Monday, March 4, 2024

முற்பகல் செயின்..51

 முற்பகல் செயின்..51

By N Krishnamurthy 

சந்திரசேகரும்,பிள்ளையும் தென்காசிக்கு சென்று அலைந்ததில், அவர்கள் கண்ணில் முத்தையா சொர்ணாம்பாள் கல்யாண மண்டபம் தென்பட்டது. மண்டபம் பார்ப்பதற்கு மிகவும் எடுப்பாக இருந்ததால் ஒருவேளை கட்ணம்  அதிகமாக  கேட்பார்களோ என்று சுப்ரமணிய பிள்ளை நினைத்துக் கொண்டார். எதற்கும் உள்ளே போய் கேட்டு பார்க்கலாம் என்று உள்ளே சென்ற போது திருமண மண்டப  ஆஃபீஸில் ஒரு 35 வயது மதிக்க தக்கவர் அமர்ந்திருந்தார். பிள்ளை அவரிடம் " என் பெண்   கல்யாணத்திற்கு மண்டபம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த தேதியில் கல்யாணம் வைத்திருக்கிறோம். இந்த மண்டபம் அந்த தேதியில் ஃப்ரீயாக இருக்கிறதா" என்று கேட்டார். கையிலிருந்த  டைரியை எடுத்துப்பார்த்த  அந்த நபர்  "அந்த தேதியில் மண்டபம் ஃப்ரீயாக இருக்கிறது" என்று கூறியவர்  சுப்ரமணிய பிள்ளையை சற்று உற்றுப்பார்த்து " சார், நீங்க கடையநல்லூர் தானே" என்று கேட்டார். "ஆமாம்" என்றார் பிள்ளை. " வாத்தியார் சுப்பிரமணிய பிள்ளை தானே "என்றார் அடுத்து. "ஆமாம். நீங்கள் யார் என்று தெரியவில்லையே" என்றார் பிள்ளை.

"சார்.நான் உங்களிடம் படித்த மாணவன் சார். இசக்கிமுத்து என் பெயர்" என்று கூறினார். "ஓ, அப்படியா எனக்கு ஞாபகம் இல்லப்பா" என்று கூறிய பிள்ளை  "இங்கு மேனேஜராக வேலை செய்கிறாயா" என்று கேட்டார். அதற்கு அவர் "இல்ல சார். இந்த மண்டபமே எங்களுக்கு சொந்தமானது. எங்க அப்பா அப்போது இதை  கட்டிவிட்டு எனக்கு விட்டுச்சென்று விட்டார். அப்பா இப்பொழுது இல்லை.மண்டபத்தை நிர்வாகிப்பதற்கு நான் தனியாக மேனேஜரை  போடவில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். அப்போதுதான் மண்டபத்தை சிறப்பாகவும், தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

" அப்படியாப்பா. உன்னை பார்த்தது ரொம்ப சந்தோஷம்" என்று கூறியவர் "ஒரு நாளைக்கு எவ்வளவு ஆகும்" என்று கேட்டார். அதுக்கு இசக்கிமுத்து " உங்கள் பெண்  கல்யாணத்துக்கு இந்த இடத்தை தந்து விடுறேன். கவலைப்பட வேண்டாம்" என்றார். "இல்லப்பா.எவ்வளவு ஆகும் என்று சொல்.எனக்கு கட்டுப்படி ஆகுமா என பார்க்க வேண்டும்" என்று கேட்டார்.

" சார் நீங்க எலக்ட்ரிசிடி சார்ஜும்,ரூம் கிளீன் செய்பவர்களுக்கும், பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டும் ஆகும் செலவை  கொடுத்தால் போதும். மற்றபடி ஏதும் தர வேண்டாம் "என்றார். அதற்கு பிள்ளை " அது சரியாக  இருக்காது.  சாதாரணமாக ஒரு நாளைக்கு  எவ்வளவு சார்ஜ் செய்வாய்" என்று கேட்டார். "சார், ஒரு நாளைக்கு மண்டபத்தின்  வாடகை முப்பது ஆயிரம் ரூபாய். நீங்கள் அவசியம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஆயிரம்  ரூபாய் கொடுத்தால் போதும்"என்றார் இசக்கி முத்து. 

" என்னால் எதற்கு நீ பெரிய தொகயை இழக்க வேண்டும்"  என்றார்.

பிள்ளை."சார் உங்களைப் போன்ற வாத்தியார்கள் தான் எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைத்து, நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே இது போன்ற ஒரு கைமாறு செய்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததற்கே நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று கூறினார். பிள்ளை

 " இல்லப்பா.நான் ஐயாயிரம் ரூபாய் தந்து விடுகிறேன். இப்போது உனக்கு ஏதாவது அட்வான்ஸ் கொடுக்க வேண்டுமா" என்றார் பிள்ளை." சார் அட்வான்ஸ் தேவை இல்லை. அப்படி கொடுக்க வேண்டும் என்று நீங்கள் பிரியப்பட்டால் ஒரு  நூறு ரூபாய் மட்டும் கொடுங்கள் போதும்" என்றார் இசக்கி முத்து. சந்திரசேகர் தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

பின்பு இசக்கி முத்து அவர்களை மண்டபத்தில் உள்ளே அழைத்துச் சென்று எல்லா இடங்களையும், குறிப்பாக மண்டபத்தில் உள்ள அறைகளை காட்டினார். மண்டபம் மிகவும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்ததை கண்ட சுப்ரமண்யபிள்ளை இசக்கிமுத்துவை வெகுவாக பாராட்டினார். இதைக் கேட்ட இசக்கி முத்து நகைத்துக் கொண்டு "நீங்க அப்போ எங்களுக்கு    'சுத்தம் சோறு போடும் 'என்று சொல்வீங்க. அதன் முழு அர்த்தம் எங்களுக்கு அப்ப விளங்கவில்லை. இப்போ இந்த சுத்தம் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

"கல்யாணசமையலுக்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா" என்று இசக்கி முத்து கேட்க, பிள்ளை "இல்லப்பா.முதல் வேலையா மண்டபம் புக் பண்ணத்தான் வந்தோம்"என்றார்.

No comments:

Post a Comment