🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 71 🌹🌹🌹
தவறு செய்தவர்கள் திருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிப்பு கிடைக்கும் அற்புதத் திருத்தலம்.
சிவபெருமானுக்கு காட்சி கொடுத்த இமயவரப்பன்!! தேவர்களுக்கு காட்சி கொடுத்த பரந்தாமன்!!!
மகாபாரதப் போருக்குப் பின் தருமர் மன அமைதிக்காக இறைவனை வழிபட்டு, கோவிலைப் புதுப்பிக்கவும் செய்த அற்புதமான திவ்யதேசம்.
அத்தகைய அற்புதமான சிறப்பு பெற்ற இமயவரப்பனான, தேவர்களுக்கே தந்தையாக எம்பெருமான் காட்சி கொடுத்த திவ்யதேசத்தை நாமும் தரிசிப்போமா?
அருள்மிகு இமயவரப்பன் திருக்கோவில் :-
திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
மூலவர்: இமயவரப்பன்
தாயார்: செங்கமலவல்லி
உற்சவர்: இமயவரப்பன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: ஜகஜ்ஜோதி விமானம்
தீர்த்தம்: சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ இமயவரப்பன் ஸ்வாமிநே நமஹ
ஊர்: திருச்செங்குன்றூர்
🌺🌺 தலவரலாறு :-
பூவுலகை புனிதமாக்கும் பூபாலனாம் இறைவன் நாராயணன், சிற்றாறு என்னும் புண்ணிய நதிக்கரையில் கோவில் கொண்டு அருள்வதால் இத்தலத்திற்கு "திருச்சிற்றாறு" என்பது பெயர்.
இமயவர்கள் என்று போற்றப்படும் தேவர்கள் இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவமிருந்து இறைவனின் அருட்காட்சியைக் கண்டதாகவும், அதனால் இவருக்கு இமயவரப்பன் என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது.
🌺🌺 மகாபாரதப் போர்:-
மகாபாரதத்தில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் துரோணாச்சாரியனின் மகன். இந்த அஸ்வத்தாமன் இறந்து விட்டார் என்று சொல் துரோணர் நிலை குலைந்து விடுவார் என்பது பகவான் கிருஷ்ணர் வகுத்துக் கொடுத்த வழி.
தர்மன் உண்மையை மட்டுமே சொல்பவர் என்பதால், பகவான் கிருஷ்ணர் அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டது என்று சத்தமாகக் கூறும் படி கிருஷ்ணரும் சொல்லவும், தர்மர் "அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டது என்பதை, அஸ்வத்தாமன் என்பதை சத்தமாகவும், (அஸ்வத்தாமன் என்ற யானை) இறந்து விட்டது விட்டது என்பதை மிக மெல்லிய சப்தத்தில் கூறினார்.
இதனால் துரோணாச்சாரியார் போரில் நிலை குலைந்தார். துரோணாச்சாரியார் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
தான் சொன்ன பொய்யினால் தான் துரோணாச்சாரியார் கொல்லப்பட்டார் என்பதை நினைத்து தர்மன் வருந்தினான். பின் போர் முடிந்த பிறகு மன அமைதிக்காக இத்தலத்திற்கு வந்து தவம் இருந்ததாகவும், கோவிலைப் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
🌺🌺 தேவர்களுக்குத் தந்தை:-
மகாபாரத போருக்கு முன்பாகவே இங்கிருக்கும் இமயவரப்பனான எம்பெருமானைத் தேவர்கள் இங்கு வந்து வந்து இத்தலத்து பெருமாளைக் குறித்து தவமிருந்தனர். இவர்களது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், தந்தைக்கு நிகராக தரிசனம் கொடுத்தார்.
🌺🌺 இமயவரப்பன் பெயர்க்காரணம்? :-
இமையவர்கள் என்றால் தேவர்கள் என்று பொருள். அப்பேற்பட்ட தேவர்கள் இத்தலம் வந்து வணங்கிய போது அவர்களுக்குத் தந்தைக்கு நிகரான கோலத்தில் காட்சி கொடுத்தார்.
தேவர்களுக்கே தந்தைக்கு நிகராகக் காட்சி கொடுத்ததால் இங்குள்ள பெருமாளின் திருநாமம் "இமயவர்கள் + அப்பன் - இமயவரப்பன்" என்ற திருநாமம் உண்டானது.
🌺🌺 சிவபெருமானுக்கு தரிசனம்:-
சைவர்கள் வணங்கும் இறைவனாம், கயிலை மலையில் வசிப்பவராம், அடிமுடி காண முடியாத அருணாச்சலேஸ்வரான, ஆடல்வல்லனான எம்பெருமானாகிய சிவபெருமானுக்கும் இத்தல பெருமாள் தரிசனம் கொடுத்துள்ளார்.
🌺🌺 மங்களாசாசனம் :-
இவ்வூரின் பெயர் "திருச்செங்குன்றூர்", இத்தலத்தின் பெயர் "திருச்சிற்றாறு", இத்தல இறைவனின் திருநாமம் "இமயவரப்பன்", இத்தலத்தை மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார், இம்மூன்று பெயர்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் பாடியருளியுள்ளார்.
"எங்கள் செல்சார்வு யாமுடை யமுதம்
இமைய வரப்ப னெனப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தளித் தழிக்கும்
பொருந்து மூவுருவவென மருவன்
செங்கய லுகளும் தேம்பணை புடைசூழ்
திருச்செங் குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கமர்கின்ற ஆதியா னல்லால்
யாவர் மற்றெனமர் துணையே???"
- நம்மாழ்வார்.
🌺🌺 வழித்தடம் :-
திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் இரயில் பாதையில் செங்கண்ணூர் இரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு இமயவரப்பன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு செங்கமலவல்லித் தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோவில் திருப்புலியூர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment