Saturday, February 6, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 69

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 69 🌹🌹🌹

பிரமச்சரிய விரதம் அனுஷ்டிக்கும் அதிசயப் பெருமாள்! ஒரே நேரத்தில் பெருமாளின் திருமுகத்தையும், திருவடியையும் தரிசிக்க இயலாத அபூர்வமான திவ்யதேசம்!!.

பெண்கள் எல்லா தினங்களிலும் இறைவனைத் தரிசிக்க அனுமதி இல்லாத திவ்யதேசம்!! விபூதி பிரசாதம் வழங்கும் சிறப்பான திவ்யதேசம்!
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த பெருமாளின் பிரம்மச்சரிய தரிசனத்தை நாமும் பெறலாமா? வாருங்கள் இறையருள் பெறலாம்.

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில் :-
திருவல்லவாழ்
மூலவர்: திருவாழ்மார்பன், கோலப்பிரான், ஸ்ரீவல்லபன்
தாயார்: செல்வ திருக்கொழுந்து நாச்சியார், வாத்ஸல்ய தேவீ
உற்சவர்: ஸ்ரீவல்லபன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சதுரங்ககோல விமானம்
தீர்த்தம்: கண்டா கர்ண தீர்த்தம், பம்பை நதி
நாமாவளி: ஸ்ரீ திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் ஸ்வாமிநே நமஹ
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
ஊர்: திருவல்லா, கேரளம்

🌺🌺 அபூர்வமான தலம் :-

திவ்ய லோகமெல்லாம் நிறைந்துள்ள இறைவன் திருமால், திருமகள் தாயாராம் பிராட்டிக்கு தனது திருமார்பில் இடம் அளித்தார். இதன் காணமாகவே இவருக்கு "திருவாழ்மார்பன்" என்பது திருநாமம் ஆகும். அத்தகைய மார்பன் கோவில் கொண்டு வாழ்வதால் இத்தலத்திற்கு "திருவல்லவாழ்" என்பது பெயர்.

மேலும், இத்தலத்தின் மூலவரின் மார்பை மறைக்கும் வண்ணம் ஆடைகள் அணிவதில்லை. எப்போதும் மார்பை மட்டுமே தரிசிக்கும் வண்ணம் மூலவர் சன்னதி அபூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல திருமுகத்தையும், திருவடியையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய இயலாது. திருமுகத்தை தரிசிக்கும் போது திருவடி தெரிவதில்லை. திருவடியை தரிசிக்கும் போது திருமுகம் தெரிவதில்லை.

🌺🌺 தலபுராணம்:-
மலை நாடான கேரளாவிலுள்ள "சங்கரமங்கலம்" கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்து வந்தார். இவர் ஏகாதசி தினத்தில் இத்தல இறைவனை வழிபட்டு, மகத்துவம் வாய்ந்த ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு வந்தார்.

மறுநாள் துவாதசியன்று இக்கோவிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். அக்காலத்தில் தோலாகாசுரன் என்ற ஓர் அசுரன், துறவிகளுக்கு அன்னதானம் செய்வதற்கு பல வகையில் இடையூறு செய்து வந்தான்.

இதனால் வருத்தம் அடைந்த அம்மையார் பெருமாளிடம் முறையிட்டார். இவரது பக்திக்கு மனமிறங்கிய இறைவன் திருமால் தானே பிரம்மச்சாரி இளைஞனாக வந்து அந்த அசுரனை அழித்து அந்த அம்மையாரைக் காத்ததாகக் கூறப்படுகிறது.

பிரம்மாச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இங்கு அங்கவஸ்திரம் இல்லாமல் காட்சி அளிக்கிறார். ஏனெனில், அந்த அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் இங்கேயே குடிகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

🌺🌺 கருடாழ்வார் சிறப்பு :-
பொதுவாக கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல்தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடனுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோரின் நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடன், கருடன் அவரை ஏற்றிச் செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம்.

🌺🌺 திருநீற்றுப் பிரசாதம் :-
திருவாழ்மார்பன் திருக்கோலத்தில் சிவபெருமானும் வாழ்வதாக ஐதீகம். இதனால் இத்தலத்தில் திருநீற்றுப் பிரசாதமும் வழங்கப்படுகிறது. மேலும், சிவபெருமானுக்கு உகந்த நாளாம் திருவாதிரையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஏனென்றால் மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் பெருமாளின் பிரம்மாச்சார்ய திருக்கோலத்தைக் காண வந்தாராம். அதன் பின் சிவபெருமானும் பெருமாளின் திருமார்பில் உரைவதாக ஐதீகம்.

🌺🌺 பெண்கள் அனுமதியில்லாத கோவில் :-
இங்குள்ள பெருமாள் பிரம்மச்சாரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே ஐயப்பன் கோவிலைப் போல இங்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை முதல் நாள் அன்றும் தான் பெண்களுக்கு இத்தல இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு.

🌺🌺 உப்பு மாங்காய் நைவேத்யம் :-
சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், அப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயைக் கேட்டாராம்.

அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்பு மாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது.

🌺🌺 மங்களாசாசனம் :-
"காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன்
கனிவாய் மடவீர் பாண்டுரல்
வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும்
சேன் சினையோங்கு மரச்
செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள்
பிரான் மலர் தாமரைப் பாதங்களே!!!"

- நம்மாழ்வார்.
இத்திருத்தலத்தை நம்மாழ்வார் - 11, திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள் என 22 பாசுரங்கள் பாடியருளியுள்ளார்கள்.

🌺🌺 வழித்தடம்:-
கொல்லம் - எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் திருவல்லா இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கோட்டையத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. திருவல்லா என்றால் மட்டுமே இங்குள்ளோருக்கு புரியும்.
அருள்மிகு திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு செல்வதிருக்கொழுந்து நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோவில் - திருக்கடித்தாளம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment