Monday, November 15, 2021

பஃபே முறை

 பஃபே முறை

இப்போதெல்லாம் கல்யாண கொண்டாட்டங்களுக்கு போனால் குறிப்பாக ரிசப்ஷன் வைபோகத்திற்கு போனால் முன்ன மாதிரி பந்தி சாப்பாடெல்லாம் போடுவதில்லை..ஒருவர்மீது ஒருவர் இடித்திக்கொண்டு மியூசிக்கல் சேரில் இடம் பிடிப்பது போல் இடம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை..எந்த டேபிலில் கடைசி மோருஞ்சாத்தை உறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டு அவர்களைச் சுற்றிக் கொண்டு நின்று 'உறிஞ்சது போதும்.. இலயவிட்டு எந்திருங்கோ" என்பது போல் அநாகரிகமாக பார்க்க தேவை இல்லை..  

எச்சில் இலைகளை எடுக்கும் முன் சேரில் அமர்ந்து கொண்டு அந்த இலையின் எச்ச மிச்சங்களின் அவல நிலையைக் கண்டு அருவருக்கும் அபாக்ய நிலை இல்லை..பந்தி நிரம்பிய பின் உள்புறமாக தாளிட்ட கதவருகில் நின்று கொண்டிருக்கும் கான்ட்ராக்டர் காவலரிடம "எப்ப அடுத்த பந்தி" என்று கேட்டுக்கொண்டு, தியேட்டர் ஹால் கதவருகே அடுத்த ஷோவிற்காக காத்துகிடப்பது போல் தவித்துக் கொண்டிருக்க தேவை இல்லை..

எல்லாரும் பஃபே முறைக்கு மாறி விட்டார்கள்..ஆனால் இந்த முறையிலும் நிறைய அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன..

டைனிங் ஹால் போன வுடனே கண்ட பலகாரங்களையெல்லாம் கடோத்கஜன் போல் இஷ்டத்துக்கு எடுத்து வெட்டலாம் என்று சாபிட முடியாது..பலகாரக் கவுண்டர்களில் வெயிட்டர்கள் கைகளில் பிலாஸ்டிக் உறை அணிந்து கொண்டு கிங்கரர்கள் போல் கரண்டிகளோடு நின்று கொண்டிருப்பார்கள்..

கியூவில் தட்டை ஏந்திக் கொண்டு போக வேண்டும் வெயிட்டர்களிடம் தட்டை நீட்ட வேண்டும் அவர் அவ்ளோ பெரிய கரண்டியால் துளியூண்டு எடுத்து நம் தட்டில் ஒரு உதறல் உதறுவார்கள்.அந்த துளியூண்டும் கரண்டியிலே ஒட்டிக் கொண்டு அதில் இருந்து ஒரு மைக்ரோ துளியூண்டு சர்க்கரைப் பொங்கல் நம் தட்டில் விழும்..இன்னும் கொஞ்சம் போடுங்க என்று கேட்டு வாங்கிக்கலாம் ஆனால் பின்னாடி வருபவர்கள் நம்மை ஆரம்பத்திலேயே அல்பம் என்று நினைத்து விட்டால் அசிங்கமாச்சே என்று நம் செல்ப் ரெஸ்பெக்ட் எட்டி உடைக்க அப்டியே ஈஷிக்கொண்டிருக்கும் துளி பொங்கலுடன் அடுத்த வெயிட்டரிடம் செல்வோம்..அவர் ஒரே ஒரு இட்லியை எடுத்து நம் தட்டில் போடுவார்.அதற்கு கொஞ்சம் நகர்ந்து இன்னொருவரிடம் சென்று சிவப்பு சட்னி பச்சை சட்னி வெள்ளை சட்னிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்..தேசியக் கொடி போல அந்த மூன்று நிற சட்னிகளும் ஒன்றோடு ஒன்று ஈஷிக் கொண்டு தட்டில் பறந்து கொண்டிருக்க ஒரு பிலாஸ்டிக் கப்பில் சூடான சாம்பாரையும் நிரப்பிக் கொண்டு அடுத்த கவுண்டருக்கு முன்னேறுவோம்..ஒரு இட்லியுடன் தொட்டுக் கொள்ளும் சமாச்சாரங்களிலேயே பாதி தட்டு நிரம்பி போய்ருக்கும்..

எல்லார் தட்டிலும் இன்னொன்று இருக்கிறதே..அடடா மிளகாய் பொடி எண்ணை ..அதை எடுட்த்துக்காம நர்ந்துட்டோமே ..எக்ஸ்யூஸ் மீ..என் இடத்தைக் கொஞ்சம் பார்துக்கோங்க என்று பின்னால் வருபவரிடம் சொல்லி விட்டு போய் எடுத்துக் கொண்டு வந்தால் நன்றாக இருக்காதே..அதனால் மிளகாய் பொடி எண்ணெயை தோசைக்கு எடுத்துக் கொள்வோம் என்று ஒரு permutaion and combination apply செய்து அடுத்த பலகார கவுண்டருக்கு செல்வோம்..'இது என்ன?.'. 'கிச்சடி 'என்பார் வெயிட்டர்.. ..தினமும் வீட்ல திங்கற அல்ப உப்புமாதானே அதை விட்டு செல்வோம் என்றால் மனசு கேக்காது .அதையும் ஒரு கரண்டி தட்டில் ஏற்றிக்கொண்டு அதற்கு தொட்டுக்க தரும் வத்தல் குழம்பு,கொத்சு வகையறாக்களையும் நிரப்பிக் கொண்டு வரிசையில் நகர்வோம்..

அடுத்தது என்ன ? குழி பணியாரமா..ஆஹா பார்க்கவே மொறு மொறுவென்று அழகாக இருக்கிறதே என்று ரசிக்கும் போதே ஆறி போன ஒரு குழி பணியாறம் கிச்சடி மேட்டில் விழும்..இப்போது மூன்று பலகாரங்கள் மட்டுமே வாங்கி இருப்போம் ஆனால் இவையே தட்டில் ஒரு களேபரத்தை ஏற்படுத்தி இருக்கும்..அடுத்தது என்ன இடியாப்பமா தொட்டுக்க தேங்காய் பால் குருமா வேறயா..அதை ஏன் விடுவானேன் .தேங்காய் பாலை இன்னொரு கப்பில் நிரப்பி ஏற்கனவே அரங்கேறிய சாம்பார் கப்பை இடித்துக் கொண்டு தட்டில் சொருகி குருமாவை இடியாப்பத்தின் இடுக்களில் ஊற்றிக் கொண்டு அடுத்த அயிட்டத்துக்கு நகர்கிறோம்..பஃபே முன் அனுபவம் இருப்பவர்கள் முன் ஜாக்கிரதையாக இரண்டு காலி ப்லேட்டுகளுடன் கியூவில் நிற்கிறார்கள்..அடடே இந்த சாமர்த்தியம் நமக்கு இல்லையே என்று நினைத்துக் கொண்டு அடுத்த அயிட்டம் மசால் தோசை சுடச்சுட கல்லில் ஊற்றி போட்டு தந்து கொண்டிருக்கிறார் தோசை மாஸ்டர்.. கல்லுக்கு அருகில் சென்று நிற்கிறோம்..

மாவு இல்லை.. எடுத்து வரகிச்சனுக்கு போய் இருக்கிறார்கள் சூடான தோசைக்கு கொஞ்சம் வெயிட் பண்ணணும் என்கிறார் தோசை மாஸ்டர்..அதற்கெல்லாம் டைம் இல்லை ஆறின தோசையே ஒன்னு எடுத்து வையும் என்று சூடான தோசை இல்லை என்ற ஏமாற்றத்தில் சற்று அதட்டலாக சொல்லி அதையும் வாங்கி பரப்பிக் கொள்வோம்...சரி இதற்கு மேல் தட்டை பேலன்ஸ் செய்ய முடியாது முதல் ரவுன்டை முடித்துக் கொண்டு அடுத்த அயிட்டங்களுக்கு செல்வோம் என்று கியூவில் இருந்து நம்மை விடுவித்துகொண்டு பின்னாடி வருபவருக்கு ஒரு ஆசுவாசத்தை ஏற்படுத்துவோம்..

இப்போது இந்த தட்டை எங்கே வைத்துக் கொண்டு சாப்பிடுவது ..ஒதுக்கு புறமா ஏதாவது மேசயையையோ அல்லது ஜன்னல் விளிம்பையோ தேடிச்செல்லும் போது சீல் போட்ட மினரல் வாட்டர் பாட்டில்கள் குட்டி சைசில் வரிசையாக அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மேசை கண்ணில் படுகிறது ..நாம் அந்த டேபிளை நோக்கி படை எடுத்து ..அங்க நம்ம தட்டை டேபிளை அணுகும் நேரத்தில் நமக்கு குறுக்கே நகர்ந்து அந்த டேபிளில் ஒருவர் அவர் தட்டை வைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடிய களிப்பில் தட்டில் கை வைப்பார்..சரி ஆச்சு ..என்று ஒரு வாட்டர்பாடிலை எடுத்து இரண்டு கைகலாலும் ஏந்திய தட்டுக் கடியில் சொருகிக் கொண்டு வேற ஒரு ஒதுக்கு புறத்திற்கு நகர்ந்து செல்வோம..அப்படி செல்லும் போது பார்த்து நகர வேண்டும் யார் மேலும் மோதி விடாமல்..நிறய பட்டுப் புடவைகள் சஞ்சரிக்கும் இடமல்லவா..யார் மீதாது மோதி எதையாது கொட்டிவிடக்கூடாது என்று ஜாக்கிரதையாக நகர்ந்து செல்ல வேண்டும்..ஒருவழியாக நின்று சாப்பிட ஒரு இடத்தைக் கண்டு கொண்டு வாட்டர் பாட்டிலை எங்க வைப்பதென்று தெரிமால் கால் மாட்டில் வைத்து விட்டு ஒரு கையில் தட்டை லாவகமாக ஏந்திக்கொன்டு இன்னொரு கையால் சாப்பிட வேண்டும்..

அப்போது காரா பூந்தி,புஜியா,டேட்ஸ் ச்ட்னியுடன் அலங்கரித்த தஹி பூரியை சொட்ட சொட்ட ஒருவர் எடுத்துக் கொண்டு நகர்வதை பார்போம்..அடடே சேட் அயிட்டங்கள் இருக்கா..கவனிக்காம போய்ட்டோமே என்று அவசர அவசரமாக எச்ச தட்டுடன் சேட் செக்‌ஷனை நோக்கி விரைவோம்..அடடா வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொள்ள மறந்துட்டோமே..அபி பானி நஹி சாயியே பானி பூரி சாயியே.ஜல்தி ஜாவ் என்று மை வாய்ஸ் இந்தியில் தந்திஅடிக்க கூட்டத்தில் தத்திக் கொண்டு நகர்வோம்..

சில பஃபே முன் அனுபவஸ்தர்கள் நடுவில் சென்று கொண்டிருக்கும் எச்சில் ப்லேட் கலெக்டர்களிடம் தம் பிலேட்டைக் கொடுத்து விட்டு புது பிலேட்டுடன் சேட் செக்‌ஷன் கியூவில் போய் நிற்பார்கள் ..அட நன்றாக இருக்கிறதே இந்த ஐடியா என்று நாமும் ப்லேட் கலெக்டரைத் தேடுவதற்குள் சேட் கியூ பெரிதாக எச்சில் தட்டோடயே போய் நிற்போம்..

இவ்வளவு சாப்பிட்டும் வயிற்றில் இன்னும் இடம் இருப்பதாகவே தோன்றும் மெயின் கோர்சை சாப்பிடாமல் வந்தால் கருட புராண தண்டனைதான் கிடைக்கும் அதை விடலாகாது என்று பரோட்டா,பட்டர் நான்,பன்னீர் பட்டர் மசாலா ,கடாய் வெஜிடபில் மற்றும் வெஜிடபுல் புலாவ் ஆனியன் ரைதா அப்பளமையும் அள்ளிப்போட்டுக் கொண்டு அடடே சவுத் இன்டியன் சாம்பார் ரசம் பொரியல் கூட்டு வேற இருக்கா..ஆனால் ரசத்தை மட்டும் குடித்துக் கொள்லலாம் என்று ஒரு டம்பல்றில் சுட சுட ரசத்தை மட்டும் நிரப்பிக் கொண்டு மீண்டும் ஒரு ஒதுக்கு புறத்தை நாடி செல்வோம்...

தயிர் சாதம் தாளித்து ஜோரா இருக்கு மிஸ் பண்ணிடாத என்று நமக்கு முன்னரே விரலை வழித்து நக்கிக் கொண்டு இருக்கும் மாமியார் தயிர் சாப்பிடாம எழுந்தா அடுத்த ஜென்மத்துல ராட்சசியாதான் பொறப்ப என்று வேற மிரட்ட அந்த அடுத்த ஜென்ம இமேஜுக்காகவே ஒரு கரன்டி தயிர் சாதமும் எலுமிச்ச ஊறுகாயையும் ஸ்வாகாவாக்கிக் கொண்டு எச்சல் தட்டை அருகில் இருக்கும் கூடையில் வீசி ஹான்ட் வாஷ் எங்கே என்று சாப்பிட்ட கையில் இருந்து சொட்டாமல் இருக்க அடியில் இன்னொரு கையை முட்டுக் கொடுத்துக் கொன்டே நகர்ந்து வாஷ்பேசினை அடைய இப்போது எச்சல் கையாலயே டேப்பைத் திறந்து அலம்பிக் கொண்டு அடுத்த தாக்குதல் டெசர்ட் செக்ஷனை நோக்கிய படையெடுப்பு...

சுடச்சுட காரட் அல்வா அல்லது குலாப் ஜாமூனையும் ஒரு தட்டில் ஏற்றிக்கொண்டு ,,ஐஸ் க்ரீம் இருக்கனுமே என்று யோசிக்கும் போதெ வெயிட்டர் டேபிலுக்கடியில் ஒளித்து வைத்திருக்கும் வென்னிலா ஐஸ் பாத்திரத்தை மேல வைக்க அதிலிருந்து ஒரு ஸ்கூப்பைஎடுத்து ஜாமூனுடன் பரப்பி அவறையும் உள்ளே தள்ளி விட்டு..அப்புறம் ராஜஸ்தான் தொப்பி,கலர் ஜிப்பா பஞ்சகஜம் அணிந்து கொண்டு நிற்கும் பான் வாலாவிடம் சென்று அப்போ திங்க ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு காரில் செல்லும் போது திங்க ஒரு பார்சல் பீடாவையும் வாங்கி கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு உலகப்போரில் சண்டையிட்டு விழுப்புண்கள் இல்லாமல் வெளியேறிய காவலனைப்போல் வெளியேறுகிறோம்..

வரும்போதே எதையாது விட்டுட்டோமா, என்று நோட்டம் விட அடடே வித விதமான காய்கறி பழ சாலட்கள் அழககாக கார்விங் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டத்தை கவனிக்காமல் விட்டுட்டோமே என்று பீடாவை மென்று கொண்டே ஒரு ஏமாந்த ஃபீலில் வாசலில் தாம்பூலப்பையை வாங்கிக் கொண்டு விடை பெறுகிறோம்...

கையில் தட்டை பாலன்ஸ் செய்து பலகார வேட்டை நடத்தவே சரியாக இருக்கிறது..நண்பர்கள் உறவினர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தலை நிமிர்ந்து கூட பார்க்க முடிவதில்லை.கல்யாணம் நடத்துபர்களும் அந்த கசமுசாக் கூட்டத்தில் நம்மை தேடி வந்து சாப்டீர்களா நன்றாக இருந்ததா என்ற குச விசாரிப்புகளும் இல்லை..நாமாகவும் அவரைத் தேடி விடை பெற முடியாது..

ஆனால் பந்தி கலாச்சாரமோ அல்லது பஃபே கலாச்சாரமோ நம்மவர்கள் செய்யும் களேபரங்களை ஒரு வெள்ளைக்காரர் பார்த்தால் நம்மவர்களை கோட் சூட், பட்டுபுடவை அணிந்த நாகரீக காட்டுமிராண்டிகள் என்றே நினைப்பார்..

இந்த கல்யாண வைபோகங்களில் பந்தி சாப்பாட்டு முறையிலும் சரி பஃபே முறையிலும் சரி விரயமாகும் உணவை ஒரு கிராமமே சாப்பிடலாம் ..தினம் ஒரு கிராமம் சாப்பிடும் அளவு சாப்பாடு வேஸ்டாகிறது...அரை சாண் வயிற்றுக்கு எதுக்கு ஆயிரம் அயிட்டங்கள்.?இந்த படாடோப விருந்துகள் பசியால் வரும் வயத்தெரிச்சலைப் போக்கும் stature symbolஆ இருப்பதை விட ,அப்படி ஒரு சாப்பாடு அப்படி ஒரு கல்யாணம் என்று நாலு பேர் வயறு எரிய வைக்கும் status symbol ஆகத்தான் இருக்கிறது.



No comments:

Post a Comment