Saturday, February 13, 2021

ஓ...அமெரிக்கா - 10

 ஓ...அமெரிக்கா - 10 

என் மகளின் நண்பர்களில் ஒருவரின் காரை அவர்கள் யாராவது அவசரத்துக்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதால் அவர்கள் எல்லோரும் கார் டிரைவிங் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்கள். அவர்களில் நிறையப் பேருக்கு இந்திய டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலும் அமெரிக்காவில் கார் ஓட்ட அங்கே லைசென்ஸ் அவசியம். 

சாலை விதிகள் ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் மாறுபடும் என்பதுடன் டிரைவிங் லைசென்ஸ் அந்த ஸ்டேட் பெயரில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. நம் நாட்டில் இடதுபக்கம் ஓட்டிப் பழகிவிட்டு அங்கே வலது பக்கம் ஓட்ட வேண்டும் என்பதே இந்தியாவிலிருந்து அங்கே சென்று கார் ஓட்டுபவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை. 

முதலில் யார் யார் என்ன கார் ஓட்டி லைசென்ஸ் வாங்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து வாடகைக்கார் மணிக் கணக்கிற்கு எடுத்துக்கொண்டார்கள். வாடகைப் பணம் ஓட்டுபவரின் வயது, ஏற்கனவே லைசன்ஸ் இருக்கிறதா, இன்ஷுரன்ஸ், எத்தனை மணி நேரம் போன்ற பல காரணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. வாடகைக் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடம் பிரம்மாண்டமாக இருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லா விதமான கார்களும் அங்கே இருந்தன. 

பின்னர் காரை ஓட்டிப் பார்க்கக் காலி இடத்துக்காகக் காத்திருந்து, லைட் ரயில் ஸ்டேஷனின் கார் பார்க்கிங் இடத்தைத் தேர்ந்தெடுத்து இரவில் அங்கே சென்றோம். 

பத்து மணிக்குமேல் ஒன்றிரண்டு கார்களைத் தவிரக் காலியாக இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் ஓட்டிப் பார்த்தார்கள். காரைக்கூட ஓட்டி விடலாம். பார்க்கிங்தான் இருப்பதில் கஷ்டம். பார்க்கிங் இடத்தின் நடுவில், பக்கங்களில் சரியான இடைவெளிவிட்டு, பக்கக் கோட்டுக்கு இணையாக நிறுத்தத் திருப்பித் திருப்பிப் பலமுறை விடாமல் முயற்சி செய்தார்கள். 

இதமாக இலேசான குளிர்காற்று வீசிக்கொண்டிருந்த, எங்களைத்தவிர ஆளரவமற்ற ஏகாந்தமான, ஏக்கர் கணக்கில் விரிந்து கிடந்த, பல விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்க, இரவின் இருட்டும் அல்லாத பகலின் வெளிச்சமும் அல்லாத, ஆனால் இரண்டும் கலந்ததுபோன்ற ஒரு சூழ்நிலையில், அவர்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் விடாமுயற்சியுடன் காரைப் பார்க் செய்ய முயன்றுகொண்டே இருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். 

இதற்குள் ஒரு முறை ஒரு போலீஸ் ரோந்துக் கார் வந்து நாங்கள் யார், அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று கேட்டார்கள். அவர்கள் மாணவர்கள், கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள், அதோடு ஒரு அம்மா நானும் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டதும், எங்களை கவனமாக இருக்கும்படியும், ஏதாவது உதவி வேண்டுமானால் கூப்பிடும்படியும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். இத்தனையும் ஏதோ நண்பர்களிடம் பேசுவதுபோலப் பேசிவிட்டுச் சென்றார்கள். எனக்குப் போலீஸ் என்றதும் இயல்பாக வந்த அசௌகரிய உணர்வு அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் போய் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அதன்பின் அந்தக் கார் அந்தப் பக்கமாக அவ்வப்போது வந்துபோனது. ஆனால் எங்களை யாரும் எதுவும் கேட்கவில்லை. 

வீட்டுக்குப் போகும் வழியில் வந்த அலுவலகக் கட்டடங்கள் எல்லாம் இரவில் ஆளே இல்லாமல், முழு ஒளி வெளிச்சத்தில், கண்ணாடி சுவர்களுடன், உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் வெளியில் தெரியும்படி இருந்தன. பெரும்பாலான அலுவலகக் கட்டடங்களுக்கும், வணிகக் கட்டடங்களுக்கும் இரவுக் காவலர்கள் இருப்பதில்லை. மொத்தக் கட்டடங்கள், அதன் உள்ளே இருக்கும் பொருட்கள், திருட்டு, கொள்ளை, தீ மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்கான இன்ஷூரன்ஸ், CCTV, எச்சரிக்கை அமைப்புகள் (alarm system) போன்றவை மட்டுமே கட்டடங்களைக் காவல் செய்கின்றன. மால்கள், வங்கிகள் மற்றும் தனியார் பாதுகாப்பு அமைப்புகளை (private security system) ஏற்படுத்திக்கொள்ள வசதி இருக்கிற Walmart, Costco போன்ற பெரிய இடங்களில் மட்டுமே இரவுக் காவலர்கள் இருக்கிறார்கள். தனியார் பாதுகாப்பு வசதிகள் விலை உயர்ந்ததாக இருப்பதால் இருக்கலாம். 

டெம்ப்பியிலும் அதைச்சுற்றி இருக்கும் இடங்களிலும் தனித்தனியாக ட்ரைவிங் லைசென்ஸ் கொடுக்கும் Arizona Motor Vehicles Dept. அலுவலகங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே சென்றதும் ரிசப்ஷனில் பெயர் சொல்லிவிட்டு, கொண்டு போயிருந்த அப்ளிகேஷன், மற்ற தேவைப்பட்ட ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, தேவையான கட்டணத்தையும் கட்டிவிட்டுக் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் ஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட எழுந்து போனார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அலுவலர் உடன் சென்றார். இத்தனையும் அதிகக் காத்திருப்பு இல்லாமல் சில நிமிடங்களில் நடந்து முடிந்தன. 

என் மகள் முறை வந்தபோது நானும் எழுந்து சென்றேன். என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். அங்கேயிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஓட்ட சொல்வார்கள் என்பதால், ஏற்கனவே நகரத்தின் பல தெருக்கள் வழியாகவும் சென்று சாலைகளைத் தெரிந்து வைத்திருந்தார்கள். குழப்பமில்லாமல் சாலையில் வண்டி ஓட்ட வேண்டுமே! தவிர வேகமும், வண்டியை சீராக ஓட்டுவதும், வண்டியை சாலைகளில் இடது, வலது பக்கங்களில் திருப்புவதும், காரைப் பார்க் செய்வதும் மிக மிக முக்கியமாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஒரு வழியாக ஒவ்வொருவராகத் திரும்பிவர நாங்கள் வீடு திரும்பினோம். 

காரில் ஏறிய உடனே சீட் பெல்ட் போட இந்தியாவிலிருந்து சென்றிருந்த எனக்கு ஆரம்பத்தில் அடிக்கடி மறந்துவிடும். இங்கே அதைப் பழக்கமில்லாத நமக்கு அங்கே அதைப் பழகிக்கொள்ள நாட்கள் பிடிக்கிறது. என் மகள் ஒவ்வொரு முறை காரில் ஏறிக் கதவை சாத்தியவுடன், by default போல, "அம்மா, சீட் பெல்ட்" என்பாள். அப்புறம்தான் நினைவு வந்து போட்டுக்கொள்வேன். சீட் பெல்ட் போடவில்லை என்றால் விபத்துக்களின்போது ஆபத்து அதிகம் என்பதோடு, அபராதக் கட்டணம் அதிகம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம். இப்படி ஆரம்பத்தில் கட்டாயமாகத் தெரிந்துகொண்ட பழக்கம் நாளடைவில் சீராகி, காரில் ஏறியவுடன் போட்டுக்கொள்ள ஆரம்பித்து, இங்கே வந்தபிறகும் தானாகத் தொடர்கிறது. 

😀😀 

கார்களில் ஹார்ண் இருந்தாலும் எமர்ஜென்சிக்கு மட்டுமே உபயோகப்படுத்தலாம் என்பதால் நூற்றுக்கணக்கான கார்களால் சாலைகள் நிரம்பி வழிகின்ற rush hour ல்கூட சாலைகளில் சத்தமே இல்லாமல், ஒரு ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு, ஏதோ பள்ளியில் விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்குடன் நடந்துகொள்ளும் மாணவர்களைப்போலக் கார்கள் செல்வது, சந்தடி நிறைந்த நம் சாலைகளை நினைவு தந்து ஏக்கம் தருகிறது. பார்க்கிங்கிற்கான இடங்கள் தவிர வேறெங்கும் கார்களைப் பார்க் செய்யக்கூடாது என்பதால் சாலைகள் முழுவதும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கின்றன. 

சாலைகளில் இன்னொரு சவால் லேன் (lane) மாறுவது. ஆறு லேன்கள்வரை கொண்ட அகலமான அமெரிக்க சாலைகளில், செல்ல வேண்டிய இடத்துக்கு ஏற்றபடி சாலைகளில் இடது, நடு, வலதுபக்க லேன்களைத் தேர்ந்தெடுத்து மாற்றும்போது இடது, வலது பக்கக் கண்ணாடிகளைப் பார்ப்பது போதாதென்று பின்னால் இருந்தும் வரும் கார்களைக் கவனித்து, போதுமான இடைவெளி இருக்கும்போதே செய்யமுடியும் என்பதும், அதுவும் நாம் திரும்ப வேண்டிய சாலை வருவதற்குள் செய்தாக வேண்டும் என்பதும், நன்றாகக் கார் ஓட்டுபவர்களுக்கேகூட ஆரம்பத்தில் சவால்தான். ஒவ்வொருமுறை என் மகள் காரை லேன் மாற்றும்போதும் என்னையறியாமல் எனக்குத் தூக்கிவாரிப் போடுவதும், லேன் மாறியபிறகே இயல்பு நிலைக்கு நான் திரும்புவதும் என் மகளுக்கு வேடிக்கை தரும் விஷயங்கள். 

எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இன்னொரு விஷயம் கார் வாஷ். அதுவரையில் காரை சுத்தப்படுத்தும்போது நான் காருக்குள் இருந்ததில்லை என்பதால், முதன் முதல் நாம் உள்ளே இருக்கும்போதே, நம்முடனேயே கார் சுத்தப்படுத்தும் இடத்தில் சென்று நின்று, ஏதோ அருவிபோலக் காரின்மேல் தண்ணீர் விழ, ராட்சத bristls காரை ப்ரஷ் செய்தது விநோதமாக இருந்தது. கார் வாஷ் திட்டங்கள்தான் எத்தனை வகை? தனித்தனி, வார, மாத, வருட, இருவர், குடும்பத் திட்டங்கள், அதில் கிடைக்கும் அதிகமான பலன்கள். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் அதிகபட்ச, நுணுக்கமான possibilities ஆச்சர்யம் தருகிறது. 

அதுவும் Car wash க்கு நுழைவதற்கு முன்பு, Slot machine னில் நாமே கட்டணம் செலுத்தி, சரியான Position ல் Car ஐ Park செய்ய மட்டுமே ஒரு நபர் உதவிட மற்றவை அனைத்தும் தானியங்கி முறை.Car wash முடிந்ததும், தனியான Parking slot ல் நிறுத்தி, ஒவ்வொரு Car க்கும் உரிய Vaccum cleaner hose ஐ எடுத்து காரின் உள்ளே Seat இடுக்கில் உள்ள தூசுகளை நாமே தூய்மை செய்து, Wheel rim ஐ துடைக்க மிகத் தூய்மையாக அடுக்கி வைக்கப் பட்டுள்ள வெள்ளை டர்க்கி டவல் (நாம் குளிக்கும் டவலை விட சிறப்பாக இருக்கும்) ஐ பயன் படுத்தி  துடைத்து விட்டு Soiled towel போடும் Bin ல் போட்டு விட்டு நாம் புறப் படலாம்.இதனை கண்காணிக்க உதவிட  எவரும் இருக்க மாட்டார்கள்.மாற்றுத் திறனாளிக்கு மட்டும் உதவிட ஓரிருவர் இருப்பர்.

அமெரிக்காவில் எல்லாவற்றிலும் என் கவனத்தைக் கவர்ந்தது சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை. பார்க்கும் இடங்களில் எல்லாம் காணப்பட்ட சுத்தம் உடனடியாக நம்மை ஈர்க்கிறது. எதிலும் சுத்தம் அடிப்படைத் தேவை இல்லையா? ஒரு சின்னப் பேப்பரையோ அல்லது குப்பையையோ அல்லது மென்று முடித்த சூயிங் கம்மையோ எங்கேயும் போட்டுவிட முடியாது. அதீதக் கட்டணமே அங்கே இந்த சுத்தத்தை உறுதி செய்கிறது. 

அடுத்தது ஒழுங்குமுறை. எங்கேயும் பணம் கொடுத்து வேலை வாங்க முடியாது என்பதால் எல்லா இடங்களிலும் முறைப்படி மட்டுமே, ஆனால், வேகமாக வேலை நடக்கிறது. அவர்கள் நேரத்தின் மதிப்பும், அவசியமும் தெரிந்தவர்களாக இருப்பதால் தங்கு தடையில்லாமல் அடுத்தடுத்து வேலை செய்து, வேலைகளுக்கு மிக மிகக்

குறைவான நேரமே எடுக்கிறார்கள்.


Ancila Fernando

No comments:

Post a Comment