முகநூல் நண்பரின் பதிவு
(Ancilla Fernando)
ஓ...அமெரிக்கா - 9
எல்லா விஷயங்களிலும் ஈடுபாடும், ஆர்வமும் காட்டும் என் பெண் உணவையும் விட்டு வைத்ததில்லை. சுவைப்பதில் ஆரம்பித்த இந்த ஈடுபாடு சமைப்பதில் முடிந்தது நல்ல திருப்பம். இங்கே இருந்தபோதே அவள் நண்பர்களுடன் எங்கே சென்று நல்ல உணவை உண்டு வந்தாலும் பின்னொரு நாள் அதை என்னையும் கூட்டிப்போய் சாப்பிட வைக்கும் வழக்கம் கொண்ட அவள், நான் அமெரிக்கா கிளம்புவதற்கு முன்பே என்னிடம் அங்கே அவள் ஏற்கனவே முயன்று, அவளுக்குப் பிடித்த உணவுகளை நானும் சாப்பிட வேண்டுமென்று விரும்பியதால் எனக்கும் ஆர்வம் வந்தது.
அமெரிக்கர்களின் வழக்கமான சாப்பாடு பான் கேக் (Pan cake), பேக்கன் (bacon), சான்ட்விச் (sandwich), ஸ்க்ராம்ப்ல்ட் எக் (scrambled egg), சாஸேஜ் (sausage) இவை காலை உணவு. மதிய, இரவு உணவு பொதுவாக பர்கர் (burger), மாஷ்ட் பொடேடோ (mashed potato), கார்ண் (corn), ரிப்ஸ் (ribs) அல்லது ஸ்டேக் (steak), டாகோஸ் (tacos), சமைக்கப்பட்ட ஆஸ்பாரகஸ்(asparagus), ப்ராக்கலி அல்லது வேறு ஏதாவது காய் என்ற மாதிரிதான் இருக்கிறது. சாப்பாட்டில் ஒரு சமயத்தில் புரோட்டீன், கார்போஹைடிரேட், காய்கறி, ஏதாவது பீன்ஸ் (பயிறு) எல்லாம் இருக்கிற சமவிகித சாப்பாடாகத்தான் இருக்கிறது வீட்டில் சமைப்பது.
அவர்கள் வீடுகளில் இந்த சமையலுக்கு ஏற்றதுபோல் மூன்றடுக்கு அடுப்புகள் இருக்கின்றன. மைக்ரோவேவ் (microwave), அவன் (oven நம் கேஸ் ஸ்டவ்போல), பேக்கிங் (baking). தவிர ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் பின்புறத்தில் பார்பிக்யூ (barbecue) வேறு வைத்து சமைக்கிறார்கள். உலகத்தின் எல்லா நாடுகளிலுமிருந்து அங்கே சென்றிருக்கும் மக்களுக்காக உணவும் தயாராவதால் அநேகமாக உலகத்தின் எல்லாவிதமான உணவுகளையும் அங்கே முயற்சி செய்யவும் முடியும். சுவைக்கவும் முடியும்.
என் மகள் என்னை முதலில் கூட்டிச் சென்றது டென்னிஸ் (Denny's) என்ற உணவகத்துக்கு. அது ஸ்கில்லெட் என்ற ஹெவியான தோசைக்கல் போன்ற உலோகப் பாத்திரத்தில் (pan) சமைக்கப்பட்டு அந்தப் பாத்திரத்திலேயே ஆவி பறக்க நம் மேஜையில் சுடச்சுடப் பரிமாறப்படும். அமெரிக்கர்களின் உணவில் அசைவம் அதிகம் என்பதால் பெருவாரியான உணவு வகைகள் அசைவம் கலந்ததுதான். ஸ்கில்லெட்டில் அத்தனை வகை. அதில் இருந்த உருளைக்கிழங்கு தனி சுவை. அமெரிக்க உணவுகளில் உபயோகப்படுத்தப்படும் மசாலாக்களும், மிளகாய், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய் வகைகளும் பிரத்தியேகமாக ஒவ்வொரு நாட்டிலிருந்து வரவழைக்கப்படுவதால் சுவையும் வித்தியாசமாக இருக்கிறது. அரிசி பெரும்பாலும் மெக்ஸிகோவிலிருந்து வருகிறது.
போன புதிதில் எனக்கு ஆர்டர் செய்யத் தெரியாததால் என் மகளே எனக்கும் ஆர்டர் செய்ய, ஆர்டர் எடுக்க வந்த பெண் என்னை 'ஊருக்குப் புதுசா?' என்பதுபோலப் பார்த்து லேசாகப் புன்னகைத்துவிட்டுச் சென்றாள். பின்னே? அவர்கள் இங்கே வந்தாலும் அப்படித்தானே?
எனக்கோ மெனு கார்டைப் பார்த்தால் வராத சந்தேகம் எல்லாம் வந்தது. "முட்டையில் சன்னி சைட் அப் என்றால் என்ன?" என்று என் மகளைக் கேட்டேன். அவள் "மஞ்சள் கரு மேலே இருக்கும் அம்மா" என்றாள். ஆச்சரியம், அந்தப் பெண் கொண்டுவந்த முட்டையில் இரண்டு மஞ்சள் கருக்கள் முழுதாக மேலே இருந்தன. இப்படி ஆரம்பித்த என் ரெஸ்டாரன்ட் பயணம், நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டு கடைசியில் ஒரு நாள் நானே "சன்னி சைட் அப்" என்று ஆர்டர் செய்யும் அளவுக்கு முன்னேறினேன்.
சாப்பிட்ட உடனேயே ஸ்கில்லெட்டின் உடனடி ரசிகையாகிவிட்ட நான் அதற்கப்புறம் எப்போது வெளியே சாப்பிடலாம் என்றாலும் "டென்னிஸ்" என்பதும், என் மகளின் நண்பர்கள் சிரிப்பதும் வாடிக்கையானது. ஆனால் என் மகளோ நான் மற்ற வகை உணவுகளையும் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்ததால் 'சூஷி' (Sushi) உணவகத்துக்குக் கூட்டிச் சென்றாள்.
ஜப்பானிய உணவகமான சூஷியில் விதவிதமான வண்ணங்களில் அநேகக் கடல் உணவுகள், தேங்காய்ப்பாலும் பச்சைக் காய்கறிகளும் கலந்து செய்யப்பட்ட சாத, குழம்பு வகைகள் என்று வித்தியாசமான சுவையிலும், வகையிலும் உணவுகள். உணவு அதிகம் சமைக்கப்படாமல், தேவையான நேரம் மட்டுமே சமைக்கப்படுவதால் நிறம், சுவை, சத்துக்கள் மாறாமல் நம் மேஜையை வந்து சேர்கின்றன. பிற ஆசிய நாடுகளின் உணவு வகைகள் ஏறக்குறைய நம்போலத் தோன்றினாலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அரிசி சாதம் கிடைப்பது இங்கே கூடுதல் வசதி.
இன்னொரு என்னைக் கவர்ந்த உணவு ஸ்டேக். பார்பிக்யூவில் செய்யப்படும் அந்த அசைவ உணவு ஒரு வித்தியாசமான தயாரிப்பு. அதிலும் நாங்கள் டின்னருக்காக சென்றிருந்த Outback Steakhouse என்ற ஆஸ்திரேலிய ரெஸ்டாரன்டின் ஸ்டேக் மிகப் புகழ் பெற்றது. ஆஸ்திரேலியர்களும் நிறப் பாகுபாடு கொண்டவர்களாகக் கேள்விப்பட்டிருந்ததால், ஓரளவு அசௌகரியத்தோடே சென்றிருந்த எங்களை, அங்கேயிருந்த பணியாளர்கள் மிக மிகப் பணிவுடனும், மரியாதையுடனும், புன்னகையுடனும் அடிக்கடி வந்து "உங்களுக்கு ஏதாவது தேவையா?" என்று கேட்டுக் கவனித்துக்கொண்டே இருந்தது எங்களுக்குக் கிடைத்த ஆனந்த அதிர்ச்சி. உறுத்தாத வெளிச்சத்தில், மெல்லிய சத்தத்தில் கேட்டுக்கொண்டிருந்த மென்மையான பின்புலப் பாடலில் அந்த சுவையான சாப்பாடு கனவுபோலத் தோன்றியது. மறக்க முடியாத Steak House.
இதைப்போல இன்னொரு நாள் நாங்கள் சென்றது Genghis Grill என்ற மங்கோலியன் பார்பிக்யூ ரெஸ்டாரென்ட். இங்கே நமக்குத் தேவையானதை நாமே தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் சமைத்துத் தருகிறார்கள். வரிசையாக வைத்திருக்கும் காய் வகைகள், அசைவ வகைகள், மசாலா வகைகள், சாஸ் வகைகள், ஸ்பெஷல் எண்ணெய் வகைகள், இவற்றிலிருந்து நமக்குப் பிடித்ததை, நாம் ஆர்டர் செய்த அளவுக்குத் தகுந்த கிண்ணம் கொள்ளும் அளவுக்கு எடுத்துக்கொண்டு, அத்துடன் நூடுல்ஸ் சேர்த்துக் கொடுத்தால், சுற்றிக்கொண்டிருக்கும் ஒரே பெரிய சூடான கல்லில், செஃப்கள் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் stir fry என்ற முறையில் சமைத்து (கரண்டிகளால் அவர்கள் மாற்றி மாற்றி rhythmic ஆகப் புரட்டும்போது நம் ஊரில் கொத்துப் பரோட்டா செய்வதுபோல் ணங், ணங்கென்று சத்தம் வருகிறது), சுடச்சுட நம் அளவுப் ப்ளேட்டில் கொடுக்கிறார்கள். உணவின் அளவு small, medium, large என்று இருக்கிறது. விலையும் அதற்கேற்றாற்போல.
என் மகளுக்குப் பிடித்த Chipotle என்ற மெக்ஸிகன் க்ரில்முறை ரெஸ்டாரன்ட் இயற்கை மற்றும் ஆர்கானிக் முறைகளில் விளைவிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட tacos, burritos உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றது. ஒரு ரகசியம்! எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கொஞ்சம் புளிப்பு சுவை அதிகம்போலத் தோன்றியது. அதனால் "சிப்போட்லே போகலாமா?" என்று கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லிக் கட் அடிப்பேன். ஒருநாள் என் மகள் "ஏம்மா? உங்களுக்குப் பிடிக்கலையா?" என்று என்னை நேரடியாகக் கேட்டபோதுதான் உண்மை வெளிவந்தது. 😀😀
இப்படி அமெரிக்கன் உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே இருந்ததில் ஒரு நாள் நம் நாட்டு உணவு சாப்பிட ஆசை வந்தது. முதலில் டெல்லி பேலஸ் என்ற ரெஸ்டாரன்ட்டுக்கும், இன்னொரு நாள் கோஹினூர் என்ற ரெஸ்டாரென்ட்டுக்கும் சென்று இந்திய உணவு வகைகளை ஒரு கை பிடித்தோம். இங்கே ஒரு பெரிய ஆறுதல் சைவ உணவுகளும் கிடைப்பது. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், நான் இந்திய உணவகங்களில் அமெரிக்கர்களையும், அமெரிக்க உணவகங்களில் இந்தியர்களையும் அதிக எண்ணிக்கையில் பார்த்ததுதான்.
இவை தவிர பக்வான் என்ற இந்திய ரெஸ்டாரென்டின் பிரியாணி ஏறக்குறைய நம் பிரியாணிபோல மசாலாவுடன் மணக்கிறது, ருசிக்கிறது. அதேபோல Papa's சிக்கன் இங்கே கிடைக்கும் KFC சிக்கன்போல சரியான விலையில் சுவையாகக் கிடைக்கிறது. கையில் பணமில்லாத, சமைக்க முடியாத தேர்வு நேரங்களில் மாணவர்களை சப்வேயின் விலை குறைவான, வயிற்றைப் பாதிக்காத சான்ட்விச்களும், பர்கர்களும் காப்பாற்றுகின்றன. Star Bucks காஃபி பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
அமெரிக்காவில் சாப்பிடத் தயாராகும் உணவு வகைகளையும், அதற்காக உலகம் முழுவதும் தயாராகிக் கொள்முதலாகும் ingredients பற்றியும் தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு உணவகத் தொழிற்சாலை (food chain industry) பிரம்மாண்டமானது, மிக மிக நுணுக்கமானது. ஆனாலும் இங்கே மத்யமரில் ஆறு மாதங்களாக மட்டுமே இருக்கும் நான் படித்துக் கொண்டிருக்கும் பல வீட்டு உணவு வகைகள் நானே இதுவரை கேள்விப்படாதது. மற்ற நாடுகள் செய்துகொண்டிருக்கிற அளவு நாம் நம் உணவு வகைகளை உலகுக்கு அறிமுகம் செய்து சந்தைப் படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment