Saturday, February 13, 2021

மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம் பகுதி 5

 🌶🌶🌶🌶🌶மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம் பகுதி 5

வேதாத்ரி நரசிம்மர்:

வேதாத்ரி, வேதஸ்ச்ருங்கம், நிகமாத்ரி, வேதகிரி என்றெல்லாம் சொல்லப்படும் இந்த மலைக் கோயிலின் நாயகன் யோகா நந்தப் பெருமாள். நான்மறைகளும் மலையாகி அவற்றால் போற்றப்படுபவனே இந்த பெருமாள். தாயார் ராஜ்யலட்சுமி. அருகில் உள்ள நதிக்குள் பெரிய சாளக்கிராம மூர்த்தியிருப்பதாக ஐதீகம்.சோமாசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். இதனால், படைக்கும் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்த பிரம்மா, ஸ்ரீமந் நாராயணனிடம் முறையிட்டார். பெருமாள் மச்சாவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று சோமாசுரனை அழித்து, வேதங்களை மீட்டு வந்தார். 

அவை மனித வடிவில் தோன்றி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தன. தங்கள் இடத்தில், பெருமாளும் உடன் எழுந்தருளவேண்டும் என வேண்டுகோள் வைத்தன. நரசிம்ம அவதார காலத்தில் இரண்யனை அழித்த பிறகு, அங்கு வருவதாகவும் பெருமாள் உறுதியளித்தார். வேதங்கள் கிருஷ்ணவேணி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம மலையில் தங்கின. அவர்களைப் போலவே கிருஷ்ணவேணி தானும் பெருமாளை தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தாள். வேதங்களும், கிருஷ்ணவேணியும் சில யுகங்களாக தவமிருந்தன. 

நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், தான் ஏற்கெனவே உறுதியளித்தபடி இரண்யனை அழித்த பிறகு அங்கு வந்தார். வேதங்கள் தங்கிய இடமாதலால் வேதாத்ரி என்று பெயரிட்டு அங்கேயே தங்கினார். 

அவரது உக்ரம் தாங்க முடியவில்லை. எனவே,அவரை “ஜ்வாலா நரசிம்மர்’ என்றனர். இதன் பிறகு, பிரம்மா சத்தியலோகத்தில் இருந்து வேதாத்ரிக்கு வந்தார். வேதங்களை தன்னுடன் அழைத்துச் செல்லும்போது, கிருஷ்ணவேணி நதியில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராமத்துடன் திரும்பினார். ஆனால், அந்தக் கல்லின் உக்ரத்தை தாளமுடியாமல், மீண்டும் கிருஷ்ணவேணி நதியிலேயே வைத்தார். பிற்காலத்தில், தசரதருக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்க முனிவர் வேதாத்ரி வந்தார். அவர் அங்கிருந்த நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில், மகாலட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார். இதனால், உக்ரநரசிம்மர் லட்சுமிநரசிம்மராக மாறினார். 

இந்த நரசிம்மரை வழிபட்டால் கலியுகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று வியாசமுனிவர் கூறியிருக்கிறார்! வேதாத்ரி அடிவாரக்கோயிலில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்றுவடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சநேயருக்கும் சுதைச் சிற்பம் உள்ளது. 

திருமணம் ஆகாத பெண்கள் இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். இங்குள்ள பெருமாள் நோய்கள் அனைத்தையும் நீக்குபவர் என்கிறார்கள்.

உய்யால வழிபாடு

குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக்கொள்கின்றனர்.  உய்யால என்றால் தொட்டில் குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும் செஞ்சு லட்சுமி தாயாரையும் தொட்டிலில் வைத்து ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

சிவன் சன்னதி

நரசிம்மர் கோயிலாக இருந்தாலும் இங்கு சிவனுக்கு சன்னதி உள்ளது. சன்னதி முன்பு தனி கொடிமரம் இருக்கிறது. சிவபெருமானை ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி என்றும் அம்பிகையை பார்வது அம்மவாரு என்றும் அழைக்கின்றனர். விழாக்காலங்களில் உற்சவர் சிவ பார்வதி சிறிய தேரில் பவனி வருகின்றனர். சிவன் முன் நந்தி இருக்கிறார். வீரபத்ரசுவாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு திரு நீறு வழங்கப்படுவதில்லை. தீர்த்தம் தருகின்றனர். சிவபாதம் பொறித்த ஜடாரியும் வைக்கின்றனர்.

இருப்பிடம்

விஜயவாடா ஐதராபாத் ரோட்டில் 60 கிமீ தூரத்தில் சில்லக்க்கலு என்னும் சிறு நகர்ம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் ரோட்டில் 10 கிமீ கடந்தால் வேதாத்ரி.

      அடுத்து மட்டபல்லி நோக்கி...


No comments:

Post a Comment