முற்பகல் செயின்..62
By N Krishnamurthy
" நான் எல்லா உண்மையும் சொல்லி விடுகிறேன். நான் செய்தது மிக மோசமான காரியம். என் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்" என்று கூறி " நான் ஆரம்பம் முதலே தேன்மொழியை காதலித்து வந்தேன். அது ஒரு தலைப்பட்ச காதல் என்று எனக்கு தெரியும். வள்ளி நாயகத்தினுடைய வேன் டிரைவர் தென்காசியில் என் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் இருக்கிறார். பொதுவாக நான் அவரிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒரு முறை அப்படியே அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சாதாரணமாக கேட்கிற மாதிரி 'தேன்மொழி நல்லா இருக்காங்களா, அவங்க வீட்ல ஏதாவது விசேஷம் உண்டா" என்று கேட்டேன். அதற்கு அவர் "தேன்மொழியை உங்களுக்கு தெரியுமா" என்று கேட்டார். "தெரியுமாவா. அவ எனக்கு க்ளோஸ் பிரண்டுங்க. அவ என் கிளாஸ்மேட் கூட " என்று கூறினேன். தேன்மொழிக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. சென்னையில் அவளுடைய ஆபீஸில் தான் அவளை கட்டிக்கொள்ள போகும் மாப்பிள்ளை ஆதித்யாவும் வேலை செய்கிறார். அவங்க கூட ரெண்டு நாள் இங்க இருந்தாங்க. நான்தான் அவங்களையெல்லாம் கூட்டிட்டு குத்தாலம் எல்லாம் போய் வந்தேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் நான் மிகவும் கோபப்பட்டேன். என் ஆத்திரம் ஆதிகமானது. எப்படியாவது தேன்மொழி வாழ்க்கை கெடுக்க வேண்டும் என்று எண்ணினேன். எனவே ஒரு மொட்டை கடுதாசி தயார் செய்து வள்ளி நாயகத்தையும், தேன்மொழியையும் இணைத்து அபாண்டமாக பழி சுமத்தி ஆதித்யாவின் ஆபீஸ் அட்ரஸுக்கு லெடரை அனுப்பினேன்"என்றான்.
உடனே சந்திரசேகர் "ஆதித்யாவின் ஆபீஸ் அட்ரஸ் உனக்கு எப்படி கிடைத்தது" என்று கேட்டார். நண்பர்கள் மூலம் தேன்மொழி வேலை செய்து கொண்டிருந்த கம்பெனி அட்ரஸ் எனக்கு தெரியும். டிரைவர், ஆதித்யாவும் அதே கம்பெனியில் வேலை செய்வதாக கூறியதால் அந்த அட்ரஸை என்னால் சுலபமாக தெரிந்து கொள்ள முடிந்தது" என்றான்.
இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் அவனிடம் " நீ பேசறது எல்லாம் நான் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். உன்னை அரஸ்ட் செய்து ரிமாண்ட் செய்து கேஸ் போட்டால், குறைந்தது மூன்று வருடம் உனக்கு சிறை தண்டனை பெற்றுத் தர முடியும்" என்று கூறினார். அவன் அவருடைய இரு கைகளையும் பிடித்துக் கொண்டு "சார். அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள் . இது போன்ற செயல்களில் நான் இறங்க மாட்டேன்" என்று கூறி அழுதான். இந்தக் கேட்ட இதைக் கேட்ட சுயம்புலிங்கம் "ஆதித்யா.நீங்க என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டார் . ஆதித்யா
"இவர் செய்தது ஒரு இமாலயத் தவறு. கேடு கெட்ட செயல்.
இவரைப் பார்த்தாலும் பாவமாக இருக்கிறது. இவர் செய்த தவறுக்கு இவருடைய மனைவியும் , இரண்டு வயது குழந்தையும் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். இவரை விட்டு விடுவோம்" என்று கூறினான். வள்ளிநாயகம் சுயம்புலிங்கத்திடம் " சகலை,இந்த அயோக்யனை விட்டு விடவே கூடாது. என்னையும் தேன்மொழியும் இணைத்துப் பேசி என் குடும்பத்தையும் கெடுக்க நினைத்தான் இந்த பாவி" என்று ஆத்திரத்துடன் கூறினார். பின்பு செண்பகராஜ் எல்லோரையும் பார்த்து " நான் செய்தது மிக மோசமான செயல் என்று நான் இப்பொழுது உணர்ந்து விட்டேன். என் வாழ்நாளில் இது போன்ற ஒரு தவறை என் குழந்தையின் மீது சத்தியமாக இனி செய்ய மாட்டேன்.நான் உங்களையெல்லாம் கெஞ்சி கேட்டுக்கொள்வதெல்லாம் ,நான் திருந்த ஒரு சான்ஸ் கொடுங்கள், ப்ளீஸ் "என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டான். ஆதித்யா சுயம்புலிங்கத்தை பார்த்து " சார். நாம் ஒன்று செய்வோம். ஒரு பேப்பரில் செண்பகராஜை நடந்ததை யெல்லாம் விவரித்து எழுதச்சொல்லி ஒரு மன்னிப்புக் கடிதம் வாங்கிவைத்துக் கொள்வோம். இன்னும் ஒரு முறை இவர் இப்படி ஏதாவது செய்வார் என்று தெரிந்தால், அந்த கடிதத்தின் அடிப்படையில் நீங்கள் இவர் மீது ஆக்ஷன் எடுக்கலாம்" என்று கூறினான். இதைக் கேட்ட செண்பகராஜ் ஆதித்யாவின் இரு கைகளைப் பிடித்துக் கொண்டு " நீங்கள் இவ்வளவு உயர்ந்த மனிதராக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த ஒரு செயலுக்காக நான் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று கூறினான்.
பின்பு ஒரு பேப்பரை எடுத்து சுயம்புலிங்கம் சொல்ல சொல்ல செண்பகராஜ் அதில் தன்னுடைய மன்னிப்பு கடிதத்தை எழுதி கையெழுத்திட்டான்.
" சரி நீ போகலாம். ஆனால் உன்னை நான் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பேன். ஜாக்கிதை " என்று கூறினார் சுயம்புலிங்கம்.
அவன் கதவை திறந்து போவதற்கு முன் ஆதித்யா செண்பகராஜிடம்
" ஒரு நிமிடம் நில்லுங்கள்" என்றான். என்னவோ ஏதோ என்று பயத்தில் உறைந்து போனான் செண்பக ராஜ்.
No comments:
Post a Comment