தன்வினை....23
By N Krishnamurthy
சிதம்பரம் ராஜராஜபுரத்தை அடையும் போது இரவு மணி ஒன்பதாகி விட்டது. சிதம்பரத்தை பார்த்த சாரதா "டின்னர் முடிஞ்சூட்த்தா"என்று கேட்டாள். "இல்லை" என்று உதட்டை பிதிக்கினார் சிதம்பரம்."பத்து நிமிஷம் முன்னாடிதான் சாதத்ல தண்ணிய கொட்டினேன் "என்றவள் "சித்த இருங்கோ. ரவா உப்புமா பண்ணீடறேன் "என்றாள். "வேண்டாம் விடு .பழம் சாப்டூடட்டு பால் குடிச்சிடறேன்!" என்றார் அவர். "வேண்டாம்.வேண்டாம். அப்புறம் பாதி ராத்ரில பசிக்கறதூன்வேள். பத்தே நிமிஷத்தில உப்புமா ரெடி ஆயிடும் "என்றாள். சாரதா உப்புமா கிண்டிக் கொண்டிருக்கும் போது, சிதம்பரம் அவளருகில் நின்று கொண்டு கும்பகோணத்தில் தனக்கேற்பட்ட அனுபவத்தை சாரதாவிடம் பகிர்ந்து கொண்டார் .
உப்புமா ரெடியானதும் சிதம்பரம் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாரதாவிடம் "உன்னோட சொந்தகாராளோட பொண்ணுக்கு இத போல ஆயி அப்புறம் சரியாயிட்டதல்ல"
என்றார். இதற்கு பதிலளித்த சாரதா ".உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாய்ட்டது. அது எங்க சொந்தகார பொண் இல்லை. என் ப்ரண்ட் சரசாவோட கல்யாணம் ஆன பொண்ணுக்கு யாரோ சூன்யம் வெச்சூட்டா. கேரளாவிற்கு அவளை அழச்சிண்டு போய், ஒரு மாந்த்ரீகரை பிடிச்சு, ஒரு மண்டலம் பூஜை பண்ணி ,அவளுக்கு சரியாச்சு" என்றாள்.
அதற்கு சிதம்பரம் "நேக்கு வயசானதாலே முன்ன போல ஞாபகம் இருக்கறதில்ல. உன்ன போல இள வயசா இருந்தா பரவாயில்லை"என்றார். இதைக்கேட்ட சாரதா "இன்டேரக்ட்டா என்னையும் கிழவீன்றேள்"என்றாள்.
சிதம்பரம் சிரித்துக்கொண்டே "நீ கிழவி. ஆனா அழகான கிழவி" என்றார். இதைக்கேட்ட சாரதா "போறும். மூஞ்சிய தொடச்சிக்கோங்கோ. அசடு வழியறது" என்றாள். பின்னர் அவர்"சரசா கிட்ட பேசி அந்த மாந்த்ரீகர் விவரங்களை வாங்கி கொடு. கணேசன் பொண்ணு வினயாவுக்கு அவர் மூலம் பரிஹாரம் பண்ண முடியுமான்னு பாக்கறேன்"என்றாள்.
சாரதா "பாதி ராத்திரில சரசாவை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு பாக்கறேன்"என்றவள் "நாளைக்கு கார்த்தால பேசறேன் "என்றாள். சிதம்பரம் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் போது சாரதா "இந்த கெழவி பண்ண உப்புமாவை பத்தி கெழவன் கமண்ட்டே அடிக்கலயே " என்றாள் கேலிக்குரலில். சிதம்பரத்துக்கு பேசக்கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன."கெழவி பண்ணாலும் உப்புமா இளசா Fresh ஆ இருக்கு " என்றார்.
மறுநாள் ஞாயிறு காலை 10 மணிக்கு சாரதா, சரசாவை போனில் கூப்பிட்டாள். "என்ன சரஸ் எப்படி இருக்க" என்றாள் சாரதா. அதற்கு சரசா " என்ன அத்தி பூத்த மாதிரி இருக்கு உன் போன் கால்" என்றாள். "சும்மாதான். ரொம்ப நாளாச்சேன்னு பண்ணேன்" என்றாள் சாரதா. "அங்க எல்லோரும் சௌக்கியமா" என்று கேட்டாள் சரசா.
" இங்க எல்லாரும் சௌக்கியம்தான். உன் பொண்ணுக்கு முன்னாடி உடம்பு ப்ராபளமா இருந்ததே. இப்போ சரி ஆயிட்டாளா" என்று கேட்டாள் சாரதா. "கேரளா போய், பூஜை பண்ணினதக்ப்புறம் அவ சரியாய்ட்டா.இது நடந்து கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆயிடுதத்து. அவளுக்கு உடம்புக்கு வந்த போது ஒரு பெண் குழந்தை இருந்தது. உடம்பு சரியானதக்கப்புறம் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கு . அவளும், மாப்பிள்ளையும் பெங்களூர்ல இருக்கா. போன வாரம் கூட இங்க வந்துட்டு போனோ. ஆமாம், ஏன் இதெல்லாம் இப்ப கேக்கற" என்றாள் சரசா. "ஒண்ணும் இல்ல டி. எங்க ஆத்துக்காரருக்கு தெரிஞ்ச ஒருத்தர் பொண்ணுக்கு இது மாதிரி ஒரு ப்ராப்ளம் இருக்கு. அவளுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு பாக்கறார் இவர். அந்த கேரளா மாந்திரீகருடைய அட்ரஸ், போன் நம்பர் வெச்சிருக்கயா? எனக்கு கொஞ்சம் தர முடியுமா" என்று கேட்டாள் சாரதா. " அவரோட எல்லா டீடைலும் எங்கிட்ட இருக்கு. அவர நாங்க குலசாமி மாதிரி தான் வழிபடறோம். அவராலதான் தான் இப்போ என் பொண்ணு நல்லபடியா இருக்கா. பேப்பர் எடுத்து வச்சுக்கோ. நான் அதுக்குள்ள என் டைரியை எடுத்து அவர் அட்ரஸ் கண்டுபிடித்து கொடுக்கிறேன்" என்றாள். சாரதா சிதம்பரத்தை பார்த்து "ஒரு பேப்பரை
யும்,பேனாவும் எடுத்துக்கோங்கோ" என்றாள். "பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டார் சிதம்பரம். மீண்டும் லைனில் வந்த சரசா" குறிச்சிக்கோ. அவர் பெயர் கேசவ தாஸ். சொந்த ஊர் பெருவனம். திருச்சூர் கிட்ட இருக்குற சின்ன கிராமம் இது. இப்போ போன் நெம்பர குறிச்சிக்கோ. முதல் அஞ்சு டிஜிட் எஸ்.டி.டி கோட். அதுக்கப்புறம் இருக்கறது அவரோட போன் நம்பர் .(இதை சரசா சொல்ல சொல்ல சாரதா அதை ரீபீட் செய்ய சிதம்பரம் பேப்பரில் எழுதிக்கொண்டார்) காலைல பூஜை எல்லாம் போயிண்டு இருக்கும். பொதுவா போன் பண்ணினா மத்தியானம் ரெண்டுலேந்து நாலு வரை பண்ணணம்" என்றாள் . "ரொம்ப தேங்க்ஸ் டி சரஸ்" என்று சொல்லி போனை வைத்தாள் சாரதா.
*பின்குறிப்பு* :தமிழ் நாட்டிலிருந்து மலையாள தேசத்திற்கு புலம் பெயர்ந்த பிராமணர்கள், பாலக்காடு மட்டுமல்லாமல் பெருவனம் போன்ற இதர சிறு கிராமங்களிலும் வசிக்க ஆரம்பித்தனர் என்று சரித்திரம் சொல்கிறது.
No comments:
Post a Comment