Wednesday, March 13, 2024

ஆத்மாநந்தா-2

 ஆத்மாநந்தா-2

By N Krishnamurthy 

ஆத்மநாதனும், மங்களமும் ஓவ்வொரு சஷ்டிக்கும் தவறாமல் ஸ்வாமிமலை போய்விடுவார்கள்.

ஸ்வாமிமலை கோவிலில் பூஜை செய்யும் தேஜோமய  குருக்கள் ஆத்மநாதனுடன் பள்ளியில் படித்தவர், குடும்ப நண்பர். எழுபது வருட பழக்கம். மங்களத்துக்கும், தேஜோமய குருக்களின் மனைவி மதுராம்பாளுக்கும் அப்படி ஒரு நட்பு.

ஆத்மநாதனை விட நான்கு வயது மூத்தவர் குருக்கள். குருக்களுக்கு சொந்த மாமா  பெண்ணான மதுராம்பா குருக்களை விட இரண்டு வயதுதான் இளையவள்.

சஷ்டிக்கு முதல் நாள் இரவு ,சாப்பாட்டை முடித்துக்கொண்டு, ஸ்வாமிமலைக்கு போய் தேஜோமய  குருக்களின் வீட்டிலேயே தங்கிவிடுவார்கள். சுடச்சுட அருமையான பசும்பால் கிடைக்கும்.

காலை காப்பி சாப்பிட்டுவிட்டு,குளித்தபின், இருவரும் தேஜோமய  குருக்களுடன் கோவிலுக்கு சென்று ஸ்வாமிநாதனை வெகு அருகில் தரிசிப்பார்கள்.

மதிய உணவு குருக்கள் வீட்டில் தான்.மாலை மூணறை மணிக்கு பசும்பால் சேர்த்த ஸ்ட்ராங் காபி அருந்தியதும் பஸ் பிடித்து கும்பகோணம் திரும்புவார்கள்.சில சமயம் லாவண்யாவும் இவர்களுடன் கலந்து கொள்வாள். முருகன் அருளால் ஆத்மநாபன் தம்பதிகளுக்கு இந்த பாக்யம் தொடர்ந்து கிடைத்து வந்தது. 

குருக்கள் தம்பதிகளுக்கு ஒரேபையன், சுப்ரமணியன். அப்பாவுக்கு உதவியாக கோவில் வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கிறான். 

மதுராம்பாவும்,தேஜோமய  குருக்களும்,  ஆத்மநாதன் வீட்டு எல்லா விசேஷங்களுக்கும் தவறாமல் ஆஜராகி விடுவார்கள்.

ஆத்மநாதனின் சதாபிஷேகத்தில் இவர்களுக்குத்தான் தம்பதி பூஜை செய்யப்பட்டது.

ஆத்மநாதனை விட பெரியவரான குருக்கள் தம்பதிகளுக்கும், ஆத்மநாதன் மாமா கணபதி தம்பதிகளுக்குத்தான்,

அவரது சதாபிஷேகத்தன்று ஆத்மநாதன் தம்பதிகள் நமஸ்காரம் செய்தார்கள்.

ஆத்மநாதன் காலை வேளையில் சந்தி முடித்து, இரண்டாவது டோஸ் காபி அருந்திய பின் ,நாகேஸ்வரர் கோவிலில் ஸ்வாமி தர்சனம் செய்து விட்டு திரும்பிய பின் மாத்யான்னிகம் முடித்த பின்னரே சாப்பிடுவார்.

ஒன்றரை மணிக்கு ஈசி சேரில் சாய்ந்து ஏதாவது படிக்க ஆரம்பிப்பார். அது ஆனந்தவிகடன், கலைமகளாகவோ இருக்கலாம். அல்லது திருவாசகம், திருமந்திரம் விளக்க உரையாகவோ இருக்கக்கூடும். அப்படியோ சிறிது நேரம் துயில் கொள்வார். கோழித்தூக்கம் என்பார்களே அது போலத்தான்.

மூன்றைரை மணி போல டீ டிகாக்ஷனின் நெடி நாசியை துளைத்ததும் ஆத்மநாதனுக்கு முழிப்பு வரும். சில சமயம் அவர் எழுந்திருக்காவிடில் டீ போட்டதும் மங்களம் குரல் கொடுத்தோ, தொட்டே அவரை எழுப்புவாள்.

சில சமயம் டீயுடன் நொறுக்கு  தீனியும் சேரும்.

மாலை சந்தி முடிந்ததும் கும்பபேஸ்வரர், ராமசாமி,சார்ங்கபாணி கோவில்களில் எதாவது ஒன்றுக்கு சென்று தர்சனம் செய்து விட்டு வருவார். நிறைய நாட்களில் மங்களுமும் இவர் கூட கோவிலுக்கு சென்று வருவாள். இரவு எட்டிலிருந்து எட்டரைக்குள், எந்த ராஜா எந்த ஊர் போனாலும், டிபன் சாப்பிட்டுவிடுவார். அதனை அடுத்து ஒரு பிடி தயிர்சாதம்.

கறிகாய் மற்றும் மளிகை சாமான் வாங்குவதெல்லாம் லாவண்யாதான்.

மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கொரு முறை திருச்சியிலிருந்து சுந்தரமும், ஜனனியும் சனி,ஞாயிறுகளில் வந்து தங்குவார்கள்.

கடவுள் புண்யத்தில், ஆந்மநாதன் தம்பதிகளுக்கு  வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது

காலம்தான் எவ்வளவு சீக்கிரம் ஒடுகிறது.

No comments:

Post a Comment