முற்பகல் செயின் .. 49
By N Krishnamurthy
தனது அன்னை மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்பு பாட்டி, பரம கல்யாணியிடம் ஏதோ சொல்ல, அரைமணி கழித்து பரம கல்யாணி மீண்டும் தன் பாட்டியிடம் பேசியதையெல்லாம் ஆதித்யா பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடம் போனதும் அவன் நித்யாவிடம் வந்து " என்னம்மா, லிஸ்ட் எல்லாம் ஓகே வா? ஏதாவது சேஞ்ச் இருக்கா "என்று கேட்டான். நித்யாவுக்கு முதலில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டு " லிஸ்ட்லாம் எனக்கு ஓகே தாண்டா ,ஆனா பாட்டி தான் கொஞ்சம் சேஞ்ச் பண்ணனும்னு சொன்னாங்க.அது அவங்க கிட்ட சொன்னாங்க. அவங்களும் அத ஒத்துக்கிட்டாங்க" என்றாள்.
நான்கு மணி பத்து நிமிடங்களுக்கு ஜெகநாத ஐயர் சுப்பிரமணிய பிள்ளை வீட்டுக்கு வந்தார். ஐயரை வந்திருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திய பின் "ஜெகநாதன் சார், நீங்கதான் திருமணத்துக்கு ஒரு நல்ல நாளா குறிச்சு கொடுக்கணும்" என்று பிள்ளை கேட்டுக்கொண்டார். கையில் கொண்டு வந்திருந்த பஞ்சாங்கத்தை பிரித்து வைத்துக் கொண்டு, தேன்மொழி மற்றும் ஆதித்யாவின் ஜாதகங்களையும் கையில் எடுத்துக் கொண்டு ஜெகநாதய்யர் இரண்டு மாதம் கழித்து ஒரு நல்ல நாளாக பார்த்துக் கொடுத்தார். இதைப் பார்த்து திரு அவரைப் பார்த்து " சார், நாங்க 45 நாள் லீவுல வந்து இருக்கோம். ஏற்கனவே மூன்று நாள் போயிடுச்சு. அதனால் நீங்க தயவுசெய்து இன்னும் ஒரு இருபது ,இருபத்தைந்து நாளைக்குள்ள ஏதாவது முகூர்த்தம் இருந்தா பார்த்து சொல்ல முடியுமா" என்று கேட்டார். ஜெகநாத ஐயர் இன்னிலிருந்து 29 வது நாளைக்கு ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கு. நான் அதையே முதல்ல சொல்லலேன்னா பிள்ளைவாள் அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் பண்ண முடியுமான்னு எனக்கு சந்தேகமாக இருந்தது" என்று கூறினார். எல்லோரும் சுப்ரமணி பிள்ளையை பார்த்தார்கள். சுப்பிரமணிய பிள்ளை "இது ரொம்ப முக்கியமான பாயிண்ட்தான்.
நாளைக்கே நானும், சேகரும் போய் சுத்து வட்டாரத்தில், அந்த தேதித்கு எங்கு மண்டபம் கிடைக்கிறது என்று பார்த்து ஃபிக்ஸ் பண்ணி விடுகிறோம். மீதி எல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொள்ள கொஞ்சம் மெனக்கட வேண்டும் ,அவ்வளவுதான்" என்று கூறினார்.
"அப்போ அதே முகூர்த்தத்தை பிக்ஸ் பண்ணிக்கலாமா "என்று கேட்டார் திரு.
பின்பு பரம கல்யாணி, சுப்ரமணிய பிள்ளையிடம் " எண்ணி 29 நாள் தான் இருக்கு. அதுக்குள்ள நம்மளால ஏற்பாடு பண்ண முடியுமா என்று கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க" என்றாள்
பரம கல்யாணி. உடனே சுப்பிரமணிய பிள்ளை "நிச்சயம் பண்ணிவிடலாம் என்று தான் நான் நினைக்கிறேன் .நீ என்ன சொல்ற சேகர்"என்றார் மகனிடம். சந்திரசேகர் " செஞ்சுடலாம் அப்பா" என்றான். பின்பு ஜெகநாதய்யர் முன்னிலையில் இரு வீட்டாரும் பத்திரிக்கை எழுதி அதை மாற்றிக் கொண்டார்கள்.
ஆதித்யாவின் முகம் சிறிது சரியாக இல்லாததை கண்ட திரு " ஏனப்பா, ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க" என்றான். " இல்லப்பா. இதுபோல இன்னைக்கே நம்ம பத்திரிக்கை எழுதி மாத்திப்போம்னு தெரிஞ்சிருந்தா, அந்த தாத்தா, பாட்டியையும் கூட்டிட்டு வந்திருப்பேன்" என்றான் அவன். திரு அவனிடம் " ஆமாம் அப்படி செய்திருக்கலாம். ஆனால் நமக்கு கல்யாணத்துக்கு நாட்கள் அதிகம் இல்லை. எனவே தான் இன்றே இப்படி செய்யும்படி ஆகிவிட்டது. தாத்தாவும், பாட்டியும் இதை ஒன்றும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான் அவர்களிடம் பேசுகிறேன்" என்று கூறினார்.
பின்பு மறுநாள் எல்லோரும் குற்றாலம் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்வதாக சந்திரசேகர் கூறினார். உடனே ஆதித்யா "என்னங்க உங்க பிரண்டு வள்ளிநாயகம் வேன்லயா" என்று சொல்லி சிரித்தான். சந்திர சேகரும் சிரித்து விட்டு " நீங்க ஒரி பண்ணவேண்டாம். இப்போ வேனை பக்காவா கண்டிஷன்ல வச்சிருக்கான்" என்று கூறினார்.
இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்ட காரணத்தை தெரியாத திருவுக்கும் மற்றவர்களுக்கும் ஆதித்யா போன முறை சென்றபோது வேன் டயர் பஞ்சராகி தாங்கள் பட்ட அவஸ்தையை கூறினான்.
இதற்குள் நமச்சிவாயம் " நீங்கள் நாளை குற்றாலம் போய்விட்டு திரும்ப வரும்போது அனேகமாக கல்யாணம் மண்டபம் செங்கோட்டையிலா அல்லது தென்காசியிலான்னு நான் உங்களுக்கு செய்தி தர முயற்சி பண்ணுகிறேன்" என்றார்.
பின்பு அனைவரும் கிளம்பி அருகில் இருந்து சிவன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள். இரவு சாப்பாடு முடிந்து வாசலில் கயிற்றுக் கட்டில் எல்லோரும் அமர்ந்தார்கள். காசிநாதன் வெகு நாள் கழித்து முதன்முறையாக குற்றால மலைச் சாரலின் காற்றை சுவாசித்து அனுபவித்தார்.
No comments:
Post a Comment