🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 64 🌹🌹🌹
அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் :-
திருக்கடிகை என்ற சோளிங்கர்.
மூலவர்: யோக நரசிம்மர், அக்காரக்கனி
தாயார்: அம்ருதபலவல்லி
உற்சவர்: பக்தோசித பெருமாள்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஸிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம்
மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ.
ஊர்: சோளிங்கர்
🌺🌺 திருக்கடிகை:-
சோழர் பரம்பரையில் புகழ் பெற்று விளங்கிய கரிகாலச் சோழன் காலத்தில், சோழநாடு 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் இப்பகுதி கடிகைக் கோட்டம் என்றும் கடிகாச்சலம் என்றும் பெயர் பெற்று விளங்கியது.
பரந்தாமனான பெருமாள் இங்கு கோவில் கொண்டு அருள்வதால் இவ்விடம் "திருக்கடிகை" எனப் பெயர் பெற்றது.
பரமபத நாதனான திருமால் பிரகலாதனுக்காக சீற்றம் கொண்ட சிம்ம மூர்த்தியாக அகில உலகமும் அதிரும்படியாக அவதரித்தார்.
அத்தகைய சிம்ம மூர்த்தி யோக நிலையில் காட்சி தந்து அருளும் அற்புதமான தலம் இதுவாகும்.
சோழ நாட்டிலேயே பெருமைக்குரிய சிம்மமூர்த்தி குடி கொண்டுள்ள ஊர் என்பதால் இவ்விடம் "சோழசிம்மபுரம்" என்று பெயர் பெற்றது.
நாளடைவில் அதுவே சோளிங்கபுரம் என்று மருவி, "சோளிங்கர்" என்றே தற்போது அழைக்கப்படுகிறது.
🌺🌺 தலவரலாறு:-
அக்காலத்தில் இவ்வூர் மலை மற்றும் மரங்கள் நிறைந்து பசுமையோடு விளங்கியது. அன்றைய காலகட்டத்தில் ரிஷிகளும், முனிவர்களும் மலைசார்ந்த பகுதியில் தங்கி தவமியற்றுவது வழக்கமாகும்.
அவ்வகையில் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர்களான வசிஷ்டர், காஷ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகிய முனிவர்கள், பக்தப் பிரகலாதனுக்குக் காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை யோக நிலையில் கண்டு பேரானந்தம் அடைய வேண்டும் என்று இத்திருத்தலத்தில் நீண்ட காலம் தங்கி தவமிருந்தனர்.
மகரிஷிகள் ஏழு பேரின் தவத்திற்கு மனமிறங்கிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி யோக நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி தந்து அருளினார்.
🌺🌺 இரு மலைகள் :-
திருக்கடிகை திருத்தலம் இரண்டு மலைகள் மற்றும் ஊர் நடுவிலும் அமைந்துள்ளது. மூலவர் யோக நரசிம்மர் ஒரு பெரிய மலை உச்சியிலும், அருள்மிகு யோக ஆஞ்சநேயர் ஒரு சிறிய மலை உச்சியிலும், உற்சவர் அருள்மிகு பக்தோசித பெருமாள் மலை அடிவாரத்தில் ஊர் நடுவிலும் அமைந்துள்ளது.
🌺🌺 பெரிய மலைக் கோவில்:-
பெரிய மலையில் திருக்கோவில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 1305 படிகள் ஏறிச் சென்று தான், யோக நரசிம்மர் அருளைப் பெற முடியும்.
வடக்கு நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டு மிக அழகாக கோவில் அமைந்துள்ளது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் கருவறையிலேயே மூலவர், உற்சவர் ஆகிய திருமேனிகளை வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கியபடி, நமக்கு சேவை சாதிக்கிறார்.
மூலவர் அருள்மிகு நரசிம்மசுவாமி நான்கு கரங்களுடன், சங்கு சக்கராதாரியாக, இரு கால்களும் மடித்து யோகாசனத்தில் அமர்ந்தபடி யோக தவத்தில் வீற்றிருக்கிறார்.
இதன் காரணமாகவே யோக நரசிம்மர் என்ற திருநாமம் பெற்றார். திருமகள் தாயாரான அருள்மிகு அமிர்தபலவல்லி தாயார், பெரிய மலையில் பெருமாளுக்கு அருகில் கிழக்கு முகமாகத் தனிச் சன்னதியில் காட்சி தந்து அருள்கிறார்.
🌺🌺 சிறிய மலைக் கோவில்:-
சிறிய மலையில் அஞ்சனையின் மைந்தனான அருள்மிகு ஆஞ்சநநர் சுவாமி திருக்கோவில் கொண்டுள்ளார். இம்மலை 350 அடி உயரமும், 406 படிகளைக் கொண்ட மலைக்கோவிலாகும்.
மலையின் மீது அரங்கநாதர், இராமர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் சன்னதிகளும், தக்கான் தீர்த்தக்குளமும் அமைந்துள்ளது. இராம பக்தரான அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமாள் யோகாசனத்தில் யோக ஆஞ்சநேயராக நான்கு கரங்களில், சங்கு சக்கரங்களுடன் மேற்கு நோக்கி யோக நரசிம்ம சுவாமியை சேவித்தவாறு அருள்கின்ற காட்சியானது வேறு எங்குமே காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
🌺🌺 உற்சவர் கோவில்:-
யோக நரசிம்மரின் உற்சவரான அருள்மிகு பக்தோசித சுவாமி மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் இவருக்கே சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
🌺🌺 ஆதிகேசவர் சன்னதி:-
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் உபநாச்சியாருடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். பெரியமலை, சின்னமலைக்குச் சென்று சேவிக்க இயலாதவர்கள் இவருக்கு ஆராதனைகளைச் செய்கின்றனர்.
🌺🌺 சிறப்புகள்:-
உக்கிர மூர்த்தியான நரசிம்மர் சுவாமி தவசீலராக யோக நிலையில் காட்சி தரும் திவ்யதேசம்.
மூலவர் ஒரு மலையிலும், ஆஞ்சநேயர் ஒரு மலையிலும், உற்சவர் மலை அடிவாரத்திலும் அருள்கின்ற திவ்யதேசம்.
ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தந்து அருளும் ஒரே திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி அமிர்தபலவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
பேயாழ்வார் - 1, திருமங்கையாழ்வார் - 3 என மொத்தம் 4 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம் :-
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் திருத்தணியிலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. சோளிங்கர் நகருக்கு 2 கி.மீ தொலைவில் உள்ள கொண்டபாளையம் என்னுமிடத்தில் மலை மீது திருக்கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு அமிர்தபலவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு யோக ஆஞ்சநேயர் சுவாமி திருவடிகளே சரணம்.
தொண்டை நாட்டின் திவ்யதேசங்கள் 22 இன்றுடன் நிறைவடைகிறது.
🌺🌺 அடுத்த பதிவில்:-
இனி வரும் திங்கள்கிழமை முதல் மலைநாட்டின் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம். மலை நாட்டின் முதல் கோவில் அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோவில் - திருநாவாய் திருத்தலத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment