Saturday, February 13, 2021

மிளகாய் பயிர்களின் நடுவில் ஓர் ஆன்மீகப்பயணம் பகுதி 6…

🌶🌶🌶🌶🌶மிளகாய் பயிர்களின் நடுவில் ஓர் ஆன்மீகப்பயணம்..(v.v) பகுதி 6…

மட்டபல்லி. வேதாத்ரி தரிசித்து மீண்டும் ஜக்கையா பேட் வந்தோம்.5 மணி...காலை முதல் எதுவும் சாப்பிடாத்தால் ஓட்டலில் இட்லி கேட்டோம்.தொட்டுக்கொள்ள கொத்துமல்லி சட்னி நிறத்தில்  ஒரிஜினல் பச்சைமிளகாய் சட்னி..மனைவி வெறும் இட்லியை என்னை முறைத்துக்கொண்டே விழுங்கினாள்..எனக்கு வாயில் வைத்தவுடன் காது வரை ஜிவ்வென்ற உணர்வு..

கொடாட் என்ற இடத்திற்கும் அங்கிருந்து ஹுசூர் நகருக்கும் பஸ்..ஹுசூர் நகரிலிருந்து மட்டபல்லி மீண்டும் 25 கிமீ ஷேர் ஆட்டோ ( மொத்தத்தில் அன்று 100 கிமீ ஷேர் ஆட்டோ ..கின்னஸில் இடம்பெறுமா?,) ஒரு வழியாய் இரவு 8 மணிக்கு மட்டபல்லி போய் முக்கூர் டிரஸ்ட மாமிமூலம் ரூமும் புளியோதரை ததியன்னமும் கிடைத்தது..

100 கிமீ ஷேர் ஆட்டோ உடம்பு வலிக்கு நல்லதூக்கம் என நான் திட்டம் போட .மறுநாள் விடிகாலம் 4 மணி திருமஞ்சனம் சேவிக்க மாமி சொன்னதாய் மனைவி 3 மணிக்கு அலாரம் வைத்த கொடுமையை என்னென்பது...

 எனினும் தீர்த்தமாடி திருமண் தரித்து மனைவியுடன் கோயில் சென்றேன்..

அந்த தொலைதூர கிராமத்திலும் பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே படுத்திருந்து கவசம் தரியாது திருமஞ்சனத்திற்கு முன் சுயம்பு நரசிம்மரை தரிசிக்க கூட்டமாய் திரண்டிருந்தனர்.இந்த நரசிம்மர் ஒரு அடி உயரத்தில் பாறையில் சுயம்பு வடிவில்.. கருவறை குகை போன்ற அமைப்பில் உள்ளது.

 நுழைவு மேல்வாசலில், லட்சுமி நரசிம்மர் சுதைச்சிற்பமும், கஜலட்சுமி சிற்பமும் உள்ளன. கருவறையின்  மேல்பகுதி பாறையால் ஆனது. எனவே, குனிந்தபடிதான் கருவறைக்குள் செல்ல முடியும். மூலவர் யோகானந்த நரசிம்மர் மேலுள்ள பாறை, ஆதிசேஷனைப் போல உள்ளதால், பாம்பு குடைபிடிப்பது போலத் தெரிகிறது. பத்மாசனத்தில் அமர்ந்துள்ள நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் இடதுகையை மூட்டுப்பகுதியில் வைத்துள்ளார். கீழ் வலதுகை மறைந்திருக்கிறது. இடதுபுறம் அலங்கரிக்கப்பட்ட மூன்று திருநாமங்களும், இரண்டு கண்களும் உள்ளன. இதை நரசிம்ம பக்தனான பிரகலாதனின் வடிவம் என்கின்றனர்.

நரசிம்மரின் திருவடியில் சக்ரி என்ற பக்தர் ஒரு அடி நீள செவ்வகப் பாறை வடிவில் உள்ளார். தனக்கு முக்தி கிடைக்க பெருமாளின் திருவடியை சரணடைந்தவர் இவர். எனவே, தான் வேறு, அந்த பக்தன் வேறல்ல என்பதை எடுத்துக்காட்ட பெருமாள் அவனை தன் காலடியில் பாறையாக வைத்துக் கொண்டார். இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

நரசிம்மருக்கு அருகில் ஒன்றரை அடி உயர லட்சுமி தாயார் தாமரை மலரில் அமர்ந்துள்ள சிற்பத்தை தரிசிக்கலாம். மற்றொரு லட்சுமி சிற்பமும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிற்பங்கள் தெளிவாக இல்லை. எனவே, 1975ல், உலோகத்தாலான ராஜ்யலட்சுமி தாயார் சிற்பம் வைக்கப்பட்டது. ராஜ்யம் ஆள்பவள் என்பதால் அவளது சிரசில் மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் மற்றும் உற்சவர் சிலைகள் சுவாமியின் முன் உள்ளன. சுவாமியின் வலதுபுற பாறையில் 12க்கு பதிலாக 11 ஆழ்வார்களின் சிற்பங்கள் மட்டும் உள்ளன. இதில் ஏழு ஆழ்வார்கள் மேற்காகவும், நால்வர் கிழக்காகவும் உள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இருளில் மறைந்திருக்கலாம் எனச் சொல்கிறார்கள். கருவறை முன்புள்ள முக்தி மண்டபத்தில் 21 தூண்கள் உள்ளன. பொதுவாக நரசிம்மர் முன் கருடன் காட்சி அளிப்பார். 

இங்கு கருடனுடன் ஆஞ்சநேயரும் தனி சந்நதியில் இணைந்திருக்கிறார். அழகான ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முக்தி மண்டபத்தின் இடப்பகுதியில் கோதாதேவி (ஆண்டாள்) சந்நதி, பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆசார்யலு சந்நதிகள் உள்ளன. மனம் குளிர தரிசித்து வெளிவந்தால் நதியின் அழகிய பிரபாகம்...விடியற்காலை என்பதால் நீராடாதது ஏமாற்றம் தந்தாலும் நரசிம்மரின் அருட்பார்வை பெற்ற பரவசம் நிறைவை தந்தது... தொடரும்..(வாடபல்லி..)





No comments:

Post a Comment