🌶🌶மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம்..(v.v) பகுதி 2...
முதலில் தலைப்பு...பயணம் முழுவதும் குண்டூர் மாவட்டத்தை ஒட்டி அமைந்ததாலோ குண்டூர் மிளகாய் சந்தை என்பதாலோ வழியெங்கும் பச்சை மிளகாய் பயிர்களிடையே பருத்தி காய்த்து வெடித்து சிரிக்கிறது.முற்றிய மிளகாய் செடிகளில் சிவப்பு மிளகாய் ,வெள்ளை பருத்தி,இளம் பச்சை மிளகாய் என நம் தேசியக்கொடி நினைவு. கிருஷ்ணா நதிக்கரையோரப்பயணத்தில் நெற்பயிர்கள் மிக அரிது. காரணம் விவசாய நண்பர்கள் கூறவும்..விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திக்கொண்டு அருள்புரிகிறார் மகாவிஷ்ணு. இக்கோயிலுக்கு அருகில் மலை மீதுள்ள குகை ஒன்றில் ஸ்ரீ நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரே ஸ்ரீ பானக நரசிம்மர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
பாரதத்தில் உள்ள மலைகள் மகேந்திரம், மலையம், ஸஹ்யம் சுக்திமான், ருக்ஷம் விந்தியம் பாரியாத்ரம் என்ற சப்த குல பர்வதங்கள் என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியாகிய மகாலட்சுமி அமிர்தத்தை விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்தகிரி, தர்மாத்ரி, தோத்தாத்ரி, முக்தியாத்ரி, சபலதா என்பவை அதன் மற்றபெயர்களாகும்.
மங்களகிரி மலையில் மேய்ந்துவந்த பசு ஒன்று தினமும் மாலையில் பால் இல்லாமல் திரும்பியதை கண்ட பசுவின் சொந்தக்காரன் சந்தேகித்து பசுவை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தான். அச்சமயம் ஒருநாள் இரவும் பகலும் கூடும் அந்தி வேளையில் நிழல் உருவம் ஒன்று அப்பசுவின் பாலை அருந்திவிட்டு அருகிலிருந்த குகையில் சென்று மறைவதைக் கண்டான்.
அன்று இரவு அவனது கனவில் ஸ்ரீ மகாலட்சுமி சமேதராய் ஸ்ரீ நரசிம்மர் காட்சி தந்து தான் நொமுச்சி என்ற கொடிய அசுரனுக்காக குகையில் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார். மறுநாள் அவன் அந்த குகைத் துவாரத்தில் பசுவின் பாலை ஊற்றினான். ஆனால் அதிலிருந்து வழிந்துவிட்ட பாதி பாலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.
அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசன் இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீ நரசிம்மருக்கு குகைமீது கோயில் எழுப்பியதாக மங்களகிரி தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மங்களகிரி மலை எண்ணூறு அடி உயரம் கொண்டது. நானூறு படிகள் ஏறினால் நரசிம்ம தரிசனம் கிடைக்கும். அடிவாரத்தில் பிரம்மராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும் அருகில் உள்ள கருடாழ்வாரையும் அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரையும் ( இக்கோயிலில் 12 மணிக்கு அன்னதானம் உண்டு) தரிசித்து விட்டு மலை ஏறத் தொடங்கலாம்.
ஐம்பது படிகள் ஏறியதும் பால்செட்டு வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்கலாம். ஒரு சமயம் சர்வ சுந்தரி என்ற அப்சரஸ் பெண் கொடுத்த சாபத்தினால் நாரத மஹரிஷி பாலவிருட்சமாக மாறி நின்றார். வேங்கடேஸ்வர சுவாமி அருகே வளர்ந்த அந்த பால்செட்டு செடி பிற்காலத்தில் மலையடிவாரத்தில் கருடாழ்வார் சன்னதி அருகில் நடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் இந்த பால் விருட்சத்தை வலம் வந்து பழங்களை வினியோகித்தால் அவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது
நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.55 கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று..விஜயவாடா திரும்பும் வழியில் உண்ட வல்லி என்ற இடத்தில் தொல்துறை கட்டுப்பாட்டில் குடைவரைக்கோயில் காணலாம்..கொண்டபல்லி என்ற இடம் மர பொம்மைகளுக்கு பெயர் பெற்றது.....இனி அமராவதி...பயணம் தொடரும்


No comments:
Post a Comment