இன்று முதல் நமது பாரத தரிசனம் குழுக்களில் அடியேனின் ஆந்திர பயணக்கட்டுரை மிளகாய் வயல்களினூடே தொடர் ஆரம்பம்
🌶மிளகாய் வயல்களிடையே ஒரு சைவ வைணவ ...சக்திபீட பயணம்.. பகுதி 1... முக்கூர் சுவாமிகளால் அடையாளம் காட்டப்பட்ட மட்டபல்லி முதலான பஞ்ச நரசிம்மர் தலங்கள் இரண்டு சக்திபீடங்கள்,மற்றும் ஜோதிர்லிங்கங்களில் பிரசித்திபெற்ற ஸ்ரீசைலம் வரை ஒரே யாத்திரையில் தரிசிக்க முடிவு செய்து மனைவியுடன் விஜயவாடா ரயில் ஏறினேன்...கனக துர்க்கா ஆலயத்தில் கார்த்திகை திருவிழா..
இந்திரகீலாத்ரி மலைகளின் உச்சியில் இந்த கனக துர்கா கோயில் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டியே கிருஷ்ணா ஆறும் ஓடுகிறது. விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். தற்போது நாம் காணும் கோயில் வளாகம் 12ம் நூற்றாண்டில் விஜயவாடா ராஜ்ஜியத்தை ஆண்ட பூசாபதி மாதவ வர்மா எனும் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வேத நூல்களின்படி இந்த கோயிலின் ஆதிவடிவம் ‘சுயம்பு’வாக உருவானதாகவும், ஆகவே இது மிகச்சக்தி வாய்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது சுலபமாகவும் உள்ளது.நாங்கள் சென்ற போது ஏதோ திருவிழா...நிறையகூட்டம்..விஜயவாடாவைச் சுற்றிக் குளிர்காற்றை வீச வைக்கும் ஜீவநதியாம் கிருஷ்ணா நதிக்கரையை அடைந்தோம். நீண்ட அழகிய பாதுகாப்பான படித்துறை. பாதுகாப்புக்குச் சங்கிலி அமைத்திருக்கிறார்கள். அன்னையை மனத்தில் நினைத்து ஆலய திசை நோக்கி நமஸ்கரித்து மூழ்கி எழுந்ததும், புதிதாகப் பிறந்த உணர்வு ஏற்படுகிறது நம்முள்! பின்னர், ஆங்காங்கே உள்ள நன்னீர்க் குழாய்களில் நீராடி உடைமாற்றிய பின்பு, பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து அருளும் அம்பிகையின் இடம் தேடி, பசுவைத் தொடரும் கன்றாய்ப் புறப்பட்டோம்.
ஏற முடிந்தவர்கள் படி ஏறிச் செல்லலாம். மலை அடிவாரத்தில், ஆலயத்தின் நிர்வாகத்தால் இயக்கப்படும் வாகனங்கள் உண்டு. அதில், சுமார் 10 நிமிடங்களில் ஆலயத்தை அடையலாம். அதற்கு முன் ஆலயக் கதையைக் கேட்போமா?
''இந்திரகீலா என்ற முனிவர் மலை உருவில் தவம் புரிய, மகிஷாசுரன் அவரின் தவத்தைக் கெடுத்ததோடு, மற்றவர்களையும் துன்புறுத்தி வந்தான். எனினும், முனிவரின் கடும் தவம் தொடர்ந்தது. முனிவரின் தவத்தை மெச்சி அங்கே தோன்றிய அம்பிகையிடம், தன் தலையை இருப்பிடமாகக் கொண்டு அப்பகுதியை காத்தருள வேண்டும் என்று வேண்டினார் முனிவர். பிள்ளையின் குறை தீர்க்க, அசுரனான துஷ்டனைக் கொன்று, மகிஷாசுரமர்த்தினியாகி வெற்றிவாகை சூடி அங்கேயே குடிகொண்டாள் அம்பிகை. அன்றுமுதல் இன்றுவரை விஜயவாடாவையும், மக்களையும் காத்து ரட்சித்து வருகிறாள் அன்னை கனகதுர்கா.
பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடம் வேண்டி, விஜயனான அர்ஜுனன் பெற்ற இடம் இது என்பதால் விஜயவாடா எனப் பெயர் வந்தது என்பார்கள் என்று ஒரு தமிழ் நண்பர் கதையை முடிக்கவும், நாங்கள் நீண்ட க்யூ வரிசை முடிந்து ஆலயத்தை அடைந்தோம்..
வரிசையாக நிறையக் கடைகள். அவற்றைப் பார்த்துக்கொண்டே அர்ச்சனைத் தட்டு வாங்கி, பக்தர்களின் வரிசையை அடைந்தோம். செவ்வாய், வெள்ளியில் கூட்டம் அதிகம் இருக்கும் என்றார்கள். அப்படியான நேரங்களில் ரூ.100 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யலாம். தரிசனம் செய்யச் செல்லும் வழியில் லட்டு தருகிறார்கள். பக்தர்களின் வரிசையை நெருங்கும்போதே தங்க விமானம் தகதகவென ஒளிவீசுவதை பார்க்கலாம்.
சில நிமிடங்களில், வீரமும் கருணையும் கலந்து நம்மை அருள் செய்து காக்கும் அன்னையின் தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. சுமார் 4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தி, மகிஷாசுரனை மிதித்து, ஒளிவீசும் ஆபரணங்களுடன் வண்ண மலர்களால் தொடுத்த மாலைகளைச் சூடி நிற்கும் அன்னையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது. நகரவே மனம் இல்லை.
என்ன செய்வது? நமக்குப் பின் நிற்கும் ஆயிரக்கணக்கானோர் அருள்பெற வேண்டும் அல்லவா? வைத்த கண் வாங்காமல் அன்னையைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம்.
நமது அறியாமை என்னும் ஆணவம் நீங்கி, மாயை என்னும் திரை விலகிடவும், கன்மம் என்னும் வினைகளை மகாதேவனாகிய சிவபெருமான் சுட்டெரித்து, மீண்டும் பிறவாநிலை வழங்கிடவும் அன்னையிடம் கோரிக்கை வைத்து, விடைபெற்று வெளியில் வந்தோம்.
அங்கே பிரசாதம் தந்துகொண்டிருக்க, அதைப் பெற்றுக்கொண்டு மெள்ள நடந்து ஸ்ரீமல்லேஸ்வர ஸ்வாமி ஆலயத்தை அடைந்தோம்.
எல்லா உயிர்களுக்கும் தாய், தந்தையாகி நின்று, அவற்றைக் காப்பவன் அல்லவா ஈசன்? எண்குணத்தான் அவனின்றி அசைவது ஏதுமில்லை அல்லவா? அப்படிப்பட்ட இறைவனைக் கண் குளிர தரிசித்தோம். பரவசம் ஆனோம்.
பின்னர், சுற்றுப்புறப் பரிவார தெய்வங்களை வணங்கி, படிக்கட்டுகள் வழியே காலார நடந்து கீழே இறங்கினோம்.கீழே மனத்துக்கு ஆன்மீக உணர்வு தந்த அன்னையின் சார்பில் வயிற்றுக்கு உணவு.சிருங்கேரி போல் அனைவருக்கும் ... வழிநெடுக கடைகள். விடுதியை அடைந்தோம்.இங்கு தசரா (நவராத்திரி) மிகவும் விசேஷம்! விழாவின் 10 நாட்களும்... அன்னையை திரிபுரசுந்தரி, அன்னபூரணி, காயத்ரி, லலிதா, சரஸ்வதி, மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி எனத் தினமும் பல்வேறு அலங்காரங்களில் தரிசிக்கலாம். அதைக் காணக் கண் கோடி வேண்டும்'' என்று சிலாகித்தார். '
நீங்கள் எப்போது புறப்படுகிறீர்கள், கனகதுர்கா அன்னையை தரிசிக்க?
அமைவிடம்: சென்னை- டில்லி, கல்கத்தா ரயில் பாதையில், சென்னையிலிருந்து 400 கி.மீ. தூரத்தில் விஜயவாடா உள்ளது. அடுத்து பானக நரசிம்மர் ...மங்களகிரிசுமார் 15 கிமீ தொலைவில்....

No comments:
Post a Comment