🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 65 🌹🌹🌹
முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வதில் கேரள நாட்டின் முதன்மை தலம். மும்மூர்த்திகள் அருள்புரியும் தலம். மகாலட்சுமி தனிச்சன்னதியில் அருள்புரியும் சிறப்பு வாய்ந்த திருத்தலம். அது ஏன் தனிச்சன்னதி காரணம் அறியலாம் வாருங்கள் அறிந்திடலாம்.
இன்று முதல் நாம் மலை நாட்டின் திவ்யதேசங்களைத் தரிசிக்க இருக்கிறோம். அது என்ன மலைநாடு??? அட "கேரள மாநிலம்" தான். அதைத் தான் "மலை நாடு" என்று கூறுகிறார்கள். மலை நாட்டின் திவ்யதேசங்கள் மொத்தம் 13. அதில் முதல் கோவிலான அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோவில் :-
திருநாவாய்.
மூலவர்: நாவாய் முகுந்தன், நாராயணன்
தாயார்: மலர் மங்கை நாச்சியார்
உற்சவர்: நாராயணன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வேத விமானம்
தீர்த்தம்: செங்கமல ஸரஸ்
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாராயணாய நமஹ
ஊர்: இடக்குளம்
🌺🌺 தலவரலாறு :-
நல்லருள் புரிந்து நாளும் நலமளிக்கும் இறைவன் நாராயணர் மீது அளவற்ற பக்தி கொண்ட நவயோகிகள் மலை நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
1. சத்துவ நாதர்
2. சாலோக நாதர்
3. ஆதி நாதர்
4. அருளித நாதர்
5. மதங்க நாதர்
6. மச்சேந்திர நாதர்
7. கடயந்திர நாதர்
8. கோரக்க நாதர்
9. குக்குட நாதர்
ஆகிய ஒன்பது பேரையும், நவயோகிகள் என்பர்.
ஒருமுறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து "பாரதப்புழா" ஆற்றங்கரையில் உள்ள இத்தலத்தில் தவம் செய்ததாகவும், அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய முகுந்தனாகிய இறைவன் காட்சி தந்து அருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது.
எனவே, நவயோகிக்களுக்காக திருமால் காட்சி தந்த தலமாதலால், இத்தலம் திருநவயோகித்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "திருநாவாய்" என்றானதாக கூறப்படுகிறது.
ஆனால் நம்மாழ்வார் இத்தலத்தை திருநாவாய் என்றே மங்களாசாசனம் செய்துள்ளார்.
🌺🌺 மலைநாடு :-
பொதுவாக மலைநாடு திவ்யதேசங்கள் பலவற்றில் பெருமாளும், திருமகள் தாயாரும், ஒரே சன்னதியில் சேவை சாதிப்பது வழக்கம். ஆனால், இத்திருத்தலத்தில் தாயார் மலர்மங்கை நாச்சியார் என்ற திருநாமத்தில் தனிச் சன்னதியில் காட்சி தந்து அருள்கிறார்.
மேலும், இத்தலத்தில் பிரம்மா மற்றும் சிவபெருமான் ஆகியோருக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தளமாக விளங்குகிறது.
🌺🌺 மங்களாசாசனம் :-
திருநாவாய் முகுந்தனை நம்மாழ்வார் - 11, திருமங்கையாழ்வார் - 2 என 13 பாசுரங்கள் பாடியருளியுள்ளனர்.
"மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்துயிர்
தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும்
திருநாவாய் கண்ணாரக்
களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே!!!"
- நம்மாழ்வார்.
🌺🌺 தலபெருமை :-
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது தமது பாசுரத்தில் இத்தலத்தை திருகோஷ்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த கோவிலில் மட்டும் தான் லட்சுமி தாயாருக்கு தனிச் சன்னதி உண்டு.
கோவிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. இக்கோவிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி சன்னதி உள்ளது. எனவே, இத்தலத்தை மும்மூர்த்திகள் தலம் என அழைக்கிறார்கள்.
காசியில் நடப்பதைப் போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்குத் பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
🌺🌺 மகாலட்சுமிக்கு தனிச் சன்னதி ஏன்???? :-
முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் (கஜேந்திரன் யானை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா??? அந்த யானை தான்) தாமரைப் பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர்.
இதில் ஒரு முறை கஜேந்திரனுக்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான்.
உடனே மகாலட்சுமியை பெருமாள் அழைத்து இனிமேல் நீ பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு என்றார். மகாலட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மனம் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தான்.
பூஜையின் போது பெருமாள், தன்னுடன் மகாலட்சுமியை ஏக சிம்மாசனத்தில் அமரச் செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
கஜேந்திரனுக்குப் பூப்பறிப்பதை விட்டுக் கொடுத்த காரணத்தால் தான் கேரளாவில் இந்த திருக்கோவிலில் மட்டும் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி உண்டு.
🌺🌺 வழித்தடம் :-
கேரள மாநிலம் கோழிக்கோடு செல்லும் இரயில் மார்க்கத்தில் எடக்குளம் என்னுமிடத்தில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சென்றால் பாரதப்புழா ஆற்றங்கரையில் தலம் அமைந்துள்ளது. அல்லது ஷோரனூரில் இறங்கி அங்கிருந்தும் பேருந்து மூலமாக தலத்தை அடையலாம்.
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு மலர்மங்கை தாயார் திருவடிகளே சரணம்
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு உய்ய வந்த பெருமாள் திருக்கோவில் - திருவித்துவக்கோடு திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment