கறுப்புக் குதிரை - சுஜாதா சிறுகதை
கிரிக்கெட் கிச்சா என்று என்னை திருவல்லிக்கேணி வட்டாரத்தில் தெரியும். சர்வதேச அளவில் அம்பயர் கே ஸ்வாமி. ஜான் ஆர்லாட் கூட இறப்பதற்கு முன் என்னைப் பற்றி மிக்க மரியாதையுடன் பேசியிருக்கிறார். எனக்கு சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் மீது பிரேமை. ஸ்கூல் கேப்டனாக இருந்தேன்.
பின், பல்கலைக்கழகத்திற்கு ஆடினேன். நான் போட்ட லெக் பிரேக், கூக்ளிகளை அடிக்க முடியாமல் சிதறியவர்கள் ஏராளம்.
ரஞ்சி டிராபிக்காக தமிழ்நாடு அணிக்கு செலக்ட் ஆகி, அந்த சீசனுக்கு முதல் ஆட்டம் கேரளாவுடன். கொச்சினுக்கு போனபோது என் வாழ்க்கை திசை மாறியது. டாஸ் ஜெயித்து, ஃபீல்டிங் எடுத்தோம். கொச்சின் ஜிம்கானாவுக்கு எதிரே உள்ள பசும்புல் மைதானத்தில்தான் 'ஃபைன் லெக்'கில் நின்று கொண்டிருந்த போது எங்கள் வேகப்பந்தாளர் பிரசாத் போட்ட பந்தைக் கேரள பேட்ஸ்மேன் தொட்டு விட்டதில், சர்ரென்று பந்து ஸ்லிப்புக்கும் விக்கெட் கீப்பருக்கும் தண்ணி காட்டிவிட்டு விரைந்தது. அதை நான் ஃபைன் லெக்'கிலிருந்து குறிக்கிட்டுத் தேக்க ஓடி வந்தேன். பௌண்டரி கோட்டைக் கடப்பதற்கு ஒரு இன்ச் இருக்கும்போது சர்ரென்று வழுக்கி நிறுத்தினேன்.
கைதட்டி என்னைப் பாராட்டினார்கள். ஆனால், நான் எழுந்திருக்கவில்லை. வந்த வேகத்தில் ஒரு ஆயுர்வேத சோப் விளம்பரத்தின் இரும்புக் காலில் 'டமால்' என்று மோதியிருந்தேன். எழுந்திருக்க முயற்சித்தபோது மூலத்தைப் பிடிக்கிறாற் போல் வலித்தது.
ஸ்ட்ரெச்சர் கொண்டுவந்து என்னை அள்ளிச் சென்றார்கள். நான் மேலும் ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல்....முக்கியமான ஸ்ட்ரைக் பௌலர் இல்லாததால் முதல் இன்னிங்ஸ் லீட் கேரளாவுக்குக் கொடுத்து, முழு பாய்ண்ட் எடுக்க முடியாமல் கேரளாவுடன் ட்ரா !! ட்ரெஸ்ஸிங் ரூமில் அழுதேன்.
அதன்பின் கிரிக்கெட் ஆடவில்லை. வலது காலில் முறிவு. ஆபரேஷன் செய்து, எலும்புத் துண்டுகளை நீக்கி, ப்ளேட் போடும்படி ஆகி, இப்போது கூட விந்தி, விந்தித்தான் நடக்கிறேன்.
"போறும், போறும், நீங்க கிரிக்கெட் ஆடினது. பகவானா பார்த்துத் தடுத்துட்டார். காலை உடைச்சுண்டதும், அலமாரி நிறைய சொப்பு சொப்பா கப்பும், போட்டோ ஆல்பமும்தான் மிச்சம். எல்லாம் போறும். இனிமே அலைய வேண்டாம்" என்றாள் என் மனைவி சுந்தரி.
அவளுக்கு கல்யாண தினத்திலிருந்தே கிரிக்கெட் மேல் வெறுப்பு. முதலிரவின் போது நடுவே நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் மாட்சைப் பார்த்துவிட்டு வந்தது தப்புதான். அந்தக் குற்றத்தை அவள் மன்னிக்கவே இல்லை. 'மறுபடி கிரிக்கெட் ஆடுவதை மறந்து விடு' என்று டாக்டர் மாருதி ராவும் சொன்னார்.
"டாக்டர், அது எப்படி? மனம் முறிஞ்சு தற்கொலை பண்ணிக்கக்கூட தோணுது. ரத்தத்தில் கிரிக்கெட் அப்படி ஊறியிருக்கு டாக்டர்"
"டோன்ட் பி ஸில்லி, நீங்க ஆட விரும்பினாலும் உங்க கால் ஆடாது. பேட்டிங், பௌலிங் எல்லாத்துலையும் வலிக்கிறதோல்லியோ ?"
"ஆமாம்"
"பேசாம ஒரு காரியம் பண்ணுங்க. கிரிக்கெட் பத்தி ஏதாவது ரிப்போர்ட் பண்ணச் சம்மதமா இருந்தா சொல்றேன். 'ஹிண்டு'வில மருமான் இருக்கான். காஷுவல் ரிப்போர்ட்டரா ஆரம்பிக்கலாம்"
"எப்படியாவது கிரிக்கெட்டோட தொடர்பு இருந்தால் சரி" என்று ஒப்புக்கொண்டேன். ஆனால், தீவிரமாக விளையாடியவன், அகில இந்திய அளவில் ஒரு ஆல்ரவுண்ட் உதயதாரகையாகி இருந்த நான், நுங்கம்பாக்கம் மூன்றாவது டிவிஷன் 'ரைஸிங் சன்'னுக்கும் 'ஜெய் ஹிந்து'க்கும் மாட்சை அரைப் பத்தியில் எழுதுவது அவமானமாக இருந்தது. அதுவும் பெயர் போட்டு வராது. 'ஃப்ரம் அவர் ஸ்டாஃப் ரிப்போர்ட்டர்' என்றுதான்.
அப்போது என் தம்பி ஜபல்பூரிலிருந்து வந்திருந்தான். அவன்தான் சொன்னான்.
"உனக்கு கிரிக்கெட் மேல அவ்வளவு ஒட்டுதல்ன்னா, பரீட்சை பாஸ் பண்ணி அம்பயரா போயேன். ஜபல்பூர்ல ஒரு கோச்சிங் க்ளாஸ் கூட இருக்கு. அம்பயரா மேல மேல வந்து டெஸ்ட் மேட்ச், 'ஒன் டே இன்டர்நேஷனல்' அளவுக்கு வரலாமே அண்ணா...."
சட்டென்று எனக்குள் அந்தப் பொறி பற்றிக்கொண்டு விட்டது. ஆம், இதுதான் என் காதலியான கிரிக்கெட்டை விட்டுப் பிரியாமல் இருக்க வழி என்று உடனே எம்.ஸி.ஸி. டௌன் அண்ட் கௌண்ட்டி கிரிக்கெட் போர்ட், இண்டெர்நேஷனல் கிரிக்கெட் கான்ஃபரன்ஸ் இவர்கள் பதிப்பித்த புத்தங்களையெல்லாம் வாங்கி வந்து, "எதுக்கு இப்படி ராப்பகலா படிக்கிறீங்க? டிபார்ட்மெண்ட் பரிட்சைக்காகப் படிச்சாலாவது கிளார்க் உத்தியோகத்திலிருந்து ஆஃபிஸரா பிரமோஷனாவது கிடைக்கும்...." என்று சுந்தரி அங்கலாய்த்தாள்.
"உனக்கு என்ன தெரியும் இதைப் பத்தி..."
"ஒண்ணே ஒண்ணு தெரியும். நீங்க படிக்கிறது ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத படிப்பு..."
"காசு...காசு ...காசுதான் முக்கியமா?"
"நான் என்ன அதிக ஆசைப்பட்டேனா? மத்தவா மாதிரி பட்டுப்புடவை, வைர நெக்லஸ்ன்னு கேட்டேனா...? இந்த மாதிரி ஓட்டை வீட்டுல இருந்ததுண்டு, பால் கார்டு வாங்கக் கடன் வாங்கிண்டு அன்னாடத் தேவைக்கே காசு போறாம இருக்கறப்ப, வீடு நிறைய கிரிக்கெட் புஸ்தகமா முந்நூறும், நானூறும் கொடுத்து வாங்கி வெச்சுண்டிருக்கேளே ....எனக்கு எரிச்சல் வருமா, இல்லையா?"
"காசு வருமா?"
"இல்லை சுந்தரி. பேர் வரும். எல்லோரும் என்னை ஒரு நொண்டி கிரிக்கெட்டர்னு சொல்ல மாட்டா....எனக்குன்னு இந்த ஆட்டத்துல அந்தஸ்து கிடைக்கும். டிக்கி பேர்ட் மாதிரி , ரெவரென்ட் டேவிட் ஷெப்பர்ட் மாதிரி...அது எனக்கு முக்கியம்..."
"உங்களைத் திருத்தவே முடியாது" அவள் பேச்சில் நியாயம் இருந்ததால் எரிச்சலை அடக்கிக்கொண்டேன். கிரிக்கெட்டால் குடும்பத்துக்கு எந்த வித சவுகரியமும் இல்லை.
பாங்க் வேலையில் கிரிக்கெட் மேட்ச் இருக்கும் போதெல்லாம் லீவு போட்டுவிட்டு, ப்ரோமோஷன் கிடைக்காமல், தாமதமாக அது கிடைத்த போது வடக்கே மாற்றிவிட்டார்கள் என்று அதை நிராகரித்து, கிளார்க்காகவே நிரந்தரமாக திருவல்லிக்கேணி வாழ்க்கையில் சம்பிரதாயமான குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் கிரிக்கெட்டில் ஒரு அம்பயராவது மட்டுமே ஜென்ம சாபல்யம் என்று சொல்லும் ஒரு பிரகிருதியை கணவனாகப் பெற்ற அதிர்ஷ்டக்கட்டை அவள். எத்தனையோ அவளுக்கு சமாதானம் சொல்வேன், “ வாழ்க்கை எப்போதுமே இப்படி ரேஷன் அரிசியிலும், பாமாயிலிலும் செல்லாது சுந்தரி…”
“ பார்க்கலாம், வருகிற சித்திரை மாதத்திற்குள் விடிவு காலம் வரும் என்று அனுமார் ஜோசியர் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்” என்றாள்.
“பாரேன், ஒரு நாள் உன் கணவனை உலகமே புகழப் போகிறது” என்றேன்.
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். 26 ஆம் தேதி பக்கத்து வீட்டு அலமேலுவிடம் கடன் வாங்காமல் இருந்தால் போதும்” என்று கண்ணீர் விட்டு அழுதாள்.
அம்பயர் பரீட்சையில் தேறி, முதல் ரஞ்சி டிராபியிலும் அடுத்த இரண்டு வருடத்திலேயே டெஸ்ட் அம்பயர் பானலிலும் நான் படிப்படியாக முன்னேறிய தெல்லாம் சுவாரஸ்யம் இல்லாத விஷயங்கள்.
இன்றைக்கு என்னை மற்ற நாடுகளில் அழைத்து உபசரிக்கிறார்கள். 'பாரபட்சமற்ற அம்பயர்' என்று பெயர் வாங்கிவிட்டேன். ஷார்ஜா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று போய் வந்தாகிவிட்டது. என் அம்பயர் திறமைகளை லண்டன் டைம்ஸ் கூட வியந்திருக்கிறது.
ஒரு முறை காமெண்ட்ரியின் போது காமெண்ட்டேட்டர் "அம்பயர் கே ஸ்வாமி ஸ்டான்ட்ஸ் லைக் தி ராக் ஆஃப் ஜிப்ரால்டர்" என்று கமெண்ட் அடித்தாராம்! இதைவிடப் பெருமை நமக்கு, நம் நாட்டுக்கு வேண்டுமா? சுந்தரி சொன்ன அந்த பொன் விடியல் வினோதமான வடிவத்தில் வந்தது.
விவரம் சொல்லும் முன், புதிதாக ஆரம்பித்த சர்வதேச போட்டியை பற்றி சொல்ல வேண்டும். மத்திய கிழக்கு நாடு ஒன்று ஒரு சர்வதேச குளிர்பான கம்பெனியுடன் சேர்ந்து உலகக் கோப்பைக்கு இணையாக ஒரு கோல்டன் வேர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட் போட்டி நடத்தியது.
அதன் விசேஷ அம்சம், ஏராளமான பரிசுத் தொகைகள்! ஒவ்வொரு வெற்றிக்கும் அரை மில்லியன் டாலர். கடைசியில் வென்றால் ஒரு மில்லியன் என்று ரகளையாக பரிசுகளை வாரி இறைத்து இருந்ததால் பதினாறு நாடுகள் பெயர் கொடுத்தன. ஐரோப்பிய தேசங்களான இத்தாலி ஜெர்மனி போன்றவை கூட பெயர் கொடுத்திருந்தன. கிரிக்கெட் சனாதிகளுக்கு கொஞ்சம் கோபம். குளிர்பான காரர்கள் ‘ எந்த நாட்டுக்கும் கிரிக்கெட் விளையாடும் உரிமை இருக்கிறது’ என்றுதான் எல்லோரையும் அழைத்தார்கள். அவர்கள் முதலீடு செய்யும் பணத்தைவிட பத்து மடங்கு அதிகமாக டிவி ஸ்பான்சர்களிடமிருந்து வருவதால் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
நான்கு நான்காக, பதினாறு டீம்களை பிரித்து, கிரிக்கெட் ஆடும் அத்தனை வல்லரசுகளும், சிற்றரசுகளும் பங்குகொள்ள கோலாகலமாக நடந்தது. அந்த டோர்னமென்டின் செமி பைனல் மேட்சுக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
"சுந்தரி, பாத்தியா....பாங்கில் ப்ரமோஷன் வாங்கியிருந்தால் கூட இந்த மாதிரி பெருமையெல்லாம் கிடைக்குமா?"
ஒரு பெரிய ஹோட்டலில் எனக்கும் என் மனைவிக்கும் தங்க வசதி, தினத்துக்கு 500 டாலர் பேட்டா, போக்குவரத்து, காஃபி, டிபன் செலவுகள் இலவசம் !
"பாத்தியா....உன் புருஷன் உதவாக்கரைன்னு சொன்னியே...." என்று ஹில்டன் லாபியில் வைத்து சுந்தரியிடம் கேட்டேன்.
"ஆமா, இரண்டு நாளைக்கு ராஜாவா இருந்து என்ன பிரயோஜனம்....? திரும்ப, திருவல்லிக்கேணி போயி மெட்ரோ வாட்டருக்கு லாரி பின்னால அலைஞ்சுதான் ஆகணும்..."
"வரதை வெச்சுண்டு திருப்தியா இருக்கப் பாரு" என்றேன் கோபத்துடன்....
"எனக்கு போரடிக்கிறது..." என்றாள்.
இவளை திருப்திபடுத்தவே முடியாது. அப்போது அந்த நடுத்தர வயதுக்கார அந்நியன் என்னை அணுகினான். பார்த்தால் சவுதி அரேபியன் போல இருந்தது. ஆனால் சம்பிரதாய சவுதி அங்கி அணியவில்லை. கருநீல சூட், ஆங்கில உச்சரிப்பில் மேல்நாட்டு படிப்பு தெரிந்தது. எந்த தேசத்தவன், மத்திய கிழக்கு நாடுகளில் எந்த ஊர்க்காரன் என்று சொல்ல முடியவில்லை. கிரேக்கவனாகவும் இருக்கலாம். நல்ல சிவப்பாக இருந்தான். "மிஸ்டர் சுவாமி, நான் உங்கள் விசிறி, உங்களைப்போல ஒரு அம்பயரை நான் சந்தித்ததே இல்லை” என்று பீடிகையுடன் பெரிய மலர்கொத்து ஒன்றையும் ஸ்விஸ் நாட்டு சாக்லேட் பெட்டி ஒன்றையும் கொடுத்துவிட்டு, “ கொஞ்சம் பேசலாமா?” என்றான்.
“ எதைப்பற்றி?” என்றேன் எச்சரிக்கையுடன்
.
"கிரிக்கெட் பற்றி. இந்த கோல்டன் கப் போட்டியைப் பற்றி”
"கிரிக்கெட் பற்றி. இந்த கோல்டன் கப் போட்டியைப் பற்றி”
"நீங்கள் போயிட்டு வாங்க. நான் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள் சுந்தரி.
ஹோட்டலின் மேல் மாடியில் அவனுடைய சூட் இருந்தது. ஜன்னலுக்கு வெளியே சுறுசுறுப்பான துறைமுகம், பல மாடிக் கட்டடங்களும், தாழ்வாகப் பறந்து தரையைத் தொடும் விமானங்களும், கிரிக்கெட் மைதானத்தின் புல்வெளியும், கலர் கலரான பிளாஸ்டிக் இருக்கைகளும் தெரிய, அவன் தெளிவான கோப்பையில் ஸ்காட்ச் ஊற்றி என் முன் நீட்டினான்.
“ மன்னிக்கவும், நான் குடிப்பதில்லை”
“ ஒயின் வேண்டுமா?”
“எதுவும் வேண்டாம்”
“ மிஸ்டர் சுவாமி, என்னை ஜோ என்று கூப்பிடுவார்கள். ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன்.. “
“என்ன?”
"டோர்னமென்ட்டில் செமி பைனல் மேட்ச்…. நீங்கள் அம்பயர் ஆக இருக்கப் போகிறீர்கள். மேட்ச் யாருக்கும் யாருக்கும் தெரியுமா?”
“ஜெர்மனிக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும்”
“ ஜெர்மனி எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இல்லையா?”
“ ஆம். அதைத்தான் 'டார்க் ஹார்ஸ்' என்பார்கள்”
“ இருந்தும் இதுவரை எந்தவித கிரிக்கெட் அனுபவமும் இல்லாத, ஃபுட்பால் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு தேசம்... சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்…. ஏன் உங்கள் இந்தியா என்று எல்லாவற்றையும் வீழ்த்தி செமி பைனல் வந்திருக்கிறது என்றால் என்ன சொல்கிறீர்கள்?"
"கிரிக்கெட் இஸ் எ கேம் ஆப் க்ளோரியஸ் அன்செர்ட்டன்டிஸ் என்று சொல்லுவார்கள்".
"இருந்தும் இது அநியாயம் இல்லையா ? என் போன்ற தரகர்கள் என்னாவது"
"ஜெர்மனியால் வெஸ்ட் இண்டீஸை வெல்ல முடியாது என்று சொல்கிறார்கள். அவர்கள் 'அதிர்ஷ்ட ஓட்டம்' முடிந்துவிட்டது என்று டைம்ஸ் எழுதியிருக்கிறது. ஆமாம் உங்களுக்கு அதில் என்ன நஷ்டம்?”
"கோடிக்கணக்கான டாலர்கள்" என்றான். கைகள் உதறின.
"ஏன்?"
"ஜெர்மனி இறுதி ஆட்டத்துக்கு வராது என்று ஒன்றுக்கு இரண்டாயிரம் என ஆஃபர் செய்திருக்கிறேன், 20 பேர் ஆயிரம் டாலர்கள் பெட் கட்டி இருக்கிறார்கள். ஜெர்மனி ஜெயித்தால் நான்......லெட் மி ஸீ" என்று தன் பையிலிருந்து கால்குலேட்டரை எடுத்து ஒத்தி..."அவர்களுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டி இருக்கும்.."
"ஜெர்மனி ஜெயிக்காது"
"சொல்ல முடியாது. ஜெர்மனி வரும் என்று யார் எதிர்பார்த்தார்கள்? முதல் ஆட்டத்தில் கீன்யாவிடம் உதைபடும் என்று எண்ணினேன். அதனால்தான் தைரியமாக ஒப்புக்கொண்டேன். மேற்கிந்திய முன்னாள் டெஸ்ட் பிளேயரை கோச்சாகக் கொண்டு , க்ரையூஃப், ஹாம்ஸ்டன் என்று இரண்டு பேர் இதுவரை பிளந்து கட்டியிருக்கிறார்கள். அதுவும் க்ரையூஃப் கால்பந்து சாம்பியனின் மகன். நல்ல பேட்ஸ்மேன். ஜெர்மனி ஜெயித்தால் நான் தற்கொலை பண்ணிக்கொள்ள வேண்டிவரும். என் பேரும் சீரழிந்துவிடும்."
"பணம் கொடுக்கவில்லையென்றால்?"
"கொன்று விடுவார்கள்"
"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? புரியவில்லை !"
சொன்னான்.
நான் அவனை வெறித்துப் பார்த்து "நோ" என்றேன், அழுத்தமாக.
"சும்மா கேட்கவில்லை. இதை நிறைவேற்றினால் உங்களுக்கு ஐம்பதாயிரம் டாலர் கொடுக்கிறேன். யோசித்து முடிவு செய்யுங்கள்"
"ஸாரி, என்னைத் தப்பாக எடை போட்டுவிட்டீர்கள்...."
"மிஸ்டர் சுவாமி, யோசித்துப் பாருங்கள். இப்போதே இல்லை என்று சொல்ல வேண்டாம். க்ரையூஃப், ஹாம்ஸ்டன் இரண்டு பேர்தான் முக்கியம். இருவரில் ஒருவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்துவிட்டால் போதும். ....அல்லது அவுட் ஸ்விங்கரைத் தொட்டதற்காக காட் பிஹைண்ட் .....இந்த ஆட்டத்தில் சூதாடிச் சூதாடி நானே எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன். உடனே இல்லையென்று சொல்லாதீர்கள். ஆற, அமர யோசித்து இன்றிரவு சொன்னால் போதும்...." என்றான்.
நான் படுகோபத்துடன் "நீங்கள் எப்போது கேட்டாலும் பதில் இதேதான். கிரிக்கெட் எனும் ஆட்டத்தின் புனிதத்தைக் கெடுக்க முடியாது"
அவன் எகத்தாளமாக சிரித்தான்... "ஹ ! புனிதம்! , மிஸ்டர் ஸ்வாமி, உங்களுக்கு இந்த ஆட்டத்தில் திரைக்குப் பின் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாது"
"அது எனக்கு தேவையில்லை. கிரிக்கெட் ஆட்டம் எனக்கு தெய்வத்துக்கு சமமானது. இது வாழ்க்கை நெறி" என்றேன்
அவன் சிரித்து "அப்பாவி நீங்கள்"
லவுஞ்சில் இருந்த என் மனைவியைப் பார்த்து "உங்கள் கணவர் ஐம்பதாயிரம் டாலர் வேண்டாம் என்கிறார். கொஞ்சம் புத்தி சொல்லுங்கள்" என்றான்
அவன் போனதும் "பைத்தியக்காரன்" என்றேன்
"என்ன சொல்கிறான் அவன்...?"
"நாளை மேட்ச்சில் ஒரு ஆளுக்கு எல்பி கொடுக்கணுமாம். ஜெர்மனியை தோற்கடிக்க வேண்டுமாம். அதற்கு பணம் தருகிறானாம். என்ன தைரியம் இருந்தா என் கிட்ட வந்து இது மாதிரி லஞ்சம்….."
"ஏன் கொடுத்தால் என்ன..."
"என்ன சுந்தரி இது..."
"ஐம்பதாயிரம் டாலர் என்பது உத்தேசமாக நம் ரூபாயில் எவ்வளவு?"
"சுமார் 16 லட்சம் ரூபாய்..."
"ஐயோ, ஜோசியர் சொன்னது அப்படியே பலிக்கிறது….லட்சுமி கடாட்சம் கொட்டப் போகிறது. சித்திரை மாதத்திற்குள்ளேன்னு சொன்னது மார்கழியிலேயே வந்துவிட்டது. ஒப்புக் கொள்ளுங்கள்….
.
"என்ன உளர்றே, நான் அதுக்கு சம்மதிப்பேங்கறயா?"
"என்ன உளர்றே, நான் அதுக்கு சம்மதிப்பேங்கறயா?"
"பின்ன அதனால் என்ன? ....எல்லாமே ஒரு விளையாட்டுதானே !"
"சுந்தரி, உன்னை அப்படியே கழுத்தை நெரிக்கலாம் போல ஆத்திரம் வரது. கிரிக்கெட் என்ன புனிதமான ஆட்டம் தெரியுமா? அது கடவுள் மாதிரி எனக்கு. ....கோயில் மாதிரி..."
"ஆ...மா....கடவுள், கோயில்னு சொல்லிண்டு தேடிண்டு வர மஹாலட்சுமியை விரட்டுங்கோ. உங்களைப் போல பிழைக்கத் தெரியாத ஜென்மத்தை நான் பார்த்ததில்லை. என் விதி அப்படி. மறுபடியும் திருவல்லிக்கேணி சந்துக்குள்ளே சாக்கடை குத்திண்டு ஒண்டுக் குடித்தனத்தில் டிரான்சிஸ்டர்ல சொட்டு நீலம் விளம்பரத்தை நாள் பூரா கேட்கணும்ன தலைல எழுதியிருக்கு..."
"நீ என்ன சொன்னாலும் இதுக்கு நான் ஒப்புக்கொள்ள முடியாது..."
அதன்பின் அவள் பேசவில்லை.
அந்த மேட்சின் மற்றொரு பிரிட்டிஷ் அம்பயரான டக்ளஸ் ஜானுக்கு போன் செய்தேன் "டக்ளஸ்! ஸ்வாமி பேசுகிறேன். உங்களை ஜோ என்ற ஒரு ஆசாமி அணுகினால் துரத்தி விடவும்"
"உன்னையும் அணுகி விட்டானா…. இப்போதுதான் அவனை விரட்டி விட்டேன். அம்பயர் என்றால் விலைக்கு வாங்க முடியும் என்று நினைத்தானா…. என்ன ஒரு ஆணவம்….. நீ என்ன சொன்னாய்?"
"நானும் விரட்டி விட்டேன்"
"சுவாமி, உனக்குத் தெரியாது. இந்த டோர்னமென்ட்டின் மேசைக்கு கீழே புழங்கும் பணம் கோடிக்கணக்கான து. இவர்களெல்லாம் மாஃபியா. எதற்கும் எச்சரிக்கையாகவே இரு. மேட்ச் துவங்கும் வரை ரூமை விட்டு வெளியே வராதே…. வேண்டுமென்றால் பாதுகாப்பு கேள்"….
எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. ராத்திரி பத்து மணிக்கு ரூமுக்கு போன் வந்தது. "மிஸ்டர் சுவாமி தீர்மானித்தீர்களா?"
"ஆம்" என்றேன்
"பணத்தை இப்போதே அனுப்பி விடவா?"
"நான் உங்கள் கோரிக்கைக்கு இடமளிப்பதாக இல்லை"
"தட் மீன்ஸ் யூ ஆர் ஸேயிங் நோ "
"அப்படித்தான்" என்றேன் அழுத்தந்திருத்தமாக.
"உங்களைப்போல ஒரு இழப்பாளி இல்லை என்று சொல்லத் தோன்றினாலும் உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்" என்று போனை வைத்து விட்டான்.
ராத்திரி முழுவதும் தூக்கமில்லாமல் நான் புரண்டு புரண்டு படுத்தேன். கிரிக்கெட்டின் பின்னணியில் நடக்கும் சூதாட்டங்களை பற்றி நான் ஏற்கனவே ஷார்ஜாவில் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆஸ்திரேலியாவிலும் அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால் இத்தனை பணம் புழங்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. என்ன ஒரு பைத்தியக்காரன் நான்? ஒரு விரலை உயர்த்துவதற்கு 16 லட்சம் வருகிறது! மாட்டேன் என்று சொல்கிறாயே? நீ அவ்வளவு நல்லவனா? நேர்மையானவன்? இல்லை கோழை !
மறுநாள் அந்த பிரசத்தி பெற்ற மாட்ச் நடந்தது. ஜெர்மனி டாஸ் ஜெயித்து வெஸ்ட் இண்டீஸை ஆட விட்டார்கள். குறிப்பிட்ட 50 ஓவர்களில் 247 ரன் எடுத்தார்கள். ஜெர்மனி தொடர்ந்து ஆடியதில் முதல் மூன்று விக்கெட்டுகளை 47 ரன்களில் இழக்க.... . அதன்பின் அந்த க்ரையூஃப் என்பவன் வந்தான். முதலில் நின்று அவசரப்படாமல் ஆடினான். அங்கே இங்கே தொட்டுத்தொட்டு சந்து பிடித்து திறமையாக ஓடி ஆடினான். அவனுக்கு ஹாம்ஸ்டன் பக்க பலமாக இருந்தான்.
இருந்தும் ஆஸ்கிங் ரேட் மெல்ல ஏறிக்கொண்டே சென்றது. மூன்றாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தபின் ஹாம்ஸ்டன் ஒரு நல்ல கேட்சுக்கு அவுட் ஆனான். அதன்பின் அடிக்கடி விக்கெட் விழுந்தாலும் க்ரையூஃப் ஒரு பக்கத்தில் இருக்கும் வரை ஜெர்மனியின் வெற்றி வாய்ப்பு உயிருடன் இருந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 9 விக்கெட் விழுந்த நிலையில் க்ரையூஃப் தான் எதிர்கொண்டான்
மைதானத்தில் யாருமே இல்லை என்பதுபோல மயான அமைதி நிலவியது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரொம்ப நிதானமாக அணியினரை அமைக்க…. அவர்கள் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளன் கடைசி ஓவர் போட்டான்.
முதல் பந்தில் யார்க் முயன்றது தப்பு. அது ஃபுல்டாஸாக மாறிவிட க்ரையூஃப் தொன்னுற்றுநான்கில் இருந்தவன் சிக்ஸர் அடித்துவிட்டான். காட்டு அடி . கூரைக்கு மேல் பந்து விழுந்தது. அதனை பெரிய சிக்ஸர் !
அடுத்த பந்து பம்பர் போட ....அதை நான் நோ பால் என்று அறிவிப்பதில் தயக்கமே இல்லை....ஒரு தென்னை மர உயர பம்பர். அடுத்த பந்து சரியாக விழாமல் மற்றொரு சிக்ஸர் !
மூன்று ரன் / நான்கு பந்துகள் பாக்கி. மாட்ச் ஜெர்மனி பக்கம் சாய்ந்துவிட்டது. காப்டன் ரொம்ப நேரம் பௌலருடன் பேசி அடித்த பந்தையும் க்ரையூஃப் சிக்ஸர் அடிக்கச் சுழற்றியதில் பேடில் பட்டது. பதினோரு பேரும் 'ஹௌஸாட்' என்று அலற , எனக்கு ஒரு கணம் பேதலித்துப் போய் விரலை உயர்த்தி விடலாமா என்று ஐம்பதாயிரம் சைத்தான் கூப்பிட்டது. ஆனால், அது அவுட் இல்லை. மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
நான் தலையாட்டினேன். துல்லியமாக இடுப்பு உயரத்தில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே போனது. ஃப்ரண்ட்ஃபுட்டில் வேறு இருந்தான். டக்ளஸ் ஜான் என்னைப்பார்த்து நல்ல தீர்ப்பு என்று சொல்வது போல புருவத்தை உயர்த்தினார்.
அடுத்த பந்தைத் தொட்டுவிட்டு வேகமாக ஒரு ரன் ஓடினான் க்ரையூஃப். அதோடு நில்லாமல் அவசரமாக இரண்டாவது ரன் தற்கொலைத்தனமாக ஓட, ஃபீல்டர் கைத்தாங்கலாகப் பந்தைக் கொண்டு வந்து செல்லமாக ஸ்டம்பைத் தொடும் அளவிற்கு நேரமிருந்தது. க்ரையூஃப் பாதி பிட்சிலேயே ரன் அவுட் ஆகிவிட்டான். ஒரு கணத்தில் மீண்டும் மாட்ச் சுழன்று மேற்கிந்திய அணி வென்றுவிட்டது.
அவன் அந்த இரண்டாவது ரன் எடுத்திருக்கவே வேண்டாம். ஜெர்மனி தோற்றுவிட்டது. க்ரையூஃப் போகும்போது கண்களில் நீருடன் தன் மட்டையை பூமியின் மேல் ஓங்கி அறைந்துவிட்டுச் சென்றான்.
அன்று இரவு ஷாம்பெய்ன் வெள்ளத்தில் லவுஞ்சில் பெரிய பார்ட்டி நடந்துகொண்டிருந்தது. டக்ளஸ் ஜான், "ஸ்வாமி, தட் வாஸ் எ க்ரேட் மாட்ச்! பை தி வே அந்த எல்பிடபிள்யூ நிச்சயம் அவுட் இல்லை. அந்த நெருக்கடி வேளையில் நீங்கள் நிலைதடுமாறாமல் இருந்தது பெரிய விஷயம்தான். !"
"ஹலோ ஸ்வாமி" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். ஜோ சந்தோஷமாக ஷாம்பெய்ன் கோப்பையுடன் என் தோளில் கைவைத்தான். "தட் வாஸ் க்ளோஸ்.மயிரிழையில் தப்பித்தேன்..."
"க்ரையூஃப் முட்டாள்தனமாக அந்த இரண்டாவது ரன் எடுத்தான். நிதானமாக இன்னும் மூன்று பந்து இருந்தது. இரண்டு ரன்தான் பாக்கியிருந்தது. மற்ற பேட்ஸ்மேனும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தான். க்ரையூஃப் கடைசியில் படபடப்பாகி விட்டான்...."
ஜோ புன்னகைத்தான்.
"எப்படியும் என்னால் உனக்கு அம்பதாயிரம் டாலர் மிச்சம்...." என்றேன்.
"இல்லை அம்பதாயிரம் நஷ்டம்...."
"எப்படி?"
"நீங்கள் சம்மதிக்காததால் க்ரையூஃபையே அணுக வேண்டியிருந்தது. நூறாயிரம் (ஒரு லட்சம்) டாலருக்குத்தான் சம்மதித்தான்."
No comments:
Post a Comment