முற்பகல் செயின்.. 58
By N Krishnamurthy
ஆதித்யா சொன்னதைக் கேட்ட சந்திர சேகர் " நீங்கள் சொன்னது மிகவும் சரி. ஆனால் அந்த ஆட்டோகிராப் நோட்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை. நான் வேண்டுமானால் தேன்மொழிக்கு போன் செய்து கேட்டு பார்க்கிறேன்" என்றார். ஆதித்யா அவன் கையைப் பிடித்துக் கொண்டு"வேறு வினையே வேண்டாம். தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். நான் வேறு இரண்டு நாள் முன்பே அவளிடம் சிறிது கடுமையாகப் பேசி விட்டேன். இன்று வேறு லீவு போட்டுள்ளேன். இதை அவளுக்கு சொல்லவில்லை. இந்த சமயத்தில் இது போல் ஏதாவது கேட்டால் அவள் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சுலபமாக புரிந்து கொண்டு விடுவாள். நீங்களே உங்கள் வீட்டில் தேடிப் பாருங்கள். எனக்கு என்னமோ அந்த ஆட்டோகிராப் நோட்புக் கிடைக்கும் என்று தான் தோன்றுகிறது" என்று கூறிய ஆதித்யா " அது கிடைத்தவுடன், அதை நன்றாக பேக் செய்து, என்னுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி விடுங்கள். அப்புறம் இரண்டு மூன்று நாட்களில் நான் உங்களுக்கு போன் செய்து என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறேன். இதற்கிடையில் செண்பகராஜ் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்ற விவரத்தை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் கூறினான். தன் வீட்டு முகவரியை எழுதி தந்தான். சந்திரசேகர் " சரி நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
" சரி அப்போ ஏதாவது பஸ் பிடித்து நான் சென்னை சென்று விடுகிறேன்"என்று கூறினான் ஆதித்யா. உடனே சந்திரசேகர் மணி பன்னிரண்டை தாண்டிவிட்டது. நீங்கள் பகலுணவு உண்ட பின் இரண்டு மணிக்கு கிளம்பினால் கூட கிட்டத்தட்ட இரவு பன்னிரண்டு மணிக்கு தான் சென்னை போக முடியும். பேசாமல் ஒன்று செய்யுங்கள். நாம் மதிய உணவையும் முடித்து விட்டு வந்து விடுவோம். என்னுடைய அறையில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் .ஏழு மணிக்கு திருநெல்வேலி சென்னை எக்ஸ்பிரஸ் ட்ரெயின் இருக்கிறது. சிறிது முன்பாக சென்றால் அதில் அன் ரிசர்வடு காம்பார்ட்மெண்ட்டில் இடம் கிடைக்கும். அப்படி அது வேண்டாம் என்றால் ஏதாவது ஒரு ஆம்னி பஸ் கிடைத்தால் காலையில் நீங்கள் சென்னை சென்றுவிடலாம் " என்று கூறினார்."சரி, இதுவும் நல்ல ஐடியா தான்" என்று கூறினான் ஆதித்யா.
அவர்கள் மூவரும் சேர்ந்து அருகில் உள்ள உணவகத்தில் பகல் உணவை உண்டார்கள். வள்ளி நாயகம் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கடையநல்லூருக்கு பஸ் பிடித்தார். மாலை நாலு மணிக்கு ஆதித்யாவும், சந்திரசேகரும் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். வெளியே வந்தவுடன் மிகவும் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் முன், க்யூவில் நின்று அரை கிலோ அல்வாவை வாங்கிக் கொண்டான் ஆதித்யா.பக்கத்திலிருந்து சரவணபவனில் சப்பாத்தி சாப்பிட்டு,பால் அருந்தினார்கள். பின்பு இருவரும், ஆட்டோ வைத்துக்கொண்டு, திருநெல்வேலி ஜங்ஷனை அடைந்தார்கள்.
ஆதித்யா டிக்கட் வாங்க வரிசையில் நின்றான். சந்திரசேகர் பிளாட்பார்ம் அடைந்த ஐந்து நிமிடத்தில் திருநெல்வேலி சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்கு வந்தது. அதில் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் ஏறி ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்தார் சந்திரசேகர்.
ஆதித்யா டிக்கட் வாங்கிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தபோது,சந்திரசேகர் அவனிடம் " இது அவ்வளவாக சௌகர்யபடாது என்றால் சொல்லுங்க, ஆம்னி பஸ்ஸிலே போய்விடலாம்"என்றார். " இல்லை. இல்லை. இதுவே பரவாயில்லை.
ஒரு நைட் தானே. நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்" என்றான் ஆதித்யா.
அவன் இரு கைகளையும் பிடித்துக்கொண்ட சந்திர சேகர் " இவ்வளவு சிறிய வயதில் நீங்கள் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது என்னை வியக்க வைக்கிறது.
நீங்கள் எங்கள் குடும்பத்திற்கு மூத்த மாப்பிள்ளையாக கிடைத்திருப்பது எங்கள் பாக்யம்"என்றார் நா தழு தழுக்க.
" அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களை போல பண்பட்ட குடும்பத்திலிருந்து, தேன்மொழியை போல பெண்ணை மணக்கப்போகும் நான்தான் அதிர்ஷ்டசாலி"என்றான் ஆதித்யா.
ட்ரெயின் கிளம்ப ஆரம்பித்தது."ஆட்டோ கிராப்பை நோட்டை எப்படியாவது கண்டு பிடித்து எனக்கு அனுப்பி விடுங்கள் "என்றான் ஆதித்யா."நிச்சயம்.நாளை ஆபிஸ் விட்டதும் கடைய நல்லூர் சென்று விடுகிறேன்.இரவோடிரவாக அதை கண்டுபிடித்து இன்னும் இரண்டு நாட்களில் அது உங்களுக்கு வந்து சேருமாறு செய்து விடுகிறேன் "என்றார் சந்திரசேகர்.
மறுநாள் காலை தாம்பரத்தில் இறங்கி, ஆறு மணிக்கு வீடு போய் சேர்ந்தான் ஆதித்யா. அவனைப் பார்த்து நமச்சிவாயம்" என்னப்பா திடீர்னு எங்கே போய் விட்டு வருகிறாய்" என்றார். "திருநெல்வேலில என் ஃப்ரெண்ட் இருக்கான் தாத்தா. அவன் மனைவிக்கு உடம்பு சரியில்லை அவனையும், அவன் மனைவியையும் பார்த்து விட்டு வருகிறேன்" என்று பொய் சொன்னான்.
திருநெல்வேலி அல்வா பாக்கட்டை எடுத்து தன்னுடைய பாட்டி கோமதியிடம் கொடுத்தான்.
இப்போதுதான் அவன் மனம் ஒரு அளவுக்கு நிம்மதியாக இருந்தது. குளித்து சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு ஆபீஸை அடைந்தான்.
முதல் நாள் அவனைக் காணாமல் மிகவும் தவித்துப் போயிருந்த தேன்மொழி, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவனை பார்க்காத மாதிரி நடந்து கொண்டாள். இந்த ஊடலை ஆதித்யா மிகவும் ரசித்தான்.
No comments:
Post a Comment