முற்பகல்செயின்..61
By N Krishnamurthy
போனை எடுத்து ரிசப்ஷனிஸ்ட் செண்பக ராஜிடம் விஷயத்தை சொன்னாள். செண்பகராஜ் ரிசப்ஷனுக்கு வந்து அந்தப் பெண்ணிடம் "யார் என்னை பார்க்க வந்துள்ளது" என்று கேட்டபோது அந்தப் பெண் அங்கு அமர்ந்திருந்த சுயம்புலிங்கத்தை கை காட்டினாள். அவன் சுயம்பு லிங்கத்தின் அருகில் வந்து" நீங்கள் யார்? என்னை எதற்கு பார்க்க வந்தீர்கள்" என்று கேட்டான். உடனே சுயம்புலிங்கம் "நீ என்னுடன் கொஞ்சம் வெளியே வர வேண்டும். உன்னிடம் பேச வேண்டும்" என்றார் அதற்கு அவன் முறைப்பாக "நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது .நான் ஏன் உங்களுடன் வரவேண்டும்? நமக்குள் என்ன பேச்சு வார்த்தை இருக்கப் போகிறது" என்று கூறி உள்ளே போக முயன்றான்.
அவனை போக விடாமல், அவன் கையை முரட்டுத்தனமாக பிடித்த சுயம்புலிங்கம் "செண்பகராஜ். நான் இந்த ஏரியா சப்- இன்ஸ்பெக்டர். மப்டியில் வந்து இருக்கேன். ரொம்ப பிராப்ளம் பண்ணினால் நடப்பது வேற மாதிரி இருக்கும். உடனடியா என் கூட கிளம்பு" என்றார்.
மோட்டர் சைக்கிளிள் அவனை அழைத்துக் கொண்டு சந்திரசேகர் ரூமுக்கு கூட்டிச் சென்றார். ரூமின் உள்ளே சந்திரசேகர் உட்கார்ந்து கொண்டிருந்தார். சந்திரசேகர் அருகில் வள்ளிநாயகமும் இருந்தார். அவனை உட்கார சொன்ன சுயம்புலிங்கம் சந்திரசேகரை காண்பித்து "இவரை உனக்கு தெரிகிறதா" என்று கேட்டார். "உங்கள் யாரையுமே எனக்கு தெரியாது.வேற யாரையோ கூட்டிட்டு வறதுக்கு பதிலா என்னை கூட்டிட்டு வந்து இருக்கீங்க. ஆபீஸ்ல எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கு. நான் கிளம்பணம்" என்றான். உடனே சந்திரசேகர் செண்பகராஜிடம் "நான் தான் தேன் மொழியின் அண்ணன். நீ முதல் வருடம் படிக்கும்போது தேன்மொழியை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு உன்ன வந்து நான் கண்டிச்சேனே, மறந்துடுச்சா" என்று கேட்டார். உடனே செண்பகராஜ் "அப்படியா. எனக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லை" என்று கூறி கதவை திறந்து வெளியில் செல்ல முயற்சித்தான்.
அப்போது சுயம்புலிங்கம் "சகல, மயிலே,மயிலே இறகு போடுன்னா, போடாது மயில நம்ம தான் இறகு போட வைக்கணும்" என்று கூறி தன் கை மூஷ்டியால் செண்பகராஜ் முகத்தில் ஒரு குத்து விட்டார். இடி விழுந்ததைப் போன்று இருந்த அடியை அனுபவித்த செண்பகராஜ் அப்படியே தரையில் சாய்ந்தான்.
அப்பொழுது கதவை திறந்து கொண்டு ஆதித்யா உள்ளே நுழைந்தான். கதவை உள்பக்கம் தாளிட்டான். செண்பக ராஜுக்கு பயம் பிடித்துக் கொண்டது. உடனே ஆதித்யா செண்பக ராஜை பார்த்து " ஹலோ மிஸ்டர் செண்பகராஜ். நைஸ் டு மீட் யு. நான் தான் ஆதித்யா. தேன்மொழியை திருமணம் செய்ய போகிறவன். உங்கள் கடிதம் எனக்கு ஐந்து நாள் முன்னாடி கிடைத்தது. உங்கள் கையெழுத்து மிக நன்றாக இருக்கிறது" என்றான். உடனே செண்பகராஜ்" எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன கடிதம்? என்ன கையெழுத்து?" என்று கூறினான். இதைக் கேட்ட சுயம்புலிங்கம் "இவனை இப்படியே விட்டால் உண்மையை சொல்ல மாட்டான். நான் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் இவனை கேக்கறபடி கேட்டா உண்மையை கக்கிவிடுவான்" என்றார். இதற்குள் வள்ளிநாயகம் செண்பக ராஜிடம் " உன்னைப் பற்றி எல்லா விவரங்களையும் நான் விசாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். உனக்கு திருமணம் ஆகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இப்பொழுது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீ சரியாக பதில் சொல்லாவிட்டால், உன்னை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், உன் மனைவி குழந்தை எதிரில் நிறுத்தி கேட்க வேண்டியிருக்கும். எப்படி சௌகர்யம்" என்று கூறவே,தான் சரியாக மடக்கப்பட்டதை உணர்ந்த செண்பகராஜ் திடீரென்று ஆதித்யா காலில் விழுந்து "என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் செய்து விட்டேன்" என்று கதறினான். சுயம்புலிங்கம் அவனிடம்" இதையெல்லாம் எப்படி செய்தாய் என்று நீ எங்களுக்கு கூற வேண்டும்"என்று கேட்டார்.
" எனக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா" என்று கேட்டான் செண்பகராஜ். சந்திரசேகர் அவனுக்கு தண்ணீரை கொடுத்தார். தண்ணீரை குடித்து முடித்தான் அவன். அவன் முகம் பயத்தில் வேர்த்திருந்தது.
No comments:
Post a Comment