தில் ஏழாம் பாசுரத்தில்  மட்டும்தான் திருவண்பரிசாரத்தை ஆழ்வார் மங்களா சாஸனம் செய்கிறார். இருப்பினும் நாங்கள் முழு பதிகத்தையும் சேவித்தோம்.

No comments:

Post a Comment