தன்வினை .... - 3
By N Krishnamurthy
சுந்தரத்தின் சிபார்சின் பேரில், அவர்கள் இருவருக்கும், ஒரகடத்தில் இருந்த கார் உதிரி பாகம் தயாரிக்கும் ஒரு பெரிய கம்பெனியில், அக்கவுண்டண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேலை கிடைத்தது.
இருவரும் நல்ல நாளாகப்பார்த்து வேலையில் சேர்ந்தார்கள். அஷோக் பில்லரில் கம்பனி பஸ்சில் ஏறினார்கள்.
ஒன்றரை மணி நேரம் கழிந்ததும் பஸ் கம்பனியை அடைந்தது.
சீப் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் பணிக்கர் அறைக்கு வெளியே இருவரும் காத்திருந்தனர்.
அரை மணி கழிந்ததும் அவர்கள் இருவரையும் பணிக்கர் வரச்சொன்னதாக ப்யூன் கூப்பிட்டான். உள்ளே நுழைந்த அவர்களை உட்காரச் சொன்ன அவர், சிறிது நேரம் அவர்களிடம் பொதுவாக பேசி இருந்து விட்டு,ப்யூனை கூப்பிட்டு "ஜெகன் சாரை வரச்சொல்"என்றார்.
பணிக்கர் நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வயதுக்குள் இருப்பார் போலிருந்தது. முன்புறத்தில் முடி சுத்தமாக இல்லை. தீர்க்கமான கண்கள்.சௌஜன்யா ஜகன் என்றால் ஜகன்னாதன் என்ற பெயரில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் பணி புரியும் வயதானவரிடம் தங்களை ஒப்படைக்க போகிறார் என்று நினைத்தாள்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஜெகன் உள்ளே நுழைந்தார்(ன்).வந்தவனை பார்த்ததும் சௌஜன்யா திடுக்கிட்டாள். தான் எதிர்பார்த்ததிற்கு மறாக சுமார்
இருபத்தைந்து வயதான கட்டிளம் காளையாக இருந்தான் ஜெகன்."கேர்ல்ஸ், இவர்தான் ஜெகன் .இங்கு எனக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவன். எம்.காம் யுனிவர்சிடி ரேங்க் ஹோல்டர். ஜெகனுக்கு தெரியாததே அக்கவுண்ட்ஸ்ல் இல்லை. இவனிடம் மூணு மாசம் ட்ரெயினிங் முடித்ததும் உங்களை பர்மனண்ட் செய்து போஸ்டிங் தருவோம்"என்றார்.
பின்னர் அவர் ஜெகனை பார்த்து " உனக்கு என் ஃப்ரெண்ட் சுந்தரத்தை தெரியுமா" என்று கேட்டார்." ஆமாம் சார். ஒன்றிரண்டு முறை இங்கு வந்திருக்கிறார், பார்த்திருக்கிறேன்" என்று கூறினான் அவன். "சுந்தரத்தின் ரெக்கமண்டேஷன் பெயரில் இவர்கள் இங்கு அக்கவுண்ட்ஸ் ட்ரெயினாக சேர்ந்து இருக்கிறார்கள்" என்றவர் சௌஜன்யாவை சுட்டிக்காட்டி " இதுதான் சுந்தரத்தின் பெண் சௌஜன்யா."என்றார். பின்னர் வினயாவைப்பார்த்து "உன் பேர் என்னம்மா" என்று கேட்டார். அவள் மெல்லிய குரலில் "வினயா சார்" என்றாள். பணிக்கர் "ஓகே. வினயா ,சௌஜன்யா இருவரும் ஒரே காலேஜில் படித்து பிகாமில் ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கி இருக்கிறார்கள். நீ தான் இவர்களுக்கு பொறுப்பு எடுத்து சொல்லித் தர வேண்டும். யார் யாரை எதில் ஈடுபடுத்தப் போகிறாய்" என்று கேட்டார். இதைக் கேட்டு ஜெகன்" சார். முதலில் இருவரையும் எல்லா துறையிலும் ட்ரைனிங் கொடுக்கிறேன். இவர்களுடைய ரெஸ்பான்ஸை பார்த்து யாருக்கு எந்த துறை என்று மூன்று மாதம் முடிவில் முடிவு செய்து கொள்ளலாம் "என்றான். "ஓ எஸ். தட் இஸ் எ கிரேட் ஐடியா" என்று கூறி " சரிம்மா, நீங்க இவருடன் செல்லுங்கள்" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்ற ஜெகன், அக்கவுண்ட்ஸ் துறையில் இருந்த எல்லோரிடமும் அவர்களை அறிமுகப்படுத்தினான். பின்பு அவர்களை தான் உட்காரும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். எதிரில் உள்ள நாற்காலிகளில் அவர்கள் இருவரும் அமர்ந்தார்கள். ஜெகன் அவர்களிடம் எந்த கல்லூரியில் படித்தார்கள், என்ன எலக்ட்டிவ் சப்ஜெக்ட் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டான்.
பின்னர் அவன் அவர்களிடம " உங்கள் இருவருக்கும் சேர்த்து, இப்போதைக்கு,, ஒரு கம்ப்யூட்டர் தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். சில பில்களை எடுத்து உங்களுக்கு தருகிறேன். எக்ஸெல் பயன்படுத்த தெரியுமா" என்று கேட்டான். "தெரியும் சார்"என்று கோர்ஸாக இருவரும் பதில் சொன்னார்கள் இருவரும்." நீங்கள் எக்ஸலில் டேடாவை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதை என்னிடம் அதை காட்டுங்கள். வேறு என்ன வேலை கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன்" என்று கூறினான் .
இதற்குள் எல்லோருக்கும் காபி வந்தது. காபி கொடுக்கும் ஆளைப் பார்த்து "இவர்களுக்கும் காபி கொடுப்பா" என்று கூறினான் ஜெகன்.
" எனக்கு மட்டும் காபி கொடுங்கள் " என்று கூறிவிட்டு ஜெகனை பார்த்து "வினயா காப்பி குடுக்க மாட்டாள் சார்.ஹார்லிக்ஸ் தான் குடிப்பாள்" என்றாள்.
இதைக்கேட்ட ஜெகன் சௌஜன்யாவிடம் "உன் பிரண்ட் இன்று மவுன விரதமா" என்றான். வினயா உடனே" அதான் அவள் சொல்லிவிட்டாளே என்று நான் சும்மா இருந்தேன் சார் ",என்றாள். ஜெகன் அவளிடம் " இப்படி ஒருத்தருக்காக இன்னொருவர் பேசுவதை நான் அதிகம் ரசிக்க மாட்டேன் " என்றான்."சாரி சார்"என்றாள் வினயா.
ஜெகன் அவர்களிடம்" நொடிக்கொரு முறை என்னை சார் போட்டு கூப்பிடாதீர்கள். இன்றெக்கெல்லாம் இருந்தால் நான் உங்களை விட மூன்று நான்கு வயது பெரியவனாகத்தான் இருப்பேன்" என்று கூறினான். " சார். நாங்க உங்கள பேர் சொல்லி கூப்பிட்டா நல்லாவா இருக்கும் " என்றாள். ஜெகன் மனதுக்குள் " இந்த பெண் வாயாடியாக இருப்பாள் போல " என்று நினைத்துக் கொண்டு" நீங்கள் என் பெயரை சொல்ல வேண்டாம். சார் என்றும் சொல்ல வேண்டாம்.விஷயத்தை மட்டும் சொன்னால் போதும் " என்றான். பின்பு இருவரையும் காலியா இருந்த ஒரு டேபிள் முன் போடப்பட்டிருந்த இரண்டு சேர்களில் அமரச்சொன்னான்.டேபிள் மேல் ஒரு டெஸ்க் டாப் இருந்தது. " இனி நீங்கள் உங்கள் வேலையை தொடங்கலாம்" என்று கூறிவிட்டு அவன் இடத்துக்கு சென்றான்.
No comments:
Post a Comment