108 திவ்யதேசங்கள் - பதிவு 73 🌹🌹🌹
பார்த்தசாரதி பெருமாள் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தைப் பற்றி அறிந்துள்ளோம். கேரளாவில் உள்ள பார்த்தசாரதி திருக்கோவில் பற்றி நாம் அறிந்திடலாமா?
அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலை உள்ள அற்புதத் திவ்யதேசம்!!! பிரம்மா, அர்ச்சுனன் தவம் செய்த மகிமை வாய்ந்த திவ்யதேசம்!!!
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோவில் :-
திருவாறன் விளை (ஆரமுளா)
மூலவர்: திருக்குறளப்பன், சேஷாசனர் (பார்த்தசாரதி)
தாயார்: பத்மாஸனி நாச்சியார்
உற்சவர்: திருக்குறளப்பன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வாமன விமானம்
தீர்த்தம்: வேதவியாச சரஸ், பம்பா தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பத்மாசன நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ
ஊர்: ஆரமுளா, கேரளம்
🌺🌺 தலவரலாறு :-
உலகம் முழுதும் நிறைந்துள்ள ஒப்பற்ற மூர்த்தியாம் இறைவன் நாராயணன், திருக்குறளப்பன் என்ற திருநாமத்தில் காட்சி தந்து அருள்கிறார்.
பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர் புரிய நினைத்தான் கர்ணன். அந்த நேரத்தில் அர்ஜீனன் கர்ணன் மீது அம்பெய்தியதால் இறந்து போனான்.
இவ்வாறு ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த கர்ணனை கொன்றது அர்ச்சுனனுக்கு நியாயமாகப் படவில்லை. யுத்த தர்மத்தின்படி இது பெரும் பாவம் என்றும், அதிலும் தன் போன்றோர் செய்யத்தக்க காரியமென்றும் பெரிதும் வருந்தினான் அர்ச்சுனன்.
பஞ்ச பாண்டவர்கள் ஒருமுறை கேரள பகுதிக்கு வந்த போது, ஒவ்வொருவரும் ஒரு பெருமாள் தலத்தை புதுப்பித்து வழிபாடு செய்தனர். இதில் அர்ச்சுனன் இத்தலத்தை புதுப்பித்து வழிபாடு செய்ததாகவும், இத்தலத்தின் அருகில் இருந்த வன்னி மரத்தில் தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் புராணம் கூறுகிறது. இந்த வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து விற்கிறார்கள்.
போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால், தன் மன நிம்மதிக்காகவும், போரில் பிற உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும், அர்ச்சுனன் இத்தலத்தில் தவம் செய்ததாகவும், இவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பார்த்தசாரதியாகவே அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம்.
🌺🌺 பிரம்மா தவம் செய்யக் காரணம் :-
இத்தல பெருமாளை வேதவியாசர், பிரம்மா ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். ஒரு முறை பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். வேதங்களை மீட்டுத் தரும்படி பிரம்மா பெருமாளை வேண்டினார்.
பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத்தந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாகக் கூறுவர்.
🌺🌺 மங்களாசாசனம்:-
"ஆகுங்கொல் ஐயமொன்றன்றி அகலிடம் முற்றவும்
ஈரடியே ஆகும் பரிசு
நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும் மாகம்
திகழ் கொடிமாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை மாகந்த நீர் கொண்டு தூவி
வலஞ் செய்து கை தொழக்
கூடுங் கொலோ!!!"
- நம்மாழ்வார்.
நம்மாழ்வார் இத்தலத்தில் 11 பாசுரங்கள் பாடியருளியுள்ளார்.
🌺🌺 வழித்தடம் :-
செங்கணூருக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செங்கணூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆரமுளா என்றால் மட்டுமே இங்குள்ளவர்களுக்குத் தெரிகிறது.
அருள்மிகு திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு பத்மாஸனி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோவில் - திருவண்வண்டூர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment