பவள மல்லி மரம் தல விருட்சமாக உள்ள கூறைநாடு புனுகீஸ்வரர் சிவன் கோவில்.
பவளமல்லி பூவின் சிறப்புகள்:
பவளமல்லிகை புஷ்பம் ஒரு தெய்வீக மலராகக் கருதப்படுகிறது.
தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லிமரமும் ஒன்று என புராணங்கள் கூறுகிறது.
பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும்.
இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.
பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம் ஆகும் . இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது.
புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகையை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.
பவள மல்லிகை பூஜைக்கு உரிய மலராகும்
அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று.
இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.
பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்துதான் பறிக்கப்படும்.
பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன் படுத்தமாட்டார்கள். ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது.
இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன் படுத்துவார்கள்.
பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம்.
மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பவளமல்லி சிறு மரமாகக் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம்.
1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும்.
தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.
பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். இதன் கனிகள் வட்டவடிவில் உறைஅமைப்பில் இருக்கும்.
செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும்.
அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.
சூரியனை பார்த்து மலராத பவளமல்லி புஷ்பத்தின் காரணத்தை உணர்த்தும் புராணக் கதை.
இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது.
பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை.
இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள்.
இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.
சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது.
இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.
தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்றும் விளக்குவார்கள்.
பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது.
பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள்.
தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ண பகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம்,
ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று கூறப்படுகிறது.
கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்:
மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. U
குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன.
அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது.
அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்பாளின் பெயர் சாந்த நாயகி.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. U
ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம்.
எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதியும் உள்ளது.
அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள்.
மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள்.
அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.
கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன.
உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.
அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள்.
வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது.
இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார்.
இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.
இந்த ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம்.
ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது.
இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தைப் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
தல வரலாறு:
சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது.
அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது.
பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.
அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி சுயம்புவாக எழுந்தருளியிருந்தார் சிவபெருமான்.
அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது.
அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாகப் பரவியிருந்தது.
திடீரென்று ஒருநாள் அந்தப் புனுகு பூனைக்கு ஞானம் வந்தது.
“இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே!
இது என்ன வாழ்க்கை!
சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்” என அந்தப்பூனை நினைத்தது.
யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.
நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத்தேடி அலைந்தது.
வயல் சூழ்ந்த ஒரு சோலையில் பவழமல்லிகை மரத்தடியில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்தப் பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது.
வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது.
இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார்.
புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.
‘இவரே புனுகீசர்’ என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர்.
சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான்.
இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.
இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு.
சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான்.
அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான் என இன்னொரு தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.
ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன.
மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள்.
ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.
சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.
இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.
நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு.
தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.
கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.
பவளமல்லி மரம் தல விருட்சமாக இருக்கும் பிற ஆலயங்கள்:
தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக உள்ளது.
No comments:
Post a Comment