Tuesday, March 5, 2024

முற்பகல் செயின்..59

 முற்பகல் செயின்..59

By N Krishnamurthy 

காபி சாப்பிடும் போது  ஆதித்யா  தேன்மொழியிடம் பேச முயன்றான். அவள் வேலை இருப்பது போன்று பாவனை செய்து கொண்டு தன்  இடத்துக்கு சென்று விட்டாள்.

லன்ச் சாப்பிடும்போது ஆதித்யா அவளிடம் "என்ன, இன்னும் கோவம் தீரவில்லை போல இருக்கு" என்றான். அதற்கு அவள் "நான் கோபப்பட்டு என்ன பிரயோஜனம் .நீங்க இப்போதெல்லாம் பழைய ஆதித்யாவாக இல்லை. மிகவும் மாறி விட்டீர்கள். நிறைய விஷயங்களை என்னிடம் சொல்வதே இல்லை. கல்யாணமாகப் போகிற சமயத்தில் உங்கள் நிஜ சொரூபத்தை காட்டுகிறீர்கள் போலிருக்கிறது" என்றாள். அதற்கு ஆதித்யா " அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. என் நண்பனின் பிரச்சனையை தீர்க்கத்தான் நான் லீவு எடுக்க வேண்டி இருந்தது. பிரச்சனை கிட்டத்தட்ட சுமுகமாக முடியும் போலுள்ளது. இனி ஒன்று, இரண்டு நாட்களிள் பத்திரிகை வினியோகம் செய்ய வேண்டும்" என்று கூறினான். அப்போது தேன்மொழி " நம் கல்யாணத்திற்கு ஆபீஸிலிருந்து பத்திலிருந்து பதினைந்து பேர் கொண்ட  ஒரு கூட்டம் வருகிறது தெரியுமா" என்றாள். "அப்படியா" என்றான் ஆதித்யா.

"  ஆம்.அவர்களுக்கு தென்காசியில் ஏதாவது நல்ல ரூமா பார்த்து போட வேண்டும்" என்றாள் தேன்மொழி. 

" அதற்கென்ன கடையநல்லூரில்  எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் சொல்லிவிடுகிறேன்.

அவர் ரூம் புக் செய்துவிடுவார் " என்று கூறினான் ஆதித்யா. "கடையநல்லூரில்  எனக்கு தெரிந்த வரை உங்களுக்கு தெரிந்தவர்  யாருமில்லையே" என்றாள் தேன்மொழி. 

" இருக்கிறார்.அவரென் வருங்கால மைத்துனர். சந்திரசேகரன் என்று பெயர்" என்று சொல்லி சிரித்தான் ஆதித்யா.

அன்று மாலை அவன் ஆபீஸிலிருந்து வீடு திரும்பும் போது மிகவும் உற்சாகமாக இருந்தான். செண்பகராஜ் விஷயத்தில் நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை ஒரு புறம், தேன்மொழி மிகவும் சமாதானமாகிவிட்டாள் என்ற சந்தோஷம்  மற்றொரு புறம். வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் நமச்சிவாயம் அவனைப் பார்த்து "என்ன மிகவும் உற்சாகமாய் இருக்கிறாய்" என்று கேட்டார்."என்ன தாத்தா. கல்யாண பையன் உற்சாகமா இருப்பது என்ன ஆச்சர்யம்" என்று கேட்டான் அவன்.

இரவு சாப்பாடு முடிந்ததும் நமச்சிவாயம் அவனிடம் "நான் கொஞ்ச நேரம் மாடிக்கு போய் காற்று வாங்கலாம் என்று இருக்கிறேன். நீயும் வருகிறாயா"என்று கேட்டார்.

" சரி, தாத்தா" என்று சொல்லி, அவன் அவர் உட்காருவதற்காக ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு சென்றான். நாற்காலியை  விரித்து அவரை அதில் உட்கார செய்தான். பின்னர் அவர் காலடியில் உட்கார்ந்து கொண்டு அவர் கால்களை தன் மடியில் வைத்து பிடித்து விட ஆரம்பித்தான். நமச்சிவாயம்  அவனிடம்" உனக்கு ராமாயணம் முழுதும் தெரியுமா, ஆதித்யா"எனக்கேட்க, அவன்"  ஓரளவுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்" என்றான். "சீதை அக்னி பிரவேசம் செய்த விவரம் தெரியுமா" என்று கேட்டார்."ஆமாம், தாத்தா. அதைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றான் அவன். "ராமனுடைய கதாபாத்திரம் மிகவும் உயர்ந்த கதாபாத்திரம். இருந்த போதிலும் யாரோ ஒரு துணி துவைப்பவன் சொல்லிவிட்டான் என்ற காரணத்தால் தன் மனைவியின் களங்கம் தீர வேண்டும் என்று அவளை தீக்குளிக்க சொன்னது சரி இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணை முழுவதும் நம்பி விட்டால் அவள் மீது யாரேனும் வீணாக களங்கம் சுமத்தினால் அதற்காக அவளுக்கு தண்டனை கொடுப்பது என்பது மிகவும் கேவலமான செயலாகும். இதைத் தவிர ராமாயணத்தில் ராமன் மறைந்திருந்து வாலியை கொன்றதும் என் மனதிற்கு பிடிக்காத ஒன்று" என்று கூறினார். 

இதைக் கேட்டதும் விஷயத்தை புரிந்து கொண்ட ஆதித்யா "தாத்தா, அந்த மொட்டை கடிதாசை  நீங்கள் படித்து விட்டீர்களா?" என்று கேட்டான். திடீரென்று அவன் இப்படி கேட்டதும் நமச்சிவாயத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. "ஆமாம். ஆதித்யா. உன் ரூமிற்கு ஏதோ புத்தகத்தை எடுக்க வந்தவன் டேபிளில் இருந்து கீழே ஒரு கடிதாசி விழுந்திருப்பததை எடுத்து பார்த்தேன். அதை படித்து இருக்கக் கூடாதுதான் .அதை படித்ததும் ஒரு வகையில் நல்லதாக போய் விட்டது" என்று கூறியவர் " நான்கு நாட்களாகவே உன் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிகிறது. ஆதித்யா இந்த கடிதத்தின்  அடிப்படையில்  நீ தேன்மொழியை சந்தேகப்பட்டு  ஏதாவது சொல்லி விட்டாயா" என்று கேட்டார்.

 இதைக் கேட்ட ஆதித்யா "தாத்தா, நான் உங்கள் பேரன்.அனாமதேய  கடிதத்தில் உள்ளதை படித்து , அதில் கூறியுள்ளதை உண்மை என்று நம்பி செயல்படுபவன் நான் அல்ல" என்று கூறி அவரிடம் நடந்ததை எல்லாம் விவரித்தான். பின்பு நமச்சிவாயம் அவனிடம்" நீ மிகவும் சரியாக செய்திருக்கிற ஆதித்யா. உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு ஆண்மகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உன் ஆண்மையை நீ இங்கு நிலைநாட்டி இருக்கிறாய்" என்று கூறினார். ஆதித்யா அவரிடம் "தாத்தா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இதை தெரிந்து கொண்ட நான்காவது நபர் நீங்கள். தயவுசெய்து பாட்டிக்கு கூட தெரியப்படுத்தாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டான்.   நமச்சிவாயம் அவனிடம் "இதையெல்லாம் நீ என்னிடம் சொல்ல வேண்டாம். என் மூலமாக இது யாருக்கும் போகாது" என்று உறுதி அளித்தார். 

இவருடன் கீழே இறங்கி வந்தனர். அன்று இரவு அவர்கள் இருவரும் நன்றாக உறங்கினார்கள்.

No comments:

Post a Comment