தன்வினை .... - 1
By N Krishnamurthy
நாம் கண்டதையும், கேட்டதையும் கொஞ்சம் கற்பனையை கலந்து, அங்கெங்கே நகாசு வேலை செய்து கதையாக படைக்கிறோம். சிலருக்கு அது உண்மை சம்பவமாக படுகிறது. சிலர் அதை தன் வாழ்க்கையில் நடந்தவற்றோடு ஒத்து இருப்பதாக உணர்கிறார்கள். சிலர் சில கதைகளை படிக்கும்போது அந்நிகழ்ச்சிகளை அருகே இருந்து பார்ப்பது போல உணர்கிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு கதையை தத்ரூபமாக ஒரு கதாசிரியர் கொண்டு செல்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் வெற்றி அடைந்து விட்டார் எனவே கொள்ளலாம்.
தன் வினை .... யையும் அப்படி கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.
சௌஜன்யாவும், வினயாவும் கோடம்பாக்கம் மீனாக்ஷி காலேஜில் பீ.காம் சேர்ந்த முதல் நாளிலிருந்து நெருங்கிப்பழக ஆரம்பித்தனர்.
சௌஜன்யா அஷோக் நகரிலும், வினயா பழைய மாம்பலத்திலும் வசித்தது மிகவும் வசதியாகப்போனது.
இருவரும் அஷோக்நகர் பில்லர் அருகிலுள்ள(உதயம் தியேட்டர் எதிரில் இருந்த) பஸ் ஸ்டாப்பில் 17.D பிடிப்பார்கள். பதினைந்தே நிமிடத்தில் கல்லூரி வந்து விடும்.
வினயா போஸ்டல் காலனியில் இருந்ததால், அவளுக்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனை விட அஷோக்பில்லர் அருகில் இருந்தது.
வினயா சுண்டினால் ரத்தம் வரும் சிகப்பு. வட்ட முகம். கூர் நாசி. ஆறடி கூந்தல் இல்லாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அளவிலான கூந்தல்.மொத்தத்தில் நல்ல அழகு.+2 வரை அஹோபில மடம் பள்ளியில் படித்தவள்.
அப்பா கணேசன் ஏ.ஜுஸ் ஆபிசில் பணி புரிகிறார். பன்னிரண்டு வருட வேலை பாக்கி உள்ளது. அம்மா விமலா ஹவுஸ் ஒய்ப் தான் (ஆமாம் ஹவுஸ் ஒய்ப்க்கு புரியும் படியான தமிழாக்கம் என்னவோ. வீட்டு மனைவி என்று எழுதி அதைப்புரிய வைக்க பிராக்கெட்டில் House Wife என்று போட நான் தயாரில்லை).
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்பதாக இவர்களுக்கு வினயா ஒரே குழந்தை.
சௌஜன்யா அஷோக்நகர் ஜவஹர் வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்திருந்தாள். மாநிறுத்துக்கு சற்று தூக்கலான நிறம்.துறு துறு வென்று அலை பாயும் கண்கள். ஒரு முறை பார்த்தால் மறு முறையும் பார்க்கத்தோன்றும் முகம். கொஞ்சம் கோணல் வகுடு எடுத்திருப்பாள்.
சௌஜன்யாவின் அப்பா சுந்தரம் தனியார் கம்பனியில் பைனான்ஸ் மேனேஜர்.
அம்மா கஸ்தூரி E.S.I ஆஸ்பத்ரியில் ஸ்டாப் நர்ஸ்.சௌஜன்யாவிற்கு ஐந்து வருடம் கழித்து பிறந்தவன் வினோத்.
வினயாவும், சௌஜன்யாவும் எப்படி இருப்பார்கள் என்று இப்போது அறுபது, எழுபதுகளில் இருப்போருக்கு ஒரு சின்ன டிப்ஸ். வினயா நாட்டிய பேரொளி பத்மினி என்றால்,சௌஜன்யா கண்ணழகி T.R.ராஜகுமாரி எனலாம்.
கேட்ட கேள்விக்கு மட்டும் வினயா பதிலளிப்பாள் என்றால் சௌஜன்யா கொஞ்சம் நம்மைப்போல வள வளா டைப்.
இருவரும் அடுத்தடுத்த பேட்டைகளில் வசித்தாலும் கல்லூரி சேரும் முன் அறிமுகமாகாதது ஆச்சர்யம்தான்.
கடவுள் யார் யாரை எப்போது தெரிந்து கொள்ளவேண்டும் என்று நியதி வைத்திருக்கிறான் போலும்.
தன்வினை .... வளரும்.
No comments:
Post a Comment