🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 70 🌹🌹🌹
ஏகாதசி விரதத்தின் அற்புதங்களை உலகிற்கு உணர்த்தியவர் இத்தல பெருமாளாம் அற்புத நாராயணர். அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சக்தி பெறும் பெருமாள். கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலைந்து விடும் பெருமாள். அவரின் அருளைப் பெறுவோமா??
அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோவில் :-
திருக்கடித்தானம்
மூலவர்: அற்புத நாராயணன், அம்ருத நாராயணன்
தாயார்: கற்பகவல்லி
உற்சவர்: அற்புத நாராயணன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: புண்யக்கோடி விமானம்
தீர்த்தம்: பூமி தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கற்பகவல்லீ ஸமேத ஸ்ரீ அற்புதநாராயணணாய நமஹ
ஊர்: திருக்கடித்தானம்
🌺🌺 அற்புத நாராயணர்:-
அது என்ன அற்புத நாராயணர்? பெயரே வித்தியாமாக உள்ளதல்லவா? இதோ பெயர்க்காரணம் அறிந்திடலாம்.
காக்கும் நாதனாம் இறைவன் நாராயணன் ஏகாதசி விரதத்தின் அற்புதங்களை உலகிற்கு உணர்த்திய அற்புத திவ்யதேசம் இதுவாகும். இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு "அற்புத நாராயணர்" என்பது திருநாமம்.
🌺🌺 திருக்கடித்தானம்:-
அக்காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்தான். திருமால் மீது பக்தி கொண்ட இவ்வரசன் நாட்டின் நலன் குன்றாமல் இருக்க கடுமையாக ஏகாதசி விரதம் இருந்து வந்தான்.
இரவு - பகல், நன்மை - தீமை என அனைத்திலும் மாற்றம் என்பதே விதி. ஆனால், இவனது ஆட்சியில் மாற்றங்கள் நிகழாததைக் கண்டு தேவர்களும் நடுநடுங்கிப் போனார்கள்.
இவனது ஏகாதசி விரதத்தைத் தடுப்பது ஒன்றே வழி எனக் கருதினர். அதற்காக இவனது நந்தவனத்தில் அரிய மலர்கள் பூத்துக் குலுங்கின. இந்த மலர்களைத் தேவர்கள் பறித்துச் சென்று பெருமாளுக்கு அணிவித்தனர்.
தினமும் மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களைப் பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் "பூ பறிக்க வந்திருப்பவர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்தனர்". தேவர்களை மன்னனின் முன்பு நிறுத்தினர்.
அதன்பின் மன்னன் "நீங்கள் யார்??? எதற்காக இங்கே பூக்களைப் பறிக்கிறீர்கள்?? என்று கேட்டான். தேவர்களும் நாங்கள் இங்கிருக்கும் நாராயணப் பெருமாளைத் தரிசனம் செய்வதற்கு தங்களது தோட்டத்திலிருந்து மலர்களைப் பறிக்க வந்தோம். அப்போது காவலர்கள் எங்களைக் கைது செய்து விட்டனர்" என்றார்கள்.
உண்மையை அறிந்த மன்னன் தேவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களை விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது.
அப்போது தேவர்கள் ருக்மாங்கதனை நோக்கி ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே வானுலகம் செல்ல முடியும், என்று தேவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட மன்னனும் மகிழ்ச்சியோடு தேவர்களை அழைத்துக் கொண்டு, இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்குத் தானமாக அளித்தான். தேவர்களும் வானுலகம் சென்றனர்.
"கடி" என்பதற்கு "நொடி" என்பது பொருள். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் "திருக்கடித்தானம்" எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
🌺🌺 இறைவனின் தரிசனம்:-
ஒரு கணப் பொழுதில் தூய்மையான இதயத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடுவார் என்று கூறுகிறார்கள்.
🌺🌺 மனிதனின் உடல்:-
இத்திருக்கோவிலின் முன் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு புராண கதை உண்டு. ஒருமுறை இப்பகுதியை ஆண்ட மன்னன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது கோவில் மெய்க்காப்பாளன் ராஜாவான மன்னனிடம் பணம் வாங்கிக் கொண்டு கோவில் நடையைத் திறந்து விட்டான். அதற்கு தண்டனையாகத் தான் இந்த மெய்க்காப்பாளன் உடல் கோவில் வாசல் முன் வைக்கப்பட்டுள்ளது என்பர்.
இதிலிருந்து நாம் அறிவது என்றால் இத்தல பெருமாள் தவறு செய்தால் தண்டனையையும் உடனே வழங்குவார் என்று உணர்ந்திடலாம்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இத்திருத்தலத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
"கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடு
என்னெஞ்சகம் கோயில் கொள் தெய்வமெல்லாம்
தொழ வைக்கும் வைகுந்தம் கோயில்
கொண்ட குடக்கூத்த அம்மானே!!!"
- நம்மாழ்வார்.
🌺🌺 வழித்தடம்:-
கோட்டயத்திலிருந்து திருக்கடித்தானம் வழியாக பிற ஊர்களுக்கு நகைரப் பேருந்துகள் செல்கின்றன. கோட்டயத்திலிருந்து செங்கணாச்சேரி வந்தால் அங்கிருந்து இத்தலத்தை சுலபமாக அடையலாம். திருவல்லாவிலிருந்து கோட்டயம் செல்லும் சாலையில் 8 கி.மீ தொலைவில் செங்கணாச்சேரி உள்ளது. செங்கணாச்சேரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
அருள்மிகு அமிர்த நாராயணர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு கற்பகவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு இமயவரப்பன் திருக்கோவில் - திருச்செங்குன்றூர் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"*
No comments:
Post a Comment