Friday, March 8, 2024

முற்பகல் செயின்..63

 முற்பகல் செயின்..63

By N Krishnamurthy 

செண்பகராஜை பார்த்து ஆதித்யா "ஒன்றுமில்லை. உங்கள் அட்ரசுக்கு எங்கள் திருமண பத்திரிக்கயை அனுப்பி வைக்கிறேன். அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும்" என்றான். இதை கேட்ட அங்குள்ள அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனார்கள்.

அதைக் கேட்ட செண்பகராஜ் " நிச்சயம் சார்.என் மனைவி,மகளுடன்  சேர்ந்து  வந்து உங்கள் திருமணத்தில்  கலந்து கொள்வேன். இது கடவுள் மீது சத்தியம்" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அவன் சென்றதும் வள்ளிநாயகம் " அவனை இப்படியே விட்டு விட்டது தவறு. லாக்கப்பில் போட்டு லாடம் கட்டி இருக்க வேண்டும்" என்று கூறினான். இதற்கு சுயம்புலிங்கம் " சகலை அப்படி செய்திருக்க முடியாது. அவன் தான் அப்படி செய்தான் என்பதற்கு நமக்கு நிரூபிக்கும்படியான ஆதாரம் எதுவும் இல்லை. கையெழுத்து நிபுணர்  சொல்வதைக் கேட்டுக் கொண்டு நாம் ஆக்ஷன் எடுக்க முடியாது. உண்மையில் அவன் பயந்திருக்கிறான். இனிமேல் இதுபோல் செய்ய மாட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

பின்பு அவர் ஆதித்யாவை பார்த்து "யூ ஆர்எ கிரேட் மேன். அவனை மன்னித்து விட்டதோடு மட்டுமில்லாமல் அவனை உங்கள் திருமணத்திற்கு கூப்பிட்டு இருக்கிறீர்களே. இது எத்தகைய பண்பான செயல்"  என்று கூறினார்.ஆதித்யா " நீங்கள் கூறியபடி அவன் மீது நாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று எனக்கு தெரியும். அவன் நிச்சயம் பயந்து போய் இருக்கிறான்.இந்த நிலையில் நான் அப்படி கூப்பிடுவதன் மூலம் அவன் மிகவும் மனம் திருந்தி வாழ வாய்ப்பு கொடுத்ததாக கருதுகிறேன்" என்றான்.

பின்பு சந்திரசேகர் அவனைப் பார்த்து " நீங்கள் கையெழுத்து நிபுணர் உதவியுடன் செண்பகராஜ் தான் இந்த கடிதத்தை எழுதினான் என்று கண்டுபிடித்தது தான் நாம் செண்பகராஜ் வழிக்கு கொண்டு வர காரணமாக இருந்தது. தயவு செய்து அந்த கையெழுத்து நிபுணருக்கு எங்களுடைய நன்றிகளை சொல்லுங்கள் "என்று கூறினார். உடனே ஆதித்யா அவரிடம் " நீங்களே அவருக்கு உங்கள் நன்றிகளை கூறி விடுங்கள்" என்று கூறினான். " ஓ, அப்படியா .அவர் கல்யாணத்துக்கு வருகிறாரா?"என்று கேட்டார் சந்திரசேகர். "ஆம். அவர் இல்லாமல் கல்யாணமே நடக்காது" என்றான் ஆதித்யா. "என்ன சொல்கிறீர்கள் எனக்கு  குழம்புகிறது" என்றார்  சந்திரசேகர். உடனே ஆதித்யா " மாப்பிள்ளை இல்லாமல் எங்கேயாவது கல்யாணம் நடக்குமா" என்று கேட்டான். அவன் கூறியதை முதலில் புரிந்து கொள்ள முடியாத சந்திரசேகர் பின்பு புரிந்து கொண்டதும் " ஓ.நீங்க  தான் அந்த  கையெழுத்து நிபுணரா" என்று கேட்டார். அதற்கு ஆதித்யா"நான் தான் இரண்டு கடிதத்தையும் ஒரு விளக்கடியில் வைத்துக்கொண்டு பெரிய பூதக்கண்ணாடிக்கொண்டு இரண்டிலும்  உள்ள கையெழுத்துக்களை ஆராய்ச்சி செய்து, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான் என்று நான் புரிந்து கொண்டேன். இது ஒரு Gamble தான். நல்லவேளை நாம் மிரட்டியதும் செண்பகராஜ் பயந்து உண்மையைக் கக்கி விட்டான்.  இல்லாவிட்டால் நம் பாடு மிகவும் திண்டாட்டமாக போயிருக்கும்" என்றான். இதை  கேட்டு சுயம்புலிங்கம் " உங்களுடைய சாமர்த்தியத்தை பாராட்டாமல் என்னால் இருக்க முடியாது.You have taken a calculated risk" என்றார். ஆதித்யா அவரிடம் " Thank you sir. நிச்சயம் உங்களை என் திருமணத்திற்கு  பெண் வீட்டிலிருந்து

சந்திரசேகர் கூப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். மாப்பிள்ளை வீட்டின் சார்பாகவும் நான் உங்களை இப்பொழுது என் திருமணத்துக்கு வருமாறு அழைக்கிறேன். அவசியம் வந்து விடுங்கள்" என்று கூறினான்.

" நிச்சயம் வருகிறேன் பிரதர் "என்று கூறி சுயம்புலிங்கம் விடைபெற்றார்.

எல்லாம் நல்லபடியாக முடிந்ததால் எல்லோருக்கும் மனம் நிறைவாக இருந்தது. அன்று இரவு  ஆதித்யாவை ஆம்னி பஸ்ஸில் ஏற்றிவிட்டு, இரவில் ரூமில் தங்கி ருந்த  வள்ளிநாயகமும், சந்திரசேகரும் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக, காலையில் கடையநல்லூரை  நோக்கி புறப்பட  இருந்தார்கள்.

இரவு பஸ் பிடித்து மறுநாள் ஆதித்யா சென்னை திரும்பினான்.

No comments:

Post a Comment