Monday, March 4, 2024

முற்பகல் செயின்..50

 முற்பகல் செயின்..50

By N Krishnamurthy 

மறுநாள் காலையில் வள்ளிநாயகம் வேனை கொண்டு வந்திருந்தார். காலை ஏழு மணிக்கு தோசை சாப்பிட்டுவிட்டு திரு, நித்யா, காசிநாதன் காந்திமதி, ஆதித்யா மற்றும் ரம்யா குற்றாலத்துக்கு கிளம்பினார்கள். 

முதலில் தேன்மொழி இவர்களுடன் போவதாக இல்லை. ஆனால் ரம்யா அவளை வற்புறுத்தி கூப்பிட்டதன் பேரில் தேன்மொழியும் அவர்களுடன் குற்றாலம் போவதற்கு சம்மதித்தாள்.

பகல் உணவிற்கு வேண்டியவைகளை பரமகல்யாணி சமைத்துக் கொடுத்திருந்தாள்.

இவர்கள் கிளம்பி போனதற்கு அப்புறம் சந்திரசேகரும், சுப்பிரமணிய பிள்ளையும் தென்காசியிலாவது செங்கோட்டையிலாவது குறிப்பிட்ட தேதியில் கல்யாண மண்டபம் கிடைக்குமா என்று பார்த்து வர கிளம்பினார்கள்.

 "தென்காசி பதினாறு கிலோமீட்டர் தான். ஆனா உள்ள கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். டூ வீலர்ல போலாமா இல்ல பஸ்ல போயிடலாமா" என்று கேட்டான் சந்திரசேகர். "எனக்கு ஒண்ணும் சிரமம் இல்லப்பா.டூ வீலர்லே போய்விடலாம்" என்றார் பிள்ளை. " அப்போதான் நிறைய மண்டபங்களை பார்த்து ஏதாவது ஒன்றை முடிவு செய்யலாம்" என்றார்.

" தென்காசி சரிப்படவில்லை என்றால் மேல் கொண்டு செங்கோட்டைக்கும் போக வேண்டும்" என்றும் கூறினார்.

குற்றாலத்தை அடைந்த கூட்டம் அங்கு முதலில் அருவியில் குளித்தார்கள். அதன்பிறகு எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்கள். போன முறை குற்றாலம் போய் வந்த பிறகு, ஆதித்யா குற்றாலத்தைப் பற்றி நிறைய  படித்திருந்தான்.

பராசக்தி பீடத்தை பற்றி நிறைய படித்து அறிந்திருந்தால் குற்றாலநாதர் கோவிலில் இருந்த குருக்களிடம்  அவன் பராசக்தி பீடம் பற்றி கேட்க அவர்" இந்த பராசக்தி பீடம், யோக பீடம் என்று அழைக்கப்படுகிறது. ஐய்யன் மர வடிவில் அமர்ந்திருக்கிறார். அம்மை மலை வடிவில் அமர்ந்திருக்கிறாள்.

ஈஸ்வரன் சன்னதிக்கு வடக்கு புறம் அம்பாள் சன்னதி இருக்கிறது.

அம்பிகையின் சன்னிதி சிறிய கோயிலாக அமைந்திருக்கிறது. நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக இங்கு விளங்குகின்றன. நவசக்திகளுக்கு ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் இரவில் பூஜைகள் நடத்தப்படுகிறது. குழல்வாய்மொழி மற்றும் பராசக்தியென இவள் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்

இதை தரணி பீடம் என்று சொல்வார்கள். இந்த தரணி அதாவது இந்த உலகம் உற்பத்தியாவதற்கு அம்பாள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அம்பாளுடைய உக்ரத்தை தணிப்பதற்காக அம்பாளுடைய எதிர்ப்புறம் காமகோடிஸ்வரர் லிங்கம் இருக்கிறது. திரிகூடம் அதாவது மூன்று மலைகள் இங்கு இருப்பதற்கு காரணம் பராசக்தி மூன்று வடிவாக இருப்பது தான்" என்று சொன்னார்.

கிளம்புவதற்கு முன் இலஞ்சி முருகனையும் வழிபட்டு விட்டு திரும்பினார்கள்.

No comments:

Post a Comment