முற்பகல் செயின்..52
By N Krishnamurthy
பின்னர் இசக்கிமுத்து, பிள்ளை அவர்களிடம் "சார், வழக்கமா சோமசுந்தரம் பிள்ளை என்பவர் இங்க கல்யாணத்திற்கு சமைச்சு கொடுக்கிறார். கல்யாணத்துக்கு வரவுங்க எல்லாம் சமையல் மிக நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அவர் பக்கத்தில் தான் இருக்கிறார். அவரை டெலிபோனில் கூப்பிடுகிறேன். அவர் வந்தால் நீங்கள் அவரிடம் பேசிப் பார்க்கிறீர்களா" என்று கேட்டார்.அதற்கு சுப்பிரமணிய பிள்ளை "நல்லது தம்பி. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆயிற்று. அவரை கூப்பிடலாம்" என்று கூறினார்.இசக்கிமுத்து பின்பு டெலிபோனில் சோமசுந்தரம் பிள்ளையை தொடர்பு கொண்டார். அதன் பின்பு இசக்கிமுத்து பிள்ளை அவரிடம் "சார், சோமசுந்தரம் பிள்ளை இன்னும் 15 நிமிஷத்ல வறார். நீங்க சூடா காபியோ, டீயோ இல்ல ஜில்லுனு கூல்டிரிங்ஸோ சாப்பிடுறீங்களா"என்று கேட்டார். "அதெல்லாம் வேண்டாம் தம்பி" என்று பிள்ளை சொல்ல"சார் வராதவங்க வந்து இருக்கீங்க. அவசியம் சாப்பிட்டு தான் போகணும்" என்றவர் அருகில் இருந்த வேலை ஆளை "எதிர்த்த கடையிருந்து மூணு நன்னாரி சர்பத் வாங்கிட்டு வா" என்றார். அடுத்த ஐந்து நிமிஷத்தில் நன்னாரி சர்பத் வந்தது. எல்லோரும் அதை குடித்து முடித்த ஐந்து நிமிடத்திற்கு பின் சோமசுந்தரம் பிள்ளை சைக்கிளில் வந்து, அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு உள்ளே வந்து இசக்கிமுத்துவை பார்த்து "வணக்கங்க" என்று கூறினார். இசக்கிமுத்து சுப்பிரமணிய பிள்ளையிடம் " சார் இவர் தான் சோமசுந்தரம் பிள்ளை" என்று கூறிவிட்டு சோமசுந்தரம் பிள்ளையிடம்" இங்க பாருங்க இவர் தான் என்னுடைய குருநாதர். இவருடைய பொண்ணுக்கு கல்யாணம் இத்தனை தேதியில் நடக்கிறது. நீங்க அன்னைக்கு அன்னைக்கு கல்யாண சமையல் செஞ்சு கொடுக்கணும்" என்றார். "அதுக்கு என்னங்க ,செஞ்சுட்டா போச்சு "என்றார் சோமசுந்தரம் பிள்ளை. கல்யாணத்துக்கு மொத்தம் எவ்வளவு பேர் வருவாங்க என்று அவர் கேட்டார். சுப்பிரமணிய பிள்ளை சந்திரசேகரனிடம் சேர்ந்து கலந்து ஆலோசித்த பின் அவரிடம் 60 லிருந்து 70 பேர் வரை வருவார்கள்" என்று கூறினார் ." சரிங்க, நான் 65 பேருக்கு சமைச்சுடறேன். அத வெச்சு கிட்டத்தட்ட 80 பேருக்கு நெரவி போட்டு விடலாம்' என்றார். "காலையில லைட்டா ஒரு டிபன் போட்டுட்டு , மதிய முகூர்த்த சாப்பாடு வெச்சுகலாம். சாயங்காலம் நீங்கள் நான்கு மணி வரை இருப்பதாக இருந்தால் காபி,போண்டோ கொடுத்து விடலாம்" என்றார். உடனே இசக்கிமுத்து "சார், அன்று முழுதும் மண்டபத்தில் வேறு விசேஷம் இல்லை. நீங்கள் முஹுர்த்தம் முடிந்ததும் அவசரப்பட்டு கொண்டு கிளம்ப வேண்டாம். மாலை வரை ஓய்வெடுத்துக் கொண்டு 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கும் போது எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு செல்லலாம்" என்று கூறினார்." சரி அதுவும் நல்ல ஐடியாவாக தான் இருக்கிறது" என்று சந்திரசேகர் கூறினார். பின்பு இசக்கி முத்து சோமசுந்தரம் பிள்ளையிடம் "நான் செவ்வந்தி நாடார் கடையிலிருந்து மளிகை சாமான் முழுதும் வாங்கி போட்டுறேன். காய்கறி நீங்க வாங்கிட்டு வந்துருங்க. எல்லார்கிட்டயும் எவ்வளவு வாங்குறீர்களோ அதைவிட ரொம்ப கம்மியா சார் கிட்ட வாங்கணும்" என்று கூறினார். இதைக் கேட்ட சோமசுந்தரம் பிள்ளை " இதையெல்லாம் நீங்க சொல்லணமா தம்பி. அதெல்லாம் நான் அதிகம் கேக்க மாட்டேன்" என்று கூறினார். அதன் பிறகு சோமசுந்தரம் பிள்ளை "சார், நீங்க கல்யாண சாப்பாட்டிற்கு ஏதாவது குறிப்பிட்ட மெனு சொல்லி அதன்படி செய்ய வேண்டுமா? இல்ல நானே ஒரு மெனு தயாரித்து அதை உங்களிடம் காட்டிய பின்பு அதன் படி செய்து விடலாமா" என்று கேட்டார். இதற்கு சுப்பிரமணிய பிள்ளை தன்னுடைய கடையநல்லூர் விலாசத்தை அவரிடம் கொடுத்து" இன்னும் இரண்டு மூன்று நாட்களில் உங்களால் என்று முடியுமோ அன்று என் வீட்டுக்கு வாங்க. இதையெல்லாம் பேசி முடித்து விடலாம்" என்று கூறினார். பின்பு சோமசுந்தரம் பிள்ளை விடை பெற்று சென்றார். அதன் பிறகு இசக்கிமுத்துவிடம் சுப்பிரமணிய பிள்ளை "உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை அப்பா. அந்தக் கடவுளா பாத்து தான் இப்படி எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கார்"என்றார்.
" நன்றி என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க சார்.ஏதோ என்னால் முடியுது நான் செய்றேன் அவ்வளவுதான். இது நம்ம வீட்டு கல்யாணம்" என்றார். உடனே சந்திரசேகர் அவரைப் பார்த்து "ஆமாம். இது நம்ம வீட்டு கல்யாணம். ஆகவே அன்று முழுதும் நீங்கள் எங்களுடைய வீட்டுக்காரராக இருந்து கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்." அது என் கடமை" என்றார் இசக்கிமுத்து. சந்திரசேகரும், சுப்பிரமணிய பிள்ளையும் பின்னர் அவரிடம் விடைபெற்று கடையநல்லூர் சென்றார்கள்.
No comments:
Post a Comment