Wednesday, March 13, 2024

ஆத்மாநந்தா -1

 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ

By N Krishnamurthy 

என்று தான் இக்கதைக்கு நாமகரணம் சூட்டியிருந்தேன். கதை கருவை மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தபோது இக்கதைக்கு ஆத்மாநந்தா என்ற பெயரே கன கச்சிதமாக இருக்கும் என நினைத்தேன். இக்கதை முடியும்போது இதைப் படித்தவர்கள் ஆத்மாநந்தா தான் சரியான பெயர் என ஒத்துக்கொள்வார்கள்.

 ஒரு எச்சரிக்கை!

இவர்   கதையின் தலைப்பை ஆத்மாநந்தா என ஏன் வைத்திருக்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது என சந்தோஷப்படும் முந்திரிக்கொட்டை வாசகர்கள் கதையின் மூன்றாவது பதிவை படித்ததும் "அடப்பாவி.ஏமாத்தூட்டானே"என என்னை சபிக்கவேண்டாம்.

-----------------------------------------------------------

 ஆத்மாநந்தா -1

"மங்களம் (கதையை மங்களத்துடன் முடிப்பார்கள். நான் கதையை மங்களத்துடன் ஆரம்பித்திருக்கிறேன்.

எல்லோரயும் போல இல்லாமல் நான் கொஞ்சம் வித்யாசமாக இருக்க வேண்டாமா?)

வாசல்ல யாரோ கூப்படறா.சித்த யாருன்னு பாரு"என்றார் ஆத்மநாதன் மனைவி மங்களத்திடம். 

அவர் பூஜை அறையில் நாராயணீயத்தின் நூறாவது சதகத்தை சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடித்த அவர் எழுந்து சமையல் அறைக்கு போய்"யார் வாசல்ல "என்றார் மனைவியிடம்.  "பழைய சாமான் எடுத்துண்டு போற ஆள்.ஏதாவது சாமான் இருக்கான்னு கேட்டான்" என்றாள்.

"காபி கலக்கலாமா" என்றாள் மங்களம்.

ஆத்மநாதனுக்கு இது இரண்டாவது டோஸ் காபி. (முதல் காபி காலை ஐந்தரை மணிக்கு,காலை சந்தி செய்வதற்கு முன். ஆமாம். அதிகாலையில் பொன்னிறமான, நுரை பொங்கும்,ஆவி பறக்கும், ஸ்ட்ராங் காபி குடிப்பவர்கள் அதி புத்திசாலியாக திகழ்வார்கள் என்று எங்கோ படித்ததாக ஞாபாகம். சரிதானா?).

இதை சாப்பிட்டு விட்டு நாகேஸ்வரர் கோவில் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வரை பசி எடுக்காது. இது அவர் தினம் ரொடீன்.

ஆத்மநாதன் பிறந்து வளர்ந்தது, இப்போதிருப்பதெல்லாம் கும்பகோணம்தான்.

நாகேஸ்வரன் சன்னதி தெருவில் பூர்விக சொந்த வீடு.தேவைப்படும்போதெல்லாம் மராமத்து செய்து கொள்வார்.

நீங்கள் கும்பகோணம் போய் இறங்கியதும், ஆட்டோ ரிக்ஷா  ஓட்டுபவரிடம் ரிடையர்டு ஹெட் மாஸ்டர் ஆத்மநாபன் வீட்டுக்கு போகவேண்டும் என்று சொன்னால் போதும்.சரியாக அவர் உங்களை ஆத்மநாபன் வீட்டிற்கு கொண்டு போய் விட்டு விடுவார்.

கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டராக இருந்து இருபத்தி ஓரு வருடம் முன்னர் ரிடையர் ஆன B.Sc.B.T ஆத்மநாதன்.

மங்களத்துக்கு சொந்த ஊர் நீடாமங்கலம். கல்யாணமாகி புகுந்த வீடு வந்த நாள் முதல் இன்று வரை ஆத்மநாதன் பேச்சுக்கு மறு பேச்சு பேசி அறியாள். மங்களம் பார்க்க எப்படி இருப்பாள் என்று நீங்கள் கேட்டால் ,விகடன் "ஆனந்தபவன்" சீரியலில் வரும் காமாக்ஷி(குமாரி சச்சு) பாத்திரத்தை நீங்கள் பார்த்திருந்தால் போதும் என்பேன். மங்களம் அச்சாக அப்படியே இருப்பாள். மூக்கில் வைர மூக்குத்தி டாலடிக்கும். நெற்றியில் இப்போதுள்ள ஒரு ரூபாய் நாணயத்தின் பாதி அளவிற்கு ஸ்ரீவித்யா குங்குமம். அவரும் நொடிக்கொருமுறை மங்களம், மங்களம் என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். மிகவும் ஆதர்ச தம்பதிகள்.

தெருவில் இவர்கள் இருவரும் நடந்து சென்றால், இவர்களை முன்பின் அறியாதவர்கள் கூட,  இவர்களால் கவரப்பட்டு இவர்களை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அறுபத்தோரு வருட மணவாழ்வில் கிடைத்தது மூன்று ரத்தினங்கள்.

பெரியவன்(ர்) சுந்தரம் திருச்சி நேஷனல் காலேஜ் பிரின்சிபல். இன்னும் ரிடயர்மண்டுக்கு ஐந்து வருஷமே உள்ளது. தில்லைநகர் டென்த் கிராசில் சொந்த வீடு. சுந்தரம்,ஜனனி தம்பதிக்கு ஒரே பிள்ளை, கிரீஷ். அமெரிக்காவில் பே ஏரியாவில் குடும்பத்தோடு இருக்கிறான்.கிரீஷ், மாலினிக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை.

சுந்தரத்துக்கு அடுத்தது பெண்,காயத்ரி. மாப்பிள்ளை கணேஷ்ராம் பூனாவில் டிபன்ஸ் அக்கவுண்ட்ஸில் சீப் அகவுண்ட்ஸ் ஆபிசர். இவர்களுக்கு ஒரே பெண் சௌம்யா. திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வாசம்.

காயத்திரி பிறந்த ஐந்து வருடம் கழித்து பிறந்தவன், கடை குட்டி, ஸ்ரீராம். இவன் நார்த்தேர்ன் ரயில்வேயில் சீப் ஜெனரல் மேனேஜராக டெல்லியில் இருக்கிறான். தனக்கு கீழே வேலை செய்த சுனிதா அகர்வாலை காதல் கடிமணம் செய்து கொண்டவன். இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள். வியாஸ்,ரேஷ்மா.

ஆத்மநாதனுக்கு பதினைந்து நாட்களுக்கு முன் தான்  சதாபிஷேகம் நடந்தது. சதாபிஷேகத்திற்கு பெண்,மாப்பிள்ளை, பையன்களும் குடும்ப சகிதமாக வந்திருந்து பங்ஷனை பிரமாதமாக நடத்தினார்கள். பங்ஷன் முடிந்த பத்து நாட்களில் ஒருவர் பின் ஒருவராக அவரவர் ஊர் போய் சேர்ந்தனர்.

ஒரு முக்யமான கேரக்டரை சொல்ல மறந்து விட்டேனே. அதுதான் மங்களத்தின் தங்கை லாவண்யா. மங்களத்தை விட பன்னிரெண்டு வயது சிறியவள்.

கணவன் வெங்கடேசனுடன் மதுரையில் வசித்து வந்தாள். இத்தம்பதியருக்கு குழைந்தை கிடையாது.

ஒரு நாள் வெங்கடேசன் இரவு எட்டுமணிக்கு ஆபிசிலிருந்து டூ வீலரில் வரும்போது, எதிர்புறம் லாரி ரூபத்தில் வந்த காலன் வெங்கடேசனின் காலத்தை முடித்தான். நிர் கதியானாள் லாவண்யா. சுபம் வரை கூடவே இருந்த ஆத்மநாதன் தம்பதியர், அவளை தங்களுடனே அழைத்துக்கொண்டு கும்பகோணம் வந்து விட்டனர். லாவண்யா அக்கா வீட்டில் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் கடவுள் ஒத்தாசைக்கு யாரையாவது  இது மாதிரி அனுப்பி வைக்கிறான்.

No comments:

Post a Comment