ஆத்மாநந்தா -6
By N Krishnamurthy
மங்களமும், லாவண்யாவும் காலத்தை ஓட்ட ஆரம்பித்தார்கள். ஒரு வருடத்திற்குள் கோவில்,குளம் செல்ல வேண்டாம் என்று வீட்டிலேயே அடைந்து கிடந்தாள் மங்களம்.
வாரந்தோறும் மறக்காமல் காயத்ரிபோன் செய்வாள்.
ஸ்ரீராம் மாதம் ஒருமுறை போன் செய்வான்.
சுந்தரமும், ஜனனியும் மாத காரியங்களை செய்ய கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர்.
ஆத்மநாதன் இறந்த 340 ஆவது நாளுக்குமேல் 355 ஆவது நாளுக்குள், பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள் தவிர்த்து ஒரு நாளில் ஊன மாசிகம் நடந்தது.
வருஷாப்தீகத்திற்கு ஐந்து நாட்கள் முன்பே சுந்தரம் குடும்பம், காயத்ரி,ஸ்ரீராம் குடும்பம் வந்திருந்தது.
கூடுதலாக சுந்தரத்தின் பையன் கிரீஷ்,மாட்டுப்பெண் மாலினி,குழந்தை ஆப்திகா ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள்.
இது போல காயத்ரியின் மகள் சௌம்யா மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து தன் இரண்டு வயது மகன் பிராணேஷுடன் வந்திருந்தாள்.அவள் கணவன் டென்டிஸ்ட்டாக பிராக்டீஸ் செய்கிறான். அவனால் வர முடியவில்லை.
இறந்த தமிழ் மாதம், பக்ஷம், திதிக்கு முதல் நாள் சோதகும்பம் செய்தார்கள். ஒரு வாத்யாருக்கு சமாராதனை சமையல் சாப்பாடு போடப்பட்டது.
(சோத கும்பமும் பிதா முதலிய மூவரை குறித்து செய்யப்படும் ச்ராத்தமே ஆகும்)
நியமம் அதிகம் இல்லாததால் இதற்கு சாஸ்திரிகள் வர ஒப்பு கொண்டார். ஆனால் மாசிகத்திற்கு நியமம் அதிகம் உள்ளதால் சாஸ்திரிகள் வேறு ஒருவரை அனுப்பினார்.
ஸோத கும்பம் சாப்பிட்ட வாத்யாருக்கு ஒரு பவுன் தங்கத்தில் ஒரு மோதிரம், வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, வெள்ளி பவித்ரம் ஒன்று, 10X6 வேஷ்டி ,டவல், குடை, பாத ரக்ஷை(செருப்பு), விசிறி, கோதானத்திற்கு பதில் பணம்,மட்டை தேங்காய், சந்தன கட்டை, ஒரு லிட்டர் கொள் அளவுள்ள பித்தளை சொம்பு, வெள்ளி கிண்ணத்தில் தேன் ஆகியவைகளை தானமாக தந்தார்கள் .
வருஷாப்தீகத்தன்றும், சுபத்தன்றும் தேஜோமய குருக்களும்,மதுராம்பாவும் வந்திருந்தனர்.
குருக்களுக்கு எண்பத்தியேழு நடந்து கொண்டிருந்தது. முடியவில்லை. இருப்பினும் நண்பனுக்காக வந்திருந்தார்.
சுபத்தன்று டாக்டர் பாலகிருஷ்ணனும் அவரது மனைவியும் வந்திருந்தனர்.
குழந்தைகளும், மற்றவர்களும் புதுத்துணி அணிந்தார்கள்.
வருஷாப்தீகத்தன்று சிராத்த சமையல். விஸ்வேதேவர், பித்ரு இருவர் சாப்பாடு. இவர்கள் இருவருக்கும் தங்க மோதிரம், வெள்ளி பஞ்ச பாத்ர உத்திரிணி, , வெள்ளி பவித்ரம் ஒன்று, வெள்ளி கிண்ணத்தில் தேன் ,குடை, செருப்பு, விசிறி, பித்தளை சொம்பு, டவல், 9x5 வேஷ்டி, பஞ்ச தானம் மட்டை தேங்காய், சந்தன கட்டை இவைகள தானம் செய்தார்கள்.
சுபம் அன்று நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், செய்யப்பட்டன.
குடும்பத்திலுள்ள அனைவரது பெயர், நக்ஷத்திரம், ராசிகளை பேப்பரில்எழுதி சுந்தரம் சாஸ்த்ரிகளிடம் கொடுத்து விட, அதை பார்த்து அவர் ஆயுஷ்ய ஹோமம் செய்தார்.
சுபம் முடிந்த அடுத்த நாள் ஒருவர் பின் ஒருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.
கடைசியில் சுந்தரம் குடும்பம் மட்டும் தங்கி இருந்தனர்.
மங்களம் சுந்தரத்திடம் "என்னக்கி கிளம்பணம்னு சொல்லுடா சுந்தா.நானும்,லாவண்யாவும் துணி மணிகளை யெல்லாம் எடுத்து வச்சிக்கணம் "என்றாள்.
சுந்தரம் அம்மாவிடம் "அதுக்கு அவசியமே இல்லை அம்மா" என்றார்.
"என்னடா சொல்ற நீ? என்றாள் மங்களம். "நான் வரத்துக்கு மூணு நாள் முன்னாடி வாலன்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிண்டூட்டேன். ஒரு நாள் நான் மட்டும் திருச்சிக்கு போய், சாமானை எல்லாம் ஏற கட்டிண்டு, ஒரு லாரில ஏத்திண்டு வந்துட வேண்டியது தான்" என்றார்.
"அந்த வீட்டை என்ன பண்ண போற" என்றாள் மங்களம். " அந்த வீட்ட எங்க காலேஜ்ல வேலை செய்ற ஒரு ப்ரபொசர் வாடகைக்கு வேணும்னு கேக்கறார் . அவருக்கே வாடகைக்கு கொடுத்துலாம்னு இருக்கேன்"என்றார். இதைக் கேட்ட மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.
இருக்காதா பின்ன. வேறு வழி இல்லாததால் கும்பகோணம் வீட்டை விட்டு பிரியப் போகிறோமே என்ற துக்கம் அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. இப்பொழுது அது இல்லாமல் போனது.
இரண்டு நாள் கழித்து மங்களம், லாவண்யாவுடன், மாலை ராமசாமி கோவிலுக்கு சென்று வந்தாள். அவளை ஒரளவுக்கு தெரிந்து வைத்திருந்த பெண்கள் தங்களுக்குள் "மங்களம் மாமி மஹாலக்ஷ்மி மாதிரி மங்கலமா இருப்பா.பாவம் இப்போ இப்படி ஆய்ட்டா"என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டனர்.
No comments:
Post a Comment