Monday, November 15, 2021

ஆதிகுடி காபி கிளப், திருச்சி

 *ஆதிகுடி காபி கிளப், திருச்சி  - தலைமுறைகளைத் திருப்தி படுத்தும் அதே சுவை *

நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளுக்கு முன் உங்கள் கொள்ளுத் தாத்தா திருச்சிக்கு சென்று சாப்பிட்ட ‘பட்டணம் பக்கோடா’வை அதே ருசியில், அதே நாற்காலி, அதே சூழலில், அதே போன்ற மாஸ்டரின் கைப்பக்குவத்தில் சாப்பிட வேண்டுமா..? உடனே ஆதிகுடி காபி கிளப்புக்கு கிளம்புங்கள்!

1916-ன் இறுதியில் தொடங்கப்பட்ட ‘ஆதிகுடி காபி கிளப்’புக்கு இப்போது வயது 105 ஆகிவிட்டது.. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது மாலை நேரத்தில் பொழுதைக் கழிக்க கிளப் ஆரம்பித்தனர். சரக்கடித்தனர். இதற்கு சமமாக நம் ஆட்களும் கிளப்புகளைத் தொடங்கினர். ஆனால், சரக்கடிக்க அல்ல. காபி குடிக்க!

ரவா பொங்கல், பட்டணம் பக்கோடா ஆகியவற்றை ருசித்துவிட்டு ஒரு டிகிரி காபியையும் குடித்தால் எப்படியிருக்கும் என்பது அவற்றை சுவைத்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் திருச்சி ஆதிகுடி காபி கிளப்பில் இவற்றை ருசித்தவர்கள், எளிதில் அச்சுவையை மறந்துவிட முடியாது. அதனால்தான் 105 ஆண்டுகளைக் கடந்தும் திருச்சியில் கோலோச்சி நிற்கிறது, ஆதிகுடி காபி கிளப்.

*(முக்கிய குறிப்பு : ரவா பொங்கல் காலையில் மட்டுமே கிடைக்கும் // பட்டணம் பக்கோடா மாலையில் மட்டுமே கிடைக்கும்)*

லால்குடியை அடுத்துள்ள சிறிய கிராமம்தான் ஆதிகுடி. இக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம அய்யர், ஊரின் மீதுள்ள அன்பில் திருச்சி மெயின் கார்டில் ஒரு கடையைத் தொடங்கினார்.

காலப்போக்கில் இவரால் தொடர்ந்து கிளப்பை நடத்த முடியாமல் போனது. ராயர், மணி அய்யங்கார் என கைமாறி கடைசியில் அதே கிளப்பில் வேலை செய்த ராமகிருஷ்ண அய்யரின் கைக்கு இந்த கிளப் வந்து சேர்ந்தது. போதாதா? அப்பாவின் கைப் பக்குவத்தை உடனிருந்து அறிந்த மகன் கண்ணனும், கணேசனும் இப்போது இந்த கிளப்பை நடத்துகிறார்கள். அதனால்தான் சுவையும் மணமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இன்று பாதாம் அல்வா, கோதுமை அல்வா, காசி அல்வா, தம்ரூட் அல்வா... என நாளுக்கொரு அல்வாவை ஸ்பெஷலாக விற்கிறார்கள்; பரிமாறுகிறார்கள்.

திருச்சி மெயின் கார்ட் கேட் பகுதியில், கெயிட்டி என்று பழைய தியேட்டர் உண்டு, அதை தாண்டி நடந்து சென்றால் திருச்சியில் கவரிங் நகைக்காகவே உருவாக்கப்பட்ட தெருவோ என்று சந்தேகப்படும் அந்த தெருவை தாண்டி மெயின் ரோட்டிலேயே தேவர் ஹால் பஸ் ஸ்டாப்பில் அடைத்துக் கொண்டு நிற்கும் ஆட்டோ ஸ்டான்ட் பின்புறம் ஒரு பழைய போர்டில் "ஆதிகுடி காபி கிளப்" என்று கிடைக்கும், அப்படி ஒரு பிஸியான ஏரியாவில் இப்படி ஒரு ஹோட்டல் என்ற ஆச்சர்யம் கண்டிப்பாக இன்னும் மிச்சமிருக்கிறது ! உள்ளே நுழையும்போதே சாமி பாடல்கள் ஒலிக்கிறது, சுவரெங்கும் சுவாமி படங்களும், பழைய மர ஸ்டூல் மற்றும் டேபிள், காசி துண்டு போட்ட சர்வர் என்று நாம் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறோம்.

 இக்கடையைத் தேடி அலைய வேண்டியதேயில்லை. யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் இக்கடையின் வாடிக்கையாளர்கள். 

ஆடம்பரமில்லாத எளிமையான பெயர்ப் பலகை. தகரம் வேய்ந்த ஓடுகள். பழைமையான தூண்கள் என வீடு என்றும் சொல்ல முடியாமல் ஹோட்டல் என்றும் சொல்ல முடியாமல் வித்தியாசமாக பழைமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. தரைப்பகுதியில் மட்டும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பட்டணம் பக்கோடாவையும் டிகிரி காபியையும் ருசிப்பதற்காக ரசிகர்கள் மாலையில் படை எடுப்பது இன்றும் சகஜம். 

மூன்று வருடங்கள் முன் திருச்சிக்கு ஒரு உறவினர் திருமணத்திற்காக சென்றபோது ரிஸப்ஷன் மாலை என்பதால், ரங்கநாதரை தரிசிக்க வேண்டுமென காலையிலேயே மனைவியுடன் திருச்சி சென்றதால், ரிஸப்ஷனில் சாப்பிட பசியில்லாவிட்டாலும் பரவாயில்லை என்று மனைவியை அழைத்துக்கொண்டு இங்கு ஒரு விசிட் அடித்தேன். என் மனைவிக்கு ஆதிகுடி கிளப் முதல் விசிட் என்பதால் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அடை  / அவியல் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். 

ஆவி பறக்க, வெண்ணெய் அடையையும், காய்கறிகளால் செய்த அவியலையும் சர்வர் கொண்டுவந்து டேபிளில் வைத்தார். வெண்ணெய் மணம் நம்மைச் சுண்டியிழுத்தது. வேறு எந்த யோசனையும் வராதபடி, அடையின் சுவை நம்மை மயக்கியது. 

அடுத்த ரவுண்டுக்கு பட்டணம் பக்கோடா, ஃபில்டர் காஃபியை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். உண்மையிலேயே அவற்றின் சுவை வேற லெவல்தான். வெளியே மொறுமொறுவெனவும், உள்ளே மென்மையாகவும் இருந்தது பட்டணம் பக்கோடா.  காஃபி சுவை நாவை விட்டு அகல மறுத்தது. 

"காலை நேரத்தில், ரவையில மிளகு, சீரகம், பருப்புன்னு குழைவா ரவா பொங்கல் தயாரிச்சுக் கொடுக்கிறோம். இதைச் சாப்பிட பல ஊர்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வர்றாங்க. அதேபோல் வடையும் சாம்பாரும் இங்க ஃபேமஸ். நாலஞ்சு வருஷங்களா பிரெட் அல்வாவும் தயாரிக்கிறோம். எல்லா உணவுகளையும் மக்கள் விரும்பிச் சுவைக்கிறதுக்குக் காரணம், மளிகைப் பொருள்களின் தரத்தில் நாங்க சமரசம் பண்றதேயில்லை. அதே போல எங்க சமையல் மாஸ்டர்களின் கைப்பக்குவமும் முக்கியக் காரணம். "

எங்க கடையில பல பிரபலங்கள் சாப்பிட்டிருக்காங்க. குறிப்பா சினிமாத் துறையைச் சேர்ந்த தியாகராஜ பாகவதர், சிவாஜி சார், எம்.ஆர். ராதா, ஜெமினி கணேசன் சார்னு பலரும் சாப்பிட்டிருக்காங்க. திருச்சிக்கு யாரு வந்தாலும் நம்ம கடையில இருந்து பார்சல் போய்டும்." என்கிறார் ஆதிகுடி கிளப்பின் உரிமையாளர்    திரு. கண்ணன்.       

காலை ரவா பொங்கலும் அந்திசாயும் நேரத்தில் பட்டணம் பக்கோடாவும் அடை - அவியலும் சுடச் சுட இங்கு கிடைக்கிறது. இதற்காகவே ஸ்பெஷலாக தேங்காய், கொத்தமல்லி சட்னியோடு, போதுமென்கிற அளவுக்கு சாம்பாரும் ஊற்றுகிறார்கள்.

அப்படியே அந்தக் கால செட்டப், சாப்பாடு என்று யாருமே மிஸ் செய்ய கூடாத ஒரு விஷயமாக  இந்த ஹோட்டல் இருக்கிறது.



No comments:

Post a Comment