📚சிறு கதைகள்📚
பயமும் வரமும்!
கிண்டி, சைதாப்பேட்டை என்று எப்படியும் ஏழெட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏறி இறங்கி அலசிப் பார்த்திருப்பேன்.
ஆனால், இதுவரை தோதான ஃப்ளாட் அமையவில்லை.
எனக்கு ஒரே கண்டிஷன். வாடகைக்குப் போகிற வீடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடக்கிற தூரத்தில் இருக்க வேண்டும்.
எனக்கு அதுதான் வசதி. மின்சார ரயிலில் ஏறினால், எழும்பூரில் இறங்குவேன். அங்கிருந்து ஆபீஸ் நடக்கிற தூரம்.
நல்லவேளை. விஜிக்கு வேலைக்குப் போகிற எண்ணமும் இல்லை. இப்போதைக்குத் தேவையும் இல்லை. அவள் வீட்டில் இருந்தபடி அப்பாவைப் பார்த்துக் கொண்டாலே போதும்.
என் அப்பாவுக்கு வயது 68. அரசு உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா இப்போது இல்லை. காலமாகி, ஒன்பது மாதம் ஆகி விட்டது. ஒரே பிள்ளை. கடைசி வரை அப்பாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
இந்தப் பொறுப்பை நான் சந்தோஷமாகவே ஏற்கிறேன். காரணம் - எனக்காக அப்பா ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
எனக்கு நினைவு தெரிகிற வரையில் இடுப்பில் என்னை சுமந்து கொண்டு திருச்சி தெப்பக்குளத்தையும் மலைக்கோட்டை கோயிலையும் பல முறை வலம் வந்தவர். அந்த வீதிகளையும் கடைகளையும் வேடிக்கை காண்பித்தவர்.
நான் பார்த்த எல்லா வீடுகளுக்கும் உரிமையாளர்கள் நிர்ணயித்திருந்த வாடகை என் வரையறைக்குள்தான் இருந்தது.
ஆனால், எனக்குப் பிடித்தது என்றால் விஜிக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் விஜிக்கும் பிடித்திருந்தது என்றால், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.
அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பது வீட்டுக்குள் இருக்கிற வசதிகளை வைத்து.
நெருக்கமாக ஃபிளாட்டுகள் இருக்கக் கூடாது. காற்றோட்டம் வேண்டும் அப்பாவுக்கு. அவரது பெட்ரூமுக்குள் பாத்ரூம் வசதி வேண்டும். பால்கனியில் ஒரு நாற்காலி போட்டு உட்காரும் அளவுக்கு விசாலமான இடம் இருக்க வேண்டும். தரைத் தளம் கூடாது.
எல்லாமும் கைகூடிய ஒரு ஃபிளாட் நங்கநல்லூரில் கிடைத்தது. எங்கள் மூவருக்கும் பிடித்திருந்தது.
ஆனாலும், இதில் ஒரு சங்கடம் - ரயில்வே டிராக் ஓரமாக ஃபிளாட்.
நானும் விஜியும் வீட்டை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே ரயில்கள் எதிரும் புதிருமாக பயங்கர சத்தத்துடன் அலறிப் பறந்தன. இருபத்துநாலு மணி நேரமும் வீட்டில் இருக்கும் அப்பாவுக்கு இந்த ரயில் சத்தம் எப்படி ஒத்துப் போகும்?
அப்பாவிடம் வந்து சொன்னேன். ‘‘பரவாயில்லைடா... நீ என்ன பண்ணுவே? ஒரு மாசமா பாத்திண்டிருக்கே. அந்த ஃப்ளாட்டையே வாடகைக்கு முடிச்சுடு’’ என்றார்.
‘‘அப்பா... ராத்திரி பன்னண்டரை வரைக்கும் ரயில் போயிண்டிருக்குமாம். விடிகார்த்தால நாலு மணிக்கே மீண்டும் ரயில் போக்குவரத்து ஆரம்பிச்சிடுமாம். எனக்கும் விஜிக்கும் பிரச்னை இல்லை. ராத்திரி படுத்தா, இருக்கிற அசதில குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பிச்சிடுவோம். நீதான் இன்னும் ஒரு தடவை யோசிச்சு சொல்லணும்.’’
எனக்கு என்ன கவலை என்றால், அம்மா இவ்வுலகைத் துறந்து முழுசாக ஒரு வருடம்கூட ஆகாத நிலையில், ரொம்பவும் ‘லோன்லி’யாக காணப்படுகிறார். ராத்திரி வேளையில் ரயில் சத்தத்தில் தூக்கம் போச்சு என்றால், ஏதேனும் பழைய நினைப்பு வந்து ஒட்டுமொத்த ராத்திரியும் தூக்கம் இல்லாமல் போய் விடுமோ என்கிற பயம்.
‘‘பரவால்லடா... யோசிக்காதே. அட்வான்ஸ் குடுத்துடு. ரயில் சத்தத்தோட தூங்கறதுக்குப் பழகிக்கறேன்.’’ - அப்பாதான் உற்சாகமூட்டி அட்வான்ஸ் கொடுக்க வைத்தார்.
ஆயிற்று! ஒரு வருடம்... போனதே தெரியவில்லை. ரயில் சத்தமும், ஃப்ளைட் சத்தமும் ஆரம்பத்தில் அப்பாவைக் கொஞ்சம் பயமுறுத்தினாலும், போகப் போக பழகி விட்டது.
ஆனால், இப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகி இருக்கிறது.
கடந்த மூன்று மாதமாக அப்பாவுக்கு நள்ளிரவில் தூக்கமில்லை. ஆரம்பத்தில் நானே கவனித்தேன், நள்ளிரவில்.
புரண்டு புரண்டு படுப்பார். கொட்டக் கொட்ட விழித்திருப்பார்.
நிதானமாக அப்பா அருகே சென்று, ‘‘வெந்நீர் கொண்டு வரட்டுமாப்பா? பால் வேணா காய்ச்சட்டுமா... பசியா?’’ என்றெல்லாம் கேட்பேன்.
அப்பா ஒரு நாள் பகலில் சொன்னார்: ‘‘இந்த கொரோனா கூத்துல ரயிலை நிறுத்துனதிலேர்ந்து எனக்குத் தூக்கம் போச்சுடா. ‘தடக் தடக்’குன்னு அந்த ரயில் சத்தம்தான் எனக்குத் தாலாட்டு போல இருக்கும். மூணு மாசமா இந்த மயான அமைதில அவஸ்தைப்படறேன்.’’
எதற்குப் பயந்து இங்கு வர யோசித்தேனோ, அதுவே அப்பாவின் வரம் ஆகி விட்டது. Courtesy: Pitchai Iyer Swaminathan
No comments:
Post a Comment