#Midweek topic:
# எனககுப் பிடித்த ஆன்மீக ஸ்தலம்:
பிறந்து வளர்ந்தது அனைத்தும் இந்த இடத்திலாகையால் சுற்றிலும் நிறைய கோயில்கள் இருந்தாலும் எங்களுடன் ஒன்றான சென்னை மயிலாப்பூரில் வேண்டியதை நிறைவேற்றும் கற்பகவிருஷ்க்ஷமாய்...
எத்தனை துயரானாலும் போக்கி மனதுக்கு அமைதியை தந்தருளும் அன்னையின் கருணைகண் பார்வைக்கு அன்பாய் செவி சாய்த்து கம்பீரமாய் அரசாளும் மன்னனாய் திகழும் எங்கள் மயிலையை கயிலையாய் மாற்றி அருளும் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில்...
இக்கோயிலின் ஸ்தலபுராணம் பலர் அறிந்தது தான்...ஆயினும்..
அன்னை பார்வதி மயில் உருவில் அவதரித்து ஈசனை வழிப்பட்ட ஸ்தலமாகையால் ஒருகாலத்தில் மயில்களால் நிறைந்து காணப்பட்ட இடத்தினாலும் இவ்விடத்துக்கு மயிலாப்பூர் என வந்ததாக கூறுவர்...
கபாலீச்சரம் என்றழைக்கப்படும் இக்கோயில் 1000-2000 வருடங்கள் முன் தொன்மையான பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞ்ஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் பழ நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.
நுழை வாயிலில் அமைந்திருக்கும் நர்த்தன விநாயகரும் அருகே உண்ணாமுலை அம்மையுடன் அண்ணாமலையாரும் அவரைத் தொடரந்து சிக்கல்களை தீர்க்கும் சிக்கல் சிங்கார வேலரும்... புன்னை மர நிழலில் மயிலுறுவில் ஈசனுக்கு பூஜை செய்யும் புன்னைவனநாதரையும்...
கருணையே வடிவான வேண்டுவதை அருளும் கற்பகத்தாயாக விளங்கும் கற்பகாம்பாள் உடனுறை எம்பெருமான் கபாலீஸ்வரரும் எந்நாளும் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும்....
இங்கு நடக்கும் தெப்போற்சவமும், பங்குனி திருவிழாவினையும் காண கண் கோடி வேண்டும்..
அதில் முக்கியமாக ரிஷபவாகனமும்,... அதிகாரநந்தியையும்...
அன்னை ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்குவதும்...நாலு மாடவீதியை அலங்கரித்து ஓடும் கம்பீரத் தேரும்.. அறுபத்து மூன்று நாயன்மார்களின் அணிவகுப்பும்... வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...
ஒருமுறை கோயிலுக்கு சென்று வந்தால் மீண்டும் மீண்டும் வரவழைப்பாள் அன்னை கற்பகாம்பிகை...
கயிலையில் ஆளும் எம்பெருமானின் ஸ்தலமாகையினால் கயிலையே மயிலை...மயிலையே கயிலை என்பது மயிலை வாழ் மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை...
இதுவே நான் விரும்பும் ஸ்தலம்...🙏🙏
நன்றி
சசி...
30.09.21
No comments:
Post a Comment