ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்ய மங்கள சரித்ரம் – 30
[பாதங்களை பிடித்த பாக்யஶாலி]
விழுப்புரத்தில் அன்று காலை ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் வீடு அல்லோலகல்லோலப்பட்டது…!
ஒரே அழுகை! பரபரப்பு!
காரணம்?……
காலையிலிருந்து அவர்களுடைய செல்லக்கிணியைக் காணவில்லை!
தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாரையும் விஜாரித்து விட்டார்கள். கிணறு, குளம் எல்லாவற்றிலும் தேடினார்கள்.
கொஞ்ச நேரத்தில் ‘ஸாரம்‘ க்ராமத்திலிருந்து காஞ்சி பீடாதிபதியின் தகவலும் வந்தது, குழந்தைகள் மடத்தில் ஸௌக்யமாக இருக்கிறார்கள் என்று. மறுநாள், மடத்து வண்டியிலேயே குழந்தைகள் இருவரும் வந்து சேர்ந்தனர்.
குழந்தை ஸ்வாமிநாதனை பார்த்ததும், பெற்றோர் ஏதோ புனர் ஜன்மம் அடைந்தது போல் மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சியின் அடிவாரத்தில், இனம் புரியாத கலவரமும், பதில் கிடைக்காத கேள்விகளும் மண்டிக்கிடந்தன.
“இந்த சின்ன பிள்ளைக்கும், அந்த மஹா பெரிய ஸன்யாஸிக்கும் அப்படி என்ன தொடர்பு? இவனை முன்பு அடிக்கடி ஏன் அவர் கூப்பிட்டனுப்பினார்? இவனாகவே மறுபடியும், ஒருவரிடமும் சொல்லாமல் ஏன் வீட்டை விட்டு விட்டு அவரிடம் ஓடுகிறான்?…”
ஏற்கனவே இரண்டு பீடாதிபதிகளைத் தரணி வளம் பெற, தாரை வார்த்த மஹாவம்ஸம் அல்லவா? மூன்றாவதாக காந்தண்ணா என்று கிணி அன்போடு அழைக்கும், லக்ஷ்மிகாந்தனையும் தரப் போவதை அவர்கள் அப்போது அறியவில்லை.
அப்பா ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகளுக்கு என்ன தோன்றியதோ, ஸ்வாமிநாதனை அழைத்துக்கொண்டு, அவன் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜோஸ்யம், ரேகை, ஆரூடம் தெரிந்த தன் நண்பரான வெங்கடராமய்யரிடம் போனார்.
வெங்கடராமய்யர் பெரிய வக்கீலும் கூட! தெலுங்கு ப்ராஹ்மணர் என்பதால், வெங்கடராமய்யா என்றும் அழைப்பார்கள். அவருடைய மகன் க்ருஷ்ணஸ்வாமி, ஸ்வாமிநாதனின் classmate!
ஸாரம் க்ராமத்திற்கு தன்னோடு அழைத்துக் கொண்டு போக ஸ்வாமிநாதன் வந்தபோது, அவன் கும்பகர்ண உபாஸனை பண்ணிக் கொண்டிருந்ததால், அவனுடைய அத்தை பையனை, ஆச்சார்யாளை பார்க்க அதிகாலை வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்துக் கொண்டு ஓடினான்.
எல்லா இடத்திலும் கிணியைத் தேடிய பெற்றோர், க்ருஷ்ணஸ்வாமி வீட்டில் மட்டும் விஜாரிக்கத் தவறி விட்டார்கள்.
மஹாபுருஷர்களின் மஹிமையை முதலில் அறிகிறவர்கள் மஹா பாக்யஶாலிகள் என்றால், இந்த வெங்கடராமய்யரை விட வேறு ஒரு பாக்யஶாலி கிடையாது!
image.jpeg
ஸ்வாமிநாதனின் ஜாதகத்தை பார்த்தார். அடேயப்பா! மஹா யோக ஜாதகம்! அத்தனை யோகங்களும் ஒன்று கூடிய ஜாதகம்!
வெறும் யோக ஜாதகம் மட்டும் இல்லை! பெரிய யோகி ஜாதகம்!
அதிலும் தனித்து வாழாத யோகியாக, ஜன ஸமூஹத்திடையே இருந்துகொண்டு அத்தனைபேருக்கும் அனுக்ரஹம் மட்டுமே பண்ணப்போகிற ஜாதகம் அல்லவா!
வாஸ்தவம்! அக்னியே ஸ்புடம் போட்டுக் கொள்ளும் பற்றற்ற ஸன்யாஸ ஸிம்ஹமான நம் பெரியவாளேதான், வீடுகளில் வளர்க்கும் பஶுக்கள்-கன்னுக்குட்டிகளின் க்ஷேம லாபங்கள், பஶுஞ்சாணியிலிருந்து முட்டம் போட்டு பஸ்மத்தை தயார் பண்ணும் நேக்கு, ஶுத்தமான மஞ்சள் குங்குமத் தயாரிப்பு முறை, எத்தனையோ வர்ஷங்களுக்கு முன்னால் குடும்பத்திலிருந்து தொலைந்து போனவர்களை “இதோ லட்டு!..” என்று உள்ளங்கையில் காட்டுவது போல், மறுபடியும் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது, மழை பெய்யும் போது, குஞ்சு குழுவான்களுக்கு பேப்பர் கப்பல் பண்ணித்தர வேண்டிய தலையாய கடமை, ‘நல்ல இடமாக அமையணுமே! நல்லபடி வாழணுமே!..’ என்று அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் அம்மாக்களுக்கும் மேல், மஹா அம்மாவாக, பெண்-பிள்ளைகளின் கல்யாண முடிவுகளையும், முறிவுகளையும் ஸரி செய்து நல்வாழ்வு வாழ வைப்பது, ஆளுக்கொரு பக்கமாக ஓடும் பூனைக் குட்டிகளை, ஒரு தாய்பூனையானது கொஞ்சமும் சளைக்காமல் கவ்விக் கவ்வி தன்னிடம் வைத்துக் கொள்வதுபோல், இந்த உலகில் நானாதிசைகளிலும் தறிகெட்டலைய ஓடும் நம் அனைவரையும் சளைக்காமல் ஏதேதோ யுக்திகளை கையாண்டு, தன்னிடமே இருத்திக் கொள்ளும் மஹாமஹா பூனையம்மாவாக இருப்பது என்று…. மொத்தத்தில் இந்த ஸன்யாஸி, தன் அத்வைதானுபவத்தால், ப்ரபஞ்சத்தையே குடும்பமாக கொண்ட, மஹாகுடும்பியாகவும் இருக்கிறார்.
ஜாதகத்தில் ஸூர்யன் லக்னத்திற்கு பத்திலும், அந்த வீட்டுக்குரிய ஶுக்ரன், மீனராஸியில் உச்சத்தில் இருப்பதாலும், இவன் உலகம் போற்றும் மஹானாக விளங்கப் போகிறான்! இந்த ஜாதகன் எப்பேர்ப்பட்ட வம்ஸத்தில் பிறந்திருக்கிறான்!
ஜாதகத்தைப் பார்க்க பார்க்க, வெங்கடராமய்யருக்கு ஒரே ஸந்தோஷம், வியப்பு!
தனக்கு தோன்றியதை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்காக, வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஸ்வாமிநாதனை அழைத்தார்…..
“கொழந்தே! இங்க வா! ஒன்னோட உள்ளங்காலை பாக்கணுமே! ஓடிப்போய் நன்னா அலம்பிண்டு வா”
அவர்கள் வீட்டு முற்றத்தில், அண்டாவில் நிரம்பி இருந்த ஜலத்தால் காலை [திருவடியை] நன்றாக அலம்பிக் கொண்டு வந்தான் குழந்தை.
ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் ஒன்றும் புரியாமல் ஸாக்ஷியாக பார்த்துக்கொண்டிருந்தார்.
“கொழந்தே! தரையோட அழுக்கு மறுபடி கால்ல ஒட்டிக்கும். அதுனால சொம்புல ஜலம் கொண்டு வந்து இங்க ஒக்காந்துண்டு அலம்பிக்கலாம்.. வா ”
இன்று எப்படியும் திருவடி தர்ஶனம் பெற்றுவிடுவது என்று அடமாக இருந்தார் போலும்! சொம்பில் ஜலத்தைக் கொண்டு வந்து திண்ணையில் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, லோகம் என்னும் சேற்றில், திருவடியாகிய தாமரையால், நடந்து நடந்து புனிதப்படுத்தப்போகும் அந்த குட்டித் தாமரை பாதங்களை அலம்பிக் கொண்டான்.
ஶ்ரீ வெங்கடராமய்யர், தன்னுடைய மேல் துண்டால் மஹோன்னதமான பாதங்கள் இரண்டையும் நன்றாகத் துடைத்து விட்டார்.
image
அவற்றை கைகளில் பரவஸத்தோடு ஏந்திக்கொண்டு உற்று நோக்கிய வெங்கடராமையர், அப்படியே அவற்றை இறுகப் பற்றிக்கொண்டு விட்டார்! நெஞ்சோடு அனைத்துக் கொண்டார்! பிடித்த பிடியை விடுவதாக இல்லை! எப்பேர்பட்ட பாக்யஶாலி!!
[ஆஹா! அம்மா, பாட்டி ஆகியோர் தங்கள் கால்களில் ஸ்வாமிநாதனைப் போட்டுக் கொண்டு எண்ணைய் தேய்த்து குளித்து விடும்போது, எத்தனை முறை அந்த கமல மலர்ப்பாதங்களைப் பிடித்திருப்பார்கள்! அதன்பின் ஶ்ரீ வெங்கடராமய்யர்தான் முதன்முதலாக அப்பாதங்களின் மஹிமை தெரிந்து பற்றியது! ஆஹா! அன்று கங்கா ஜலம் யாரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளாமல் வீணானதே!]
ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகளோ பதைத்துப் போனார்…
“வெங்கட்ராமா! இதெல்லாம் என்ன? அவன் சின்னவன்…அவனோட காலை நீ பிடிக்கலாமா?..”
ஸ்வாமிநாதனுக்கோ ஒரே கூச்சம்.
“மாமா! விட்டுடுங்கோ! மாமா, விடுங்கோ”
ஆனால் அவனால் வெங்கடராமய்யர் என்ற பக்தரிடமிருந்து, திருவடிகளை இழுத்துக்கொள்ள முடியவில்லை. பகவான் பக்தர்களிடம் இப்படித்தான் மாட்டிக்கொண்டு முழிப்பானோ!
வெங்கடராமய்யர் தேம்பினார்
” ஒமக்கு விஷயம் தெரியலை ஸ்வாமீ! இந்த காலை பிடிக்கறதுக்கு எத்தனை பாக்யம் பண்ணியிருக்கணும் தெரியுமா? இது யாருக்கும் லேஸுல கெடைக்காத பாதம் ஒய் !”
“ஹா! என்னது?..”
“இதோ பாரும்! ஶங்கு ரேகை, இதோ சக்ர ரேகை ! இதப்போல கெடைக்கவே கெடைக்காது ஸ்வாமீ ! இவன் தெய்வீக பிறவி…ப்பா! இவனைப் பத்தி கவலைப்படாதே!….”
கண்ணீர் பெருகக் கூறினார்.
“ஜாதகம் நன்னா இருக்கோல்லியோ?”
ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் பெற்ற ‘அப்பா‘வாக கவலையோடு கேட்டார்.
[பூதனை முதல் காளிங்கன் வரை அஸுரர்களை கொன்று, கொடிய நாகங்களை அடக்கி, மலையைத் தூக்கி க்ஷணத்துக்கு க்ஷணம், தான் பகவான், என்று க்ருஷ்ணன் ப்ரகடனப்படுத்தினாலும், யஶோதை அவனுக்கு துர்ஶக்தி தாக்காமல் இருக்க த்ருஷ்டி சுத்திப் போடுவாளாம். பஶுக்களின் பாததூளியை அவன் ஶிரஸில் தடவுவாளாம்]
“நன்னாவா? இதப்போல பாக்கறது அருமையிலும் அருமை” என்றவர் சட்டென்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார்.
தன்னுடைய பார்வையில் இது அருமையிலும் அருமை.
ஆனால் ஒரு பெற்ற தகப்பனாரின் நோக்கில்? …….
ஶுகப்ரஹ்மம் பிறந்ததுமே ஜீவன் முக்தராகி வீட்டைத் துறந்து சென்றபோது, வ்யாஸர் எப்படி துடித்தார்! புத்ர பாசத்தில்? ‘புத்ரா! புத்ரா!” என்று அலறிக்கொண்டு பித்தராக அல்லவோ ஓடினார்!
“என்ன ஸ்வாமி ஸந்தேஹம்? ஏகப்பட்ட யோகங்கள் கூடின ஜாதகம் கொழந்தையோடது! ரொம்ப ரொம்ப கீர்த்திமானா இருப்பான்” என்று மட்டும் சொன்னார்.
ஆனால், அந்த ஜாதகத்தில் உள்ள ராஜ யோகம், செல்வம், கீர்த்தி எல்லாமே அவனுடைய ஸன்யாஸ யோகம் ஒன்றுக்கு மட்டுமே ஸஹாயமாக இருக்கும் என்று மட்டும் சொல்லவில்லை.
“உங்களோட கிணியை நிரந்தரமாகப் பிரியப் போகிறீர் ஸ்வாமி” என்பதை பானையைப் போட்டு உடைப்பதைப் போல், அப்போது சொல்லி, அந்தத் தந்தையின் மனஸை உடைக்க அவர் அப்போதைக்கு விரும்பவில்லை.
image
இந்த நிகழ்ச்சியை கூடத்தின் ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மஹா பாக்யவான், சிறுவன் க்ருஷ்ணஸ்வாமி, ஸ்வாமிநாதனின் ஸ்கூல் friend.
அப்போது குருநாதனைத் தேடிக் கொண்டு ஸாரம் க்ராமத்துக்குப் போன ஸ்வாமிநாதன், மாமதுரப் பெரியோனாகியும், பிள்ளை விளையாட்டு போகுமா? அத்தனை பேரையும் தன்னைத் தேடும்படி செய்த லீலையும் உண்டே!
ஒருநாள் மத்யானம் ஸ்ரீமடம் அல்லோலகல்லோலப் பட்டது!
ஆம்! பெரியவாளைக் காணோம்!!
மடத்தில் இத்தனை பேர் இருக்கும்போது, எப்படி மாயமாக மறைந்து போனார்?
வழக்கம்போல், காலை பூஜை முடிந்ததும், பிக்ஷை எடுத்துக்கொள்ளப் போனவர்தான். அப்புறம் யாரும் பார்க்கவில்லை. மானேஜருக்கோ அஸாத்ய கோபம்!
பெரியவாளோடு எப்போதும் ரெண்டு பேர் கைங்கர்யம் பண்ண இருப்பார்கள். அதில் ஒருத்தருக்கு உடல் நலமில்லை. எனவே, ஊருக்கு போய்விட்டார். இன்னொருத்தர் புதுஸு. பெரியவாளுடைய அனுஷ்டானங்கள் பற்றி அவ்வளவாக பழக்கமில்லாதவர். எனவே, பெரியவா பிக்ஷைக்கு போனதும், இவர்பாட்டுக்கு இந்தப் பக்கம் தூங்கப் போய்விட்டார் !
அந்த புது ஶிஷ்யரை எழுப்பிக் கேட்டால்………..
“எனக்கு தெரியாதே! நா…. கொஞ்சம் தூங்கிட்டேன். எங்க போனார்னு தெரியல!”
தன்னுடைய பொறுப்பற்றதன்மைக்காக மானேஜர் கையால் ஒரு அடியையும் வாங்கிக் கொண்டார் அந்த புது ஶிஷ்யர்!
அதற்குள்….. ப்ரார்த்தனைகள் பறந்தன….!
“பெரியவா ஸௌக்யமா இருக்கணும். நூத்தியெட்டு தேங்கா ஒடைக்கறேன், பிள்ளையாரப்பா!”…. ஒரு பாட்டி !
“காமாக்ஷி! தாயே! பால் அபிஷேகம் பண்ணறேன்……பெரியவா வந்துடணும்..”……. ஒரு மாமி!
“பெருமாளே! பெரியவா வந்துடணும்………அங்கப் ப்ரதக்ஷிணம் பண்ணறேன்……..” ஒரு மாமா!
ஒரே கலவரம்!
வெளியில் யாரிடமும் சொல்லவும் முடியாது.
ஸாயங்காலம் ஐந்தரை மணி. பெரியவா அனுஷ்டானம் பண்ண எழுந்து சந்த்ரமௌலீஶ்வரர் ஸன்னதிக்கு வந்தார்.
” மாமா! பெரியவா…..! இங்க இருக்காளே!….”
அப்போதுதான் எல்லோருக்கும் உயிரே வந்தது.
நடந்தது என்னவென்றால்….
பெரியவா பிக்ஷை முடித்துக் கொண்டு, தன்னுடைய அறைக்குள் போய், ஒரு ஓரமாகக் கிடந்த கோரைப்பாயில் படுத்துக் கொண்டு, அந்த கோரைப்பாயையே தன்மேல் போர்த்தியபடி சுருட்டிக் கொண்டு விட்டார்.
இது ஒரு ஸ்வாரஸ்யமான லீலை!
அந்த பாயும், பெரியவாளை தன்னுள் இறுக்கிக் கட்டிக் கொண்டு, தேமேன்னு ஒரு ஓரமாகக் கிடந்தது. அந்தக் கோரைப்பாய்க்குள்ளே சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கும் பெரியவா, யார் கண்ணிலும் படவில்லை.
மானேஜர் பெரியவாளிடம் ஓடிவந்தார்.
” நாங்கள்ளாம் பதறிப் போய்ட்டோம் பெரியவா…! ஆளாளுக்கு வேண்டிண்டுட்டா…”
நமுட்டாக சிரித்துக் கொண்டே…..
” எனக்காக இத்தனை பேர் ஈஶ்வரன்ட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டேளா? எல்லாரும் அவாவாளோட ப்ரார்த்தனையெல்லாத்தையும் நிறைவேத்தணும்.!.நா…. நூறு வர்ஷம் நன்னா இருப்பேன்! கவலையே படவேணாம்!…
மானேஜரிடம் அடி வாங்கிய புது ஶிஷ்யன் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான்.
“என்ன? அடி பலமோ? பகல்ல தூங்கப்படாது! அதுக்கான அடிதான் இது”
அடியின் வலியை ஒழித்திடும் அழகான சிரிப்பை உதிர்த்தவாறு அவனை ஸமாதானப்படுத்தினார்.
No comments:
Post a Comment