Saturday, February 6, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 68

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 68 🌹🌹🌹

இறைவன் ஸ்ரீமந்நாராயணன் கண்ணனாக அவதரித்து பார்த்தனாகிய அர்ச்சுனனுக்கு அருளிய பகவத்கீதை உபதேசத்திற்கு அடுத்து அறநெறிகளை நமக்காக தந்தருளிய திவ்யதேசம் தான் இந்த திருமூழிக்களம்.

இறைவன் நாராயணனே ஆரூர முனிவர்க்கு மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும்? என்று தனது அமுத மொழியினால் (திருவாயினால்) உபதேசம் செய்த தலம். அப்படி என்ன எம்பெருமான் உபதேசம் செய்தார் வாருங்கள் அறிந்திடலாம்.

அருள்மிகு திருமூழிக்களத்தான் திருக்கோவில் :-
திருமூழிக்களம்.
மூலவர்: திருமூழிக்களத்தான், அப்பன், ஸ்ரீசுக்திநாதன்
தாயார்: மதுரவேணி நாச்சியார்
உற்சவர்: திருமூழிக்களத்தான், லட்சுமணன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: சௌந்தர்ய விமானம்
தீர்த்தம்: சங்க தீர்த்தம், சிற்றாறு
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ மதுரவேணீ ஸமேத ஸ்ரீ திருமூழிக்களத்தான் ஸ்வாமிநே நமஹ
ஊர்: கொச்சின், கேரளம்

🌺🌺 தலவரலாறு :-
எங்கும் நிறைந்துள்ள, எல்லோரையும் காக்கின்ற எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், தனது திருவாய்மொழியால் உபதேசம் செய்த தலம் என்பதால் "திருமொழிக்களம்" எனப் பெயர் பெற்று விளங்கியது. இதுவே பிற்காலத்தில் "திருமூழிக்களம்" என்றானது. இத்தலத்தின் வரலாறு இரண்டு விதமாகக் கூறப்படுகிறது.

🌺🌺 ஆரித முனிவர் தவம்:-
ஒருமுறை ஆரித முனிவர் இறைவன் நாராயணனை நோக்கி கடுமையாக தவமியற்றினார். அவரது தவத்திற்கு காட்சி தந்து அருளினார் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். ஆரிதமுனிவர் ஸ்ரீமந்நாராயணரிடம் அனைத்து மக்களும் இறைவனை அடையும் மார்க்கத்தை கூறும்படி வேண்டினார். அதற்கு இறைவன் "நீதி நெறி தவறாது, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் தர்மங்களைக் கடைப்பிடித்து, வையம் தழைக்க வாழ்பவர்கள் என்னை வந்து அடைவர்" என்று கூறினார்.
குழப்பத்தில் ஆழ்ந்த முனிவர் அவ்வாறு வாழும் மார்க்கத்தை தெளிவாக உபதேசம் செய்யும் படி வேண்டினார். அதற்கு இறைவன் தனது அமுத மொழியால் உபதேசம் செய்து அருளியதாகவும், இதன் காரணமாகவே இத்தலம் "திருமொழிக்களம்" எனப் பெயர் பெற்றதாகவும் தலவரலாறு கூறுகிறது.

காலப்போக்கில் இப்பெயர் மருவி திருமூழிக்களம் என்றானது.
🌺🌺 அற்புதம்:-
இறைவன் கண்ணனாக அவதரித்து போர்கள பூமியில் கீதை உபதேசம் செய்து "பகவத்கீதை" என்ற அற்புத ஆகமத்தை தந்தருளினார். அதற்கு அடுத்ததாக "அறநெறிகளை" உபதேசம் செய்த அற்புதங்கள் 108 திவ்யதேசங்களில் இத்தலத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இது மலை நாட்டிற்கே கிடைத்த தனிச்சிறப்பு ஆகும்.

🌺🌺 மற்றொரு தலவரலாறு :-
கிருஷ்ண பகவான் துவாரகையில், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகணன் என்ற நான்கு விக்கிரகங்களை பூஜித்து வந்தார். ஒருமுறை இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய போது, வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு முனிவரின் கனவில் தோன்றிய பெருமாள், இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோரங்களில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.

இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோவிலாகவும், இரிஞ்சலகுடாவில் பரதன் கோவிலாகவும், பாயமல்லில் சத்ருக்கணன் கோவிலாகவும், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களத்தில் லெட்சுமணப் பெருமாள் கோவிலாகவும் அமைந்துள்ளது.

கேரள நாட்டிலுள்ள கோவில்களில் "லட்சுமணப் பெருமாள்"என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான்.

🌺🌺 மங்களாசாசனம்:-
"பூந்துழாய் முடியார்க்கு பொன்னாழிக் கையாருக்கு
ஏந்து நீரிளங் குருகே
திருமூழிக் களத்தாருக்கு ஏந்து பூண்முலை பயந்து
என்னினை மலர்கண்கள்
நீர் ததும்ப தாம் தம்மை கொண்டகல்தல்
தகவன்றென்றுரையீரே!!!"

- நம்மாழ்வார்.

இத்தலத்தை நம்மாழ்வார் - 11, திருமங்கையாழ்வார் - 3 என மொத்தம் 14 பாசுரங்களால் பாடியருளியுள்ளார்கள்.

🌺🌺 வழித்தடம் :-
ஆலவாய் - மாலா செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எர்ணாகுளத்திலிருந்து காலடி ரோடு இரயில் நிலையம் சென்று அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்கு வரலாம். எர்ணாகுளத்திலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதி உண்டு.

🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில் - திருவல்லவாழ் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment