Saturday, February 13, 2021

எல்லாமே கனவாக போயி விட்டது

 சுப்பு .. ஒரு மரக்கா உளுந்து எடுத்து வெச்சுடு. நான் அஞ்சலை வந்தா ஏந்தரத்த தொடைச்சுட்டு அரைச்சுட சொல்றேன். பக்கிரி வந்தான்னா ஏந்தரத்துக்கு ஒரு புடி சீவி அடிச்சுட சொல்லு.

ஏய் குட்டி இங்க வாடி..நீ போய் அந்த கோடியாத்து கோமு, பக்கத்தாத்து வேதா, பிச்சுமணியாத்துக்கு போய் அவனோட அத்தை எச்சுமி எல்லார்கிட்டேயும் எங்காத்துல எங்க அத்தை அப்பளாத்துக்கு போட்டுருக்கா, மத்தியானத்துக்கு மேலே ஒங்களயெல்லாம் கெளம்பி வர சொன்னானு சொல்லு. கொழவி மட்டும் எடுத்துண்டு வர சொன்னான்னு சொல்லிடு. அப்பளாக் கட்டை நம்மாத்துலையே இருக்குன்னு சொல்லு.

ராத்திரி எல்லாருக்கும் பலகாரம் நம்மாத்துலையேன்னு சொல்லிடு.

அப்படி சுப்பு எல்லாருக்கும் பலகாரத்துக்கு ரவைய நன்னா வறுத்து வெச்சுடு.

ஒம்பொண்ணு பெரியவ எங்கே..?

தோ இருக்கேன் அத்தை.

வாடி இங்கே. என்னடி மேலாக்கு போட்டுண்டிருக்கே. பப்பரக்கன்னு காட்டிண்டு. நன்னா இழுத்து சொருகுடி மொதல்ல. போ..போய் கொல்லவேலில பெரண்ட படந்திருக்கோல்லியோ அதுலேந்து ஒரு கட்டு அளவுக்கு பரிச்சிண்டுவா. பாத்து பத்தரமா பறி. பூச்சி பொட்டு இருக்கப் போறது. அதுல கொஞ்சம் ஒங்கம்மா  ஒன்ன பெத்த வயத்துல வெச்சு கட்டிண்டுட்டு பாக்கிய அப்பளாத்து மாவுக்கு அரைச்சு வெக்கட்டும்.

சுப்பு அந்த வெளக்கெண்ணைய எடுத்து வெச்சுடு. அப்பறமா ஒரு கட்டி பெருங்காயத்த எடுத்து கொஞ்சம் தண்ணீல ஊற வெச்சுடு. மேலே சம்படத்துலேந்து சீராம் கொஞ்சம் எடுக்கணும். அப்பளா சோடா இருக்கா. கல்லுப்பு எங்கே ஜாடில இருக்கா..? இல்லேன்னா சின்னவன போய் முனுசாமி கடைல வாங்கிண்டு வர சொல்லு.

அப்பறமா அஞ்சலைகிட்டே சொல்லி அந்த ஓலைப்பாய எடுத்து கணத்தடில எடுத்துண்டு போய் நன்னா சவுக்காரத்த போட்டு அலம்பி காய வெக்க சொல்லு.

என்ன காதுல விழுந்துதா..சும்மா மசமசன்னு நிக்காதே.

டி..மறந்து போயிட்டேன் பாத்தியா. அவாளுக்கெல்லாம் நாக்கு கொஞ்சம் நீளம். நன்னா வக்கனையா சாப்படனும். இலுப்பச்சட்டில ரோபச்டா காபிகொட்டைய நன்னா வருத்துடு. அந்த காபிகொட்டை அரைக்கற மிஷின எடுத்து தொடைச்சு அதுல அரைச்சுடு. பால்காரி பிச்ச வீட்டுல போய் ஒரு நாலாழாக்கு பால் வாங்கிண்டு வர சொல்லு. அப்பிடியே கொஞ்சம் நெல்லுருத்த மாவும் செஞ்சு வெச்சுட்டோம்னா வாயலுத்து வந்தா சாப்டுப்பா.

அப்பறம் காமாக்ஷியாத்துக்கு அப்பளாம் இட போனோம்,  ஒண்ணுமே தறேலேன்னு எல்லார்கிட்டேயும் போய் பிலாக்கணம் பாடிடுவா.

எல்லாமே      கனவாக     போயி   விட்டது.......எப்பிடி   இருந்த      சமூகம்        உறவுகள்........சினேகிதங்கள்...............எல்லாம்       எங்கே       போச்சு??

மீள்.பதிவர்.......ஸ்ரீ  ராமனாதர்........திரு    குடந்தை....

No comments:

Post a Comment