தன்வினை....9
By N Krishnamurthy
அதன் பின்னர் ராஜாராமன் தன் கைவசம் கொண்டிருந்த ஜகனுடைய ஜாதகத்தை கணேசனிடம் கொடுத்து " இது என் பையன் ஜாதகம். நீங்க ஜாதகம் பார்க்கிறதா இருந்தா பொருத்தம் பார்த்துட்டு எங்க கிட்ட சொல்லுங்க" என்றார்.இதன் பின்னர் இருவரும் கிளம்ப ஆரம்பித்தார்கள்.
"சித்த இருங்கோ"என்று சொன்ன விமாலா பெட் ரூமுக்கு போய் பீராவிலிருந்து,ஒரு உயர்தர ரவிக்கை துண்டை எடுத்து வந்து,தட்டில், வெற்றிலை,பாக்கு, குங்குமத்துடன் சேர்த்து அதை சுமதியிடம் நீட்டி எடுத்துங்கோங்கோ" என்றாள்.
செல்வதற்கு முன்னால் கணேசனைப் பார்த்து " எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வெச்சுக்கலாம். மத்தபடி நாங்க ஒண்ணும் உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல. கல்யாணத்தை க்ரேண்டா பண்ணி கொடுத்தா அதுவே போறும்"என்று கூறி "அப்ப நாங்க போய்ட்டு வரோம்" என்று சொல்லி கிளம்பினார்கள்.
அவர்கள் கிளம்பி போனதை உறுதி செய்து கொண்ட விமலா வினயாவை பார்த்து " ஏண்டி உனக்கு இந்த விஷயமா கொஞ்சம் கூட முன்னாடியே தெரியாதா?" என்று கேட்டாள். வினயா மௌனமாக இருந்தாள். " அவளுக்கு தெரியாதூன்னு நெனைக்கிறேன் அதான் பேசாம இருக்கா" என்றார் கணேசன். "நீங்க சும்மா இருங்கோ .வெளுத்ததெல்லாம் பால்னு நம்பற அப்பாவி நீங்க. அவ மௌனமா இருக்குறதுக்கு காரணம் அவளுக்கு தெரிஞ்சிருக்கு .ஆனா நம்ம கிட்ட முன்னாடியே சொல்லலேன்னு யோசிக்கறா. இவளுக்கு ஆனாலும் மன அழுத்தம் ஜாஸ்தி. குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்கறது" என்றாள் விமலா. உடனே வினயா விமலாவை பார்த்து "ஆமாம்மா. ஒரு ஆறு மாசம் முன்னாடி அவர் என்கிட்ட என்ன பண்ணிக்க சம்மதமான்னு கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல . ஆத்துல வந்து அதை உங்ககிட்ட சொல்றதுக்கும் தயக்கமாக இருந்தது. மத்தபடி இவா இப்படி இன்னைக்கு வரப்போறான்னு நேக்கு தெரியவே தெரியாது" என்றாள்.
"சரி டி.அதை விடு. பையன் எப்படி" என்று கேட்டாள் விமலா. "எப்படின்னா என்னம்மா" என்றாள் வினயா.
"ஏண்டி,ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கற. எப்படின்னா, ஆள் எப்படி ,குணம் எப்படி எல்லாந்தான் " என்றாள். "ஆள் பாக்குறதுக்கு நண்ணா இருப்பார் அம்மா .நல்ல குணம். யார்கிட்டயும் அதிகமா பேச மாட்டார் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பார்" என்றாள்.
"உனக்கு சம்மதமா" என வினவினாள் விமலா.
ஒரு நிமிட அமைதிக்குப்பின் வினயா "நம்பளா தேடினா கூட இது போல நல்ல இடம் கெடைக்காதம்மா "என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
திடிரென்று இப்படி ஒரு வரன் அமைந்த சந்தோஷம் இருந்தாலும், விமலாவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. உடனே விமலா கணேசன் பக்கம் திரும்பி "பணத்துக்கு எங்க போறது" என்று கேட்டாள். அதற்கு கணேசன் " இதெல்லாம் எதிர்பாத்துதான் நான் கொஞ்சம் சேவ் பண்ணி வச்சிருக்கேன். கடனோ உடனோ வாங்கி கல்யாணத்தை முடிச்சுடலாம்.தேவைப்பட்டா மடிப்பாக்கத்ல இருக்கற டூ பெட்ரூம் அபார்ட்மெண்டை விக்கவேண்டியதுதான். சுபஸ்ய சீக்கிரம்ன்னு சொல்லியிருக்காளோல்யோ "என்று கூறினார்.
பின்னர் சட்டையை போட்டுக் கொண்டு அதே பேட்டையில் மூர்த்தி தெருவில் இருந்த கனக சபாபதி ஜோசியரிடம் இரண்டு ஜாதகத்தையும் கொண்டு போய் காண்பித்தார். இரண்டு ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்த ஜோசியர் அரை மணிக்கு பிறகு "பொருத்தம் கச்சிதமா இருக்கு. கல்யாணத்தை வச்சுக்கலாம். ரெண்டு பேருக்கும் குரு பலன் வந்துடுத்து" என்று கூறினார். இதன் பின்பு வீட்டுக்கு வந்த கணேசன் விமலாவிடம் இதைப் பற்றி கூறினார். " அப்பா அவாளுக்கு போன் பண்ணி சொல்லிடறேளா " என்று சொன்னாள். " உடனே போன் பண்ணி சொன்னா நம்ப என்னமோ ரொம்ப அவசரப் படுற மாதிரி அவாளுக்கு இருக்கும். ரெண்டு நாள் போகட்டும். சொல்லலாம்" என்றார் கணேசன்.
No comments:
Post a Comment