Saturday, February 6, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 63

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 63 🌹🌹🌹

பெருமாள் தரைதலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம்.

அருள்மிகு தலசயனப் பெருமாள் திருக்கோவில்:-
மூலவர்: தலசயனப் பெருமாள்
தாயார்: நிலமங்கை தாயார்
உற்சவர்: உலகுய்ய நின்ற பெருமாள்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ககநாக்ருதி விமானம்
தீர்த்தம்: புண்டரீக புட்கரணி, கருட நதி
மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ நிலமங்கைநாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்தலசயனத்துறைவான் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: மாமல்லபுரம்

🌺🌺 மாமல்லபுரம்:-
இறைவன் நாராயணன் அருட்தலங்கள் ஏழு இருந்ததாகக் கூறப்படுகிறது. மாமல்லபுரம் 2000 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கியதாக சங்க இலக்கியங்கள் பலவற்றில் பதிவாகியுள்ளது.
மாமல்லன் என்ற பல்லவ மன்னனால் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவனது பெயராலேயே இவ்வூர் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன், திருமால் தலத்தையே திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ததாகத் தெரிகிறது. ஆழ்வார் தமது பாசுரங்களில் சிவபெருமானையும் சேர்த்து பாடியுள்ளமையையும் நம்மால் அறியமுடிகிறது.

"பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிருச் சக்கரத்து எம்பெரு
மானார்க்குஇடம் விசும்பில்
கணங்களிங்கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்
வணங்குமனத்தாரவரை
வணங்குஎன்தன் மடநெஞ்சே!!"

இப்பாடலின் முதல் வரியில் "இடுகாட்டில் நடமாடும் இறைவனோடு இணங்கும் இறைவன்" என்னும் பொருளில் பாடியுள்ளமையால் கடற்கரை கோவில் என்பது உறுதியாகிறது.

ஆனால் அக்கோவில் தற்போது மத்திய தொல்பொருள் இலாக்கா வசம் உள்ளது. இதில் பூஜைகள் எதுவும் நடைபெறுவதில்லை. சுற்றுலாத் தலமாகவே இயங்குகிறது.

ஆனால் தற்போது திவ்யதேசமாகக் கூறப்படும் இத்லத்தில் சிவபெருமான் சன்னதி இல்லை. மேலும் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கையில், கடல் சீற்றத்தின் காரணமாக கி.பி 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தில் வந்த பராங்குச மன்னரால் தற்போதுள்ள அருள்மிகு தலசயனப்பெருமாள் கோவில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

🌺🌺 தலவரலாறு:-
ஒரு காலத்தில் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் ஏராளமான பறவை இனங்கள் கானம் பாட, மயிலினங்கள் ஆட, மலர்செடிகளும், மரங்களும், பூத்துக்குலுங்கும் அழகு ததும்பும் சோலைகளாக இருந்தன.
அச்சமயத்தில் பாற்கடல் பரந்தாமன் மீது அளவற்ற பக்தி கொண்ட புண்டரீக முனிவர், பக்தி பெருக்கால் பித்தாகிப் போனார். அவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார்.

பறித்த பூக்களை கூடையில் இட்டு, கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் வந்தது. பக்திப் பெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார்.
பல ஆண்டுகளாக இதைச் செய்தார். "பரந்தாமா நான் கொண்ட பக்தி உண்மையானால் கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். அதுவரை இந்தப் பூக்கள் வாடாமல் இருக்கட்டும்" என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா?? ஒரே இரவில் சோர்ந்து விட்டார். பின் சோர்ந்தாலும் பரவாயில்லை, இறைவனின் பாதத்தில் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இறைவனை நினைத்து நீரை வெளியேற்ற ஆரம்பித்தார்.

அப்போது அவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் வந்து நின்றார்.

எம்பெருமான் தன் பக்தனிடம் விளையாடாமல் இருப்பாரா??? அவர் தான் குரும்புக்காரராயிற்றே!! இப்போது அவர் புண்டரீக மகரிசியை மேலும் சோதிக்கும் வகையில், "கடல் நீரை இறைக்கிறீரே!! இது சாத்தியமா??? உருப்படியாக ஏதேனும் செய்யலாம் அல்லவா?? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்", என்றார் குரும்புக்கார பரந்தாமன்.

புண்டரீக மகரிஷி "முனிவரே!! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியினை நான் தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாளைப் பார்ப்பதற்காக இந்த கடல் நீர் வற்றியே தீரும்", என்றார்.

மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து, "இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
மகரிஷி வருவதற்குள் இந்த பெருமாள் தரையில் சயனித்து காட்சி கொடுத்தார்.

தரையில் சயனித்திருக்கும் கோலத்தில் காட்சியைக் கண்டதும், ஆதிசேஷன் மேல் காட்சி தரும் எம்பெருமான் பரந்தாமன் ஸ்ரீமந்நாராயணன் இப்படி தரையில் காட்சி கொடுக்கிறாரே என்றெண்ணி தான் பறித்து வைத்திருந்த தாமரை மலரை இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து ஆனந்தமடைந்தார் புண்டரீக மகரிஷி.

பின்பு "பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையைச் சுமக்கச் செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தின் அருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்" என்றும் வேண்டினார்.

பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயனத் திருக்கோலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் காட்சி கொடுத்ததால் "தலசயனப் பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.

🌺🌺 பூதத்தாழ்வார்:-
பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவதான பூதத்தாழ்வார் அவதாரம் செய்த திருத்தலம் இதுவாகும்.
இதனால் இத்தலத்தில் ஆழ்வார் உற்சவம், பெருமாள் உற்சவம் என இரண்டு உற்சவங்கள் நடைபெறுகின்றன.

🌺🌺 சிறப்புகள்:-
பெருமாள் தரைத்தலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம்.
தாயாரும் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்திருக்கும் ஒரே திவ்யதேசம்.
உற்சவர் தாமரை மலரை ஏந்தியுள்ள ஒரே திவ்யதேசம்.
பூதத்தாழ்வாரின் திருஅவதாரத் திருத்தலம் இதுவாகும்.
பூதத்தாழ்வார் - 1, திருமங்கையாழ்வார் - 26 என இருவரும் பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம்:-
மாமல்லபுரம் பேருந்து நிலையத்தின் நேர் எதிரில் அமைந்துள்ளது. சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.

🌺🌺 குறிப்பு:
இப்போது இத்திருக் கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன என்று கூறுகிறார்கள். அது பற்றி அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
அருள்மிகு தலசயனப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு நிலமங்கைத் தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில் - திருக்கடிகை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
""ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment