Ancilla Fernando
ஓ...அமெரிக்கா - 13
Montezuma Castle National Monument
கிடைக்கும் நேரத்துக்கு ஏற்றபடி திட்டம் போட்டு அருகில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து சுற்றிப் பார்க்கும் வழக்கமுடைய நாங்கள் டெம்ப்பியிலிருந்து சுமார் 165 கி. மீ. தூரத்தில் இரண்டு மணி நேரப்பயணத்தில் இருந்த மான்டிஸூமா காஸ்ட்ல் நேஷனல் மான்யுமென்ட் (Montezuma Castle National Monument ) பார்க்கக் கிளம்பினோம். என் மகளும், மருமகனும் வேலையில் இருந்ததால் வாரக்கடைசியில் மட்டுமே வெளியில் செல்ல முடிந்தது.
அது காம்ப் வெர்டி (Camp Verde) என்ற இடத்திலிருந்து 5 மைல் தூரத்தில் ஒரு பார்வையாளர் மைய (Visitor Center) த்தில் ஆரம்பித்தது. நுழைவு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு அருகிலிருந்த சிறிய ம்யூஸியத்திற்குள் நுழைந்தோம். அங்கே அந்த இடத்தில் குடியிருந்த சினகுவா (Sinagua) என்ற அமெரிக்கப் பழங்குடியினரின் வாழ்க்கை முறை, உபயோகப்படுத்திய பொருட்கள், ஆயுதங்கள், பெரிய கண்ணாடி சுவர்களுக்குள் நின்றுகொண்டிருந்த அவர்களைப்போன்ற உருவங்கள், அவர்களைப் பற்றிய புத்தகங்கள், நினைவு, பரிசுப் பொருட்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே நடந்தோம்.
ஓரிடத்தில் ஒருவர் சினகுவா மக்களைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, ஒரு குழுவாக வந்த அமெரிக்கர்கள் அவரைச்சுற்றி நின்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் போய்ச் சேர்ந்து நின்றுகொண்டு கேட்க ஆரம்பித்தோம்.
என் முன்னால் நின்றுகொண்டிருந்தவர்கள் என்னைவிட உயரமானவர்களாக இருந்ததால் எம்பி எம்பிப் பார்த்தும் என்னால் பேசிக்கொண்டிருந்தவரைப் பார்க்க முடியவில்லை. நடுவிலும் பார்க்க இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். நானோ எம்பிப் பார்ப்பதை நிறுத்தவில்லை. தற்செயலாக எதற்கோ திரும்பிப் பார்த்த ஒரு அமெரிக்கப் பெண்மணி என் முயற்சியைப் பார்த்ததும் வருத்தத்துடன் "சாரி" என்று சொன்னபடி விலகி நான் பார்க்க இடம் செய்தார். நான் "பரவாயில்லை" (உயரமாக இருந்தது அவருடைய தவறு இல்லையே!) என்று சொல்லியும் மன்னிப்புக்கோரும் முக பாவனையுடன் மூன்று முறை திரும்பிப் புன்னகையுடன் "சாரி" என்று சொன்னார்.
அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான். 'சினகுவா இந்தியர்கள் (இது பழங்குடி அமெரிக்க இனத்தவர்களைக் குறிக்கும் சொல். ஆரம்பத்தில் இந்தியர்களாகிய நம் பெயரை ஏன் அங்கே உபயோகப்படுத்துகிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு) தென்மேற்கு அமெரிக்கப் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பாலைவனப் பகுதியான அரிசோனாவின் அந்தப் பகுதியில் 11 முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையில் ஒரு பெரிய சுற்றளவு கொண்ட சுண்ணாம்பு மலைத்தொடரில் தரையிலிருந்து 70 அடி உயரத்தில் ஐந்து மாடிகள்போன்ற அடுக்குகளில் அந்தக் காலத்திலேயே ஃப்ளாட்போல மலையைக் குடைந்து கட்டிக்கொண்டு குடியிருந்திருக்கிறார்கள்.
அருகில் இருந்த பீவர் க்ரீக் (Beaver Creek) என்ற ஓடையிலிருந்து வாழ்க்கை நடத்தவும், விவசாயம் செய்யவும் அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. 14 ஆம் நூற்றாண்டில் வறட்சி, நோய், அதிகமான மக்கள் தொகை, விவசாயத்தைப் பாதித்த இயற்கை வளங்களின் குறைவு, குழுக்களுக்குள் ஏற்பட்ட போட்டி, பகைபோன்ற ஒன்று அல்லது பல காரணங்களால் மக்கள் அந்த இடத்தைக் காலி செய்திருக்கலாம்.'
இதற்கப்புறம் நாங்கள் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். ஏறியும், இறங்கியும், சம தளத்திலும், பாறைகளிலும், படிக்கட்டுகளிலுமாக, சரியான வெயிலில், அவ்வப்போது தாகத்துக்குத் தண்ணீர் குடித்துக்கொண்டு, தலையில் தொப்பியுடன், வழியெல்லாம் பூத்துக்கிடந்த கள்ளிச் செடிகளைத்தாண்டி அந்த இடத்தை வந்து சேர்ந்தால்...என் கண்களையே நம்ப முடியவில்லை.
ஒரு பெரிய வட்டமாக சுற்றி நின்ற உயரமான வெளிர் மஞ்சள் நிற சுண்ணாம்பு மலையில், உயரத்தில், அங்கங்கே குடைந்ததுபோல வீடுகள்.
இங்கிருந்து பார்க்க வெறும் சன்னல்கள்போன்ற சதுரமான துவாரங்கள்தான் தெரிகின்றன. அதிலும் எனக்குப் புரியாதது அந்தரத்தில் இருந்ததுபோன்ற அந்த வீடுகளை எப்படி சென்று சேர்ந்தார்கள் என்பதே. தரையிலிருந்து படிக்கட்டுகள் இருக்கும் இரண்டாவது மாடிக்கே நமக்கு லிஃப்ட் தேவையாக இருக்கிறது.
எனக்குத் தவிர்க்க முடியாமல் நான் ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருந்த குகை மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஆனால் குகை தரையில் இருக்கும். இதுவோ அந்தரத்தில் நின்றுகொண்டிருந்தது. இத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தால் மட்டுமே என் திகைப்பு உங்களுக்குப் புரியும்.
ஆனால் அந்தக் காலத்திலேயே அந்த மக்களின் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்னை ஆச்சரியப்படுத்தியது. வீடுகளின் அமைப்பு பகலில் வெப்பமும், இரவில் குளிரும், சூறாவளிக் காற்றும், பனிக்காலத்தில் சில சமயங்களில் பனிப்பொழிவும் கொண்ட பாலைவனத் தட்பவெப்பத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தி, எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்புத் தரும் விதத்தில் இருந்தது. ஆனால் எப்படி ஏறி இறங்கினார்கள், பொருட்களைக் கொண்டு சேர்த்தார்கள், எப்படிக் குழந்தைகளும், வயதானவர்களும் போய் வந்தார்கள் என்பதே புரியாத புதிர்.
அங்கங்கே குறுகலான வழிகளில் பக்கவாட்டில் பிடித்துக்கொள்ளக் கயிறுகளும் இருந்தன. எங்கள் வழியிலேயே ஒரு வீடுபோன்ற, சிறிது சம தளமும், மலையையே கூரையாகவும், தடுப்புச்சுவரும், ஒன்றிரண்டு அறைகளையும் கொண்டதுபோன்ற அமைப்புடன் ஒரு குகை வந்தது. பாறைகள் சரிந்துவிடாமல் இருக்கக் கற்களால் முட்டுக்கொடுத்துத் தடுத்து நிறுத்தி இருந்தார்கள். அங்கே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பல நூற்றாண்டுகள் முன்னால் வாழ்ந்த மக்கள் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறைகள் பற்றியும் நான் சிறு வகுப்புகளில் வரலாற்றுப் பாடத்தில் படிக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கற்பனை செய்ய முயற்சி செய்வதுண்டு. ஆனாலும் ஓர் அளவுக்குமேல் என்னால் அனுமானிக்க முடிந்ததில்லை. இதுதான் முதல் முறையாகப் பாலைவனத்தில் ஒரு பழங்குடியினர் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளக் கிடைத்த முதல் வாய்ப்பு. Montezuma Castle National Monument எனக்கு அருமையானதொரு அனுபவம் தந்தது.
No comments:
Post a Comment