Saturday, February 13, 2021

அது ஒரு கனாக் காலம்.

 முன்னொரு காலத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திப்பிராஜபுரத்தில் எங்களுக்கு ஒரு அரிசி மில் இருந்தது. நாங்கள் அப்போது சில சமயம் கும்பகோணம் சென்று வருவோம். 

இதை எழுதியது நானல்ல. யாரென்றூ தெரியவில்லை.

40 வருடங்களுக்கு முன் காவேரி பற்றிய சிறு தகவல்.மலரும் நினைவுகள். 
கும்பகோணத்தின்_காவேரி!

கடந்த மாதம் மேட்டூர் அணை திறந்து குடந்தைக்கு வந்து சேர்ந்தது என செய்தி. காவிரியைக் காவேரி என்று அழைத்தால்தான் கும்பணோம் வாசிகளுக்கும திருப்தியாகும்.

காவேரியில் தண்ணீர் வந்துவிட்டதாம் என குடந்தையே சந்தோஷம்படும்.
திஜரா போன்ற படைப்பாகளின் விவரிப்பு அப்படியே மன வெளியில் வரும்.

கும்பகோணத்தில் சக்கர படித்துறை அதற்கு அடுத்த தெருவில் ஆர்எஸ் படித்துறை சென்னை போன்ற பரபரப்பு வாழ்க்கை அங்கு இல்லை
காலை 7 மணிக்கு துவைக்க வேண்டிய துணிகளோடு ஒரு பட்டாளமே கிளம்பும்

பெட்டிக்கடையில் 25 பைசா (ஊரில் காரூவா என்றுதான் அழைப்பார்கள்) மதிப்புள்ள நீலக்கட்டி சவுக்காரம் ( இன்று வரை நடிகை சௌகார் ஜானகிக்கும் சோப்புக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது புரியாத புதிர்)
அதன் பிறகு வந்ததுதான் பவர் லைட் மற்றும் பொன்வண்டு சோப்புகள்
முதன்முதலாக சிக் ஷாம்பூ வந்தபோது அது ஒரு சின்ன பிளாஸ்டிக் தலையணை போல இருக்கும் விலை 25 பைசாதான் மஞ்சள் கலராக இருக்கும் ஷாம்புவில் முட்டை கலந்திருப்பதாக நம்பி ஆசாரமான பையன்கள் யாரும் அதை வாங்க மாட்டார்கள்

90 சதவீத மக்கள் உடம்புக்கு உபயோகிக்கும் சோப்பானது செங்கல் கட்டி சைஸில் இருக்கும் ரோஸ் கலர் லைஃப் பாய் தான் அதுகூட யாரிடமும் முழுமையாக இருக்காது ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் என்றால் தோசை திருப்பி வைத்தது போல சரி பாகமாக கட் பண்ணிக் கொடுத்து விடுவார்கள் 

ஆண்கள் வீட்டில் இருந்தே எண்ணெய் தேய்த்துக் கொண்டு போகிற வழியில் 10 பைசா புலி மார்க் சீயக்காய் தூள் வாங்கிக்கொண்டு காவிரிக்கு செல்வார்கள். 

பெண்கள் வீட்டிலிருந்து தலைக்கு சோற்றுக் கஞ்சி அல்லது செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து அல்லது ஊற வைத்த வெந்தயத்தையோ அரைத்துத் தடவிக்கொண்டு குழந்தை குட்டிகளை கூட்டிக்கொண்டு நதிக்கு வருவார்கள்

இதில் குறிப்பிட்டு ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால் 95% மக்கள் காலில் செருப்பு இல்லாமல் தான் ஆற்றுக்கு வருவார்கள்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல காவிரி ஆறு கண்ணில் படுவதற்கு முன்பே ஹோ என்ற ஆர்ப்பரிக்கும் இரைச்சலோடு மற்றும் தாளகதி லயத்தோடு கூடிய துணி துவைக்கும் சத்தம் நம்மை வரவேற்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கென்று தனித்தனிப் படித்துறைகள் உண்டு காவேரி அடைந்த உடனே யாருக்கும் குளிக்க மனது வராது சிறிது நேரம் படியில் அமரவேண்டும்

குழந்தைகளில் 75 சதவீதம் பேர் அங்கு சென்றவுடன் கைகளால்தான் பல் தேய்ப்பார்கள் முக்கியமாக இந்தியா இலங்கை பர்மா மலேசியா ஆகிய நாடுகளில் தீவிரமாக விற்பனையாகும் சுவையான மற்றும் ஹார்லிக்ஸ் போல அப்படியே சாப்பிடலாம் எனக் கூறத் தோன்றும் கோபால் பல்பொடிதான்  நடுத்தர மக்கள் கோல்கேட் பல் பொடி வயதானவர்கள் வாயில் வைத்த உடனே அங்கமெல்லாம் எரியும் 1431 பயோரியா பல்பொடி இப்பொழுது சொல்வதுபோல பல் தேய்த்து 6 மணி நேரம் அந்த எரிச்சல் இருக்கும் இன்னும் சில பேர் உமிக்கரி மற்றும் அங்கு சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு செங்கலை படிகளில் தட்டி தூளாக்கி அதை வைத்தும் தேய்ப்பதுண்டு

அதன்பின் குளியலுக்குப் பிள்ளையார் சுழி போடுவதுபோல படித்துறையில் இடம்பிடித்து தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டு வந்த துணிகளை நனைத்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு, குளியலைத் தொடங்குவார்கள்.

பெண்களெல்லாம் படித்துறையிலேயே நீச்சலடிக்க ஆண்கள் பாலத்தில் சென்று நின்று ஏதாவது ஒரு பஸ் வரும் போது நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து தண்ணி எம்பல் என்கிற ஒரு குறிப்பிட்ட முறையில் கால்களை சப்பணமிட்டு கொண்டு கைகளால் முகத்தை மூடி 45 டிகிரி ஆங்கிளில் குதித்து ஆற்றுத் தண்ணீரானது அப்படியே மேலெழும்பி பஸ்சுக்குள் உட்கார்ந்தவர்களை நன்னீராட்டுவதில் அவர்கள் வாயினால் கட்டைல போறவனே என்று ஆசீர்வாதம் வாங்குவதில் அலாதி இன்பம்

அதன்பின்னே பாலத்தின் அடியில் கர்டர் என அழைக்கும் அந்த இரும்பு தண்டவாளங்கள் தோன்ற அமைப்பை பிடித்து தொங்கிக் கொண்டே அக்கரைக்குச் சென்று திரும்பி கரைக்கு வருவது வாலிப சாகசம்
குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது குளிப்பார்கள்

காவிரித் தாயே வந்து கைகூப்பி நம்மைக் கரை ஏற்றும் வரை கண்கள் சிவக்க தண்ணீரில் ஊறிக் கொண்டிருப்பது பழக்கம்.

இதைத் தவிர, படித்துறையில் ஒவ்வொரு மண்டபங்களின் மீதும் ஏறி அத்துமீறி அமர்க்களமாக அங்கிருந்தே டைவ் அடிப்பது உண்டு
இதில் சில நண்டு சிண்டுகள் பிறந்த மேனியாக ஆட்டம் போடுவதும் உண்டு

எல்லாம் முடிந்து துணி துவைத்து காய்ந்து போன உடலை மறுபடியும் முங்கி புத்துணர்ச்சி ஆக்கிக்கொண்டு கரையில் உள்ள ஏதாவது ஒரு பிள்ளையார் கோவிலில் தோப்புக்கரணம் போட்டு அங்கிருக்கும் விபூதியை அளவுக்கு அதிகமாக எடுத்து பூசிக்கொண்டு ஊர் வம்பு பேசிக்கொண்டு நல்ல பசியோடு வீடு வந்து சேருவார்கள். 

அது ஒரு கனாக் காலம்.

No comments:

Post a Comment