🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 67 🌹🌹🌹
வாமன அவதாரத்தில் உலகையே அளந்த திரிவிக்ரமனின் திருமேனியாக பல கோவில்களில் பெருமாள் திருமேனி இருக்கும். ஆனால் சிறிய திருமேனியாக பிள்ளை பிரானாக வந்த வடிவில் காட்சி தரும் ஒரே திவ்யதேசம். இது போன்ற திருமேனியை வேறு எங்கும் காண முடியாத அற்புதத் திவ்யதேசம். ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடும் திவ்யதேசம்.
அருள்மிகு காட்கரையப்பான் திருக்கோவில் :-
திருக்காட்கரை.
மூலவர்: காட்கரையப்பான், அப்பன்
தாயார்: பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யவல்லி
உற்சவர்: காட்கரையப்பான்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: தெற்கு
விமானம்: புட்கல விமானம்
தீர்த்தம்: கபில தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பெருஞ்செல்வநாயகீ (வாத்சல்யவல்லி) ஸமேத ஸ்ரீ காட்கரையப்பன் ஸ்வாமிநே நமஹ
ஊர்: திருக்காட்கரை
🌺🌺 தலவரலாறு :-
வையகத்தையே காக்கும், வைகுண்ட வாசனாகிய இறைவன் நாராயணர் எடுத்த பத்து அவதாரங்களில், வையம் முழுவதும் தன் திருவடியை வைத்து திவ்யலோகமாக மாற்றிய ஓர் ஒப்பற்ற அவதாரம் வாமன அவதாரம்.
அத்தகைய வாமன அவதாரத்தில் வையம் அளக்கும் திரிவிக்கிரமானகவே பல ஆலயங்களில் குடி கொண்டுள்ளார். ஆனால், சிறிய திருமேனியாக பிள்ளை பிரானாக வந்த வடிவில் காட்சி தந்து அருளும் ஒரே திவ்யதேசம் இதுவாகும்.
திருக்காட்கரை திவ்யதேசத்தில் தான் "ஓணம் பண்டிகை" வெகு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாமனருக்கு கையில் கதாயுதம் கிடையாது.
மகாபலிச் சக்கரவர்த்தி என்பவன் கேட்பவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான்.. அது எந்த இடம்??
தர்மம் செய்வதில் தன்னை விட சிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணமான அகந்தை ஏற்பட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்தல்லவோ? இதை உணர்ந்த மகாவிஷ்ணு அவனுக்கு அகந்தையை வளர விடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார்.
மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டார் வாமனர். அதைக் கேட்டதும் மகாபலிச் சக்கரவர்த்தி, "தாங்களோ குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே, அது எதற்கும் பயன்படாதே" என்றான்.
வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானத்தைத் தடுத்தார் அவனது குலகுரு சுக்ராச்சாரியார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே, வாமனருக்கு இடம் கொடுக்க சம்மதித்தான்.
பெருமாள் விஷ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னோர் அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே?? என்று கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து தலைவணங்கி நின்றான்.
பகவானே! இதோ என் தலை, இதைத்தவிர வேறெதுவும் என்னிடம் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்துக் கொண்டார்.
வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பும் முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒரு முறையாவது தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக் கொண்டான். பகவானும் மகாபலிக்கு அருள்புரிந்து ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர திருநாளில், இதை நினைவு கூறும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மகாபலியும் தான் வேண்டிக் கொண்டபடி விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
🌺🌺 மங்களாசாசனம் :-
"நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய்
என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை
யென்னப்பன் கார்முகில்
வண்ணண்தன் கள்வம் அறிகிலேனே!!!"
நம்மாழ்வார் 11 பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
🌺🌺 வழித்தடம் :-
ஆலவாய் - திருச்சூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருஞாலக்கொடி (இரிஞ்சாலக்குடா) இரயில் நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். ஆலவாயிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
ஷோரனூர் - எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
த்ரிக்காரக்கரா என்று சொன்னால் மட்டுமே இப்பகுதியினருக்குப் புரியும்.
அருள்மிகு காட்கரையப்பன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு வாத்சல்யவல்லித் தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு திருமூழிக்களத்தான் திருக்கோவில் - திருமூழிக்களம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment