ஓ...அமெரிக்கா - 12
இரண்டாம் முறை நான் அமெரிக்கா சென்றபோது வழி முறைகள் எல்லாம் ஓரளவுக்குப் பழகிவிட்டது. பயமும் குறைந்துவிட்டது. நடையில் நிதானமும் வந்துவிட்டது. ஆனாலும் விமானத்தில் ஏறியதும் 'எப்படா இறங்குவோம்?' என்ற நினைப்பு மட்டும் மாறவில்லை. ஏர் ஹோஸ்டஸ் எமர்ஜென்சியின்போது செய்ய வேண்டியதை செய்து காட்டும்போது வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதும் நிற்கவில்லை.
ஒவ்வொரு விமான நிலையத்திலும் இறங்கியதிலிருந்து அடுத்த விமானத்தை சென்று சேரும்வரை அட்ரீனலின் ரஷ் குறையவும் இல்லை. என் கண்கள் அடுத்தடுத்த விமானப் புறப்பாடு, வந்து சேரும் நேரங்களைக் குறிக்கும் டிஸ்ப்ளே போர்டுகளைத்தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்றால், என் கால்கள் சாவி கொடுத்த பொம்மைபோல இறங்கிய இடத்திலிருந்து ஏறும் இடம்வரை நிற்காத வேகத்தில் சென்று கொண்டிருந்தன. அடுத்த விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருக்கும் லவுன்ஞ் வந்து சேர்ந்த பின்னரே என் தற்காலிக ரேஸ் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது.
இந்தத் தடவை முக்கியத்துவம் வாய்ந்தது ASU வில் என் மகள், மருமகன் இருவரின் பட்டமளிப்பு விழா. என் மகள் வாங்க இருந்த MS, Electrical Engg. பட்டமளிப்பு Science and Technology பிரிவில் முதல் நாளும், மருமகனுக்கான Criminology and criminal justice க்கான பட்டம் மற்ற பாடங்களுக்கான பிரிவில் அடுத்த நாளும் இருந்தது. இதற்காக கவுன், தொப்பி, இன்விடேஷன் எல்லாம் பல்கலைக்கழகத்தின் நெறிமுறைகளின்படி தயார் செய்ய ஆரம்பித்தோம். இன்விடேஷனுக்காகப் புகைப்படம் எடுக்க முதல் முதலாகப் பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைந்தேன்.
பொதுப் பல்கலைக்கழகங்களில், கண்டுபிடிப்புகளில் (Innovation) நம்பர் 1 என்ற பெயர் பெற்றிருக்கும் அரிசோனா ஸ்டேட் யுனிவர்ஸிடி, நேரடியாக ரோடிலிருந்து பல்கலைக்கழகப் பெயர் பொறித்த குட்டைச்சுவருடன் ஒரு சாலையிலிருந்து அடுத்த சாலைவரை பரவிக்கிடக்கிறது. அதிகப் படாடோபம் இல்லாத, அதே சமயம் புதுமையான கட்டடக்கலையுடன் ஒவ்வொரு கட்டடமும் தனித்தன்மையுடன் அழகுடனும், நல்ல பராமரிப்புடனும் கண்களைக் கவர்கின்றது. கிடைத்த இடத்தில் எல்லாம் பாலைவன மரங்களை வைத்திருப்பதால் ஒரு பச்சைப் பின்னணியில் இருக்கிறது. தரை மட்டத்துக்குக் கீழே அண்டர் க்ரௌண்டில் இருக்கும் 24 மணி நேர லைப்ரரி மிகவும் புகழ் பெற்றது. பள்ளிகளுக்குள்ளும், பல்கலைக்கழகங்களுக்குள்ளும் எனக்கு இயல்பாக வரும் மரியாதை உணர்ச்சி அங்கே இருக்கும்போதும் வந்தது. அவர்கள் இருவரையும் பல்கலைக்கழகப் பின்னணியில் சில புகைப்படங்கள் எடுத்தபின் வீடு திரும்பினோம்.
முதல் நாள் நாங்கள் பட்டமளிப்பு விழா நடக்கும் இடத்திற்கு சென்றோம். அது நடுவில் மேடையும், சுற்றிலும் காலரியும் கொண்ட ஒரு பெரிய ஆடிட்டோரியம். அங்கே படிப்புவாரியாக இடத்தைப் பிரித்துக் கட்டியிருந்தார்கள். மாணவர்களுக்குத் தனி இடமும், அவர்கள் உறவினர்களுக்குத் தனி இடமும் பிரித்து அமைத்திருந்தார்கள். நாங்கள் எங்களுக்கென்று இருந்த இடத்தில் சென்று அமர்ந்தோம்.
சரியாக ஆரம்பிக்கும் நேரத்தில் பாண்டு வாத்தியம் முழங்க பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், guests, அந்தந்த டிபார்ட்மென்ட் HODs, professors, அவர்களுக்குப்பின் டிபார்ட்மென்ட் கொடியுடன் பட்டம் வாங்கப்போகும் மாணவர்கள் என எல்லோரும் ஒழுங்குடன் சிறிதளவுகூட வேறு சத்தமின்றி ஊர்வலம் வர, நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம். ஒவ்வொரு டிபார்ட்மென்ட் மாணவர்களும் வேறு வேறு வண்ணங்களில் கவுன் அணிந்திருந்ததால் மொத்த ஆடிட்டோரியமும் வண்ணங்களை வாரி இறைத்ததுபோலத் தோன்றியது. பின் மேடைக்கு சென்றவர்கள் அவரவர் இடத்தில் அமர, ப்ரொஃபசர்களும், மாணவர்களும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர்.
பல்கலைக்கழகத்தின் சான்சலர் பல்கலைக்கழகத்தைப்பற்றியும், அதன் ஸ்பான்சர்கள், அங்கே இருக்கும் படிப்புகள், இண்டஸ்ட்ரியல் டை-அப், ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் என்று சொல்லி முடித்தார். அதில் அவர்கள் நேட்டிவ் அமெரிக்கன் மக்களுக்காக ஒதுக்கிய நிதி மற்றும் அவர்களின் நல்வாழ்வுத் திட்டங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
மாணவர்கள் அங்கே படிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்பற்றிப் பேசும்போது முதலில் "இங்கே வந்திருக்கும் பெற்றோர் எல்லோரும் எழுந்து நில்லுங்கள். ஏனென்றால் நீங்கள்தான் அவர்களுக்கு மேஜர் சப்போர்ட்" என்று சொல்ல, பெற்றோர்கள் நாங்கள் எழுந்து நின்றோம். எங்களுக்குப் பலத்த கைதட்டல் கிடைத்தது. பின்னர் "இப்பொழுது மாணவர்களின் கணவன்/மனைவி அல்லது பாய் ஃப்ரெண்ட்/கேர்ல் ஃப்ரெண்ட் இருந்தால் எழுந்து நில்லுங்கள். ஏனென்றால் நீங்கள்தான் மாணவர்களின் படிக்கும் டென்ஷனைக் குறைத்தவர்கள்" என்று சொல்ல இப்போது கை தட்டலுடன் சிரிப்பும் சேர்ந்து அரங்கம் அதிர்ந்தது. அதன்பின் எத்தியோப்பியாவிலிருந்து வந்து படித்துப் பட்டம் வாங்கப்போகும் ஒரு மாணவரை அழைத்து அங்கே அவரது அனுபவங்களைப் பேசச் சொல்ல, அவரும் பேசினார்.
இதற்குப்பின் ஒவ்வொரு டிபார்ட்மென்ட் HOD யும் வந்து அழகான, பொருள் பொதிந்த முன்னுரையுடன் அவரவர் டிபார்ட்மென்ட்பற்றிய சிறு குறிப்புடன் பட்டம் வாங்க மாணவர்களை அழைக்க ஆரம்பித்தனர். இதில் குறிப்பிட வேண்டிய, என் கவனத்தைக் கவர்ந்த விஷயம் பெரும்பாலான Science and Technology வகைப் படிப்புகளில் பட்டம் வாங்கியவர்கள் ஆசியர்கள். அதிலும் முக்கியமாக இந்தியர்கள். வேடிக்கை என்னவென்றால் அவர்கள் பெயரை அறிவித்தவர்கள் அமெரிக்கர்கள். அவர்களுக்கு வாய்க்குள் நுழையாத பக்கா இந்தியப் பெயர்களைப் படாதபட்டு தப்புத் தப்பாக உச்சரித்தது சிரிப்பை அன்றைக்கு வரவழைத்தது.
அடுத்தநாள் மற்றப் பாடங்களுக்கான பட்டமளிப்பு விழா. அன்றும் முந்தைய நாள்போல பாண்டு வாத்தியம், ஊர்வலம் எல்லாம் இருந்தது என்றாலும், விழாவைக் கொண்டு செல்லும் முயற்சியில் முந்தைய நாளிலிருந்து வேறுபட்டு இருக்கப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டது வெளிப்படையாகத் தெரிந்தது. எல்லோரும் இடத்தில் அமர்ந்ததும் சில நிமிடங்கள் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, ஒவ்வொரு டிபார்ட்மென்ட் மாணவர்கள் இருந்த இடத்திலும் ஒரு வண்ண விளக்குகள் மட்டும் ஒளிர்ந்து இருண்ட பின்புலத்தில், பற்பல வண்ணங்களில், விளக்குகள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.
அன்று அதிகமாகப் பட்டம் வாங்கியவர்கள் அமெரிக்க, ஐரோப்பியர்கள். அவர்கள் பெயர்களை வாசித்தவர்கள் இந்தியர்கள். இப்போது ஆங்கிலப் பெயர்கள் இந்தியர்கள் வாய்க்குள் நுழையாமல் வித விதமாக அழைக்கப்பட்டது புன்னகைக்க வைத்தது. கடைசியில் கூரையை நோக்கி விடப்பட்ட நூற்றுக்கணக்கான பலூன்களுடன் விழா முடிவுக்கு வந்தது.
இந்தப் பட்டமளிப்பு விழா ஆசியர்களின் ஆர்வமும், கவனமும் அறிவியல், தொழில் நுட்பத்திலும், அமெரிக்க, ஐரோப்பியர்களின் அதே மாதிரியான ஆர்வம் சிவில் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கிலும் இருப்பதுபோலத் தோற்றம் தந்தது. ஒருவேளை அந்த வருடம் அப்படி இருந்திருக்கலாம்.
ஆடிட்டோரியத்தின் வெளியில் பல்கலைக்கழகத்தைப் பற்றியும், அதன் வெவ்வேறு சாதனைகளைப் பற்றியும் புத்தகங்களும், பாம்ஃப்லெட்டுகளும் விற்பனைக்கும், ஃப்ரீயாகவும் வைக்கப்பட்டிருந்தன. விரும்பியவர்கள் வாங்கிக்கொண்டார்கள். பின்னர் பட்டமளிப்பு உடையுடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டபின் வீடு திரும்பினோம்.
Ancila Fernando
No comments:
Post a Comment