Saturday, February 13, 2021

ஓ...அமெரிக்கா - 11

 ஓ...அமெரிக்கா - 11 

ஒரு நாள் நாங்கள் க்ரான்ட் கேன்யன் (Grand Canyon) பார்க்க செல்வதென்று முடிவு செய்து காரில் கிளம்பினோம். நான், என் மகள், அவள் நண்பர்கள் இரண்டு பேர் என்று. அங்கே இங்கேபோல காரில் எத்தனை பேர் வேண்டுமானாலும் போக முடியாது. எத்தனை சீட் இருக்கிறதோ, சீட் பெல்ட் போட முடியுமோ, அத்தனை பேருக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி. அவர்கள் எல்லோரும் ஏற்கனவே பார்த்திருந்தாலும் என்னுடன் சந்தோஷமாகக் கிளம்பி வந்தார்கள். டெம்ப்பியிலிருந்து ஏறக்குறைய 240 மைல் தூரத்தில் 4 மணி நேரக் கார் பயணம். 

கார் கிளம்பி ஊரைவிட்டு வெளியே வந்ததும்தான் முதன் முதலில் எனக்கு ஒரு பாலைவனத்தில் இருந்துகொண்டிருந்த உணர்வே வந்தது. அங்கங்கே ஸ்பீட் லிமிட் போர்டுகள் காணப்பட்டன. வீடுகள் தாண்டிப் போனதும் காடுபோலக் கள்ளிவகை மரங்களைப் பார்த்தது அபூர்வமான காட்சி. நான் அதுவரையில் அவ்வளவு உயரமான, பெரிய கேக்டஸ் வகை மரங்களைப் பார்த்ததில்லை. நம் தடிமனான அடிமரமும், பரந்து விரிந்த கிளைகளையும் கொண்ட மரங்களைப் பார்த்துவிட்டு, பிரம்மாண்டமான குச்சிபோன்ற கள்ளி மரங்களைப் பார்ப்பது விநோதமாக இருந்தது. அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்த சிறு மலைகள் பூராவும் வித விதமான, பெரிய, கள்ளி மரங்கள் நெருக்கமாக. 

இடதுபக்கம் ஒன்றும், வலதுபக்கம் ஒன்றுமாகச் சென்ற நீண்ட, நெடும், ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த, அதிகமாகக் கார்கள் இல்லாத சாலையில் வெகுதூரம்வரை பார்க்க முடிந்தது. ஊருக்குள் இருந்தவரையில் வெயிலாக இருந்த தட்பவெப்பம் வெளியே வந்ததும் கொஞ்ச நேரத்தில் இருண்டு, பெரிய மேகங்களுடன், குளிர்ந்த காற்றுடன் மாறியது. எனக்குத் திடீரென்று நான் பார்த்த 'Tornado' என்ற ஆங்கிலத் திரைப்படம் நினைவில் வந்தது. தனக்குள் மாட்டியதை எல்லாம் சுருட்டி எடுத்துத் தூக்கிச் சென்றுவிடும் ராட்சஸ சூறாவளிக் காற்றுப்போல எதுவும் நேருமோ? 

ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக சட்டென்று மழை ஆரம்பித்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை! மைல் கணக்கில் ஒற்றை சாலையைத்தவிர ஒன்றுமில்லாத, பெரிய மரங்களால் மறைக்கப்படாத, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்க்க முடிந்த அப்பெருவெளியில் வானத்துக்கும், பூமிக்கும் வெள்ளித் திரை போட்டதுபோல மழை விடாமல் கொட்டியது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி! வானமோ இருண்டு அரை இருட்டைப்போல இருந்தது. அதில் மழையைக் கிழித்துக்கொண்டு காரில் சென்றுகொண்டு இருந்தது சிலிர்ப்பாக இருந்தது. அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் மழையே இல்லாத வெயிலடிக்கும் தட்பவெப்பநிலைக்கு மாறியது. திரும்பிப் பார்த்தால் மேகங்கள் இருந்த இடத்தில் இன்னும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

நாங்கள் க்ராண்ட் கேன்யனை அடைந்ததும் காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றோம். க்ராண்ட் கேன்யன் ஒரு ப்ரம்மாண்டமான மாபெரும் பள்ளத்தாக்கு.

பல மில்லியன் வருடங்களாகப் பூமியின் பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலை மாற்றங்களாலும், பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டானிக் தகடுகளின் சேர்ந்தும் விரிந்துமான இடப்பெயர்ச்சிகளாலும், பூமியில் ஏற்பட்ட ஒரு ப்ரம்மாண்ட ஆழமும், அகலமும், மைல்கள் கணக்கில் நீண்டதுமான வெடிப்புப் போன்ற மாபெரும் பள்ளம். ஏதோ பல லேயர்கள் கொண்ட கேக் அல்லது வருடக்கணக்கில் வாழ்ந்து வெட்டுப்பட்ட அகன்ற மரத்தைக் குறுக்காக வெட்டினால் தெரிவதுபோன்ற அகலமான கோடு கோடாகத் தோன்றிய பாறைப் படிவுகள். 

ஏறக்குறைய 446 கி.மீ. நீளமும், 29 கி.மீ. அகலமும், 1.6 கி.மீ ஆழமும் கொண்ட ஒரு மாபெரும் பள்ளத்தை நினைத்துப் பாருங்கள். ப்ரம்மாண்டம் என்பதற்கான அர்த்தம் புரியும். அதன் வழியில் கொலராடோ ஆறு, பாலைவனம், காடுகள், குகைகள், மான்டேன் மலைகள் என்று பல வகையான இயற்கை சூழல்களையும், வித விதமான, வித்தியாசமான மனித, தாவர, மற்ற உயிரியல் இனங்களையும் கொண்டிருந்த, இருக்கும் க்ராண்ட் கேன்யன் இயற்கையின் ப்ரம்மாண்டத்திற்கு மற்றும் ஒரு உதாரணம். எப்போதும் அப்படிப்பட்ட இயற்கை விஸ்வரூபத்தின் முன் துரும்புபோல என்னை உணரும் நான், அங்கேயும் அப்படியே உணர்ந்தேன். 

அதன் ப்ரம்மாண்டம் ஒரு புறம் என்றால், நீண்ட, நெடும் பரப்புக்கு, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததுபோலத் தோன்றும் பலவகைப் பாறைகளின் வடிவங்களும், வண்ணங்களும் நெஞ்சை அள்ளுகின்றன. கடலின் அடியிலிருந்து, அழுத்தத்தால் மேலெழுந்து, எரிமலைகளின் லாவா, கடல் வாழ் உயிரினங்களால் ஏற்பட்ட சுண்ணாம்புப் பாறைகள், ஆறுகளின் நீரோட்டங்கள் கொண்டுவந்து சேர்த்த கனிமங்கள், மழைப் பொழிவு சேர்த்த பாலைவன மண் எல்லாம் கொண்டு, ஆற்று நீரோட்டம் மற்றும் காற்றினால் ஏற்பட்ட மண் அரிப்பு, மேலே கடினமாகவும், கீழே இலேசாகவும் இருந்த பாறைகளால் ஏற்பட்ட நிலச் சரிவுகள் போன்ற இயற்கைக் காரணிகளால், விட்டு விட்டு செதுக்கியது போலவும், வரிசையான கோபுரங்கள் போலவும் இயற்கையிலேயே காட்சியளிக்கும் க்ராண்ட் கேன்யன் Geologists ன் சொர்க்கம். 

நாங்கள் போய்ச் சேர்ந்த நேரம் ஏறக்குறைய மாலை. அங்கே இல்லாவிட்டாலும், சுற்றிலும் மழை பெய்துகொண்டிருந்ததால், இலேசான ஈரப் பதத்துடன் காற்று இதமாக இருந்தது. வெயில் பெயருக்கு அடித்ததுபோல வெப்பம் குறைந்து, தங்கமான மஞ்சள் வண்ணத்தில் அந்த மொத்த இடத்தையும் பளீரென்று காட்டியது. லேயர் லேயராக, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பல வண்ணப் பாறைகளை நேராக நடுவில் வெட்டியதுபோன்ற ஒரு தோற்றத்தில், தங்க வண்ண இயற்கை வெயில் வெளிச்சத்தில், க்ராண்ட் கேன்யன் ஒரு கண் கொள்ளாக் காட்சி! அதிலும் அங்கங்கே பக்கத்தில் சென்று பார்க்க கம்பித் தடுப்புகளுடன் வசதி. 

அப்படி ஒரு தடுப்பை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வயதான அமெரிக்கப் பெண்மணி எங்களிடம் ஒரு நோட்டீஸைக் கொடுத்துவிட்டு "கவனமாக இருங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார். நாங்கள் புரியாமல் நோட்டீஸைப் பார்த்தோம். அதில் ஓர் இளம் அமெரிக்க ஆணின் படத்துடன் 'இவர் என் ஒரே மகன். இருபத்தைந்து வயதான இவர் 2000 மாவது ஆண்டு இங்கே ஃபோட்டோ எடுக்கப் பாறைகளின் முனைவரை சென்று நிலை தடுமாறிக் கீழே விழுந்து இறந்துவிட்டார். நான் என் ஒரே மகனை இழந்துவிட்டேன். தயவுசெய்து கவனமாக இருங்கள்' என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. 

நான் போயிருந்தது 2015 ல். அப்படியானால் அவர் ஐந்து வருடங்களாக அதைச் செய்துகொண்டிருக்க வேண்டும். தன் ஒரே மகனை இழந்த அந்தத் தாயின் வேதனையும், அதே சமயம், அத்துடன் நின்றுவிடாமல் தன்னைப்போல வேறு யாருக்கும் அதே நிலை வந்துவிடக் கூடாதென்று மெனக்கெடும் அவரது கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியும் என் மனதைத் தொட்டு அசைத்தது. 

அங்கங்கே வைக்கப்பட்டிருந்த போர்டுகளில் க்ராண்ட் கேன்யன், அதன் தோற்றம், தாவர, உயிரினங்கள் பற்றிய குறிப்புகள் தவிர, அந்த இடத்திற்கே உரிய நினைவுப் பொருட்களையும், குறிப்புகளைக் கொண்ட pamphlets, புத்தகங்களைக்கொண்ட டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்ட்டரில் சிறியதாக சில dream catchers வாங்கிக்கொண்டேன். அவைதவிர அந்தந்த இடங்களுக்கே உரிய புகைப்படங்களுடன் கூடிய காஃபி மக்ஸ், டீ ஷர்ட்ஸ், புகைப்பட ஃப்ரேம்கள் என்று என்னென்னவோ பரிசு, நினைவுப் பொருட்கள். 

ஏரி, மலைபோன்ற சிறிய இயற்கை வளங்களையும் வெகு கவனத்துடன் பராமரிக்கும் அமெரிக்க அரசாங்கம் க்ராண்ட் கேன்யனைத் தங்களுக்குக் கிடைத்த பாரம்பரியமிக்க மாபெரும் இயற்கையின் பரிசாகக் கருதிப் பாதுகாக்கிறார்கள்.

கீழே க்ராண்ட் கேன்யன் புகைப்படங்கள் இன்டர்நெட்டிலிருந்து .
Ancila Fernando



No comments:

Post a Comment