🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 66 🌹🌹🌹
சைவ - வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் திவ்யதேசம். ஐந்த தல மூர்த்திகள் தலம். காசி விஸ்வநாதரே எழுந்தருளியிருக்கும் தலம்!!!!
அம்பரீச மகாராஜாவுக்கு தரிசனம் கொடுப்பதற்காக தெற்கு நோக்கி பெருமாள் எழுந்தருளியிருக்கும் தலம்!!! பஞ்சபாண்டவர்கள், அம்பரீசன் ஆகியோர் தரிசித்துள்ள பெருமைக்குரிய தலம்!!!.
தர்மன் அமைத்த ஒரு சன்னதி, பீமன் அமைத்த ஒரு சன்னதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகய இருவரும் இணைந்து ஒரு சன்னதியும் அமைத்து வழிபட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது.
பஞ்ச பாண்டவர்கள் ஐவரில் சன்னதி அமைத்ததைப் பற்றிப் பார்த்தோம். இன்னொருவர் இருப்பாரே பஞ்சபாண்டவர்களில்? அவர் யார் - வேறு யாருமில்லை. பார்த்தனாகிய அர்ச்சுனன் தான். அவர் அமைத்த அந்த சன்னதி எங்கே? "அது தான் நம் பரந்தாமன், பார்த்தனுக்குச் சாரதி, ஸ்ரீமந் நாராயணன், மாயக் கண்ணா, மணிவண்ணா என்றெல்லாம் போற்றப்படும் எம்பெருமானாம் "உய்ய வந்த பெருமாள்" அருள் புரிந்து ஆட்சி செய்யும் மூலவர் சன்னதி.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருத்தலத்தை நாமும் தரிசிக்கலாமா? வாருங்கள் நாமும் தரிசிக்கலாம்.
அருள்மிகு உய்ய வந்த பெருமாள் திருக்கோவில் :-
திருவித்துவக்கோடு (திருமிற்றக்கோடு)
மூலவர்: அபயப்ரதன், உய்ய வந்த பெருமாள்
தாயார்: திருவித்துவக்கோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார்
உற்சவர்: அபயப்ரதன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: தெற்கு
விமானம்: தத்வ காஞ்சன விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம்: குலசேகராழ்வார்
நாமாவளி: ஸ்ரீ வித்வகோட்டுவல்லீ ஸமேத ஸ்ரீ உய்ய வந்தான் ஸ்வாமிநே நமஹ
ஊர்: குருவாயூர்
🌺🌺 திருவித்துவக்கோடு :-
இத்தலத்திற்கு திருவித்துவக்கோடு என்று பெயர் வந்ததற்கான காரணம் அறிய முடியவில்லை. குலசேகராழ்வார் தாம் பாடிய பெருமாள் திருமொழியின் ஐந்தாம் திருமொழிகளில் பத்து பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஆனால் இத்தலத்தைப் பற்றியும் பெருமாளின் நாமத்தையும் குறிப்பிடாமல் "விற்றுவக்கோட்டம்மா" என்று மட்டும் பாடியுள்ளமையால் இத்தலம் "திருவித்துவக்கோடு" எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பதை நம்மால் அறிய முடிகிறது.
"வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாதகாதல் நோயாளன்போல், மாயத்தால்
மீளாத்துயர் தரினும் விற்றுவக்கோட்டம்மா! நீ
ஆளாவுனதருளே பார்ப்ப னடியேனே!!!".
- குலசேகராழ்வார்.
🌺🌺 நான்கு மூர்த்திகள் :-
இத்தல தலவரலாறானது தெளிவாக அறியமுடியவில்லை. ஏனெனில் இரண்டு விதமாகக் கூறப்படுகிறது.
சத்தியம் தவறாது வாழ்ந்த நாபாகன் என்பவருக்கு மகனாகப் பிறந்த அம்பரீசன் என்பவன் இறைவன் நாராயணன் மீது கொண்ட பக்தியால் மிகச் சிறந்த ஏகாதசி விரதமிருந்து வழிபட்டதால், இறைவன் தனது நான்கு திருக்கோலத்தைக் காட்டி அருளியதாகவும், அதன் காரணமாகவே "நான்கு மூர்த்திகள்" குடி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
🌺🌺 பாண்டவர்கள் வழிபட்ட தலம் :-
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்திய பகுதிக்கு வந்த போது இங்குள்ள அழகும், தெய்வீகமும் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கே தங்க முடிவு செய்தனர்.
அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோவில் கட்டி சிலைகளை அமைத்தனர்.
முதலில் அர்ச்சுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாகக் கருதப்படுகிறது.
சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனிச் சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனிச் சன்னதியிலும், நகுலன் மற்றும் சகாதேவன் இருவரும் இணைந்து பிரதிஷ்டை செய்த பெருமாள் தனிச்சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தங்களது வனவாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கி பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.
🌺🌺 காசி விஸ்வநாதர் இங்கே குடிகொண்டதன் காரணம்?:-
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று அங்கேயே தங்கி வெகு காலம் வாழ்ந்திருந்தார். அவரது தாயாரின் உடல்நிலை மோசமான இறக்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் வந்தது.
இதைக் கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தனது தாயாரைப் பார்க்க புறப்பட்டார். அவர் கிளம்பும் போது, இவரது பக்தியின் காரணமாக "காசி விஸ்வநாதரும் முனிவரது குடையில் மறைந்து வந்ததாகக் கூறப்படுகிறது".
முனிவர் வரும் வழியில் இந்த கோவிலைக் கண்டு, தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டு குளிக்கச் சென்றார். முனிவர் திரும்பி வந்து பார்க்கும் போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்துச் சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே, பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும், அதற்கு முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர்.
🌺🌺 பஞ்ச தல மூர்த்திகள் :-
பாண்டவர்கள் அமைத்த நான்கு பெருமாள்கள், காசியிலிருந்து வந்த விஸ்வநாதர் என ஐந்து மூர்த்திகள் ஆசி அருள்வதில் இத்தலமானது ""பஞ்ச (ஐந்து) தல மூர்த்திகள் என அழைக்கப்படுகிறது.
🌺🌺 சைவ - வைணவ ஒற்றுமை :-
இங்குள்ள காசி விஸ்வநாதரான லிங்கத்தைத் தரிசித்து விட்டு தான் மூலவரான உய்ய வந்த பெருமாளைத் தரிசிக்க வேண்டும்.
அப்போது இத்திருக்கோவிலில் இத்தல இறைவனை முழுமையாகத் தரிசித்த பலன் கிடைக்கும்.
சைவப் பெருமானான எம்பிரான் சிவபெருமானைத் தரிசித்து விட்டு, மூலவரான வைணவப் பெருமாளை நாம் தரிசிப்பதால் இத்திருக்கோவில் சைவ - வைணவ ஒற்றுமையாகத் திகழ்கிறது.
கேரள மக்கள் இந்த தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்கிறார்கள். ஏனெனில் காசி விஸ்வநாதர் இங்கிருக்கிறார். பத்து நதிகள் ஒன்றாக இணையும் "பாரதப்புழா" இந்த திருக்கோவிலில் அமைந்துள்ளது. பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
🌺🌺 மங்களாசாசனம் :-
குலசேகராழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார் இத்தல இறைவனிடம்.
"தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால்
சரணில்லை விரைகுழவும்
மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய்
அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைத்தே
அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!!!"
- குலசேகராழ்வார்.
🌺🌺 வழித்தடம் :-
ஷோரனூர் - கோழிக்கோடு இரயில் மார்க்கத்தில் பட்டாம்பி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
ஷோரனூர் - குருவாயூர் மார்க்கத்தில் ஷோரனூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் திருமிட்டக்கோடு என்று கேட்டு இறங்க வேண்டும்.
அங்கிருந்து பாரதப்புழா ஆற்றங்கரையை நோக்கி 2 கி.மீ தொலைவு சென்று இத்தலத்தை அடைய வேண்டும். திருமிட்டக்கோடு என்று கேட்டால் மட்டுமே இங்குள்ளவர்களுக்குப் புரியும்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு காட்கரையப்பான் திருக்கோவில் - திருக்காட்கரை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment