Saturday, February 13, 2021

ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள்

  முகநூல நண்பரின்பதிவு

# ஆன்மீக பயணம் தந்த திகட்டாத தெய்வீக விருந்து# 

       ***

       இப்போது , உங்களை எல்லாம், ஒரு அருமையான, அற்புதமான கோயில்கள் உள்ள, அழகான கிராமத்துக்கு அழைத்து செல்லப்போகிறேன். வாருங்கள், அடியேனுடன் இந்த ஆன்மீக பயணத்துக்கு. 

       அது மட்டுமின்றி, மூன்று லோகங்களிலும் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் சித்புருஷர்களும், மஹரிஷிகளும், வாசம் செய்யும் புனித தலமாக இவ்வூர்  விளங்குகின்றது. இப்படிப்பட்ட பல சிறப்புகள் உள்ள ஊரில், முதலில் உங்களை , ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோயிலுக்கு அழைத்து செல்கிறேன். அதற்கு முன் இந்த கோயிலின் சிறப்பை சற்று அறிந்து கொள்ளுங்கள். 

    கருவறையில் பல சிறப்புகள் பெற்ற ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சி. வியக்கவைக்கும் அழகு. பாத்துக்கொண்டே மணிக்கணக்கில் இருக்கலாம், அவ்வளவு அழகு, அது மட்டுமின்றி, இந்த அருமையான, அழகான கோயிலின் வரலாற்றை, சிறப்பாக சொன்ன, மதிப்புக்குரிய, சுமார் 70 வயது உடைய, G. வரதராஜ பட்டாச்சாரியாருக்கு என் முதற்கண் நன்றியை சொல்ல வேண்டும்,  அத்தனை சிறப்பாக , பொறுமையாக அவர் சொன்னது போற்றக்கூடியது, அவரை மானசீகமாக வணங்கிறேன்.  அழகுடையது.

    ராஜகோபுர வாசலில் ஆஞ்சநேயரும்,  வாயிலை அடுத்து மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகா மண்டபதில் வலதுபுறம் தென்முக விஷ்ணு துர்க்கை வீற்றிருக்கிறார். அடுத்து விஷ்வக்சேனர், யோகநரசிம்மர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தென்புறம் பன்னிரு ஆழ்வார்கள் காட்சி தருகின்றனர் வடபுறத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள் சன்னதி தென்முகம் நோக்கி உள்ளது. அர்த்தமண்டபத்தை கடந்து கர்பகிரகத்தில் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஐந்து தலை ஆதிசேஷன் மீது சயனிதிருக்கின்றார். திருக்கோயிலின் தெற்கு பிரகாரத்தின் மேற்கு பகுதியில் ஸ்ரீ க்ஷீரநாயகி தாயார் சன்னதி உள்ளது.

     அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் தென்புறம் திருமுடியையும் வடபுறம் திருவடிகளையும் கொண்டு ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையின் மீது கிழக்கு நோக்கிய திருமுகமும் சதுர்புஜங்களும் சங்கு சக்கரதரியாக திருப்பாற்கடலில் சயனித்தவராக காட்சி தருகிறார்.

    திருமுகமண்டலத்தின் அருகே ஸ்ரீ தேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் வீற்றிருக்க நாபிக்கமலத்திலிருந்து நான்முகன் எழுந்தருளி உள்ளார். இவையனைத்தும் சுதை வேலைப்பாட்டினால் ஆனவை.

    சுதையானது பசுவினுடைய காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி போன்ற பொருள்களுடன் கோடிக்கணக்கான மூலிகைகளின் சாராம்சமும் சேர்த்து செய்யப்பட்டது. இதற்கு பன்மடங்கு சக்தியுண்டு.

    அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் திருமாலுக்கு திருமஞ்சனத்திற்க்கு பதிலாக சாம்பிராணி தைலக்காப்பு விஷ்ணு பதி புண்ணிய காலங்களில் நடைபெறுகிறது, அப்போது பெருமாள் மலர் மாலைகளாலும் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப் படுகிறார்.

     மேலும், முக்கியமாக கவனிக்க வேண்டிய, அற்புத தெய்வீக விஷயம்,  இத்திருக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாக இருப்பதால் வில்வ

இலைகளால் அர்ச்சனை செய்வதும் பாற்கடலில் வீற்றிருப்பதால் பால் சம்பந்தப்பட்ட நைவேத்தியங்கள் செய்வதும் சிறப்புடையதாகும்.   

     இத்திருகோவிலின் கீழ்ப்புறம் ஆஞ்சனேயர் சன்னதிக்கு பின்னால் அழகிய லெக்ஷ்மி தீர்த்தம் எனும் புஷ்கரணி அமைந்துள்ளது. இது க்ஷீர தீர்த்தம், பாற்கடல் தீர்த்தம் என

வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி சுகேது என்பவர் தனக்கிருந்த நீண்ட நாள் தலைவலியை போக்கிக் கொண்டார். இப் புஷ்கரணியில் திருமகளே நீராடி வில்வ மரத்தினடியில் தவமிருந்து திருமாலின் திருமார்பில் நீங்கா இடம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. ( இத்தகைய சிறப்பு வாய்ந்த புஷ்கரணியில், நான் சற்று நேரம் அமர்ந்து இருந்தப்போது , மனசுக்கு நிம்மதியாக இருந்தது,  ஏங்கே நிம்மதி? அங்கே எனக்கு ஒர் இடம் வேண்டும் என்று , இனி தேடி அலைய வேண்டாம், பழையகோயில்களை, தேடி கண்டு பிடித்து, அங்கு சற்று நேரம், கண்ணை மூடி உட்காருங்கள் நிம்மதி கிடைத்திடும்). ( படத்தை பாக்கவும்) 

    மூன்று இலைகளையுடைய வில்வ தளங்கள் உலகிலேயே முதன்முதலில் தோன்றிய இடம் திருலோக்கியே என்பது புராண வரலாறு கூறும் உண்மையாகும்.

திருமகள் வில்வ மரத்தினடியில் அமர்ந்து தவம் இயற்றிய காலத்தில் இட கலை,பிங்கலை,சுழிமுனை எனும் மூன்று ஸ்வாச நாளங்கள் மூன்று வில்வ இலைகளாக அமைந்து தெய்வீக சக்தியால் வில்வ தளங்களாக மாறி பூமியில் திரிதள வில்வ மரங்களாக தோன்றின என்பது புராண வரலாறு.

     ஸ்ரீ மஹாலக்ஷ்மியே இத் திருக்கோயிலின் தென் மேற்கில் தனி சன்னதி கொண்டு க்ஷீர நாயகி தாயாராக அருள் பாலிக்கிறார்.க்ஷீர தீர்த்தத்தின் கரையில் வில்வ மரத்தினடியில் அமர்ந்து தவம்புரிந்து ஸ்ரீ நாராயண பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற மஹாலெக்ஷ்மி இவர்தான் இத்தாயாரை வழிபட்டால் கருத்து வேற்றுமையினால் பிரிந்து விட்ட தம்பதிகள் ஒன்று சேர்வதுடன் மகளிர்க்கு மாங்கல்ய பலம் பூரணமாக கிடைக்கும். பால் சம்பந்தப்பட்ட பொருள்களை படைத்து வழிபடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

    மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் நின்றவண்ணம் காட்சி தருகிறார். அவருக்கு தனி சன்னதி உள்ளது. சதுர்புஜங்களைக் கொண்டு திகழும் வரதராஜரின் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ள நிலையில் ஒரு கரத்தால் அபயம் அளித்து அருள் புரிகின்றார்.வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேட திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றது.

     வௌவால் நந்தி மண்டபத்தின் வடபுறத்தில் தெற்கு நோக்கிய விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இத்தலத்தில் துர்க்கை தெற்கு நோக்கி அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும்.       

    பஞ்சபாண்டவர்கள் மகாபாரதப் போரில் போர் செய்யப் புறப்பட்ட போது தென்முக துர்க்கையை வழிபட்டதால்தான் வெற்றி கிட்டியது என்பது புராணம். தற்போது இங்குள்ள தென்முக விஷ்ணு துர்க்கையை வழிபட்டு செல்வோர்க்கு எல்லாம் வெற்றியே கிடைக்கும்.

    ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் சன்னதிக்கெதிரே கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு பருப்பு கொழுக்கட்டை நிவெதனம் செய்து வழிப்பட்டால் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷத்தன்மை நீங்கி சுகம் பெறுவர்.

       இவ்வளவு அற்புதமான, சுவாமிகளை தரிசனம் பண்ணிட்டேள் இல்லையா? இப்போது, இந்த கோயிலின் புராண வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள். 

     த்ரயம்பகேஷ்வரர் என்னும் திரைலோக்கிய சித்தர் பூலோகம், புவர்லோகம், சுவலோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் சஞ்சாரம் செய்கின்ற ஆற்றல் படைத்தவர். அவர் கல்வி , செல்வம் , வீரம் , புகழ் ,ஆரோக்கியம் , பணம் முதலான 16 செல்வங்களும் ஒருங்கே பெற்ற தலம் எங்கே உள்ளதெனவும் முக்தி , மோட்சம் , தரக்கூடிய தலம் எங்கே உள்ளதெனவும் நிலம், நீர், நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஆற்றல் எத்தகையன ? என்பதையும் கண்டறிய வேண்டி எங்கெல்லாமோ சென்று அலைந்து இறுதியில் திருலோக்கி வந்தடைந்தார். இங்கு ஸ்ரீ புரஹடவாக்கினி என்னும் யோக முறையை கைக் கொண்டு திரிந்து அலைந்த நிலைமையை மாற்றி அமர்ந்து யோகம் செய்யத் தொடங்கியதே இத்தலத்தில் தான். ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்தது இத்தலம். என்றும் திருமாலுடன் திருமகள் உறைகின்ற தலமென்றும் உணர்ந்த நிலையில் சித்தருடைய பூத உடல் மறைந்து அவர் ஜோதி மயமானதாகப் புராணம் கூறுகின்றது.

    திருமகள் எக்கணமும் திருமாலை விட்டுப் பிரியாத வரம் பெறல் வேண்டி ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடமிருந்துதிரைலோக்கிய தலம் பற்றிய மஹிமையை உணர்ந்தும் திருமால் தான் திருபாற்கடலில் வீற்றிருப்பது போல எந்தத் திருத்தலத்தில் க்ஷீராப்தி ஸயன நாராயண பெருமாளாகத் தோற்றமளிக்கின்றேனோ அவ்விடத்தில் என் நெஞ்சில் நீங்காத இடம் பெறுவாய் எனப் பணித்ததன் வாயிலாகவும், லக்ஷ்மி தீர்த்தக் கரையில் வில்வ மரத்தினடியில் திருமகள் தவம் புரியத் தொடங்கினாள் என்றும், மேற்கண்ட தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற ரிஷபாரூடர் ஆன அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசப் பெருமான் திருவருள் பெற்று ஸ்ரீலக்ஷ்மி தேவி க்ஷீராப்தி ஸயன நாராயணப் பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

    விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் திருலோக்கியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ க்ஷீராப்தி ஸயண நாராயணப் பெருமாளை தரிசிப்போருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பித்ருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள் லக்ஷ்மி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்தால் சாப விமோசனம் பெறுவர். ஸந்ததி விருத்தியாகும்.

    திருமகள், திருமாலின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருப்பதால் சொத்து, சுகம் இழந்தோர் மீளப் பெறுவர். உறக்கமின்மையும் , தீய கனவுகளும் அடி பிரதட்சணம் செய்வதன் மூலம் நீங்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். பால் தானம் செய்து வழிபடும் தாய்மார்களுக்கு தாய்ப் பால் நிறைய சுரந்து சந்ததிகள் நல் வளர்ச்சி பெறுவர்.

பிரிந்து வாழும் தம்பதியர் தொடர்ந்து வழிபாடு நடத்தினால் மனம் மாறி இணைந்து வாழ்ந்து மனச் சாந்தி பெறுவர். திருமணமான மங்கையருக்கு மாங்கல்ய தோஷம் நீங்கி சுமங்கலித்துவமும் மகப்பேறும் கிட்டும்.

    தெற்கு முக விஷ்ணு துர்க்கையை வழிபடுவோருக்கு தொழிலில் முன்னேற்றமும். காரிய சித்தியும் ஏற்படும்.

    புதிய துணியில் மட்டை தேங்காயை தட்சணையுடன் கட்டி ஸ்ரீ ஆஞ்சனேயரின் திருவடிகளில் சமர்பித்துவிட்டால் நினைத்த காரியம் கைகூடும். பிரார்த்தணை நிறைவேறிய பின்னர் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அபிஷேக ஆராதனை செய்து மூட்டையை பிரித்து புத்தாடையை அவருக்கு அணிவித்து சக்கரைப் பொங்கல் ,வடைமாலை போட்டு நிவேதனம் செய்ய வேண்டும். 

        அருமையான தரிசனம் கண்டு விட்டு, மனசில் தெய்வீக எண்ணத்தை ரொப்பிக்கொண்டு, இனி அதிக அளவில், பழைய கிராம கோயில்களை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும், நிறைய கோயிலை பற்றி புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும், கும்பகோணம் மட்டுமின்றி , தமிழ்நாட்டில், மற்ற ஊர்களுக்கும் பயண செய்து, கோயில் அனுபவத்தை உங்களோடு பகீர வேண்டும் என்று ,ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாளிடம் விண்ணப்பித்து விட்டு, நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து விட்டு,  வெளியே வந்தப்போது, நம் முகபுத்தகத்தை சார்ந்த, அருமையான மனிதர், என் சகோதரன், கும்பகோணத்தை சார்ந்த, தன் குடும்பத்தோடு , அந்த கோயிலுக்கு வந்த,  ரங்கநாதன் ராகவ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 

      அருமையான அந்த கோயிலை விட்டு, வெளியே வந்த பின், அடியேனுடைய பாதங்கள்,  அதே ஊரில் இருக்கும் , பழமை பெருமை வாய்ந்த, பல அற்புதமான, தெய்வீக விஷயங்கள் அடங்கிய , அதே ஊரில் எழுந்தருளி உள்ள, மூன்று இடங்களில் உள்ள,  சிவப்பெருமான் கோயிலை நோக்கி சென்றது.

        ( நாளை உங்களை என் பதிவுகள் மூலம் உங்களை , அந்த கோயிலுக்கு, அழைத்துச்செல்ல காத்து இருக்கேன்). 

     ஓம் நமோ நாராயணாய,

     ஓம் நமசிவாயா

     திலீப்குமார்

No comments:

Post a Comment